Sunday 18 December 2022

என்று திரும்பி வருவீர்?

 என்று திரும்பி வருவீர்?


ஒரு தலைவனும் தலைவியும் வெகுநேரமாகத் தமக்குள்

உரையாடிக் கொண்டிருக்கின்றனர். அண்மைக் காலத்தில்தான்

இருவருக்கும் வரைவு நடந்து முடிந்தது. தலைவன் குடும்பத்தைச்

சிறப்பாக நடத்தப் பொருள் தேடச் செல்ல எண்ணித் தன் மனக்

கிடக்கையைத் தலைவியிடம் தெரிவிக்கின்றான். தலைவி பிரிவுத்

துயரை யெண்ணிப் பயணத்தைத் தடுக்க நினைக்கின்றாள். ஆனால்,

தலைவன் தன் முடிவிலிருந்து பின்வாங்க மறுக்கின்றான். அப்படி

யானால் தானும் உடன்வருவதாகத் தலைவி வற்புறுத்துகின்றாள்.

பயணம் மேற்கொள்ளவிருக்கும் வழியில் ஆறலை கள்வர்களாலும்

(வழிப்பறிக் கொள்ளையர்களாலும்) யானை, புலி, கரடி போன்ற

கொடிய விலங்குகளாலும், நச்சு உயிரினங்களாலும், ஓநாய், செந்நாய்

போன்ற பிற விலங்கினங்களாலும் உடலுக்கும் உயிருக்கும் தீங்கு

நேரிட வாய்ப்பு உள்ளதைச் சுட்டிக்காட்டிய தலைவன் வழிநெடுகிலும்

மேடு, பள்ளம், பரற் கற்கள் நிரம்பிய பாதைகளால் தொல்லை ஏற்பட

வாய்ப்பு உள்ளதையும்,  அருந்துவதற்குக் குடிநீரும் உண்பதற்கு

உணவும்  கிடைப்பதில் சிக்கல் உள்ளதையும் விரிவாக விளக்கி

ஒருவழியாகத் தலைவியைத் தன் முடிவைக் கைவிடச் செய்கின்றான்.


இவ்வளவு  வாதம், எதிர்வாதம் நிகழ்ந்து தலைவனும் தலைவியும் கருத்து

ஒருமித்துத்  தலைவன் மட்டும் பொருள் தேடச் செல்லலாம் என்ற முடிவுக்கு

வர நள்ளிரவு ஆகிவிட்டது. அதன்பின் இருவரும் பலநாட்கள் பிரிந்திருக்க

வேண்டுமே என்ற மனக் கிலேசத்தில் காதல் களியாட்டத்தில் ஈடுபட்டனர்.

உலக வாழ்வு நிலையில்லாதது;  மேனி இருக்கும் பொழுதே வாழ்க்கை

முழுவதையும் துய்த்துவிட வேண்டும் என நினைத்தவர்கள் போல் எல்லையற்ற

இன்பம் துய்த்தனர். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் குறிப்பிட்டதுபோல்

"தொலையாத இன்பமெல்லாம் துன்னினார் மண்மேல்

நிலையாமை கண்டவர் போல் நின்று". எல்லாம் முடிந்து, உறங்குவதற்கு ஒரு

சாம நேரமே மிச்சம் உள்ள  பொழுதில் உறங்கத் தலைப்படுகின்றனர்.

விடிந்ததும் தலைவன் பயணத்தைத் தொடங்கிவிடத் திட்டம் போடுகின்றனர்.


ஒருவாறு விடிகின்றது. தலைவிக்கு முன்பே தலைவன் விழித்தெழுந்து காலைக்

கடன்களை முடித்துப் பயணப்பட ஆயத்தம் ஆகின்றான். தலைவியை எழுப்புகின்றான்.

தலைவி விழித்தெழுந்து தனது கார்மேகக் கூந்தலை ஒரு கையால் ஒதுக்கிக் கொண்டே

"என்று திரும்பி வருவீர்?" என்று வருத்தம் தோய்ந்த குரலில் மெல்ல வினவுகின்றாள்

தலைவனுக்கும் அளவற்ற வருத்தம் பீறிடுகின்றது. ஒன்றும் பேசத் தோன்றவில்லை.

ஏற்கெனவே இதுகுறித்து விவாதிக்கும் பொழுது கார்காலத் தொடக்கத்தில் திரும்பி

வருவதாகச் சொல்லியிருந்தான். அது நினைவுக்கு வரவே, தலைவி மேலும் பேசாமல்

விறுவிறுவென்று குளியல் முதலான அன்றாடக் கடன்களை முடித்து நல்லுடை உடுத்தி

முருகனையெண்ணி வெண்ணீறு தருகின்றாள். தலைவனை ஆரத் தழுவிக்கொள்

கின்றாள். தனது கண்ணாலேயே "நீவிர்சென்று வருக" என்று விடை கொடுக்கின்றாள்.

தலைவன் பொருள் தேடிச் செல்லும் வழியில் இந்த நிகழ்வுகளைத் திரும்பத் திரும்ப

எண்ணிக்கொண்டே " இதனை நினைத்தல்லவோ இன்றென் நெஞ்சம் உருகுகிறது"

என்று சொல்லிக்கொள்கிறான். இந்தக் காட்சிகளைப் புலவர் அம்பிகாபதி தமது

'அம்பிகாபதிக் கோவை என்ற பெரிய பல துறைக் காரிகை'யில் கீழ்க்கண்டவாறு

விவரித்துள்ளார்:

"என்று திரும்பி வருவீர் எனத்துயில் ஏந்திழையாள்

நின்று குழலொரு கையால் ஒதுக்கிவெண் ணீறுதந்து

குன்று நிகர் கொங்கை மீதே யணைத்துக் கொடுத்தவிடை

ஒன்று நினைத்தல்ல வோஇன்றென் நெஞ்சம் உருகுவதே".


"திரைகடலோடியும் திரவியம் தேடு" என்று ஔவைப்பிராட்டி முதலான ஆன்றோர்கள்

எளிதாகச் சொல்லிவிட்டார்கள்.  ஆனால் அதனைச் செயற்படுத்துவதில் ஏற்படும்

சிக்கலும் தொல்லையும் சொல்லி மாளாதவை. தலைவன் மட்டும் பொருள் தேடச்

சென்றால், தலைவன் தலைவியை நினைந்து நினைந்து உருகுவதும், இல்லத்தில்

தலைவி தலைவனை நினைத்து மறுகுவதும் தவிர்க்க இயலாத  தொல்லைகள்.

தலைவியையும் உடன் அழைத்துக்கொண்டு பொருள் தேடச் செல்வது இயலவே இயலாது.

பொருள் தேடச் செல்லுதல் மிகவும் தொல்லையும் மனக் கிலேசமும் தரக்கூடியதே.

காரணம், பிரிவுத் துயர் ஏற்படுத்தும் மனவுளைச்சல் எளிதில் குணப்படுத்தக் கூடியது

அன்று.


இடையூறு வாராமல்  ஏகு.


காதலனும் காதலியும் திருமணம் புரிந்துகொண்டு கற்பியல்

வாழ்வைத் தொடங்கிவிட்டனர். செழிப்பாக வாழ்வதற்குக்

கைவசம் உள்ள செல்வம்(பொருள்) போதாது. எனவே,

தேவைப்படும் பொருளை ஈட்டுவதற்குக் கணவன் வேற்று

நாடு செல்லல் வேண்டும். திருமணம் முடிந்த ஒருசில நாட்

களிலேயே மனைவியைப் பிரிய மனமில்லாமல் கணவன்

தவிக்கின்றான். மனைவி நிலையோ சொல்ல முடியாதது.

கணவனைப் பிரிந்த ஏக்கத்திலேயே அவள் உயிர் பிரிந்தாலும்

பிரியலாம்.. அல்லது அந்தப் பிரிவுத் துன்பம் ஏற்படுத்தும்

மன அழுத்தத்தின் விளைவாக மனைவி தானே தன்னுயிரை

மாய்த்துக்கொள்ளலாம். கீழ்க்கண்ட பாடலில் குறிப்பிடப்படும்

தலைவி தன் தலைவனிடம் முன் எச்சரிக்கை விடுக்கின்றாள்:

"மிகுதியாகிய தேன் ஊறுகின்ற பூமாலையினையும், அணி

செய்யப்பட்ட கழலினையும் உடைய தலைவரே! பொருள்

தேடுவது குடும்பத்துக்குத் தேவையான செயலே; ஆயின்

இப்பொழுது(திருமணம் முடிந்த கையோடு) பொருள்வயின்

பிரிவது  நமக்கு எல்லையற்ற துன்பத்தை(குறிப்பாக எனக்கு)

நல்கும். பிரிவுத் துயரம் நேருமே என்ற அச்சத்தால் என்னுயிர்

பிரியும்; நான் இறக்க நேர்ந்தால் என் உற்றார், உறவினர் அழுது

ஓலமிடுவர். பொருளீட்டப் போவதில் உறுதியாக நீவிர் இருப்பின்

உடனடியாகச் சென்றுவிடும். சுணக்கம் ஏற்படின் நீவிர் செல்வதற்கு

இடையூறு(என் இறப்பால்) நேரிடலாம்" என்று தெரிவித்தாள். பாடலைப்

பார்ப்போம்:

"விளைபொருள்மேல் அண்ணல் விரும்பினையேல்  ஈண்டெம்

கிளையழுகை கேட்பதற்கு முன்னே---விளைதேன்

புடையூறு பூந்தார் புனைகழலாய்! போக்கிற்(கு)

இடையூறு வாராமல் ஏகு".

இவ்வளவு கடுமையான முன் எச்சரிக்கை விடுத்தபிறகு கணவன்

பொருள் தேடச் சென்றிருக்க வாய்ப்பில்லை.


இவ்வளவு கடுமையாக எச்சரித்தபிறகும் தலைவன் பொருள் தேடச்

செல்வதில் உறுதியாக இருந்ததால் தலைவி மூலம் செய்தியறிந்து

தோழி தன் பங்குக்குக் கடுமையாக வார்த்தைகளைக் கொட்டுகிறாள்:

"ஊசல் தொழிலிழக்கும்;; ஒப்பு மயிலிழக்கும்;

வாசம் சுனையிழக்கும்; வள்ளலே!---தேசு

பொழிலிழக்கும்; நாளையெம் பூங்குழலி நீங்க

எழிலிழக்கும் அந்தோ, இவண்".

