Monday 22 April 2019

புகையிலை வரமா? சாபமா?--சாபமே!

புகையிலை வரமா? சாபமா?--சாபமே!

புகையிலை நமது நாட்டில் பழங்காலத்திலிருந்தே
பயன்படுத்தப்பட்டு வந்த பொருள். சுருட்டு, பொடி,
பீடி, சிகரெட்டு, ஊது குழாய்(சிகரெட் பைப்), ஹூக்கா,
வெற்றிலையோடு சேர்த்தோ, சேர்க்காமலோ வாயில்
போட்டு மெல்லுவது முதலான பலவகைகளில் புகை
யிலை  பயன்படுத்தப்பட்டு வந்தது.இருபதாம் நூற்றாண்
டின் பிற்பகுதியிலிருந்து மருத்துவர்கள் புகையிலை
புற்று நோய் உருவாக வழி வகுக்கும் என்று கூறி அரசு
மூலமாக அதன் பயன்பாட்டைக் குறைக்க முயற்சி மேற்
கொண்டு வருகிறார்கள். புகையிலைக்கு எதிராகப் பெரிய
அளவில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. புகையிலை
முற்றிலும் ஒழிக்கப்படா விட்டாலும், அதன் பயன்பாடு மிகவும்
குறைந்துவிட்டது.

கடந்த பதினெட்டு, பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டு
களில் புகையிலைப் பொருள்களில் சுருட்டு, பொடி மிகவும் புகழ்
பெற்று விளங்கின. கிராம தேவதைகளுக்குச் சுருட்டு படைத்து
வழிபடுவது வழக்கமாயிற்று. கிராமங்களில் அனைவருமே (சில
பெண்கள் உட்பட) சுருட்டுப் பிடித்தல் இயல்பாக நடந்தது. நகரங்
களில் பொடிப் போடும் வழக்கம் இயல்பாக நடைபெற்றது. சில
புலவர்கள் பொடிப் போடுவதை மிகவும் இரசித்துப் பாடியுள்ளனர்.
"ஊசிக்  கழகு  முனைமழுங் காமை; உயர்ந்தபர
தேசிக்  கழகிந் திரியம்  அடக்கல்  தெரிகலன்சேர்
வேசிக்  கழகின்  னிசை;பல  நூல்கற்ற  வித்வசனர்
நாசிக் கழகு  பொடியெனக்  கூறுவர் நாவலரே".
இந்தப் பாடலில் கூறியவாறு, கல்வி கற்ற அறிஞர்
பெருமக்களும், கல்வி கற்றுக் கொண்டிருக்கும்
மாணாக்கர்களும் பொடி போடுவதை விரும்பினர்.
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனாரின் மாணவர்
தியாகராசனார் திருவானைக்காவில் இருந்த ஒரு
பொடிக் கடையைப் புகழ்ந்து பாடியுள்ளார்.
"கொடியணி மாடம் ஓங்கிக் குலவுசீர் ஆனைக் காவில்
படியினில் உள்ளார் செய்த பாக்கியம் அனையான் செங்கைத்
தொடியினர் மதனன் சோம சேந்தரன் கடையிற் செய்த
பொடியினைப் போடா மூக்கு புண்ணியம் செய்யா மூக்கே".

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பத்தொன்பதாம்
நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்த சீனிசர்க்கரைப்புலவர்
என்ற புலவர் 'புகையிலை விடு தூது' என்னும் சிற்றிலக்கியத்தை
இயற்றியுள்ளார். பழனி முருகனிடம் மனத்தைப் பறிகொடுத்த
ஒரு பெண் புகையிலையை அவர்பால் தூது அனுப்பியதாகப்
பாடப்பட்டுள்ளது. 59 கண்ணிகள்  கொண்ட அந்த நூலில் 53
கண்ணிகள் புகையிலையின் மகத்துவத்தை எடுத்துரைப்பதாகவும்
ஏனைய 6 கண்ணிகள்  முருகன் பெருமையைப் பேசுவதாகவும்
இயற்றப்பட்டுள்ளது. அதில் நூலாசிரியர் 'புகையிலை' என்ற பெயர்க்
காரணத்தைச் சுவைபட எடுத்தியம்புகின்றார்.

