Thursday 27 September 2018

சங்க இலக்கியத்தில் பறவைகள்

சங்க இலக்கியத்தில் பறவைகள்

சங்க இலக்கியத்தில் இயற்கையோடு  இயைந்த  வாழ்வு
விவரிக்கப் பட்டுள்ளது. இந்தப் பூவுலகில் மனிதர்களாகிய
நாம் மட்டும் வாழவில்லை. நம்மைச் சுற்றிப் பறவைகள்,
நாய், பசு, எருது, பூனை முதலான வீட்டு விலங்குகள், கோவில்
களில் வளர்க்கப்படும் யானை, இன்னும் சுவர்களில் ஊர்ந்து
செல்லும் பல்லி இவைபோன்ற எண்ணிலடங்காத உயிரினங்கள்
வாழ்ந்து  வருகின்றன. இவைகளால் ஏற்படும்
சில  நிகழ்வுகளை நாம் எதிர்காலத்தைப் பற்றிய முன்னறிவிப்
பாகக் கருதுகின்றோம். ஆதிகாலந் தொட்டே மனிதர்கள் இம்
மாதிரியான நம்பிக்கைகளைக் கைக்கொண்டு வாழ்ந்து வரு
வது கண்கூடு. நம் நாட்டில் மட்டுமன்று; உவகெங்கும் வெவ்வேறு
வகையான நம்பிக்கைகள் நிலவின; தற்பொழுதும் நிலவி வரு
கின்றன. அறிவியல் அறிஞர்கள் இவற்றை மூடநம்பிக்கைகள்
என்று இழிவாகப் பேசினாலும் இம்மாதிரியான நம்பிக்கைகளை
ஒழிக்க முடியவில்லை. சங்க காலத்தில் நிலவிய பறவைகள்
தொடர்பான சில செய்திகளைப் பார்ப்போம்.

காக்கை கரைந்தால் வீட்டுக்கு விருந்தினர் வருவர் என்னும்
நம்பிக்கை இன்றும் நிலவி வருகின்றது. சங்ககாலத்திலும்
இந்நம்பிக்கை நிலவியது. குறுந்தொகை 210ஆம் பாடலில்
காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்னும் பெண்பாற்
புலவர் காக்கை கரைந்ததைப் பற்றியும் அதனால் விளைந்த
பயனைப்பற்றியும்  வியந்து பாடியுள்ளார். அது பின்வருமாறு:

ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டுத் தலைவியைப் பிரிந்து
சென்ற தலைவன் திரும்பி வந்துவிட்டான். அவன் தோழியி
டம் உரையாடுகின்றான்: "நான் பிரிந்திருந்த காலத்தில்
தலைவி துன்பம் அடையாமல் அவளை நன்முறையில்
தேற்றியுள்ளாய்." என்று புகழ்ந்துரைக்க அவள் பதில் கூறு
கின்றாள்:"இதில் என்செயல் ஏதும் இல்லை. காக்கை செய்த
புண்ணியம்; அது கரைந்த(கத்திய) காரணத்தால் நீவிர்
இன்று திரும்பி விடுவீர் என்ற நல்ல நிமித்தம்(சகுனம்)
மனத்தில் தோன்றியது. இந்நம்பிக்கையைத் தலைவிக்குக்
கூறி அவளை ஆற்றுவித்தேன்(தேற்றினேன்)."என்றுரைத்
தாள். இது தொடர்பான பாடலைப் பார்ப்போம்:
"திண்தேர் நள்ளி கானத்(து) அண்டர்
பல்லா பயந்த நெய்யில் தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோ(று)
எழுகலத்(து) ஏந்தினும் சிறிதென் தோழி
பெருந்தோள் நெகிழ்த்த; செல்லற்கு
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே!"
பொருள்:திண்ணிய தேரையுடைய நள்ளியென்
னும் ஊர்த்தலைவனுடைய காட்டில் வாழும்
இடையர்களுக்குரிய பலபசுக்கள் உண்டாக்கிய
நெய்யோடு தொண்டியென்னும் ஊரிலுள்ள
வயல்களில் விளைந்த வெண்ணெல் அரிசியால்
சமைக்கப்பட்ட  சுடுசோற்றை ஏழு பாத்திரங்
களில் ஏந்திக் கொடுத்தாலும்  என் தோழியாகிய
தலைவியின் பெரிய தோளை நெகிழச் செய்த
துன்பத்தை நீக்கும் விதத்தில்  கரைந்து நல்ல
நிமித்தத்தைத் தெரிவித்த காக்கையின்
செய்கையை ஒப்பிடும்போது அதற்குப்
படைக்கப்பட்ட நெய்ச்சோறு சிறிய அளவின
தேயாகும்.  ஏனெனில் தலைவி, துன்பத்தில்(பிரிவுத்
துன்பம்) ஆழ்ந்திருந்த பொழுது அவளைத் தேற்றும்
விதத்தில் காக்கை கரைந்து நல்ல நிமித்தத்தை
உணர்த்தி அவளை உய்வித்ததால் காக்கையின்
இயல்பான செய்கை வியந்து  பாராட்டப்பட்டது.
அதற்குப் படைக்கப்பட்ட பலி(உணவு; காக்கைக்கு
இடும் உணவைப் பலி எனறு கூறுதல் அக்கால
மரபு)  சிறிதளவேயாகும். இவ்வாறு காக்கையின்
இயல்பான, இயற்கையான செய்கையை மிகவும்
வியந்து பாராட்டியதால் நச்செள்ளையார் என்ற
இயற்பெயர் கொண்ட இப்பெண்பாற் புலவர்
காக்கைபாடினியார் என்னும் சிறப்புப் பெயர்
பெற்றார்.