வள்ளலே! நீவிர் பொருளீட்டச் சென்றால் பிரிவு காரணமாக அணிசெய்யப்பட்ட

கூந்தலையுடைய  எம் தோழியாகிய இவள் உயிரிழப்பது மட்டுமல்லாமல்,

நாளை குறுக்கும் நெடுக்கும் அசைந்தாடும் ஊஞ்சல்களும்  அவ்வாட்டத் தொழிலை

இழக்கும், மயில் உவமையை இழக்கும், சுனைகள் நறுமணத்தை இழக்கும்,

சோலைகள் ஒளியை இழக்கும், இவ்விடமும் அழகை இழக்கும். இத்தனை

இழப்புகளும் நிகழும்  எனவே, தலைவனே! உனக்குக் தோன்றியதைச் செய்".

ஆழ்ந்து சிந்தித்துப் பொருள் தேடச் செல்வதைத் தவிர்ப்பான் என்று தோழியும்

தலைவியும் நம்புகின்றனர். அப்படித்தான் நிகழ்ந்திருக்கும். ஏனெனில் இவ்வளவு

கடுமையாகத் தலைவியும் தோழியும் எச்சரித்தபின்  தலைவன் பொருள் தேடச்

செல்லத் துணியான்.


பார்வை:

தண்டியலங்காரம் நூல்(மேற்கோள் பாடல்கள்).







Saturday 3 December 2022

விடுகதை புகலும் பக்திநெறி..

 புதிர் புகலும் அறநெறி.


விவேக சிந்தாமணி என்றொரு நூல் உள்ளது. நல்ல நீதி

நெறிமுறைகள், வாழ்வியல் நெறிகள், காதல், ஆடவர்

இயல்பு, ஆடவர் கடமைகள், மகளிர் இயல்பு, மகளிர் கடமைகள்,

போன்ற பல செய்திகளை உள்ளடக்கிய நூலாகும். படைக்கப்

பட்ட காலம் இதுவெனக் குறிப்பிட இயலவில்லை. 15 அல்லது

16ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் படைக்கப்பட்டிருக்கலாம்.

ஏனெனில் நிறைய வடமொழிக் கலப்பு உள்ளது. இயற்றிய

ஆசிரியரையும் இன்னாரெனக் குறிப்பிட்டுச் சொல்ல இயலவில்லை.

சில பாடல்கள் மிக அருமையாக உள்ளன. சில பாடல்கள் சுமாராக

உள்ளன. பாடல் எண்ணிக்கையிலும் வேறுபாடுகள் நிலவுகின்றன.

சில பதிப்புகளில் 135 பாடல்களும் வேறு சிலவற்றில் அந்த எண்ணிக்

கையை விடக் கூடக் குறையவும் உள்ளன. பெரும்பகுதிப்  பாடல்கள்

பஞ்ச தந்திரக் கதைகளைப் போல் உள்ளன. சரி, விவேக சிந்தாமணிப்

பாடல் கூறும் ஒரு புதிர் கலந்த அறநெறியைப் பற்றிப் பார்ப்போம்.


கீழ்வரும் பாடல் மதுரைச் சொக்கநாதப் பெருமானுக்குத்  தொண்டு

செய்ய அறிவுறுத்துகிறது. புதிர்(விடுகதை) கலந்த பாடல் இது:

"பண்புளருக்(கு) ஓர் பறவை;  பாவத்திற்(கு)  ஓர் இலக்கம்;

நண்பிலரைக் கண்டக்கால் நாற்காலி---திண்புவியை

ஆள்வார் மதுரை  அழகியசொக்  கர்க்(கு)அரவம்

நீள்வா  கனம்நன்  னிலம்".

பண்புளருக்கு ஓர்பறவை---ஈ: ஈதலைக் குறிப்பிடுகிறது.

பாவத்திற்கு ஓர் இலக்கம்--5: அஞ்சுதலைக் குறிக்கிறது.

நண்பிலரைக் கண்டக்கால் நாற்காலி: நாற்காலி நான்கு

கால்களையுடைய விலங்கைக் குறிக்கிறது.

திண்புவியை ஆள்வார் மதுரை அழகிய சொக்கர்க்(கு) அரவம்:பாம்பு--பாம்புக்குப்

பணியெனவும் பெயர் உள்ளது.

நீள்வாகனம்: இடபம்(ரிஷபம்)--விடை எனத் தூய தமிழில் சொல்வர்.(மாடு)

நன்னிலம்: நிலம்--செய்(நன்செய்/புன்செய்)

இனி பாடலில் கூறப்படும் செய்தியைப் பார்ப்போம்:

பண்புளருக்கு ஓர் பறவை= பண்புளவர்க்குக் கொடு.

பாவத்திற்கு ஓரிலக்கம்     = பாவம் புரிய அஞ்சு.

நண்பிலரைக் கண்டக்கால் நாற்காலி=நல்லவர் அல்லாதாரை விட்டு விலங்கு=நீங்கு.

திண்புவியை ஆள்வார் மதுரை அழகிய சொக்கர்க்கு

அரவம்     நீள்வாகனம்     நன்னிலம்= பணி    விடை     செய்.

விளக்கவுரை:

பண்புள்ளவர்க்குக்  கொடு;  பாவம் புரிய அஞ்சு; நல்லவர் அல்லாதாரை விட்டு

நீங்கு;  உலகத்தை ஆளும்  மதுரை அழகிய சொக்கர்க்குப் பணிவிடை செய்.


பார்வை:

விவேக சிந்தாமணி, வர்த்தமானன் பதிப்பகம்

உரையெழுதியவர்  தேவார உரைமாமணி திரு வ.த.இராமசுப்பிரமணியம்,  M.A.

Thursday 17 November 2022

நீ கண்டனையோ? கண்டார்க் கேட்டனையோ?

 "நீ கண்டனையோ? கண்டார்க் கேட்டனையோ?"


தலைவனுக்கும் தலைவிக்கும் வரைவு நிகழ்ந்து ஒரு சில திங்கட் காலமே

கழிந்துள்ளது. அதற்குள் பொருள் தேடும் நிமித்தம் தலைவியைப் பிரிந்து

தலைவன் சென்று விட்டான். ஒவ்வொரு நாள் கழிவதும் ஒரு யுகம் கழிவது

போலத் தலைவிக்குத் தோன்றியது. கார்காலத்தில் திரும்பி விடுவதாகச்

சொல்லிச் சென்றான். கார்காலம் தொடங்கி விட்டது. அவன் வருகைக்காக

வழிமேல் விழிவைத்துக் காத்திருந்த தலைவியின் கண்கள் பூத்துப் போயின.

ஆனால் தலைவன் வருவதற்கான அறிகுறியே தென்படவில்லை. நாட்கள்

நகர்ந்து கொண்டே யிருந்தன.


ஒருநாள் தலைவன் அனுப்பிவைத்த பாணன் வந்து தலைவியிடம் தலைவன்

தேரில் வந்து கொண்டிருக்கும் நல்ல செய்தியைத் தெரிவித்தான். தலைவியால்

அவன் கூற்றை நம்ப முடியவில்லை. ஏற்கெனவே பாணனைப் பற்றி நல்லவிதமான

கருத்து கிடையாது. ஏனென்றால் இதற்கு முன்பு ஓரிருமுறை தலைவன் புரிந்த

தவறான செய்கைகளுக்குத் துணைபோனவன். இருந்தாலும் அவன் சொன்ன

நல்ல செய்தியைப் புறந்தள்ள இயலாது. எனவே பாணனிடம்  " தலைவனை நீ

நேரில் கண்டாயா? இல்லையென்றால், அவன் வந்ததைப் பார்த்தவர் சொல்லக்

கேட்டாயா? அங்ஙனம் பிறர் சொல்லக் கேட்டிருந்தால், யார் வாயிலாகக்  கேட்டாய்?

உண்மையை அறிய விரும்புகிறேன். சொல்வாயாக. உண்மையைப் பேசினால்

வெள்ளைக் கொம்புடைய யானைகள் சோணையாற்றில் நீரில் அமிழ்ந்து விளை

யாடும்  பொன் கொழிக்கும் பாடலிபுத்திர நகரைப் பெறுவாயாக. 


 சங்ககாலப் புலவர்கள்

சோணையாற்றைப் பற்றியும்(கங்கையாற்றின் கிளையாறு) அதன் கரையில் அமைந்த

பாடலிபுத்திர நகரைப் பற்றியும் அங்கு குவிந்துள்ள பெரும் செல்வம் பற்றியும் நன்கு

அறிந்திருந்தனர்.இனி, இச் செய்தியைச் சொல்லும் பாடலைப் பார்ப்போம்:

"நீ கண்டனையோ? கண்டார்க் கேட்டனையோ?

ஒன்று தெளிய நசையின் மொழிமோ;

வெண்தோட்(டு) யானை சோணை படியும்

பொன்மலி பாடலி  பெறீஇயர்

யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே."

குறுந்தொகை பாடல் எண்: 75.

புலவர் படுமரத்து மோசிகீரனார்.


கி.மு.மூன்றாம் நூற்றாண்டு வாக்கில் மகத நாட்டை(பீகார்)

யாண்ட நந்தர்கள் கங்கைக் கரையில் பெருஞ் செல்வத்தைப் பதுக்கி

வைத்திருந்ததாக மக்கள் பேசிக் கொண்டார்கள். நம் புலவர்கள்

இந்தச் செய்தியை அறிந்து வைத்திருந்தனர். மாமூலனார் என்று

அழைக்கப்பட்ட வரலாற்றுப் புலவர் அகநானூற்றில் இது குறித்துப்

பாடியுள்ளார். பாடல் எண்: 265. பாடல் பின்வருமாறு:

"பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்

சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை

நீர்முதற் கரந்த நிதியம் கொல்லோ!"


