Saturday 24 March 2018

நீரின்றி அமையாது உலகு

             நீரின்றி அமையாது உலகு

கோடை வெப்பம் சுட்டெரிக்கக்
      கொதிக்கும் சாலை தகித்திருக்க
ஆடை முழுதும் நனையும்வணம்
      அருவி போல வியர்த்திருக்க
ஓடை ஏரி குளமெல்லாம்
       ஒற்றைச் சொட்டு நீரின்றி
வாடி வறளும் நிலைகண்டு
        வார்த்தை என்ன சொல்வேனே !


நாட்டு மக்கள் நாவறள
        நலிந்து சோர்ந்து துவள்கின்றார் ;
வீட்டுக் குள்ளே இருந்தாலும்
       வெந்து நொந்து தளர்கின்றார் ;
சூட்டைத் தணிக்கக் குடைபிடித்தும்
       துணியால் மறைத்தும் நடக்கின்றார் ;
வாட்டம் போக்க மாமழையே
       வளமாய்ப்  பெய்து குளிரவைப்பாய்


மாதம் மூன்று மழைபெய்து
        வாழ வைத்த இயற்கையன்னாய் !
யாது கார ணத்தாலே
        எங்கள் நாட்டை வறளவைத்தாய் ?
போதும் அம்மா ! எமக்கிந்தப்
       பொல்லா வறட்சி வேண்டாவே ;
தீது நீங்க உடனடியாய்ச்
       செழித்த மழையைப் பெய வைப்பாய்


வறட்சி நிலவி வருத்திடினும்
       மழையே பெய்து செழித்திடினும்
மறவீர் தண்ணீர் மேலாண்மை ;
        மழைநீர் தன்னைச் சேகரிப்போம்
சிறந்த முறையிற் சிக்கனமாய்ச்
       செலவு செய்து சேமிப்போம் ;
முறையாய்ப் பேணி நீர்வளத்தை
       மூன்று மடங்காய்ப் பெருக்கிடுவோம்

Friday 23 March 2018

இயற்கைக் காட்சி

                           இயற்கைக் காட்சி

கொட்டுகின்ற மழையழகைக் கண்டேன்;  இஃதைக்
        கூறவகை தெரியாது திகைக்கின் றேனே!
வெட்டுகின்ற மின்னல்பல வானில் தோன்றும்;
       வெருட்டுகின்ற இடிக்குரலும் அங்கே கேட்கும்;
சுட்டுகின்ற திசையெல்லாம் நீரின் தோற்றம்;
       சுருதியுடன் இடையிடையே காற்று வீசும்;
எட்டுகின்ற காட்சியெல்லாம் இயற்கை யன்னை
        இறுமாந்து புரிகின்ற ஆட்டம் தானோ?


பந்து போன்ற முழுநிலவே !
        பால்போல் வெள்ளை முழுநிலவே !
நொந்து வாடும் மாந்தர்கள்தம்
        நோவை நீக்கும் முழுநிலவே !
உந்து மதியே ! மேகத்தில்
        ஒளிந்து தோன்றி மயக்குகிறாய் ;
சிந்து பாடி மகிழ்கி்ன்றேன்;
        சிந்தை  குளிர்ந்து நெகிழ்கின்றேன்


மாலையிற் பொழுதைப் போக்க
       வளமிகு சோலை சென்றேன்;
நீலநல் மயில்கள் ஆடும்
       நேர்த்திசேர் காட்சி கண்டேன்;
மூலையிற் குயில்கள் கூவும்
        மோகன இசையும் கேட்டேன்;
கோலமார் கிளிகள் பேசும்
       குதலையாம் மொழியும் கேட்டேன்;

தாமரை கூம்பக் கண்டேன்;
        சந்திரன் உதிக்கக் கண்டேன்;
தேன்மலர் அல்லி பூக்கும்
       சிறந்தநற் காட்சி கண்டேன்;
காமர்சேர் மல்லி முல்லை
      கவினுற மலரக் கண்டேன்;
பூமகள் செழுமை தாங்கிப்
      புரிந்திடும் ஏரார் காட்சி!





Thursday 22 March 2018

நடந்தாய் வாழி காவேரி

பிணையும் கலையும் இணைந்தோடப்
          பேசும் கிளிகள் உரையாற்றப்
பணைத்தோள் உழவர் ஆர்ப்பரிக்க
          நடந்தாய் வாழி காவேரி!
பணைத்தோள் உழவர் ஆர்ப்பரிக்க
         நடந்த நின்னைத் தடுப்பதற்கு
அணைகள் மேக தாதில்கட்ட
         ஆயத் தம்தான் செய்தல் நன்றோ?