ஆய் எயினன் என்பான் வேளிர்குடி வீரன். நன்னன்
என்பான் வேளிர்குடி  அரசன்.யாது காரணத்தாலோ
மிஞிலி என்னும் கோசர்குடி வீரனை ஆய்எயினனுடன்
போர்தொடுக்கத் தூண்டிவிட்டான்., நன்னன். பாழிப்
பறந்தலை என்ற இடத்தில் கடும்போர் நிகழ்ந்தது.
பிழைக்க முடியாத அளவுக்கு ஆய்எயினனை வெட்டிப்
புண்ணாக்கினான், மிஞிலி. போர்க் களத்தில் ஆய்
எயினன் குற்றுயிரும் குலை உயிருமாகப் புண்
களால் இன்னல் பட்டுக் கொண்டிருந்த போது,
வானில் பறவைகள் சிறகுகளை விரித்துக் கூட்ட
மாகப் பறந்து கொண்டிருந்தன. அது நண்பகல்
வேளை. இடமோ வெட்டவெளிப் போர்க்களம்.
ஆய்எயினன் பறவைகளின் நண்பன். பாது
காவலனும் கூட. அதனால் சூரியனின் உச்சி
வேளைக் கதிர்கள் மிக்க வெம்மையோடு
தகித்துக் கொண்டிருந்தன. அந்த வெப்பக்
கதிர்கள் ஆய் எயினனைத் துன்புறுத்தாமல்
இருக்கவே பறவைகள் சிறகுகளை விரித்துக்
கூட்டமாகப் பறந்தன என்று பரணராகிய
புலவர் விவரிக்கின்றார். இது தற்செயல்
நிகழ்வா? புலவர் கூறியது போல,  பறவைகள்
வேண்டுமென்றே உள்ளன்போடு பறந்தனவா?
ஆனால் ஆய் எயினன், மக்களுக்கு மட்டுமன்று,
பறவைகளுக்கும் நண்பனாகவும், பாதுகாவல
னாகவும் விளங்கியமை அக்காலத்தில் வாழ்ந்த
அனைவருக்குமே தெரியும். எனவேதான் பரணர்
இந்த நிகழ்ச்சியைத் தான் பாடிய மூன்று பாடல்
களிலும் குறிப்பிட்டுள்ளார். அவை பின்வருமாறு:
"கடும்பரிக் குதிரை ஆஅய் எயினன்
நெடுந்தேர் மிஞிலி யொடு பொருது களம்பட்டெனக்
காணிய செல்லாக் கூகை நாணிக்
கடும்பகல் வழங்கா தாஅங்கு......."
புண்பட்ட ஆய்எயினனைப் பாராதிருந்தவர்கள்
நன்னன் என்ற வேளிர்குடி அரசனும் ஆந்தை
களும் தாம். நன்னன் ஏன் பார்க்கவில்லை
யென்றால் அவன்தான் இந்தப் போரைத்
தூண்டியவன். ஆந்தைகள் பகலில் பறப்ப
தில்லை. மேலும், காக்கை போன்ற பறவை
களுக்கு ஆந்தைகளைப் பிடிக்காது.(அகம்:
148). இனி, அடுத்த பாடல்:
"ஓம்பரண் கடந்த வீங்குபெருந் தானை
அடுபோர் மிஞிலி செருவேல்கடைஇ
முருகுறழ்  முன்பொடு பொருதுகளம் சிவப்ப
ஆஅய் எயினன் வீழ்ந்தென, ஞாயிற்று
ஒண்கதிர் உருப்பம். புதைய  ஓராங்கு
வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந்தோடு
விசும்பிடைத் தூர ஆடி......"
பொருள்: ஆய் எயினன் மிஞிலியொடு
நடத்திய போரில் கடுமையாகப் போரிட்டு
முடிவில் தானும் தோற்று மடிந்தான். சூரி
யனின் உச்சிவேளைக் கதிர்களின் வெம்மை
அவன் மேனிமேல் படாது மறையுமாறு புதிய
பறவைகளின் ஆரவாரம் பொருந்திய
பெருந்திரளானது வானத்திடையே வட்ட
மிட்டு உயரே நிழலிட்டுப் பறந்தன.(அகம்:
181). இனி அடுத்த பாடலைப் பார்ப்போம்:
"யாம இரவின் நெடுங்கடை நின்று
தேமுதிர் சிமையக் குன்றம் பாடும்
நுண்கோல் அகவுநர் வேண்டின் வெண்கோட்
டண்ணல் யானை ஈயும் வண்மகிழ்
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்
அளிஇயல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை
இழையணி யானை இயல்தேர் மிஞிலியொடு
நண்பகல் உற்ற செருவில் புண்கூர்ந்து
ஒள்வாள் மயங்கமர் வீழ்ந்தெனப் புள்ஒருங்கு
அங்கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று
ஒண்கதிர் தெறாமை சிறகரிற் கோலி
நிழல்செய்து உழறல் காணேன் யானெனப்
படுகளம் காண்டல் செல்லான்,சினம்சிறந்து
உருவினை நன்னன் அருளான் கரப்ப".(அகம்:
208).
பொருள்: வெளியன் வேண்மான் ஆய்எயினன்
சிறந்த வள்ளல். அவனைப் புகழ்ந்து பாடும்
அகவுநர்கள் விரும்பினால் யானையைக்
கூடப் பரிசாகக் கொடுப்பான். அத்துடன் பறவை
போன்ற அனைத்து உயிர்களிடத்தும் அன்பு
பூண்டவன். அவன் மிஞிலியோடு நிகழ்த்திய
போரில் மரணக் காயமடைந்து போர்க்களத்தில்
வீழ்ந்து கிடக்கும் போது நண்பகல் சூரியக்
கதிர்கள் அவனை வருத்தாமல் இருக்கப்
பறவைகள் எல்லாம் ஒன்றாகக் கூடித்தம்
சிறகுகளால் பந்தலிட்டு நிழல்செய்து காத்தன.
இதனை என் கண்களால் காணமாட்டேன்
என்று கொடுங்கோலன் நன்னன் ஓடி ஒளிந்து
கொண்டான். இந்த நிகழ்ச்சியை மூன்று
பாடல்களில் புலவர் பரணர் விவரிப்பதில்
ஏதோ பொருளிருக்கும்.