இது மட்டும் அல்லாமல், நந்தர்களை வீழ்த்தி ஆட்சிக்கு வந்த மௌரி

யர்கள் தென்னாட்டின்மீதும் தமிழ்நாட்டின்மீதும் படையெடுத்தனர்.

அவர்கள் கர்நாடகத்து மைசூர் வரை கைப்பற்றிவிட்டனர். ஆனால்

தமிழகத்து எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதாகச்  சில வரலாற்று

ஆய்வாளர்கள் உரைக்கின்றனர். வேறு சிலர் தமிழகத்துக்குள் பெரும்

படையுடன் நுழைந்தனர்; ஆனால் தமிழர்களின் கூட்டுப் படையால்

விரட்டி யடிக்கப் பட்டனர் என்று கூறுகின்றனர். அசோகச்  சக்கரவர்த்தி

தம் கல்வெட்டுக்களில் சோழ, பாண்டிய வேந்தர்களை நல்லவிதமாகவே

பொறித்துள்ளார். இந்தச் செய்திகள் மூலம் சங்கம் நிலவிய காலம் கி.மு.

4 அல்லது 5ஆம் நூற்றாண்டு என வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட கீழடி அகழாய்வு முடிவுகள் சங்கம் நிலவிய

காலத்தை கி.மு.6ஆம் நூற்றாண்டை ஒட்டியிருக்கலாம் என்று தெரிவிக்

கின்றன. இதற்கு முன்பு சில வரலாற்று ஆய்வாளர்கள் சங்கம் நிலவிய

காலத்தை. கி.பி.4ஆம் நூற்றாண்டு என்றனர். அது தவறு என்று உறுதிப்

படுத்தப்பட்டுள்ளது.


Saturday 29 October 2022

வலிப்பு நோய் நீக்கிய கலம் செய் கோ.

 வலிப்பு நோய் நீக்கிய கலம் செய் கோ.

(கொங்கு மண்டல சதகம் குறிப்பிடும் கொங்கக் குயவர்).


கொங்கு மண்டல சதகம் ஒரு வரலாற்று நிகழ்வைக் குறிப்பிடு

கின்றது. கரிகாலச் சோழர் மகளுக்கு  ஏற்பட்ட பெரிய வலிப்பு

நோயைக்  கொங்கு நாட்டைச் சேர்ந்த ஒரு குயவர் மண்ணால் ஒரு

பாவை செய்து குறிபார்த்துச் சுட(நோயாளியை அல்ல--அந்த

மண்பாவையை) அவ்வலிப்பு நோய் விலகியது என்று சதகப் பாடல்

(பாடல் எண்: 89) தெரிவிக்கிறது. தொடர்புடைய பாடல் பின்வருமாறு:

"கரிகாலச் சோழன் மகளுக்கு வந்த கனவலிப்பும்

எரியாம் உடலை மயக்கமண் கோவன் இறைமகளைப்

பரிபா லனஞ்செய மண்பானை யிற்குறி பார்த்துச்சுட

மரியாமல் அவ்வலி ஏகிய துங்கொங்கு மண்டலமே".


விளக்கம்:

கரிகாலர் என்னும் சோழர் மகளுக்கு வலிப்பு நோய் ஏற்பட்டது.

எத்தனையோ மருத்துவர்கள் தங்களால் இயன்ற மருத்துவம் செய்தும்

சிறிதேனும் நோய் குணமாகவில்லை. அப்பொழுது கொங்கு நாட்டுக்

குயவர் ஒருவர் இந்நோயை உறுதியாகவும் வெகு விரைவாகவும்

நீக்குவார் என்று பலபேர் சொல்லக் கேட்ட வேந்தர் கரிகாலர் அக் குயவரைத்

தம் நாட்டுக்கு அழைத்துவர ஆணையிட்டார். அரச கட்டளைப்படி குயவர்

சோழநாட்டுக்கு வந்து சேர்ந்து வேந்தர் முன் வணங்கி நின்றார்.

வேந்தர் குயவரைப் பார்த்துப் பேசத்தொடங்கினார். "ஐயா! நீர் வலிப்பு நோயைக்

குணப்படுத்துவதாகச் சொல்லுகின்றனர். நீர் என்ன மருத்துவம் செய்ய எண்ணியுள்ளீர்?"

குயவர்: "வேந்தே! வலிப்பு நோய் ஏற்படும் உடல் உறுப்புக்குச் சூடு போடுவது மூலம்

குணப்படுத்துவேன்."

கரிகாலர்: "குயவரே! என் மகள் இளங் குழந்தை; சூட்டைப் பொறுக்க மாட்டாமல் துடிதுடித்து விடுவாள்".

குயவர்:"எம் அண்ணலே! அரசிளங் குமரியின் உடலிற் படாமல் சூடு போட்டு நோயை

விரட்டிடுவேன்".

கரிகாலர்:: ",அப்படியானால்  உம் பணியைத் தொடங்குக".

உடனே குயவர் மண்ணால் அரசிளங்குமரி போல் ஒரு பாவையைச் செய்தார். அக் குழந்

கைக்கு வலிப்பு எந்த இடத்தில் ஏற்படும் என்று கேட்டறிந்து  மண்பாவையில் அந்தப் 

பாகத்தைக் குறிபார்த்து நெருப்பில் புரட்டியெடுக்கப்பட்ட இரும்புக் கோலால் சூடு போட்டார்.

அந்நோய் அடியோடு நீங்கியது.

இந்த மருத்துவ முறை நம்ப முடியாததாக இருப்பினும் ஒட்டியம்-சல்லியம் என்னும் மந்திர

சாத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாகக் கொங்கு மண்டல சதகம் குறிப்பிடுகிறது. குறிப்பிட்ட

பொருளில்(மண்ணால்) பாவை செய்து அப்பாவையின் உறுப்பில் ஊசி முதலியவற்றைக்

குத்துதல், சூடு போடுதல் போன்ற செய்கைகளால், இருக்கின்ற நோயை நீக்குதல், இல்லாத

நோயைப் புதிதாக உருவாக்கல் முதலான ஜால வித்தைகள் செய்வது ஒட்டியம்-சல்லியம்

என்னும் மந்திரவகையில் அடங்கும். நான் அறிந்தவரை குயவர் பெருமக்கள் 'அக்கி' என்

னும் நோய்க்குச் செம்மண்ணைக் கரைத்துக் குழம்பாக்கி"அக்கி  எழுதுதல் " என்ற

மருத்துவம் இன்றைய நாள் வரையில் செய்துவருகின்றனர். வலிப்பு நோய்க்கான இந்தச்

சூடு போடும்(மனிதருக்கு அல்ல--மண்பாவைக்கு) மருத்துவம்/ஜால வைத்தியம் செய்கின்

றார்களா? என்பது ஐயமே.


கொங்கு மண்டல சதகத்தில் வேறொரு குறிப்பும் காணப்படுகிறது:

வலிப்பு நோய் ஏற்பட்டுப் பிற்பாடு நீங்கியது சங்ககாலக் கரிகாலர் மகளுக்கல்ல என்றும்,

அது இடைக்கால விக்கிரம சோழர் மகளுக்கு ஏற்பட்டு நீங்கியது என்றும், பொன்கலூர் 

நாட்டு வானவன்சேரி என்னும் ஊரில் இந்நிகழ்ச்சி நடைபெற்றதென்றும், குறும்பி நாட்டுக்

கற்றாங்காணி ஊரிலுள்ள ஒரு கொங்குக் குயவர் அங்கு வந்து குறிசுட்டார் என்றும்

குயவர் பெருமக்கள் பாதுகாத்து வைத்துள்ள பழைய ஓலைச் சுவடியொன்றில் குறிப்

பிடப்பட்டுளது.இவ்வாறான குறிப்பு சதக நூலில் காணப்படுகிறது.

Saturday 15 October 2022

பகையரசர் மீது வெகுண்டு பாய்ந்த பாண்டியன் யானை.

 பகையரசர் மீது பாண்டியன் யானை காட்டிய ஆவேசம்.


முத்தொள்ளாயிரம் காட்டும் ஒரு சுவையான காட்சி. பாண்டியன்

அவ்வப்போது தலைநகருக்குள் உலாப் போவது வழக்கம். வழக்கப்படி

அன்றைய நாளில் உலாப் போவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாண்டியன் தன் குதிரை மீதேறி உலாப் போக ஆயத்தமாக இருந்தான்.

பாதுகாப்புக்காகப் படைவீரர்கள் நூறு பேர் வேலேந்தி அணிவகுத்து

நின்றுகொண்டிருந்தனர். அனைத்துப் பரிவாரங்களும் உலாவுக்கு

ஆயத்தமாகி வேந்தனின் சைகைக்காகக் காத்து நின்றனர். பாண்டியன்

தன்னுடைய  மனத்துக்கு உகந்த களிற்று யானைக்காகக் காத்திருந்தான்.

எதிர்த்திசையிலிருந்த குளத்துக்கு நீராடச் சென்ற யானை நீராடி முகபடாம்

முதலான அணிகலன்களை அணிந்து செம்மாந்த நடை நடந்து வந்து கொண்டிருந்தது.


பாதுகாப்புப் படை வீரர்களுக்கு முன்பாகப் பாண்டியனை ஆதரித்து வரும்

சிற்றரசர்கள், ஒருகாலத்தில் பாண்டியனுக்குப் பகையரசர்களாக விளங்கிப் போரில்

தோற்கடிக்கப்பட்டுச் சரணடைந்து  மன்னிப்பு மூலமாகத் தம் நாடுகளை மீட்டுக்

கொண்ட நட்பு நாட்டு மன்னர்கள் தம் மகுடம் மிளிர அணிவகுத்து நின்றனர்.