நடுவு நிலைமை பிறழாமல்
         நாட்டு மக்கள் அனைவரையும்
கடுகின் அளவும் பாரபட்சம்
        காட்டா வண்ணம் ஆட்சிசெய்தால்
மிடுக்கும் புகழும் எய்திடுமே!
        வேறு பாடு காட்டிவிட்டால்
வெடிக்கும் மக்கள் போராட்டம்;
         மைய அரசே எச்சரிக்கை!


உச்ச நீதி மன்றத்தார்
        உறுதித் தீர்ப்பை நவின்றிட்டார்;
மெச்சும் வகையில் காவிரிக்கு
       மேலாண் மைசெய் வாரியமும்
அச்சம் இலாது பங்கீட்டை
       அளிக்கும் ஒழுங்காற் றுக்குழுவும்
இச்ச கத்தார் பாராட்ட
      இற்றைப் பொழுதே நிறுவுகவே!

இறுதி வெற்றி இந்தியருக்கே

குண்டு  நெஞ்சைத்  துளைத்திடினும்
     குருதி   ஆறாய்ப்  பாய்ந்திடினும்  
மண்டும்   படைகள்  எதிர்த்திடினும்                  மயங்கோம்;  தயங்கோம்;  ஈதுண்மை;
துண்டு துண்டாய்ப்  பாரதத்தைச்              
    சூறை  யாட  நினைப்போரே!            
உண்டு   வீரம்; திருநாட்டை.                                உயிரும் கொடுத்துக் காப்போமே!                                                                                                                                        
ஈவு கருணை எள்ளளவும்.                                     இல்லாப் பாக்கிஸ் தான்நாடே  
ஏவு கணைகள் ஆயுதங்கள்    
     ஈந்தே  எதிரிக்  குதவிடினும்
சாவுக் கஞ்சா இந்தியர்கள்                          
    சற்றும் நெஞ்சம்  கலங்காமல்
சோர்வே  யின்றிப் போரிட்டுத்                           தோள்கள்  தட்டி வென்றிடுவர்                                                                                                        
சீலம் மிக்க பாரதத்தைச்                                
     சிதைக்க  எண்ணிப் பாக்கிஸ்தான்
ஞாலம்  இகழ எல்லையிலே                                 நயவஞ்   சகமாய்  ஊடுருவிக்            
காலம் எல்லாம் போரிடினும்                      
     காஷ் மீரத்தைக்   காத்திடுவோம்;
வாலை ஒட்ட நறுக்கிடுவோம்;
     வாழ்க!  வாழ்க! பாரதமே!

Sunday 11 March 2018

குழந்தை புரியும் குறும்பு

                   குழந்தை புரியும் குறும்பு

 கொட்டுகின்ற மழைநீரில் காகிதத்தால் செய்தபல
      குட்டிக் கப்பல்
 விட்டுமனம் மகிழ்ந்துநின்ற மைந்தனையான் இழுத்துவந்தேன்
     வீட்டுக் குள்ளே;
பட்டுநிகர் மேனியனை அடித்திடவே கையோங்கப்
     பாங்காய் அன்னான்
மொட்டுநிகர் வாய்திறந்து நகைபூத்தான்; நான்மயங்கி
     முத்த மிட்டேன்.

சுட்டிமகன் மாம்பழந்தான் வேண்டுமெனக் கேட்டழுதான்;
     தூய தங்கக்
கட்டியன்ன மைந்தனுக்கு மாம்பழத்தை யான்தந்தேன்;
     கனியைத் துண்டாய்
வெட்டியளி என்றழுதான்; துண்டுதுண்டாய் அரிந்தளித்தேன்;
     வேண்டா இஃதை
ஒட்டியளி முழுவடிவில் என்றழுதான்; எங்ஙனம்நான்
     ஒட்டல் ஒண்ணும்?

மாலையிலே புழுதியில்நீ விளையாடேல் என்றுரைத்து
     மனையில் என்றன்
வேலையிலே ஆழ்ந்திருந்தேன்; குறும்புமகன் தெரியாமல்
     வெளியே சென்று
சாலையிலே விளையாடிப் புழுதியினைத் தான்தரித்துத்
     தங்க மேனி
ஆலையிலே பிழிகரும்பாய் வாடி, முகம் வதங்கி, மெல்ல
     அகத்துள் வந்தான்.