சங்க காலத்தில் நிகழ்ந்த இந்த இரு நிகழ்வு
களும் நம் உள்ளத்தைத் தொடுகின்றன
என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.







Wednesday 19 September 2018

ஏறு தழுவுதல்(தமிழர் தம் வீர விளையாட்டு)

ஏறு தழுவுதல்(தமிழர்தம் வீர விளையாட்டு)

ஏறு தழுவுதல் சங்க காலத்தில் நிலவிய  வீர விளை
யாட்டு. யானையை ஒத்த வலிமையும் மறமும் கொண்ட
காளையை அடக்குவார்க்கே பெண்டிர் மாலை சூட்டும்
வீர வழக்கம் பின்பற்றப்பட்டு வந்தது. ஏறு தழுவதலைப்
பற்றிச் சங்க இலக்கியமான கலித்தொகையில் உள்ள
முல்லைக்கலியில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
கலித்தொகை முல்லைக்கலியில் 17 பாடல்கள் உள்ளன.
பாடல் 101 முதல் 107 முடியவுள்ள 7 பாடல்களும் ஏறு
தழுவும் நிகழ்ச்சிகளை விவரிக்கின்றன. மீதம் உள்ள
10 பாடல்களும் முல்லை நிலத்தார் பின்பற்றிய வாழ்க்கை
முறை, பழக்க வழக்கங்கள் போன்றவற்றை விவரிக்
கின்றன. கலித்தொகை அகப்பொருளைப் பாடும் நூல்
தானே. நல்லுருத்திரன் என்னும் புலவர் முல்லைக்கலி
யைப் பாடினார். சிலப்பதிகாரம் மதுரைக் காண்டத்தி
லும் ஏறு தழுவுதலைப் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்
ளது.

ஏறுதழுவக் காரணம் என்ன? முல்லைநிலத்து மக்கள்
கால்நடைகளை வளர்த்துப் பேணி அவைகளால் கிடைக்
கும் பால், மோர், தயிர், வெண்ணெய், நெய் முதலான
வற்றை விற்று வாழ்க்கை நடத்தியவர்கள். ஆடு, மாடு
முதலான வீட்டில் வளர்க்கப்படும் விலங்கினங்கள்
செல்வமாகக் கருதப்பட்டன. திருக்குறளில் வரும்
"கேடில் விழுச்செல்வம் கல்வி; ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை" என்ற குறளில் மாடு
என்ற சொல் செல்வத்தைக் குறிக்கும் சொல்
லாகவே கையாளப் பட்டுள்ளது. அந்தக் காலத்
தில் போர் தொடங்கும் பொழுது முதலில் பகை
வரது நாட்டுக்குப் படையெடுத்துச் சென்று
ஆநிரை(பசுக் கூட்டம்) யைக் கவர்ந்து வரு
வார்கள். ஆநிரையை இழந்தவர்கள் போராடி
மீட்க முயலுவர். இப்படியாகப் போர் தொடங்கி
நடைபெறும். எனவே, முல்லை நிலத்தார் வீரம்
மிக்கவராக இருத்தல் மிக மிக அவசியம். வீர
உணர்வை ஊட்டுவதற்காகவும், முல்லைநிலப்
பெண்கள் வீரமிக்க கணவரைத் தேர்வு செய்
வதற்காகவும் இந்த வீரவிளையாட்டு நிகழ்த்
தப் பட்டது. இனி ஏறுதழுவுதல் எங்ஙனம் நடை
பெற்றது எனக்கவனிப்போம்.

ஏறுதழுவுதல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதை முதல்
நாள் மாலையிலேயே ஆயர் குழல் ஊதித்
தெரிவித்து விடுவார்கள். மறுநாள் காலையில்
காளைகள் தொழுவத்தில் அணியாக நிறுத்தப்
படும். சிவபெருமானின் கணிச்சிப் படை(ஆயுதம்)
போலக் கூர்மையாகக் கொம்பு சீவப்பட்டு எதிர்
வரும் மாடுபிடி வீரர்கள் பிடிப்பதற்கு முயன்றால்
தாக்குவதற்கு வசதியாகக் காளைகள் பழக்கப்படுத்தப்
பட்டு நிறுத்தப்பட்டருக்கும். அவ்விடத்தில் இடி
யோசை போலப் பறைகள் முழக்கப்படும். ஏறத்
தாழப் போர்க்களம் போலத் தோற்றமளிக்கும்.
காளைகளை வளர்த்த மகளிர் மணக்கும்
வாசனைப் பொடிகளையும், நறுமணப் புகை
களையும் ஏந்தியவாறு அணிவகுத்து நிற்பர்.

முல்லைக்கலி முதற் பாடலில் தோழியானவள்
தலைவிக்கு ஏறுதழுவுதலைச் சுட்டிக் காட்டு
கின்றாள். அவள் வாயிலாக நிகழ்ச்சியைப்
புலவர் விவரிக்கின்றார். "மாடுபிடி வீர்கள் பிடவம்,
கோடல், காயா மற்றும் சில பூக்களைக் கண்ணி
யாகக் கட்டித் தலையில் அணிந்துகொண்டு
தொழுவத்துக்குள் நுழைந்தனர். நீர்த்துறையில்
வீற்றிருந்த தெய்வத்தையும் ஆலமரத்தையும்
மராமரத்தையும் போற்றி வணங்கிக் கொண்டு
களத்துள் புகுந்தனர்." மேலும் விவரிக்கிறாள்.
"ஒரு காளை தன்னை அடக்கப் பாய்ந்த பொது
வனை(ஆயனை/இடையனை)ச் சாகும் அளவுக்
குக் குத்தித் தன் கொம்பில் வைத்துக் கொண்டு
சுழற்றுவதைப் பாராய்! பாஞ்சாலியின் கூந்தலைப்
பிடித்திழுத்த துச்சாதனன் நெஞ்சைப் பிளப்பேன்
என்று வஞ்சினம்(சபதம்) கூறிய பீமனின் செயல்
போல இருந்தது.