பாண்டியனின் யானை வந்து சேர்ந்தது. யானைக்கு மற்ற விலங்குகளைக் காட்டிலும்

அறிவுக் கூர்மை, மோப்ப சக்தி, நினைவாற்றல் அதிகம் என்றாலும் கூர்மையான

கண்பார்வை கிடையாது.. கிட்டப் பார்வைக் கோளாறு கொண்டது. தொலைவிலிருக்கும்

பொருட்கள் தெளிவாகத் தெரியாது. கிட்டத்தில் வந்தவுடன் முன் வரிசையில் நின்றிருந்த

பழைய பகையரசர்களை அவர்களிடமுள்ள கொடி,குடை, முடி முதலானவற்றை வைத்து

இனங்கண்டு அவர்களை நோக்கி ஆவேசமாகப் பிளிறியது. யானைக்குத் தெரியுமா

அவர்கள் பாண்டியனிடம் சரணடைந்து மன்னிப்புப் பெற்றவர்கள் என்ற உண்மை.தன்னுடைய

நினைவாற்றல் மூலம் இந்த மன்னர்கள் பகையரசர்களாய் இருந்தபோது தனக்குச் செய்த

கொடுமைகள், தான் அவர்களின் படைவீரர்களைப் பந்தாடியது போன்ற பழைய நினைவுகளால்

சினத்தோடு பிளிறிக் கொண்டு அவர்கள் மீது பாயத் துடித்தது. யானைப் பாகன் அதன் கழுத்தில்

கட்டப்பட்டிருந்த கயிற்றை இழுத்து அதனைக் கட்டுக்குள் கொண்டுவரப் பெருமுயற்சி

செய்கிறான். கயிற்றை இழுத்ததில் கழுத்தில் கட்டிய கயிறு அறுந்து போகிற நிலைதான் 

ஏற்பட்டது. யானையின் சினத்தைக் கட்டுப்படுத்தப் பாகனால் இயலவில்லை.


பழைய பகையரசர்கள்(மன்னிப்புப் பெற்றதால், தற்போது நண்பர்கள்)  ஆவேசமடைந்த 

யானை என்னென்ன கொடுமை இழைக்கும் என்பதை நன்கு அறிந்தவர்கள். அதனால்

அணிவகுப்பில் நின்றிருந்த அவர்கள் திடுக்கிட்டுப் பின்வாங்கினர். அப்பொழுது அவர்கள்

சற்றே நிலைகுலைய, அவர்களின் மணிமுடிகள் அவர்களுக்கு  முன்புறத்தில் தரையில்

விழுந்தன.  பாண்டியன் ஏறிவந்த குதிரை அப்படி விழுந்த பொன்முடிகளை உதைத்து

உதைத்துப் பெருமிதத்தோடு முன்னேறி நடந்து வந்தது. குதிரையின் குளம்பானது

மணிமுடியில்  இருக்கும் பொன்னின் மாற்றை உரைத்துப் பார்க்கும் "உரைகல்" போல்

விளங்கிற்று. பாடலைப் பார்ப்போம்:(பாடல் எண்: 57)

"நிரைகதிர்வேல் மாறன்தன்  நேரார்க்கண்(டு) ஆனை

புரைசை அறநிமிர்ந்து பொங்க----அரசர்தம்

முன்முன்னா வீழ்ந்த  முடிகள்  உதைத்தமாப்

பொன்னுரை கற்போல் குளம்பு".

அருஞ்சொற் பொருள்:

நிரைகதிர்வேல் மாறன்=வரிசை வரிசை யாகக் கூரிய வேலேந்திய படைக்குரிய

பாண்டியன்;

நேரார்க்கண்டு= பகையரசர்களை அவர்கள் கைக்கொண்டிருக்கும் கொடி, குடை, முடி

முதலியவற்றால் இனங்கண்டு;

புரைசை அற நிமிர்ந்த= கழுத்தில் கட்டியிருந்த கயிறு அறுந்து போகும்படி ஆங்காரத்

துடன் பொங்கி முன்னேற;

பொன்னுரை கற்போல் குளம்பு=கீழே விழுந்த மணிமுடி களைப் பாண்டியன் குதிரை

உதைத்து உதைத்து நடந்து முன்னேறியதால் அதன் குளம்பு மணிமுடியிலிருந்த

பொன்படிந்து பொன்னின் மாற்றை உரைத்துப் பார்க்கும் கல்போல் மிளிர்ந்தது.


பார்வை: முத்தொள்ளாயிரம், உரைக் குறிப்பு எழுதியவர் இரசிகமணி

                  டி.கே.சிதம்பரநாதனார்.

Sunday 25 September 2022

அம்பிகாபதிக் கோவை.

 அம்பிகாபதிக் கோவை அல்லது பல துறைக் காரிகை.


அம்பிகாபதி கவிச்சக்கரவர்த்தி கம்பரின் மகனென்றும்

 அவர் முதலாம் குலோத்துங்க சோழரின் மகள் அமராவதியைக்

காதலித்ததாகவும் அம்பிகாபதிக்குப் பெண் கொடுக்க விரும்பாத

குலோத்துங்கர் ஒரு நிபந்தனை விதித்ததாகவும் அந்நிபந்தனைப்

படி நடந்துகொள்ளத் தவறியதால் அம்பிகாபதி மரணதண்டனைக்கு

ஆளானதாகவும் நாட்டுமக்களிடம் கதை உலவுகிறது. அவருக்கு

விதிக்கப்பட்ட நிபந்தனை: அரண்மனையில் அரசர், அமைச்சர் முதலான

பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் அம்பிகாபதி

சிற்றின்பம் கலவாமல் நூறு பாடல்கள் பாடுதல் வேண்டும். தவறினால்

தலை வெட்டப்பட்டு உயிரிழக்க நேரிடும். நடுவராகப் புலவர் ஒட்டக்

கூத்தர் நியமிக்கப்பட்டார். அம்பிகாபதி நிபந்தனைப்படி நூறு பாடல்களைப்

பாடி முடித்துவிட்டார். ஆனால் மரபுப்படி முதல் பாடல் கடவுள் வாழ்த்தாகும்.

அதனைக் கணக்கில் கொள்ளக் கூடாது.  ஆனால் விதியின் விளையாட்

டால் கடவுள் வாழ்த்துப் பாடலையும் கணக்கில் சேர்த்தெண்ணிய அரசிளங்

குமரி கழிபேருவகையுடன் அரண்மனை மேல்மாடத்திலிருந்து எட்டிப் பார்த்து

நூறு பாடல்கள் நிறைவுற்றதாகச் சமிக்ஞை செய்ததனால் அம்பிகாபதி

அரசிளங்குமரி மீது காதல் பாடலைப் பாடிவிட்டார். ஒட்டக் கூத்தர் நிபந்தனையில்

அம்பிகாபதி தோற்றுவிட்டதாகத் தீர்ப்பளித்தார். விளைவு  அம்பிகாபதி யின் தலை

வெட்டுண்டது. தன்னால் தான் அம்பிகாபதி நிபந்தனையில் தோற்கநேர்ந்தாகக்

குற்ற உணர்வுடன் அமராவதி உயிர்துறந்தார். பொதுமக்கள் நடுவில் இப்படியான

கதை உலவினாலும்  அறிஞர் பெருமக்கள் இந்த மாதிரி நிகழ்வு நேர்ந்திருக்காது.

சோழ மன்னர்கள் தமிழ்ப் புலவர்களிடம் மிகுந்த மரியாதையும் அன்பும் காட்டியவர்கள்.

மிகுந்த மக்கள் செல்வாக்குப் பெற்றிருந்த கம்பருக்கு இத்தகைய பெருந்துன்பத்தை

இழைத்திருக்க மாட்டார்கள் என்று உறுதிபடக் கூறுகின்றனர். அம்பிகாபதி கம்பர்

மகன் அல்லர்; தண்டி அலங்காரம் என்ற நூலை இயற்றிய புலவர் தண்டியின் மகன்

என்று கூறுபவர்களும் உள்ளனர். எனவே இது ஆதாரமில்லாத கதை என்ற முடிவுக்கு

வருவதே நல்லது. ஏனென்றால் பெரிய புராணம் நூலை இயற்றிய சேக்கிழாருக்குக்

குலோத்துங்க சோழர் பட்டத்து யானை மீது அமரச் செய்து தாமே கவரி வீசியதாகப்

பேச்சு உண்டு. மேலும் கலிங்கத்துப் பரணி பாடிய செயங்கொண்டாரை மிகமிகப்

போற்றினார் குலோத்துங்க சோழர். புலவர் ஒட்டக் கூத்தருக்கும் மிகுந்த மதிப்பளிக்கப்

பட்டது. 


அம்பிகாபதி இயற்றியதாகக் கூறப்படும் அம்பிகாபதிக் கோவை என்ற பல துறைக்

காரிகையில் சில உள்ளங்கவரும் பாடல்கள் காணப்படுகின்றன. அவற்றை இங்கே

காண்போம:

"உருகி உடல்கருகி உள்ளீரல் பற்றி

எரிவ(து) அவியா(து) என் செய்வேன்?--வரியரவ

நஞ்சிலே தோய்ந்த நளினவிழிப் பெண்பெருமாள்

நெஞ்சிலே  இட்ட  நெருப்பு".

உரை: பாம்பின் நஞ்சில் தோய்ந்த, தாமரை மலர் போன்ற விழிகளை யுடைய மாதரசி

என் நெஞ்சத்திலே மூட்டிவிட்ட காதல் நெருப்பானது மனமுருகி உடல் கரிந்து உள்ளிருக்கும்

ஈரல் மூண்டெரிவது போல் ஆறாமல் துன்பம் தருகிறது. என் செய்வேன்?


"மையிட்ட  கூந்தலும்  மானிட்ட  கண்ணும்  மதிமுகமும்

கையிட்ட  கிள்ளையும் வாரிட்ட  கொங்கையும் காதினிற்பொன்

செய்திட்ட  ஓலையும் சிற்றடி யிட்ட செழுஞ்சிலம்பும்

கைதிட்ட மாக வருபவ  ளேயென்னைக் காண்கிலையே".

உரை: மேகத்தை ஒத்த கூந்தலும், மானை நிகர்த்த கண்களும், பிறைநிலவை ஒத்த

நெற்றியும், முழுநிலவை ஒத்த முகமும், கையினிற் பிடித்த கிளியும், கச்சணிந்த

முன் அழகும், காதில் அணிந்த பொன்னால் செய்திட்ட ஓலையும், சிறிய பாதங்களில்

அணிந்த செழுஞ்சிலம்பும் இவையனைத்தையும்  முறையாக அணிந்து வருபவளே!