ஒலிம்பிக் பந்தயம் - 2020

ஒலிம்பிக் பந்தயம் - 2020


அனுமன் பீமன் வில்விசயன்
    அரவான் கடோற்க சன்கர்ணன்
இனும்எத் தனையோ மாவீரர்
    இதிகா சத்தில் புகழ்பெற்றார்;
எனினும் ஒலிம்பிக் பந்தயத்தில்
    எவரும் தங்கப் பதக்கமென்னும்
கனியை வெல்ல இயலவில்லை;
    கறையைத் துடைக்க வழிகாண்போம்


குட்டி நாடாம் கியூபாவும்
    கொரியா நாடும் வெல்கையிலே
மட்டில் லாத மக்கள்தொகை
    வாய்த்த இந்தத் திருநாடோ
முட்டி மோதித் தடுமாறி
    முனகித் தோற்றல் முறையாமோ?
தட்டிக் கேட்கக் கிளர்ந்தெழுவோம்;
    தக்க தீர்வை எட்டிடுவோம்



தேர்வுக் குழுவில் செயல்படுவோர்
    திறமை, ஊக்கம், மனவுறுதி,
சோர்வே அடையா உடல்வன்மை,
    துணிவு, தேச பக்திகொண்ட
யார்க்கும் வாய்ப்பைத் தந்திடுக;
    இல்லா தவரை ஒதுக்கிடுக;
பார்க்குள் நமது பாரதத்தைப்
    பரிசு பதக்கம் பெறச்செய்க!


இரண்டா யிரத்தின் இருபதிலே
    எழில்சேர் ஜப்பான் நாட்டினிலே
பரந்த உலகின் வீரரெல்லாம்
    பங்கு கொள்ளும் ஒலிம்பிக்கில்
உரமார் நமது பாரதத்தார்
    ஒல்லும் வகையால் மிகஉழைத்துத்
தரமாய் ஆடிப் பதக்கங்கள்
    தட்டிச் செல்வர் சத்தியமே!

அறுபடை வீடு

   அறுபடை வீடு

1. திருப்பரங்குன்றம் :-

ஒருபெரும் தமிழர் தெய்வம் உள்ளத்தை ஆளும் தெய்வம்
அருமைகொள் முருகன் தெய்வ யானையை மணந்த ஊராம்
திருப்பரங் குன்றம் சென்று சிந்தையுள் அவனை ஏத்தி
விருப்பொடு தொழுதால் சேர்ந்த வினையெலாம் நீங்கும் மாதோ!

2. திருச்செந்தூர் :-

அய்யனே முருகா கந்தனே குமரா
    அறுமுகா தமிழர்கள் போற்றும்
தெய்வமே சூர பதுமனை வேலால்
    செந்திலம் பதிதனில் வென்று
நையவே வதைத்தே இரண்டுகூ றாக்கி
     நன்மயில் சேவலாய் மாற்றி
உய்யவே ஊர்தி கொடியெனக் கொண்ட
    ஒண்தமிழ்க் கடவுளே அருளே!



3. பழனி :-

கொங்கு நாட்டில் பழனி யென்னும்
     குன்றில் குடிகொள் குமரனே!
பொங்கு புகழும் திறனும் மிக்க
    போகர் ஒன்பான் நஞ்சினால்
நன்கு வடித்த சிலையாய் வாழ்ந்து
    நாட்டு மக்கள் குறைகளைத்
தங்கு தடைகள் இலாது நீக்கித்
    தரணி தழைக்க அருள்கவே!

4. திருவேரகம் ( சுவாமிமலை ) :-

சிந்தைக்கும் செயலுக்கும் எட்டாத பரம்பொருளாம்
    சிவனார் கேட்கத்
தந்தைக்கு மந்திரத்தின் உட்பொருளை ஓதுவித்த
    தகப்பன் சாமி
எந்தைகுகன் குடிகொண்ட ஏரகத்தைச் சென்றடைந்தால்
    இன்னல் நீங்கும்;
முந்தையதாம் வினைகளும்இப் பிறவியில்செய் வினைகளுமே
    முடிந்து போமே!

5. பழமுதிர்சோலை ( சோலைமலை ) :-

கொம்பின் தேனும் முக்கனியும்
    குரங்குக் கூட்டம் சுவைத்துண்டு
பம்பிப் பாய்ந்து குதித்தாடும்
    பதியாம் சோலை மலைமீதில்
தும்பிக் கையான் திருத்தம்பி
    சுடர்வேல் முருகன் ஆள்கின்றான்;
நம்பிச் சென்று தொழுவீரேல்
    நலங்கள் எல்லாம் பெறுவீரே!

6. திருத்தணி :-

அணிமருவும் திருமுருகன் திருச்செந்தூர் தனிலே
    அரக்கர்களின் ஆணவத்தை அடியோடு நீக்கித்
தணிகையெனும் திருத்தலத்தில் குடிகொண்டு சினத்தைத்
    தவிர்த்துமுழுச் சாந்தமுடன் வள்ளியினை மணந்தார்;
மணிமருவு திருமார்பன் மாப்பிள்ளைக் கோலம்
    வடிவுடனே காட்டியன்பர் மனம்மயக்கு கின்றார்;
பிணிநோய்கள் பிறவி, யின்னல் விலகிட, நேர் வந்து
    பேரழகன் திருவடியைப் பணிந்திடுவீர் நலமே!