மற்றொரு காரிக் காளை விடரிப்பூ அணிந்து வந்த
பொதுவனைச் சாய்த்து அவன் குடல் சரியும்படி
அவனைக் குலைப்பதைப் பாராய்! இக் காட்சி
சிவபெருமான் தன்னை இடரிய எருமைக்
கடாவின் நெஞ்சைப் பிளந்து தன் கூளிப்
பேய்களுக்கு உணவாகத் தந்ததை ஒத்துள்
ளது. வேறொரு வெள்ளைநிறக் காளை
தன் மீது தாவி ஏற முயன்ற பொதுவனைத்
தாக்கித் தன் கூர்மையா ன கொம்பால் அவ
னைச் சீரழிப்பதைப் பாராய்! இரவு வேளை
யில் வந்து தன் தந்தையைக் கொன்றவனின்
தோளைத் திருகி எறிந்தவன் செய்கையைப்
போன்றது இது."

இக் காட்சிகளைக் கண்ட தலைவி அச்சம் கொண்
டாள். அவள் அச்சத்தைப் போக்கத் தோழி நல்ல
நிமித்தம் பார்த்துக்  கூறுகின்றாள்." தன் கழுத்தில்
மாலை அணிவிக்கக் கூடிய கணவனைத் தேர்ந்
தெடுப்பதற்காக இந்த ஏறுதழுவும் நிகழ்ச்சி நடை
பெற்றது.  இதனை அறிவிக்க ஆயர் முதல்நாள்
மாலையிலேயே குழல் ஊதினர். கூட்டத்தில்
ஒரு பெண்'ஆண் யானையை விடவும் வீரமிகு
அஞ்சாத கண்கொண்ட இந்தக் காளையை நீ
விடாமல் தொடர்ந்து சென்றால் இந்த ஆயமகள்
உனக்குத் தன் தோளை உரிமையுடையதாக
ஆக்குவாள்.' என்று சொல்வதைக் கேள். மற்றொரு
பெண் 'பகல் போல ஒளிவீசும் கண்ணியைச்
சூடிக் கொண்டும் கையில் கோல் வைத்துக்
கொண்டும் கொல்லும் காளையைப் போராடி வென்ற
வனுக்கு என் கூந்தலை மெத்தையாக்கு
வேன்' என்று இயம்புவதைக் கேளாய். வேறொரு
பெண்'காளையைப் பிடிப்பதில் எனக்கு நிகரான
வர் யாருமிலர் எனச்சொல்லித் தன் வீரத்தை
வெளிப் படுத்துபவனுக்கு நான் உறவுக்காரி
ஆகாமல் விடமாட்டேன். அவனைக் காண்பதற்
காக என் காளையுடன் என் கண்பூக்கக் காத்துக்
கொண்டிருக்கிறேன்.' என்று சொல்லிப் புலம்பு
வதைக் கேட்டிடுக!

இவ்வண்ணம் நிகழ்ந்த ஏறுதழுவும் நிகழ்ச்சியில்
காளைகளும் மிகவும் வருந்தின. பொதுவர்களும்
புண்பட்டனர். நறுமணம் கமழும் கூந்தலுடன்
பொதுவர் மகளிர் முல்லை பூத்த காட்டுப் பூங்கா
வுக்கு வந்தனர். பொதுவர்குல ஆடவரோடு வாழ்க்
கை  நடத்தக் குறிகாட்டினர்." இவ்வாறு விவரித்த
தோழி தலைவியிடம்" உன் தலைவனும் ஒரு நாள்
காளையை அடக்கி உன் கைப்பற்றிடுவான்" என்று
ஆற்றுவித்தனள்.

இப்படியாக ஏறு தழுவும் நிகழ்ச்சி தொடர்ந்து சில
நாட்கள் நடைபெற்றது. சில பொதுவர் புண்பட்டனர்.
சில பொதுவர் காளைகளை அடக்கி ஆண்டு அவை
களின் மேல் ஏறிவந்தனர். தாம் வளர்த்த காளை
களை வென்ற பொதுவரை மணந்து கொள்ள அந்த
அந்த ஆயர்குலப் பெண் சம்மதித்தாள். நிகழ்ச்சி
முடிந்தவுடன் பொதுவர் குல ஆடவரும் மகளிரும்
காளைகளைத் தொழுவத்துக்குக் கொண்டு
சென்று நிறுத்தினர். பின்னர் அனைவரும் ஆநிரைச்
சாணம் மண்டிய ஊர்மன்றத்தில் ஒருவரை யொருவர்
தழுவிக் கொண்டு தழூஉ ஆட்டம் ஆடிக் களித்தனர்.