என்னைப் பார்க்கவில்லையே.


"கைத்தலம் தன்னிற் பசும்பொன் வளையல் கலகலென

சத்தம் எழுந்திட நூபுர பாதச் சதங்கைகொஞ்சத்

தத்திமி யென்று நடனம்செய் சம்பீசர் சன்னதிப்பெண்

செத்த குரங்கைத் தலைமேல்  சுமந்து திரிந்தனளே."

உரை: கைகளில் பொன்னால் செய்த கங்கணங்கள்

கலகலவென ஓசையெழுப்ப, பாதச் சிலம்பும் கிண்கிணியும்

சிறு ஒலிசெய்ய, தத்திமியென்று நாட்டியம் செய்கின்ற

சம்பீசரது சன்னதிப் பெண், செத்த குரங்கைத் தலைமேல்

சுமந்து திரிந்தாள். இங்கே ஒரு இலக்கிய நயம் காணக்

கிடைக்கிறது. சன்னதிப் பெண் சாமந்திப் பூவைத் தலைமேல்

சூடியிருந்தாள். அதனை மறைமுகமாகச் செத்த குரங்கைச்

(சா மந்தி= செத்த குரங்கு) சூடித் திரிந்தாள் என்று புலவர்

கூறுகிறார்.


"ஞாயிறு போய்விழத் திங்கள்வந்  தெய்திட   நண்ணியசெவ்

வாயனல் தூவப்  புதனம்பு   காய்நல் வியாழம்வர

மேயரு வெள்ளிக் கலைசோர நானுனை மேவுதற்குத்

தாய்சனி யாயின ளோரகு நாத தளசிங்கமே"

உரை: கதிரவன் மேற்குக் கடலில் போய் விழ,, நிலவு வந்து

ஒளிவீச, செவ்வாய் அனலைவீசப், புதன் அம்பு போலச் சுட,

நல்ல வியாழன் வரப், பெரிய வெள்ளியினால் ஆடை நெகிழ,

நான் உம்மோடு சேருவதற்கு என் தாய் சனிபோலத் தடையாய்

இருக்கின்றாள் ரகுநாத தளவாயாகிய சிங்கமே!

ஏழு கிழமைகளின் பெயர்களும் பயின்று வந்துள்ள பாடல். தன்

தாயைச் சனியென்று குறிப்பிட்டது  காம மிகுதியால் நேர்ந்ததோ?


"மாலாக்கி யென்னைப் பெருவய தாக்கியென் மார்பின்முலை

பாலாக்கி யங்கம் பசுநரம் பாக்கியப் பாவையரை

மேலாக்கிச் சிக்கு விளக்கெண்ணெ யாக்கியென் மேனியெங்கும்

தோலாக்க வோமக னேபிள்ளை யாகிநீ தோன்றினையே".

உரை: பிள்ளைப் பாசத்தால் பைத்தியமாய் என்னையாக்கி, இளமை

ததும்ப நின்ற என்னை வயதில் மூத்தவள் போல் தோற்றம் பெறச் செய்து,

என் மார்பகத்தில் பாலை ஊறச்செய்து, என் உறுப்புகளில் பச்சை

நரம்பு தோன்றும் அளவு என்னைத் தளரச் செய்து, என் வயதுப்

பெண்கள் சிலர் இன்னும் பிள்ளை பெறாமல் என்னைவிட அழகுத்

தோற்றம் காட்ட, நான் சிக்குப் பிடித்த கூந்தலோடு விளக்கெண்ணெய்

வழிய முகம் வாடித் தோன்ற, மேனி முழுவதும் எலும்பும் தோலுமாய்

இளைத்துத்  தோன்றுமாறு செய்த மகனே! உன்னைப் பெற்றதனால்

நான் அடைந்த துன்பங்கள் அநேகம். இவ்வளவு துன்பங்களும்

தருவதற்காகவா எனக்குப் பிள்ளையாகப் பிறந்தாய்? சொல் மகனே!

ஆழ்மனத்தில் கடல் போல் பிள்ளைப் பாசத்தை வைத்துக்கொண்டு வெளியே

 வெறுப்பது போல் நடித்துப் பேசும்  திறம். பார்வை:அம்பிகாபதிக் கோவை என்ற

பல துறைக் காரிகை. உரை: திரு வடிவேல்.









Thursday 8 September 2022

கொங்கு நாட்டுப் பாணபத்திரர்.

 கொங்கு நாட்டில் நிகழ்ந்த ஏமநாத பாகவதர்- பாணபத்திரர்  மாதிரிக் கதை.


மதுரையில்  சிவபெருமான் நடத்திய அறுபத்து நான்கு திருவிளையாடல்களில்

ஒன்று ஏமநாத பாகவதரின் செருக்கடக்கித் தன் பக்தன் பாணபத்திரரை உய்வித்தது.

இதே போன்று கொங்கு நாட்டுப் பூந்துறைப் பகுதியில்(திருச்செங்கோட்டில்) நிகழ்ந்த

தாகக் கொங்கு மண்டல சதகம் ஒரு கதையைக் குறிப்பிடுகிறது. அது மதுரையில்

நிகழ்ந்ததாகச் சொல்லப்படும்  பாணபத்திரர்- ஏமநாதர் கதை போலவே உள்ளது.

அக்கதை:

பாண்டிய நாட்டில் திருக்குருகூரில் பிரதிவாதி பயங்கரன் என்ற பண்டிதன் வாழ்ந்து

வந்தான். அவன் பல கலைகளில் வல்லவானாகத் திகழ்ந்தான். அண்மையிலுள்ள

நாடுகளுக்குச் சென்று அங்கு வாழ்ந்துவரும் புலவர்களுடன் வாதம் செய்து அவர்களை

வென்று அவர்களிடமிருக்கும் பொருட்களையும் நூல்களையும் அபகரித்து அவர்களை

இழிவுபடுத்துவதை வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டிருந்தான். ஒருமுறை கொங்கு

நாட்டுப் பூந்துறைப் பகுதியான திருச்செங்கோட்டு எல்லையில் வந்து தங்கிக்கொண்டு

திருச்செங்கோட்டு நகரத்தில் வாழ்ந்துவந்த குணசீலன் என்னும் புலவனுக்கு ஓலை

விடுத்தான். அதில் தான் திருச்செங்கோட்டு எல்லையில் தங்கியுள்ளதாகவும் மறுநாள்

தன்னோடு வாதப்போர் புரிதல் வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்திருந்தான்.


பிரதிவாதி பயங்கரன் அனுப்பிய ஓலையைப் பெற்றுப் படித்த குணசீலன் மிகவும் அதிர்ச்சி

அடைந்தான். பிரதிவாதி பயங்கரனைத் தன்னால் வாதப் போரில் வெல்ல இயலுமா? 

ஒருவேளை, வாதத்தில் தான் தோற்க நேர்ந்தால் தனக்கும் தன் பூந்துறை நாட்டுக்கும் தீராப்

பழியும் இழிவும் வந்துசேருமே என்ற கவலையால் குமைந்து போனான்.. வெகுநேரம் இந்தச்

சிந்தனையில் மூழ்கியிருந்த குணசீலன் ஒருவழியாக மனந்தேறித் திருச்செங்கோட்டு

வேலவன் திருத்தாளைச் சரணடைவதே உத்தமம் என்ற எண்ணத்தில் செங்கோட்டு வேல

வனைச் சிந்தையில் இருத்தித் தொழுதுகொண்டே உறக்கத்தில் ஆழ்ந்து விட்டான்.. அவன்

கனவில் வேலவன் தோன்றி "அன்பனே! அஞ்சாதே; பிரதிவாதி பயங்கரனை அச்சுறுத்தி

இவ்வூரைவிட்டே ஓட்டி விடுகிறேன்" என்று சொன்னதாக மறுநாள் தமக்கு நெருக்கமான

நண்பர்களிடமும் ஊரிலுள்ள முதன்மையான நபர்களிடமும் தெரிவித்தான்.


மறுநாள் பொழுது புலர்ந்தது. துயில் நீங்கி விழித்தெழுந்த குணசீலன் குளியல் முதலான

கடன்களை முடித்து ஒருவிதமான பதற்ற உணர்வுடன் பிரதிவாதி பயங்கரனிடமிருந்து

ஏதாவது தகவல் வருமோ என்று மனத்தை அலைபாய விட்டுக்கொண்டிருந்தான்.. இதற்

கிடையே எல்லையில் தங்கியிருந்த பிரதிவாதி பயங்கரன் சுறுசுறுப்பாகத் துயிலெழுந்து

காலைக் கடன்களை முடித்துவிட்டுக் குணசீலனோடு வாதப் போர் நிகழ்த்தப் பல்லக்கில்

கிளம்பி  ஊருக்குள்ளே நுழைந்தான். பல்லக்கில் இருந்தவாறே செங்கோட்டுக் கோவில்

அமைந்திருக்கும் நாகமலையைப் பார்த்துக் கொண்டே " இது நாகமலை யானால், இந்த

நாகம் படத்தை விரித்து ஆடாமலிருக்கும் காரணமென்ன?" என்னும் பொருள்படப் பாடத்

தொடங்கினான்:

"சமர முகத்திருச் செங்கோடு சர்ப்ப சயிலமென

அமரிற் படம்விரித் தாடாத தென்னை?"

என்று பாடியவன் இரண்டாம் அடியை முடிக்கச் சிறிதுநேரம் தடுமாறினான். அந்நேரம்

அப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவன் அவன் பாடலைக் கேட்டுக்கொண்

டிருந்ததாகக் கூறி இரண்டாம் அடியை நிறைவு செய்தது மட்டுமல்லாமல் மேலிரண்டு

அடிகளையும் பாடிப் பாடலை நிறைவுசெய்தான்.

"................................................................அஃ(து) ஆய்ந்திலையோ,

நமரின் குறவள்ளி பங்கன் எழுகரை நாட்டுயர்ந்த

குமரன் திருமரு கன்மயில் வாகனம் கொத்துமென்றே". எனப் பாடி முடித்தான்.