தமிழர் வீரம் - அன்றும் , இன்றும்


புலியை முறத்தால் ஓட்டியதாய்ப்
      புலவர் போற்றிப் புகழ்ந்துரைத்த
வலிமை மிக்கு வாழ்ந்ததமிழ்
     மாதர் இற்றை நிலையென்ன?
மலிவாய் நடக்கும் காமுகர்க்கும்
    ஒருசார் காதல் பித்தர்கட்கும்
நலிந்து நோகும் பெண்ணினத்தை
    நாமெல் லோரும் காப்போமே!

ஓங்கிப் பிளிறி மதங்கொண்டே
    உலவும் பருத்த களிற்றினையே
வீங்கித் தோள்கள் புடைத்தெழவே
    வேலால் தடுத்தார் பழந்தமிழர்;
தீங்கு பரியும் கயவர்களைத்
    தெருவில் கண்டால் பெருமூச்சு
வாங்கச் சிதறி நிலைகுலைந்து
    மறைந்து கொள்வர் இன்றையவர்

Sunday 4 March 2018

தமிழக மீனவர் துயரம்

                        இலங்கை நட்பு நாடா?

                         தமிழக மீனவர் துயரம்


அதிகாலை நேரத்தில் அலைகடலுள் படகோட்டி
விதிதன்னை நொந்துமனம் வெம்பிவெம்பி நடுக்கடலில்


வலைகளைத்தாம் விரித்துவைத்து மாட்டாதோ மீன்என்று
அலமந்து நாளுமிடர் அடைகின்றார் மீனவர்கள்;


சிலநேரம் மீன்கிட்டும்; சில நேரம் கிட்டாது;
நிலைமையினைப் பகிர்ந்திட்டால் நீர்வழியும் கண்களிலே;


நங்கச்சத் தீவுதனை நட்புநா டென்றுசொல்லிச்
சிங்களத் தீவோடு சேர்த்ததனால் வந்தவினை


"எல்லைதனைத் தாண்டிவிட்டார்" என்றுரைத்து நித்தநித்தம்
தொல்லைதனை அளித்திடுவர்; துப்பாக்கி யால்சுடுவர்;


வெஞ்சிறையில் அடைத்திடுவர்; மீன்வலைகள் அறுத்திடுவர்
வஞ்சமிகச் செய்திடுவர்; வாழ்க்கையைப் பறித்திடுவர்;


சுண்டைக்காய் நாடுசெய்யும் சொல்லொணாச் சீண்டல்களை
அண்டைநட்பு நாடெனவே ஆதரித்தல் முறையாமோ?


ஆரிடம்போய் நாம்சொல்லி அழுவதென நினைக்கையிலே
பேரிடராய்ப் புயல் ஒக்கி பிடர்பிடித்தே ஆட்டியது


கணக்கற்ற மீனவரைக் காணவில்லை; மீட்பதிலே
சுணக்கங்கள் தடங்கல்கள் சோர்வடையச் செய்தனவே;


வாழை,ரப்பர் மரங்களெலாம் மண்ணோடு சாய்ந்தனவே;
ஏழையரும் செல்வர்களும் ஏங்கியழுது அரற்றினரே;


இயற்கைத்தாய் விளைவித்த இன்னல்களால் சோர்ந்தமனம்
தயக்கமாய்த் தேறிவரும் தருணத்தில் தீச்செய்தி?


நட்புமிகும் நாடென்று நாம்சொல்லும் சிறீலங்கா
திட்பமுடன் இயற்றியது தீமைமிகு சட்டமொன்று;


"எல்லைதனைத் தாண்டிவந்தால் எழுகோடி அபராதம்"
இல்லையோ? ஈவிரக்கம் இந்தநட்பு நாட்டவர்க்கு;


யாதும் எம் ஊரென்றும் யாவரும் கேளிரென்றும்
ஓதும் எம் தமிழினத்தார் உறுவதுவோ பெருந்துன்பம்?


கச்சத்தீ வுப்பகுதியைக் கச்சிதமாய் மீட்டெடுத்தால்
நிச்சயமாய்த் துன்பமெலாம் நீங்கிவிடும்; ஐயமில்லை;


ஆகையினால் தமிழர்களே! அனைவருமே போராடி
வாகையினைச் சூடிடுவோம்; மண்ணினையே மீட்டெடுப்போம்


மையத்தின் பேரரசும் மாநிலத்தின் அரசும்நற்
செய்கையாற் சேர்க்க சிறப்பு.