முல்லைக்கலி பாடல்:103
"கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்."
பொருள்: கொல்லும் காளையின் கொம்புக்கு
அஞ்சுபவனை ஆயர்குலப் பெண் இந்தப் பிறவி
யில் மட்டும் அன்று; அடுத்த பிறவியிலும்
அணைக்க மாட்டாள்.
"அஞ்சார் கொலைஏறு கொள்பவர் அல்லதை,
நெஞ்சிலார் தோய்தற்(கு) அரிய---உயிர்துறந்து
நைவாரா ஆயமகள் தோள்."
பொருள்: கொல்லும் காளையை அஞ்சாமல்
பிடித்தாள்பவர் அல்லாதவரை வலிய நெஞ்சுறுதி
கொண்ட ஆயர்குலப் பெண் தழுவ மாட்டாள்;
தழுவ நேர்ந்தால் மனம் நொந்து உயிர் துறப்பாள்.
"வளியா அறியா உயிர், காவல்கொண்டு,
நளிவாய் மருப்பஞ்சும் நெஞ்சினார் தோய்தற்கு
எளியவோ, ஆயமகள் தோள்?
பொருள்: அறியாது காற்றில் பறக்கும் உயிரைக்
காப்பாற்றிக் கொண்டு காளையின் கூரான
கொம்புக்கு அஞ்சுபவர் ஆயர் குலமகளின்
தோளை அணைப்பது எளிதோ?
"விலைவேண்டார் எம்மினத்(து) ஆயர்மகளிர்
கொலேயேற்றுக் கோட்டிடை,தாம் வீழ்வார்
     மார்பின்
முலையிடைப் போல, புகின்."
பொருள்: தம்மை விரும்புபவர் கொல்லும்
காளையின் கொம்புகளுக் கிடையில் பாய்ந்து
அடக்குவாராயின் எம் ஆயர்குலப் பெண்கள்
தம்மை மணக்கத் தடை சொல்வதில்லை.
"குரவை தழீஇ, யாம், மரபுளி பாடி
தேயா விழுப்புகழ்த் தெய்வம் பரவுதும்--
மாசில்வான் முந்நீர்ப் பரந்த தொல்நிலம்
ஆளும் கிழமையொடு புணர்ந்த
எம்கோ வாழியர், இம்மலர் தலைஉலகே!"
பொருள்: இந்த ஏறு தழுவல் நிகழ்ச்சியை மர
பாகக் கொண்ட ஆயர் குலத்தினர் நாம். பாடிக்
கொண்டே குரவை தழுவி ஆடுவோம். பாடும்
போது குறையாத பெரும்புகழுடைய தெய்வத்
தைப் போற்றுவோம். ஆழிசூழும் இந்த நிலப்
பரப்பை ஆளும் உரிமைபெற்ற மன்னரை
வாழ்த்துவோம். இந்த உலகையும் வாழ்த்து
வோம்.

இனி, ஏறு தழுவுதல் குறித்துச் சிலப்பதிகாரத்தில்
என்ன சொல்லப் பட்டுள்ளது என்று பார்ப்போம்.

கோவலன் சிலம்பு விற்க மதுரை நகருக்குள்
சென்றுள்ளான். மதுரைப் புறநகரில் கண்ணகி
ஆயர்குலப் பெண்ணான மாதரி வீட்டில்  தங்கி
யுள்ளாள். அப்போது சில தீநிமித்தங்கள் தோன்
றின. அதனால் மாதரி குரவைக் கூத்து நடத்திக்
கண்ணன், பலராமன் முதலான தெய்வங்களைப்
போற்றித் துதித்தால்  தீங்கு எதுவும் வாராது என
நம்பி ஆய்ச்சியர் குரவைக்கு ஆயத்தம் செய்தாள்.

"காரி கதனஞ்சான் பாய்ந்தானைக் காமுறுமிவ்
வேரிமலர்க் கோதையாள் சுட்டு."
பொருள்:கரிய எருதின் சீற்றப் பாய்ச்சலைக்
கண்டு அஞ்சாமல் அதன்மேல் பாய்ந்து அதனை
அடக்கியவனை, தேன்நிறைந்த மலர்மாலை
அணிந்த இப்பெண் விரும்பி ஏற்பாள்.
காளையை அடக்கியவனுக்கே காரிகை.
"நெற்றிச் செகிலை அடர்த்தாற்(கு) உரியவிப்
பொற்றொடி மாதரால் தோள்."
"மல்லல் மழவிடை ஊர்ந்தாற்(கு) உரியளிம்
முல்லையம் பூங்குழல் தான்."
"நுண்பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகுமிப்
பெண்கொடி மாதர்தன் தோள்."
"பொற்பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகுமிந்
நற்கொடி மென்முலை தான்."
"வென்றி மழவிடை ஊர்ந்தாற்(கு) உரியளிக்
கொன்றையம் பூங்குழ லாள்."
"தூநிற வெள்ளை அடர்த்தாற்(கு) உரியளிப்
பூவை புதுமல ராள்".
அரும் சொற் பொருள்:
செகில்--சிவப்பு;  அடர்த்தல்--அடக்குதல்
மல்லல்--வலிமை; மழவிடை--சிறந்த காளை
பொறி--புள்ளி
மற்ற நிகழ்ச்சிகள் கலித்தொகையில் குறிப்
பிடப் பட்டவாறே சிலப்பதிகாரத்திலும் கூறப்
பட்டுள்ளன. ஆய்ச்சியர் குரவை யாடித் தெய்
வத்தை(கண்ணன், பலராமன், நப்பின்னை
முதலானோரை)த் தொழுது, நாட்டையாளும்
மன்னவனை வாழ்த்தி இறுதியில் உலகத்தை
வாழ்த்தி முடித்தனர்.

இவ்வாறு ஏறு தழுவுதலைப் பற்றிக் கலித்
தொகையிலும், சிலப்பதிகாரத்திலும் விரி
வாக விவரிக்கப் பட்டுள்ளது.







Thursday 13 September 2018

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!

புறநானூற்றுப் பாடல் ஒன்று தமிழகத்தின்
இன்றைய தேவையை வலியுறுத்துவதாக
விளங்குகின்றது.  தமிழகத்தின்  இன்றைய
இன்றியமையாத தேவை நீர்மேலாண்மை
யாகும். நீர் மேலாண்மையின்  அவசியத்தைப்
பற்றிக் கூறும்  புறநானூற்றுப் பாடலை ஆய்வு
செய்வோம்.(புறம்:18).