புகையிலை வரலாறு(நூலாசிரியர் கருத்துப்படி):
"வந்த  புகையிலையுன் மாமகத்து  வங்களைநான்
எந்த விதமென் றியம்புவேன்?--விந்தையதாய்
மூவரொரு வர்க்கொருவர் முன்னொருகால் வாதாகித்
தேவ  சபையகத்துச் செல்லவே--மேவிவிண்ணோர்
உங்கள்விவ  காரம்  உரைப்போம்பின்  னாகவென்று
தங்குமொவ்வோர்  பத்திரம  தாகவே--அங்கவர்பாற்
கூவிளமும்  பைந்துளவுங்  கொள்ளும்  புகையிலையும்
தாவளமாய்க்  கைகொடுத்துத் தாமனுப்ப--ஆவலுடன்
பின்மூவர்  அந்தப்  பெரும்சபையில்  வந்தவுடன்
முன்கொடுத்த பத்ர முறைப்படியே--அன்பினுடன்
தாருமென்ற போதிற்  சதாசிவனார்  பத்திரமும்
கார்வண்ணர்  பத்திரமும்  காணாமல்--நேரான
கஙகை யிடத்தும்  கவின்பாற்  கடலிடத்தும்
பொங்கும்அலை  தான்கொண்டு  போகவே--இங்கிதம்சேர்
ஓகையுட  னேபிரமன்  உற்ற  நமதுபத்ரம்
போகையிலை  யென்று  புகன்றுடனே--வாகுகலை
வாணிதிருக்  கையினின்றும் வாங்கிஇந்தா என்றுரைக்க
நாணியிரு  வோரும்  நயவாமல்--பூணும்
வழக்கிழக்கச்  செய்தந்த  வானோர்முன்  வெற்றி
விளக்கவுன்  னாமம்  விளக்கத்--துளக்கமொடு
ப்ரம்மபத்ரம்  என்றெவரும் பேசவே  வந்துதித்த
தன்மப்  புகையிலையே  சாற்றக்கேள்--............"

பொருள்:
விண்ணுலகில் மும்மூர்த்திகளுக்குள்ளே ஒரு விவாதம்
கிளம்பியது.  தமக்குள் உயர்ந்தவர் யார்? என்னும் வழக்கைத்
தீர்க்கத் தேவருலகம் சென்று தேவர்களிடம் முறையிட்டனர்.
"விவாதத்தைப் பிற்பாடு கவனித்துக் கொள்ளலாம்" எனக்
கூறிய தேவர்கள் மும்மூர்த்திகளிடம் தலைக்கு ஒரு
மூலிகை என்ற கணக்கில் சிவனிடம் வில்வமும்,
நாராயணனிடம் துளசியும், பிரம்மனிடம் பெயரிடப்
படாத மூலிகையும் கொடுத்துவிட்டு. மறுநாள் வரு
மாறு தெரிவித்தனர்.  மறுநாள் தேவருலகம் சென்ற
மும்மூர்த்திகளிடம்  முந்திய நாளில் கொடுக்கப்பட்ட
மூலிகையைப் பற்றிக் கேட்டனர். சிவன் தனது வில்வத்
தைக் கங்கை நதியின் அலை கொண்டுபோய்விட்டதாக
வும், நாராயணன் தனது துளசியைப் பாற்கடலின் அலை
கொண்டுபோய்விட்டதாகவும் கைவிரித்தனர். பிரம்மன்
தனது மூலிகையைத் தன் நாவில் வசிக்கும் வாணியிடம்
கொடுத்து வைத்திருந்ததால் அவரிடம் கேட்டு வாங்கித்
தேவர்களிடம் ஒப்படைத்து "எமது மூலிகை எங்கும்
போகையிலை; எம் கைவசமேயுள்ளது" என்று நெஞ்சை
நிமிர்த்திக் கொண்டு சொன்னார். சிவனும்,  நாராயண
னும் நாணி நின்றனர். பிரம்மனின் மூலிகை போகையிலை,
மருவிப் 'போயிலை' என்றாகிப் பின்னர் 'புகையிலை' என்று
பெயர் பெற்றது. பிரம்மபத்ரம் என்ற பெயரும் பெற்றது.
இவ்வாறாகப் 'புகையிலை'  என்னும் பெயர் தோன்றக் காரண
மான புராணக்கதை ஒன்றைப் புலவர் எடுத்தியம்பி  அதன்
பெருமையைப் பறைசாற்றியுள்ளார். என்னே அவரது புகை
யிலை மீதான பக்தி!