இது நாகமலை யானால்,  படம் விரித்து ஆடாததற்கு என்ன காரணம்? என்று பிரதிவாதி

பயங்கரன் எழுப்பிய வினாவுக்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்தவன், முருகனின் வாகனம்

ஆகிய மயில் கொத்துமென்ற அச்சத்தால் நாகம் படமெடுத் தாடவில்லை" என்று விடை

யிறுத்தவிதம் பிரதிவாதி பயங்கரனைக் குழப்பியது. சரி, விசாரிப்போம் என்று நினைத்து

மாடு மேய்ப்பவனிடம் " ஐயா! நீரோ மாடு மேய்க்கும் தொழில் செய்பவர்; யான் பாடியது

கட்டளைக் கலித்துறை எனப்படும் கடுமையான யாப்பாகும். நீர் யாப்பறிந்தவரா? கூறும்."

என்றார். உடனே, அவர் " ஐயா! நான் தொடக்கத்தில் சிலகாலம் குணசீலரிடம் கல்வி

கற்றேன். என்னால் மற்ற மாணவர்களுக்கு இணையாகப் பின்தொடர இயலவில்லை.

அவர் கற்பித்தவற்றைப் புரிந்துகொள்ள இயலாமல் விழித்ததனைக் கவனித்த அவர்

"இனி மேற்கொண்டு கற்பதற்கு வர வேண்டா" என்று கூறிவிட்டார். ஏதோ, நான் கற்ற

அளவில் தாங்கள் கேட்ட வினாவுக்கு விடையளித்துவிட்டேன். மேற்கொண்டு ஏதாவது

விளக்கம் தேவைப்பட்டால் மற்ற மாணவர்களை அணுகுங்கள் என்று கூறி முடித்தான்..


பிரதிவாதி பயங்கரன் சிந்திக்கத் தொடங்கினான். ஏதோ கொஞ்சம் கல்விகற்ற மாடு

மேய்ப்பவரே இவ்வளவு சரியாக யாப்பிலக்கண முறைப்படி விரைந்து கவிதை பாட

இயலுமென்றால்,  முற்றாகக் கல்வி கற்ற குணசீலரோடு மோதுவது சரியாகுமா?

என்றெண்ணி ஊரைவிட்டே ஓடியதாகக் கொங்கு மண்டல சதகம் கூறுகிறது.

பாடல் பின்வருமாறு:(50)

"பெருமை மிகும்அர வச்சிலம் பாமெனிற் பெட்புறுமவ்

வரவு படம்விரித் தாடாத தென்னென் றகத்துனுமோர்

கருவி வெருக்கொள ஆமேய்ப் பவனாக் கனிந்து திரு

மருகன் மயில்கொத்தும் என்றெனச் சொல்கொங்கு மண்டலமே".

மாடு மேய்ப்பவராக வந்தவர் முருகக் கடவுளே என்பது மக்கள் நம்பிக்கை.

முருகனுக்கும் கொங்கு மக்களுக்கும் நெருங்கிய பக்திப் பிணைப்பு காலம்காலமாக  

நிலவி வருகிறது. "குக்குடத்தான் கோயிலொடு குழைக்காதன் கோயில்கொளும்

கொங்கு நாடு" என்று திரு.வி.க. பாடியுள்ளார்.(குக்குடத்தான்=சேவற்கொடியோன்=

முருகன்).

Friday 19 August 2022

திருத்தார்நன்(று) என்றேன் தியேன்.

 யானையின் நெற்றிப் பட்டம் அழகா? யானை அழகா? யானைமேல்

வீற்றிருக்கும் பாண்டியன் மார்பில் இலங்கும் தார் அழகா?


வழக்கப்படி பாண்டிய வேந்தன் உலாவருகின்றான். உடன் அவன்

பரிவாரங்களும் வருகின்றனர். மிடுக்காக யானை மேல் வீற்றிருந்து

உலாவரும் பாண்டிய வேந்தனைக் கண்கொட்டாமல் பார்த்து அவன்

வீரத்தோற்றத்தையும் ஒளிவீசும் முகப் பொலிவையும் கண்டு வீதியின்

இருபுறமும் நிற்கும் பொதுமக்கள் வியந்தும் புகழ்ந்தும் பேசிக் கொள்

கின்றனர்.  மாட மாளிகைகள் செறிந்திருக்கும் மதுரை வீதி. பாண்டிய

வேந்தனின் உலாவைக் கண்டு களிக்கப் பருவப் பெண்கள் மூவர் நின்று

கொண்டிருக்கின்றனர்.


பாண்டியனின் யானை அப்பெண்களின் அருகே வந்துவிட்டது.மூவரில்

ஒருத்தி யானைக்கு அணிவிக்கப்பட்டுள்ள  பொன்னாலான நெற்றிப்பட்டத்

தால் ஈர்க்கப்பட்டாள். "யானையின் நெற்றிப் பட்டம் மிக அழகாயுள்ளது"

என்று வியந்து கூறினாள். உடனே மற்றொருத்தி "இல்லை யில்லை;

யானை மிக அழகாகவும் பொலிவுடனும் தோன்றுகிறது. அதன் அழகு

கண்ணையும் கருத்தையும் கவர்கின்றது" எனச் சொன்னாள். மூன்றாவது

பெண் '"யானையின் பிடரி மீது மிடுக்காக வீற்றிருந்து ஒளிரும் வேலைக்

கைக்கொண்டு வீதியின் இருபுறமும் நிற்கும் மக்களைப் பார்த்து முகமலர்ச்சி

யைக் காட்டும் பாண்டியவேந்தனது அகன்ற மணிமார்பில் அசைந்தாடும்

மணம் கமழும் மாலை மிக அழகாயுள்ளது" என்று பகர்ந்தாள். உண்மையில்

மூன்று  கூறுகளும், யானையின் நெற்றிப் பட்டம், யானை, யானை மேல்

வீற்றிருக்கும் பாண்டியனின் மாலை, மிகுந்த அழகுடன் தோற்றம் தருகின்றன.

பெண்கள் மூவரில் ஒவ்வொருத்தியும்  தன் தன் கருத்தைத் தெரிவித்தாள்.

இந்தச் செய்தியைச் சொல்லும் பாடல் பின்வருமாறு:

பன்மாடக்  கூடல்  மதுரை  நெடுந்தெருவில்

என்னோடு  நின்றார்  இருவர்; அவருள்ளும்

பொன்னோடை  நன்றென்றாள் நல்லளே; பொன்னோடைக்(கு)

யானை நன்(று) என்றாளும் அந்நிலையள்; யானை

எருத்தத்(து)  இருந்த  இலங்கிலைவேல்  தென்னன்

திருத்தார்நன்(று)  என்றேன்  தியேன்".

அருஞ்சொற் பொருள்:

பொன்னோடை= பொன்னாலான யானை நெற்றிப் பட்டம்;

எருத்தம்=கழுத்து(பிடரி); இலங்கும்=ஒளிரும்; இலைவேல்=இலைவடிவ வேல்;

தென்னன்=பாண்டியன்; தார்=மாலை; தியேன்=தீயேன் என்னும் சொல் "தியேன்"

என்று குறுகியுள்ளது.


இந்தப் பாடல் தனிப்பாடல் திரட்டொன்றில் காணப்படுகிறது. கவிதை நடை மற்றும்

கருத்து முதலியவற்றைக் கவனிக்கும் பொழுது, 'முத்தொள்ளாயிரம்' நூலிலுள்ள

பாட்டோ? என்று எண்ணத் தோன்றுகின்றது.  பாண்டியனின் மார்பில் தவழும்

மாலை அழகு என்று சொன்ன மூன்றாவது பெண்ணின் கூற்றில்  பாடல் இயற்றப்

பட்டுள்ளது. அவள் தன்னைத் தீயேன்(தியேன்) என்று ஏன் நொந்து கொள்கின்றாள்?

ஒருவேளை பாண்டியன் மீது கொண்ட ஒருதலைக் காதலால்  அவனருகில் இருக்கும்

பேறு கிட்டவில்லையே என்று புலம்புகின்றாளோ, என்னவோ?

Tuesday 2 August 2022

வெறிவிலக்குதல்.

 வெறிவிலக்குதல்.


வெறி என்பது தெய்வம் ஏறிய/பேய் ஏறிய தன்மை. அகம், புறம்

என்னும் இரண்டு பொருள்களிலும் 'வெறி' பேசப்படும். அகப்

பொருளில் அதிகமாகப் பயின்று வந்துள்ளது. களவியலில்

தலைவனைப் பிரிந்த தலைவி சரியாக உண்ணாமலும் உறங்காமலும்

பித்துப் பிடித்தாற்போல வெறித்த பார்வையுடன் உலவுவதும், உடல்மெலிவதும்,

மேனி நிறம் மாறிப் பசலை கொள்வதும்(உடல் வெளுத்துப் போவதும்)

அன்னைக்கு மன உளைச்சலைத்தரும்.  மகளின் களவியல் காதலை

அறியாத அன்னை மகளின் தோற்றத்திலும் நடத்தையிலும் ஏற்பட்ட

மாற்றத்துக்கு யாது காரணம்? என அறிய எண்ணி வேலனை அழைத்து

வெறியாட்டம் மேற்கொள்ளச் செய்வாள். வெறியாட்டம் என்பது தெய்வத்தை

(முருகனை) வருவித்துத் தன்மேல் ஏறச்செய்து கையில் வேலைப் பிடித்து

ஆவேசத்தோடு ஆடுவது. அச்சமயத்தில் தலைவியின் வீட்டு முற்றத்தில்

புதுமணல் பரப்பி நெற்பொரி தூவினாற் போலப் புன்க மரப்பூக்களைச்

சிதறி மறி(ஆட்டுக்குட்டி) ஒன்றைப் பலியிட்டு அதன் உதிரத்தில் தினையை

விரவி அதனையும் சிதறி முருகனை வேண்டி வெறியுடன் ஆடுவான். முருகனை

நினைத்துத் தலைவியின் நெற்றியைத் தடவிவிட்டு  அவள் பழைய உடல்நலத்தைப்

பெறட்டும் என்று ஆசீர்வதிப்பான். கழற்சிக் காய்களைத்   தரையில் உருட்டி விட்டு

அவை விழுந்து நிற்கும் தன்மையைப் பொருத்தும், எண்ணிக்கையைப் பொருத்தும்

சில கணக்குகளைப் போட்டு "முருகன் அணங்கினான்" (முருகன் தலைவியை

வருத்தினான்) என்றுரைப்பான். இவ்வளவு ஆர்ப்பாட்டங்களையும் அல்லல்களையும்

தவிர்க்க வேண்டுமென்றால் செவிலித்தாயிடம் களவுக் காதலை வெளிப்படுத்தி

இன்னாரைக் காதலிப்பதாகவும் அவர் பிரிவினால் விளைந்த வாட்டமே தன் உடலில்

நிகழ்ந்த மாற்றங்களுக்குக் காரணம் என்பதாகவும் உண்மையை உரைத்தல் வேண்டும்.