இப்பாடலை இயற்றிய புலவர் குடபுலவியனார்.
பாண்டியன் நெடுஞ்செழியன் மீது பாடப்பட்டது.
நீர்நிலை பெருகினால் மட்டுமே அறம், பொருள்,
இன்பம்  எல்லாம் கிடைக்கும். "நீர்மையின்றி
உடல் வாழமுடியாது. உடலுக்கு உணவு கொடுத்தால்
மட்டுமே உயிர் நிலைக்கும். உணவு என்பது நிலத்
தால் கிடைக்கும் விளைச்சலும் நீரும் சேர்ந்தது
ஆகும். நிலத்தைப் பேணிப் பாதுகாப்பதும் நீர் வளத்
தைப்பெருக்குவதும்  வேளாண்மைத் தொழிலைச்
செழிக்கச் செய்யும். எவ்வளவு பரந்துபட்ட நிலமாயி
னும் நீர்வளம் இல்லாவிட்டால் புன்செய் என்றே
அழைக்கப்படும். அது அதிகப் பயன் தராது.

"எனவே , பாண்டியனே! இந்தச் செய்தியை எண்ணிப்
பார்த்திடுக!  குளம்தொட்டு(தோண்டி) வளம்பெருக்கி
நின் நாடு முழுவதையும் செழிப்படையச் செய்வாயாக!
இதனைச் செய்தோர் அறம், பொருள், இன்பம் என்னும்
மூன்றையும் பெற்றுப் புகழடைவர்; அல்லாதோர் புகழ்
பெறாது மாண்டுபோவர் என்பதை உணர்வாயாக!"
என்று புலவர் வேந்தர்க்கு அறிவுறுத்தினார்.

உழவுத் தொழில் செழித்தால்தான் நாடும் முன்னேறும்;
மன்னவர்க்குப் பேரும் புகழும் கிட்டும். பிற்காலத்தில்
ஔவையார் ஒரு வேந்தனை வாழ்த்தும் பொழுது "வரப்பு
உயர்க" என வாழ்த்தினார். வரப்பு உயர்ந்தால் நீர்மட்டம்
உயரும்; நீர் உயர்ந்தால் நெல்விளைச்சல் உயரும்; நெல்
விளைச்சல் உயர்ந்தால் குடி உயரும்(குடிமக்கள் வாழ்க்கைத்
தரம் உயரும்); குடிஉயர்ந்தால் கோன் உயர்வடைவான்.
இதனைக் கருத்தில் கொண்டுதான் தமிழ்நாட்டு முடி
யுடை மூவேந்தரும் ஏனைய குறுநில அரசர்களும்
ஏரி, குளம், கண்மாய்,கிணறு போன்ற நீர்நிலைகளை
வெட்டுவித்து அவ்வப்பொழுது பாதுகாத்துச் செப்பனிட்டு
வந்தனர். இயற்கையாக உருவான ஆறுகளைத் தூர்வாரிக்
கால்வாய் வெட்டி முறையாகப் பேணிவந்தனர். பெரிய
ஆறுகள் தமிழ்நாட்டில் தோன்றாவிடினும், சிற்றாறுகள்,
கிளை ஆறுகள் நிறையவே உள்ளன. அவைகளைப்
பேணிப் பாதுகாத்தாலே நீர்ப் பற்றாக்குறை ஏற்படவே
ஏற்படாது. ஆறுகளில் அதிக அளவில் மணல் அள்ளாமல்
பார்த்துக் கொள்ளல் வேண்டும். நீர் ஆதாரத்தைப் பெருக்
கிடவே எல்லாக் கோவில்களிலும் தெப்பக்குளம் வெட்டு
வித்தார்கள். கரிகால் பெருவளத்தான் காவிரியாற்றை
ஒழுங்குபடுத்தக் கல்லணை கட்டுவித்தார். இனி பாடலைப்
பார்ப்போம்:
"முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்து  பட்ட வியன் ஞாலம்
தாளின் தந்து தற்புகழ் நிறீஇ,
ஒருதாம் ஆகிய உரவோர் உம்பல்!
ஒன்றுபத் தடுக்கிய கோடிகடை இரீஇய

பெருமைத்(து) ஆகநின் ஆயுள் தானே!
நீர்த் தாழ்ந்த குறுங் காஞ்சிப்
பூக்க தூஉம் இனவாளை,
நுண்ஆரல்,பரு வரால்,
குரூஉக் கெடிற்ற குண்(டு) அகழி;

வான்உட்கும் வடிநீண்மதில்;
மல்லல் மூதூர் வய வேந்தே!
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்,
ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி,
ஒருநீ ஆகல் வேண்டினும் சிறந்த

நல்லிசை நிறுத்தல் வேண்டினும் மற்றதன்
தகுதி கேளினி மிகுதி யாள!
நீரின்(று) அமையா யாக்கைக்(கு) எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே!
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;

உணவெனப் படுவது  நிலத்தொடு நீரே;
நீரும் நிலனும் புணரியோர், ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே;
வித்திவான்  நோக்கும் புன்புலம் கண்ணகன்
வைப்பிற்(று) ஆயினும், நண்ணி ஆளும்

இறைவன் தாட்(கு)உத வாதே ;அதனால்
அடுபோர்ச் செழிய! இகழாது வல்லே
நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம, இவண்தட் டோரே;
தள்ளா தோரிவண் தள்ளா தோரே."