ஆனால், மருத்துவ  உலகம் தொடக்க காலத்திலிருந்தே புகை
யிலையின்  தீய விளைவுகளைச் சுட்டிக்காட்டி எச்சரிக்கை செய்து
வந்துள்ளது. சித்த மருத்துவத்தில் ஒரு பாடல் உண்டு.
"மருந்தை  முறித்துவிடும்; வாய்வறளச் செய்யும்;
திருந்து  பலவீனம்  சேர்க்கும்--பொருந்துபித்தம்
உண்டாக்கும்; விந்தழிக்கும் ; ஓது  புகையிலையைக்
கண்டார்க்கும்  ஆகாது  காண்."

புகையிலை மற்றும் பீடி, சிகரெட்டு, பொடி முதலான புகை
யிலையிலிருந்து தயாரிக்கப்படும் பொருள்கள் புற்று
நோய் உருவாக வழிவகுக்கின்றன என்று மருத்துவர்
கள் எச்சரிக்கின்றனர். புகையிலையைத் தொடர்ந்து
வாயில் போட்டு மெல்லுபவர்கள் கன்னப்புற்றுநோயால்
அவதியுறுவதாக மருத்துவர்கள் கவலைப்  படுகின்றனர்.

புகையிலையால் உருவாகும் தீய விளைவுகளை உணர்ந்த
அரசு மிகப் பெரிய அளவில் அதனை எதிர்த்து விளம்பரம்
செய்து அதன் பயன்பாட்டை அறவே தவிர்க்குமாறு அறிவு
றுத்தி வருகின்றது.  இவற்றையெல்லாம் உற்றுநோக்கும்
போது, புகையிலை  மனித குலத்துக்குக்  கிடைத்த  வரமன்று;
சாபமே  என்னும் உண்மை தெளிவாகின்றது. எனவே, நாம்
அனைவரும் புகையிலையையும், அதனால் உருவாக்கப்படும்
பொருள்களையும் அறவே விலக்கி உடல்நலத்தைப் பேணுதல்
மிக மிக அவசியமானது.

அருஞ்சொற்  பொருள்:
தாவளம்==பற்றுக்கோடு

பார்வை: தமிழ்த் தாத்தா உ..வே.சாமிநாதையர் பதிப்பித்த
புகையிலை விடு தூது(இயற்றியவர்:சீனிசர்க்கரைப்புலவர்)







Monday 1 April 2019

குடிப்பதற்கு நீரில்லாக் குறைதீர்வ(து) எக்காலம்?

நதியிணைப்பு காலத்தின் கட்டாயம்; நிகழ்த்திடுதல் எக்காலம்?

விடுதலைநாள் முதலாக வீரமுடன் முழங்கிவந்த
நடுவணநல்  அரசாங்கம்  நதியிணைப்ப(து)  எக்காலம்?

கங்கையையும் பொன்னியையும் கண்டிப்பாய் இணைத்திடவே
சிங்கமெனக்  கர்ச்சித்தோர்  செயல்படுவ(து) எக்காலம்?

அடிமைவிலங்(கு) அறுத்தொழிந்தே ஆண்டுபல கடந்தபின்னும்
குடிப்பதற்கு  நீரில்லாக்  குறைதீர்வ(து)  எக்காலம்?

கருநாடர்  காவிரியில் கணக்காக  நேர்மையுடன்
வரும்நீரைப்  பகிர்ந்தளித்து  வாழ்விப்ப(து) எக்காலம்?

ஆந்திரநன்  னாட்டவர்கள் அமைதியுடன் பாலாற்றைத்
தீந்தமிழ்நன்  னாட்டுக்குத்  திருப்பிவிடல்  எக்காலம்?