இதைத்தான் அறத்தொடு நிற்றல் என்று அகப்பொருள் இலக்கணம் இயம்பும்.


குறுந்தொகைப் பாடல் எண்:362; புலவர் வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தன்.

"முருகயர்ந்து வந்த முதுவாய் வேல!

சினவல் ஓம்புமதி; வினவுவ(து) உடையேன்;

பல்வே(று) உருவின் சில்லவிழ் மடையொடு

சிறுமறி கொன்றிவள் நறுநுதல் நீவி

வணங்கினை கொடுத்தி ஆயின், அணங்கிய

விண்தோய் மாமலைச் சிலம்பன்

ஒண்தார் அகலமும் உண்ணுமோ பலியே?"

பொருள்: வெறி விலக்கித் தோழி அறத்தொடு நின்றது.

முருகனுக்காக வெறியாட்டு அயர்ந்த முதிய வேலனே!  நான் உன்னிடம்

ஒன்று கேட்கவேண்டும்; நீ சினமடையாதே. பலவாகிய வேறுபட்ட

நிறத்தையுடைய, சில சோற்றையுடைய பலியோடு, சின்னஞ்சிறிய

ஆடு ஒன்றைக் கொன்று அதன் உதிரத்தை அதில் விரவித் தலைவியின்

நெற்றியைத் தடவிவிட்டு வணங்கி முருகனுக்குப் படைத்தனை ஆயின்

இவளது மெலிவுக்கும் துன்பத்துக்கும் காரணமான தலைவனது  ஒளி மிகுந்த

மாலையணிந்த மார்பு இப்பலியை உண்ணுமோ? உண்ணாது. இதன்மூலம்

தலைவனுக்கும் தலைவிக்கும்  இடையே நிலவும் களவியல் காதலும் அவனைப்

பிரிந்ததால் தலைவிக்கு நேர்ந்த மெலிவு, பசலை முதலான துயரங்களும்

வெளிப்படையாக எடுத்துரைக்கப் பட்டன.


இந்த வெறிவிலக்கல் துறையிலே மறைந்த பெருந்தமிழறிஞர் கி.வா.ஜ. அவர்கள்

இயற்றிய ஓரிரு பாடல்களைப் பார்ப்போம்:

"ஒப்பரி தாய ஒருவன் திருக்காந்த ஓங்கலிலே

துப்புள னாகிய  சுந்தரன் தன்னைத் துருவியறிந்(து)

இப்பெண் ணுடன்மனச் சம்பந்த னாக்கியிங்(கு) ஈதலன்றி

அப்பரைக் கொல்லத் துணிந்தனள்  அன்னை அவலமிதே".

இந்தப் பாடலில் சுந்தரர், சம்பந்தர், அப்பர் என்ற சைவசமய நாயன்மார் பெயர்களைக்

கையாண்டுள்ளார். ஆனால் அவர்களுக்கும் இந்தப் பாடலில் சொல்லப்படும் நிகழ்ச்சிக்கும்

யாதொரு தொடர்பும் இல்லை.  இலக்கியத் திறமையால் இவ்விதம் இயற்றியுள்ளார்.

பொருள்:

தன்மகள் உடல் மெலிவுக்கும்  பசலை நோய்க்கும்  அவளது களவியல் காதல்தான்

காரணம் என்றறியாத அவள் அன்னை முருகன் அணங்கியிருப்பானோ? என்ற

எண்ணத்தில் வெறியாடலுக்குக் களம் அமைத்து  அப்பரை( ஆட்டுக்கடா)ப் பலி கொடுக்கத்

திட்டமிடுகிறாள். அவள் மனங்கவர்ந்த சுந்தரன்(தலைவன்) யாரென்று  அவள் தோழியிடம்

துருவியறிந்து அச்சுந்தரனொடு  சம்பந்தம்(திருமணம்) செய்வித்தால் சிக்கல் தீருமே.

இதைச் செய்யாமல் அப்பரை(ஆண் ஆடு --கடா)ப் பலியிட எண்ணுதல் அவலமல்லவா?


",வெஞ்சமர் தன்னிற் கொடுஞ்சூ ரனைக்கொன்ற வேல்முருகன்

தஞ்சம் அருள்காந்தக் குன்றினி லேராசிச் சக்கரத்தில்

அஞ்சையும் ஆறையும் மூன்றாக் குதலன்றி ஆதியொன்றை

எஞ்சிடச் செய்ய நினைத்தனள் அன்னை எவன் செய்வதே".

பொருள்:

இப்பாடலில் இராசிக் கட்டத்தைக் கையிலெடுத்து இராசிகளின் பெயர்களைப் பயன்

படுத்திச் சொல்விளையாட்டு நிகழ்த்தியுள்ளார்.  மகளின் களவியல் காதலை அறியாத

அன்னை அஞ்சாவது இராசியான சிம்மத்தையும்(தலைவனையும்) ஆறாவது இராசி

யான கன்னியையும்(தலைவியையும்)  மூன்றாவது இராசியான மிதுனம் (மைதுனம்--

திருமணம்) செய்வித்தால் சிக்கல் தீரும். ஆனால், அவ்வாறு செய்வதை விடுத்து, 

ஒன்றாவது இராசியான மேடம்( மேஷம்-ஆடு) தனை முருகனுக்காகப் பலி என்ற முறையில்

எஞ்சிடச் செய்யத் திட்டமிட்டனள். எஞ்சிடச் செய்ய---சாகடிக்க. இப்பாடலில் இராசிப்

பெயர்களைக் கொண்டு சொல் விளையாட்டு மூலம் அருமையான பாடல் தந்துள்ளார் 

கி.வா.ஜ. என்னே அவர்தம் புலமை! என்று வியக்கத் தோன்றுகிறது.

பார்வை: கி வா ஜ.சிலேடைகள் என்னும் நூல்.

                  தொகுத்தவர்: கி.இராமசுப்பிரமணியன்..

Sunday 17 July 2022

நாணிக் கண்புதைத்தல்.

 நாணிக்கண் புதைத்தல் (இடையூறு கிளத்தல்).


அகப்பொருள் இலக்கியத்தில் தலைவன் தலைவி சந்தித்துக்

கொள்ளும்  பொழுது தலைவி நாணத்தால் தன் கண்களை

மூடிக் கொள்ளும் நிகழ்வை இடையூறு கிளத்தல் என்று புலவர்கள்

குறிப்பிடுவர். ஏனெனில் தலைவியின் முக அழகை முழுதாகப்

பார்த்து மகிழத் தலைவன் விரும்புவான். ஆனால், பெண்மைக்கே

உரிய இயற்கை நாணத்தினால் தலைவி தன் கண்களை மூடிக்கொண்டால்

(கண் புதைத்தால்) தலைவனுக்குத் துன்பம் ஏற்படுவது இயல்பு அன்றோ?

அதனால்தான் இத்துறைக்கு இடையூறு கிளத்தல் என்று புலவர்கள் பெயர்

சூட்டியுள்ளனர். இது மிகவும் நுணுக்கமான உணர்வு. தலைவியின் முக

அழகைக் கண்டுகளிக்கத்தான் தலைவன் தலைவி பின்னால் சுற்றிச்சுற்றி

வந்தான். தற்பொழுது முகத்துக்கு அழகு தரும் கண்களைத் தலைவி கைகளால்

மூடிக் கொண்டால் தலைவன் திண்டாடித்தான் போவான். அகப்பொருள்

நிகழ்வுகளைத் தொகுத்துக் கூறும் கோவை இலக்கியத்தில்  நாணிக்கண்

புதைக்கும் நிகழ்வை ஒவ்வொரு புலவரும் தம் திறமையை யெல்லாம்

ஒருங்கு திரட்டிக் கற்பனையைச் சிறகடித்துப் பறக்கவிட்டுக் கவி படைப்பர்.

சிறந்த கோவை இலக்கியமான தஞ்சைவாணன் கோவையில் புலவர் பொய்யா

மொழிப்புலவர் இந்நிகழ்வை எவ்வாறு படைத்துள்ளார் என்று பார்ப்போம்.


தலைவன் தலைவியிடம் கூறுகின்றான்:

கேடில்லாத தாமரைத் திருமாளிகை சிறந்ததென்று என் இதயத் தாமரையில்

வீற்றிருப்பவரே! இரண்டு கொம்புகளையும்(தந்தம்) ஒரு நீண்ட தும்பிக்கையையும்

கொண்ட மதயானையின் மீது வீற்றிருந்து தஞ்சையை(சிவகங்கை மாவட்டத்தில்

உள்ள தஞ்சாக்கூர்) வலம்வரும் வாணனின் வையை நாட்டில் வாழ்கின்ற மக்கள்

தாம் உழைத்து ஈட்டும் தனத்தை(பணத்தை)ப் புதைத்துவைக்கமாட்டார் என்று

சொல்லப்படுவது சரிதான் என்று மெய்ப்பிப்பதுபோல் நீர் உம் தனத்தை(முன்னழகை)

மறைக்காமல் மதர்த்த வேல்போன்ற கண்களைப் புதைக்கின்றீர். இச்செயல் எனக்குத்

துன்பம் தருகின்றது. (வையை சூழும் நாட்டு மக்கள் பணத்தைப் புதைத்து வைக்காமல்

தானம், தர்மம் செய்துவிடுவது வழக்கம்). பணத்தைப் புதைத்து வைக்கும் கேடுகெட்ட

மானிடரை ஔவையார் கண்டித்துள்ளார். அது தொடர்பான பாடல் பின்வருமாறு:

"பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைக்கும்

கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்---கூடுவிட்டிங்(கு)

ஆவிதான் போனபின்(பு) ஆரே அனுபவிப்பார்

பாவிகாள்! அந்தப் பணம்".