"ஒலி முழங்கும் கடல்சூழ்ந்த இந்தப் பரந்து
விரிந்த நாட்டைத் தம் அரிய முயற்சியால்
வெற்றிகொண்டு புகழ்பெற்றுத் தாமே
ஒரு குடைக்கீழ் அரசு ஆண்ட வலிமை
உடையவர் பாண்டியர்.அவர் வழியில் வந்த
வனே! கோடிக்குமேலான ஆண்டுகள் நின்
வாழ்நாள் நீடிப்பதாகுக! வாளைமீன்களும்,
ஆரல்களும், வரால்களும்,கெளிறுகளும்
நிறைந்த அகழி சூழ்ந்ததும் வானம் அளாவிய
மதிலைக் கொண்டதும் ஆகிய பழைய ஊரைத்
தலைநகராக உடையவனே! வலிமிக்க வேந்தனே!
நீ மறுமை இன்பத்தை விரும்பினாலும், உலகம்
முழுவதையும் வெல்ல வேண்டுமென நினைத்தா
லும், நிலைபெற்ற புகழை விரும்பினாலும் அதற்குச்
செய்ய வேண்டியவை  யாவை எனக் கேட்பாயாக!".
என்று உரைத்து மேலே குறிப்பிடப்பட்ட அத்தனை
இன்றியமையாத கருத்துக் களையும் புலவர் எடுத்
துரைத்தார். நீர் மேலாண்மை மிக மிக அவசியமான
தாகும். அவசரமாகச் செய்யப்பட வேண்டியதும்
ஆகும். தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்கள்  சுமுகம்
காட்டாமல் வெறுப்பை வெளிப்படுத்திவரும் சூழ்நிலை
யில் புறநானூற்றுப் பாடல் நீர்மேலாண்மையின்
தேவையைத் தெற்றென விளக்குகிறது. மாநில
மக்களும், மாநில அரசும்  அறிஞர் பெருமக்களைக்
கலந்து ஆலோசித்துத் தேவையான நடவடிக்கை
களை மேற்கொள்வது காலத்தின் கட்டாயம் ஆகும்.

Friday 7 September 2018

இறந்த கற்பினாட்(கு) எவ்வம் படரன்மின்!

இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்!

கலித்தொகையில் பயின்றுவரும் ஒரு அழகிய
பாட்டு. பாலைக் கலியில் உள்ள ஒன்பதாம் பாடல்.
கலித்தொகை அகப்பொருளைப் பாடுகின்ற
இலக்கியம். அகப்பொருளில் களவியல் மற்றும்
கற்பியல் என்னும் இரு துறைகள் உள்ளன. முன்
பின் அறிந்திராத ஆண்மகன்(தலைவன்)ஒருவனும்
பெண்மகள்(தலைவி) ஒருத்தியும்  தற்செயலாகச்
சந்திக்கும் பொழுது இயற்கை நெறிப்படி ஒருவர்
பால் ஒருவர் ஈர்க்கப்பட்டுப் பிறர் அறியாமல் பழகி
வாழ்ந்து வருவது களவியல் ஒழுக்கம்  எனப்படும்.
களவியல் வாழ்வு குறுகிய காலத்துக்கு மட்டுமே
அனுமதிக்கப்பட்டது. இவர்கள் சந்திப்பைப் பற்றியும்
பழக்கத்தைப் பற்றியும்  அரசல்புரசலாக ஊருக்குள்
பேச்சுக் கிளம்பும். ஊரார் வாயிலாகத் தோழிக்குத்
தெரியவரும். அவள் வாயிலாகத் தாய்க்கும் தந்தைக்
கும் தெரியவரும். அவர்கள் திருமணப் பேச்சைத்
தொடங்கி நல்லபடியாக முடித்து வைப்பார்கள். திரு
மணத்தில் முடிந்தால் கற்பியல் ஒழுக்கம் தொடங்கி
விட்டது என்று பொருள்.  காதலர்களின் மறைவான
வாழ்க்கை ஊராருக்குத் தெரியத் தொடங்கினால்
அலர்(பழிச்சொல்) பேசத் தொடங்கிவிடுவார்கள்.
அதனால் களவியல் வாழ்க்கை குறுகிய காலம் மட்
டுமே நிகழும். அவ்வளவு நெறிமுறைகள் சமுதாயத்
தில் நிலவின. காதல் செய்வதற்கு எவ்வளவு  சுதந்
திரம் இருந்ததோ அந்த அளவு ஒழுக்கநெறியும்
விதிமுறைகளும் இருந்தன.

களவியல் வாழ்க்கையில் உடன்போக்கு (ஓடிப்
போதல்) அனுமதிக்கப்பட்டது. ஆனால் ஓடிப்
போன பெண்ணைத் தேடித் தோழியோ, செவிலித்
தாயோ, தாயோ பின்னாலேயே வந்து காதலர்களைச்
சந்தித்துத் திருமணத்துக்கு உடன்பட வைத்துத் திரு
மணத்தை நிகழ்த்திடுவார்கள்.