கேரளநன் னாட்டவர்கள் கேண்மையுடன் பெரியாற்று
நீரதனைத்  தேக்கிவைக்க  நெறிசெய்தல் எக்காலம்?

காவிரியும் பாலாறும்  கவின்முல்லைப்  பெரியாறும்
தீவிரமாய்ப் பாய்ந்துநிலம் செழிப்பித்தல் எக்காலம்?

பாரதத்தின் நதிகளைநாம்  பாங்காக  இணைத்துவிடின்
சீரனைத்தும்  பெற்றிடலாம்; செய்வதுதான்  எக்காலம்?

தமிழ்நாட்டுச் சமவெளியில்  தடுப்பணைகள்  பலவற்றை
அமைத்திட்டால் நலம்கிட்டும்; அதைச்செய்தல் எக்காலம்?

ஏரி,குளம் தூர்வாரி இயன்றவகை நீர்தேக்கி
வீரியமாய்  வேளாண்மை  மேற்கொள்வ(து) எக்காலம்?

கருநாடர்  திறந்துவிடும்  மிகைத்தண்ணீர் பயனின்றி
விரிகடலிற்  கலப்பதனை  விலக்கிடுதல்  எக்காலம்?

மணற்கொள்ளை  தனைத்தடுத்து மண்வளத்தை, நீர்வளத்தை
இணக்கமுறப்  பெருக்கிமக்கள் ஏற்றம்பெறல் எக்காலம்?

மழைநீரைச் சேகரித்து  வாகாக  நிலத்தடிநீர்
தழைத்திடத்தான்  வழிசெய்து  சாதிப்ப(து) எக்காலம்?

வடநாட்டு  நதிகளெலாம் வற்றாத உயிர்நதிகள்;
திடமான வளம்சேர்க்கும்  சீர்கங்கை, பிரம்மபுத்ரா,

ஏரார்,நர் மதை,கோதா  வரி,தப்தி, மகாநதியால்
நீரார்ந்து வளம்கொழிக்கும்; நீர்ப்பகிர்வில் சிக்கலிலை;

ஓங்குபுகழ்த்  தென்னாட்டில் உயிர்நதி,கா  விரி;கிருஷ்ணா,
தீங்கறுநல் ஆன்பொருநை சிறப்புமிகு ஆறுகளாம்;

பாலாறு,  தென்பெண்ணை, பார்புகழும்  வைகைநதி,
மேலான ஆறுகள்தாம்; வெகுகுறைவாய் நீருண்டு;


தென்னாட்டில் நதிநீரைச் செம்மையுறப் பகிர்ந்திடுதல்
எந்நாளும் தீராத இடர்மிக்க  பெரும்சிக்கல்;

பாரதத்தின்  ஒற்றுமைக்கே  பாதகத்தை  விளைவிக்கும்
நீரதனால் நேர்ந்துவிடும் நெடுங்கால  அறைகூவல்;

மராட்டியரும் கன்னடரும் வம்புசெய்து நற்கோதா
வரிநீரைப்  பகிர்வதிலே மாபெரிய  சிக்கல்செய்வர்;

கருநாடர்- செந்தமிழர் காவிரிநீர்  பகிர்வதிலே
பெரும்பூசல் உருவாக்கிப் பேதலிக்கச் செய்திடுவர்;

கவின்முல்லைப்  பெரியாற்றில் கட்டியுள்ள  அணையதனைத்
தவிடுபொடி ஆக்க,எண்ணும்  கேரளரை  என்சொல்ல?

இத்தகைய  சிக்கல்களுக்(கு) ஏற்றவிடை  நதியையெலாம்
பத்திரமாய் இணைத்துவிடின் பாதகமே  வாராது;

இந்தியநல் திருநாட்டில்  எந்தவொரு பேதமுமே
சிந்தித்தல்  செய்யாதீர்;  தேவைநம(து)  ஒற்றுமைதான்;

ஆறுகளை  இணைத்திடுவோம்; ஆனந்தம் அடைந்திடுவோம்;
வேறுதுயர் உண்டோ? விளம்பு.