நாம் பார்க்கவிருக்கும் பாடலில் இது போன்ற நிகழ்வு
தான் சொல்லப்பட்டுள்ளது. தலைவி ஒருத்தி தன் தாய்
தந்தையரைத்  துறந்து தன் மனத்துக்கு உகந்த
தலைவனோடு சென்றுவிட்டாள். இச்செயலைப் பற்றிக்
கேள்விப்பட்ட  செவிலித்தாயானவள் வளர்ப்பு
மகளைத் தேடிக் கொண்டு காட்டுக்குள் சென்றாள்.
அங்கும் இங்கும் தேடிக்கொண்டு வரும்போது இடை
வழியில் சில அந்தணர்களைச் சந்தித்தாள். அவர்கள்
சூரிய வெப்பத்தைத் தாங்கும் பொருட்டுக் கையில்
குடையையும் உறியிலே தங்கிய கமண்டலத்தையும்
புகழ் அமைந்த முக்கோலையும் தோளிலே சுமந்து
கொண்டு இறைவன் திருப்பெயரைத் தவிர வேறு
எதனையும் நினையாதவராக வந்துகொண்டிருந்தனர்.
அவர்களிடம் செவிலித்தாய் உரையாடினாள்."அந்தணர்
களே! நீங்கள் வந்த வழியில்  என்மகள் ஒருத்தியையும்
வேறொருத்தியின் மகன் ஒருவனையும் பார்த்தீர்களா?"
என்று வினவினாள். அந்த அந்தணர்களின்
தலைவராகத் தோன்றியவரிடம் வினா
தொடுக்கப்பட்டது. அவர்"நாங்கள் பாராது
இருந்தோமில்லை; ஆண்மகனாகிய ஒரு
அண்ணலையும் மாட்சிமைப்பட்ட அணிகலன்
களையணிந்த இளமையான பெண் ஒருத்தி
யையும் கண்டோம். நீவிர் அப்பெண்ணுக்குத்
தாய் போலத் தோன்றுகின்றீர்;  சந்தனமரம்
மலையிலே தோன்றினாலும் மலைக்குச்
சந்தனத்தால் ஏதும் பயன் உண்டா? (கிடை
யாது); சந்தனத்தை அரைத்துப் பூசிக்கொள்
பவருக்கே பயன் உண்டு; அதுபோலவே உங்கள்
மகளும் இனி உங்களுக்குப் பயன்படமாட்டாள்.
(அவளைக் காதலித்தவனுக்கே அவள் பயன்படு
வாள்).

வெண்மையான முத்து கடலில் உதித்தாலும்
அதனால் கடலுக்கு ஏதும் பயனில்லை;  அதனை
அணிந்து கொள்பவருக்கே பயன்படும். உங்கள்
மகளும் அவ்வாறே  உங்களுக்குப் பயன்படாள்.
(அவளைக் காதலித்தவனுக்கே பயன்படுவாள்).

இனிய ஏழிசை யாழிலே உருவானாலும்  அதனால்
யாழுக்குப் பயன் ஏதுமில்லை. ஏழிசை இசைப்ப
வர்க்கே பயன்படும். அது போலவே உங்கள் மகளும்
உங்களுக்குப் பயன்படாள்.(அவளைக் காதலித்தவ
னுக்கே பயன்படுவாள்).

அதனால் மிகுந்த கற்புடைய அந்தப் பெண்ணுக்குத்
துன்பம் நினைக்க வேண்டா; சிறந்த காதலனைத்
தேர்ந்தெடுத்து அவனை வழிபட்டு அவன்பின்னே
போனாள். அவள் செய்த செயலே அறத்தின்பாற்
பட்டதாகும். (எனவே அவளுக்கு யாதொரு துன்பமும்
நினையாதீர்!).
இதனைக் கேட்ட செவிலித்தாய் மனந்தேறி நிம்மதி
யடைந்தாள்.  பாடலைப் பார்ப்போம்:
"எறித்தரு கதிர்தாங்கி ஏந்திய குடைநீழல்
உறித்தாழ்ந்த கரகமும், உரைசான்ற முக்கோலும்,
நெறிப்படச் சுவலசைஇ, வே(று) ஓரா நெஞ்சத்துக்
குறிப்பேவல் செயல்மாலைக் கொளைநடை அந்தணீர்!
வெவ்விடைச் செலல்மாலை ஒழுக்கத்தீர்! இவ்விடை
என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும்
தம்முளே புணர்ந்த தாமறி புணர்ச்சியர்;
அன்னார் இருவரைக் காணிரோ? பெரும!
'காணேம் அல்லேம்; கண்டனம் கடத்திடை;
ஆணெழில் அண்ணலோ(டு) அருஞ்சுரம் முன்னிய
மாணிழை மடவரல் தாயிர்நீர் போறிர்.

பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்(கு) அல்லதை,
மலையுளே பிறப்பினும் மலைக்(கு)அவைதாம்
   என்செய்யும்?
நினையுங்கால், நும்மகள் நுமக்கும்ஆங்(கு) அனையளே!
சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்(கு) அல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்(கு)அவைதாம் என்செய்யும்?
தேருங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்(கு) அனையளே!

ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்(கு) அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்(கு)அவைதாம்
   என்செய்யும்?
சூழுங்கால்,நும்மகள் நுமக்கும்ஆங்(கு) அனையளே!

      எனவாங்கு,

இறந்த கற்பினாட்(கு) எவ்வம் படரன்மின்;
சிறந்தானை வழிபடீஇச் சென்றனள;
அறந்தலை பிரியா  ஆறும்மற்(று) அதுவே!
அரும் பொருள்:
உரைசான்ற முக்கோல்--திரிதண்டம்
சுவல் அசைஇ--தோளில் தொங்கவிட்டு
கடத்திடை--காட்டிடை
சுரம்--வறண்ட நிலம்(பாலை நிலம்)
மாணிழை--மதிப்புமிக்க அணிகலன்
மடவரல்--இளமை பொருந்திய
போறிர்--போன்று உள்ளீர்
சாந்தம்--சந்தனம்
தேருங்கால்--ஆராயுங்கால்
முரல்பவர்க்கு--மீட்டுபவர்க்கு
இறந்த கற்பினாள்--மிகச் சிறந்த கற்புடையவள்
எவ்வம்--துன்பம்
படரன்மின்--நினையாதீர்
வழிபடீஇ--வழிபட்டு

நம்முடைய மகளேயானாலும் உரிய பருவம் வந்த
வுடன் அவளுக்கேற்ற ஆணொடு சேர்ந்து இல்வாழ்வு
நடத்தினால்தான் அவள் பெண்மை மிளிரும். இது
தான் இப்பாடலின் உட்கருத்தாக உள்ளது.