தஞ்சைவாணன் கோவைப் பாடல்:

" சிதையா முளரித் திருமா ளிகையிற் சிறந்ததென்றன்

இதயார விந்தத் தினிதிருப் பீரிரு கோட்டொருகை

மதயானை வாணன் வரும் தஞ்சை சூழ்வையை நாட்டுறைவோர்

புதையார் தனமென்ப தோ?மதர் வேற்கண் புதைத்ததுவே".

(தனம்=பணம்; பெண்களின் முன்னழகு; முளரி=தாமரை;

புதைத்தல்=மறைத்தல்)


இனி, இதே துறையில் இயற்றப்பட்ட தனிப்பாடல் ஒன்றைப்

பார்ப்போம்:

"காலையர விந்தம்; கழுநீர் உடன்கலந்தால்

மாலையர விந்தம் மயக்காதோ?---பாலைப்

பழிக்கின்ற மென்மொழியீர், பாண்டியனார் ஊரை

அழிக்கின்ற தென்னோ அது."

தலைவன் கூற்று:

காலை அரவிந்தம்(மலர்ந்த தாமரை) போன்ற உம் கைகளால்

கழுநீர்(குவளை மலர்) போன்ற உம் கண்களை மூடிக்கொள்கிறீர்.

அதனால் மாலையில் கூம்பிய மொட்டுப் போன்ற உம் முன்னழகால்

நான் கிறங்கி மயக்கம் அடைகிறேன். ஏன் இந்தத் துன்பம் தருகிறீர்?

மென்மையிலும் சுவையிலும் பாலைத் தோற்கடிக்கும் பேச்சுடைய

பெண்ணே! உம் செயலால் பாண்டியனார் ஊரை அழிக்கின்றதேனோ?

பாண்டியனார் ஊர் மதுரை என்ற கூடல். நீர் நாணிக் கண் புதைப்பதனால்

நாம் சந்தித்துக் கூடிக் கொள்ளும் வாய்ப்பைக் கெடுக்கிறீர்.. இப்

பாடலில் பாண்டியனார் ஊர் என்று சாமர்த்தியமாகச் சொல்லிக்

கூடல் நிகழ்வு தடைப்படுவதைச் சுட்டிக்காட்டுகிறார் புலவர். மிக மிக

நயமான கற்பனை.

இந்தத் தனிப்பாடல் 'கலைச்செல்வி' என்பவர் தொகுத்து உரையெழுதி

வெளியிட்ட தனிப்பாடல் திரட்டு நூலில் உள்ளது.  புதுக்கோட்டை மீனாட்சி பதிப்பகத்தின் வெளியீடு.


காலை அரவிந்தம்= மலர்ந்த தாமரை= கைகளுக்கு உவமை.

கழுநீர்=குவளை மலர்=கண்களுக்கு உவமை.

மாலை அரவிந்தம்=கூம்பிய தாமரை மொட்டு=முன்னழகுக்கு உவமை.

Sunday 3 July 2022

செலவழுங்குதல்.

 பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளங்கெழு முசிறி.


அகப்பொருள் விவரிக்கும் களவொழுக்கத்திலும், கற்பொழுக்

கத்திலும்  தலைவன் தலைவியைப் பிரியும் நிகழ்வு மிக்க

நெகிழ்ச்சி மிக்க காட்சிகளைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தி

நம்மை உருகவைத்துவிடும். களவொழுக்கத்தில் ஏற்படும் பிரிவுகள்

இரண்டுவகை: 1. ஒருவழித் தணத்தல் 2.வரைவிடை வைத்துப்

பொருள்வயிற் பிரிதல். கற்பொழுக்கத்தில் ஏற்படும் பிரிவுகள்

ஆறுவகை:1.ஓதற் பிரிவு 2.காவற்பிரிவு 3.தூதிற் பிரிவு 4.துணைவயிற்

பிரிவு 5. பொருள்வயிற் பிரிவு 6.பரத்தையிற் பிரிவு.


பரத்தையிற் பிரிவு சங்க நூல்களில் விளக்கப்பட்டிருந்தாலும், திருக்குறள்

பரத்தை ஒழுக்கத்தைக் கண்டித்தது. சங்கம் மருவிய நூல்களான பிற

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும்(நாலடியார் போன்றவை) எதிர்த்தன.

தலைவன்-தலைவிக்கு இடையே நிகழும் பிரிவை இருவரும் வெறுத்தனர்.

சில சமயங்களில் தலைவியின் புலம்பல் காரணமாகவோ, தலைவனுக்கே

பிரிய மனமில்லாத காரணத்தாலோ பிரிவுப் பயணம் கைவிடப்படும்.

செலவழுங்குதல் என்று இலக்கியத்தில் குறிப்பிடப்படும். (செலவு=பயணம்;

அழுங்குதல்=தவிர்த்தல்). செலவழுங்கும் நிகழ்ச்சி ஒன்று அகநானூறு 

இலக்கியத்தில் காட்சிப் படுத்தப் பட்டுள்ளது. அதனைப் பார்ப்போம்: 

அகநானூறு பாடல்  எண்:149; திணை: பாலைத் திணை;

புலவர்: எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார்;

செலவழுங்கிய தலைவன் தன் நெஞ்சிடம்  சொன்னது.

சிறிய, புல்லிய  கறையான் முயற்சி செய்து உயரமாக எழுப்பிய 

சிவந்த புற்றினுள்ளே இருக்கும் புற்றாம் பழஞ்சோறாகிய தம்  இரையைப்

பெரிய கைகளையுடைய  கரடிகள் கூட்டம் தின்னும். அந்த இரை வெறுத்துப்

போனால்  புல்லின் அரையையுடைய இருப்பையின் துளையையுடைய

வெள்ளிய பூவைப் பறித்துத் தின்னும். இத்தகைய தன்மை வாய்ந்த பாலை

நிலத்தில் நெடுந்தொலைவு பயணம் செய்து  அரிதாக ஈட்டத்தக்க பொருளை

எளிதாகப் பெறுவதாக இருந்தாலும்,  மதுரைக்கு மேற்கிலுள்ள திருப்பரங்

குன்றில் அமைந்துள்ள நெடிய ஆழமான சுனையின் கண் பூத்திருக்கும்

குவளையின்  இணையொத்த மலர்களிலான பிணையல் போன்ற என்

தலைவியின் அரிபரந்த மதர்த்த மழைக்கண்கள் கண்ணீர் சொரியும்

வண்ணம் நான் அவளைப் பிரிந்து பொருளீட்ட வரமாட்டேன். நெஞ்சே! 

தேவையானால் நீ போய் உன் வினையை முடித்து வாழ்வாயாக!

இவ்வாறாகத் தலைவன் தன் நெஞ்சுக்குக்  கூறிப் பயணத்தைக்

கைவிட்டான்(செலவு அழுங்கினான்).


மதுரையைப் பற்றிச் சொல்லும் பொழுது,  சேரர்களுக்குச் சொந்தமான

சுள்ளியென்னும் பேரியாற்றின் வெண்மையான நுரை கலங்கும் வண்ணம்

யவனர்கள்(கிரேக்கர்கள்) சிறந்த நல்ல மரக்கலங்களில் முசிறியென்னும்

பட்டினத்துக்கு வணிகம் புரிய வந்ததையும்,  தங்களோடு  உயர்ந்ததரப்

பொன்னைக் கொண்டுவந்து  மிளகை வாங்கிச் சென்றதையும் புலவர்

குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த முசிறியைப் பாண்டிய மன்னன் செழியன்

தன் படைவலிமையால் வெற்றிகொண்டதையும், படிமம் ஒன்றைக்

கைப்பற்றியதையும்,  யானைப்படையைப் பயன்படுத்தியதையும்

குறிப்பிட்டுள்ளார்.


அகப்பொருள் பற்றிய இலக்கியங்களில் சிற்சில போர் குறித்த வரலாற்றுச்

செய்திகளையும்  அக்காலப் புலவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் பயின்று

வரும் "பொன்னொடு வந்து கறி(மிளகு)யொடு பெயரும் வளங்கெழு

முசிறி"  என்ற சொற்றொடர் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. தொடர்புடைய

பாடல் பின்வருமாறு:

"சிறுபுன்  சிதலை  சேண்முயன்(று)  எடுத்த

 நெடுஞ்செம் புற்றத்(து)  ஒடுங்கிரை  முனையின்,

புல்லரை  இருப்பைத்  தொள்ளை வான்பூப்

பெருங்கை  எண்கின்  இருங்கிளை  கவரும்

அத்த  நீளிடைப்  போகி,  நன்றும்

அரிதுசெய்  விழுப்பொருள்  எளிதினின்  பெறினும்

வாரேன், வாழியென்  நெஞ்சே,  சேரலர்

சுள்ளியம்  பேரியாற்று  வெண்நுரை  கலங்க

யவனர்  தந்த  வினைமாண்  நன்கலம்

பொன்னொடு  வந்து  கறியொடு  பெயரும்

வளங்கெழு  முசிறி  ஆர்ப்பெழ  வளைஇ

அருஞ்சமம்  கடந்து  படிமம்  வௌவிய

நெடுநல்  யானை  அடுபோர்ச்  செழியன்

கொடிநுடங்கு  மறுகின்  கூடல்  குடாஅது

பல்பொறி  மஞ்ஞை  வெல்கொடி  உயரிய

ஒடியா  விழவின்  நெடியோன்  குன்றத்து.

வண்டுபட  நீடிய  குண்டுசுனை  நீலத்து

எதிர்மலர்ப்  பிணையல் அன்னஇவள்

அரிமதர் மழைக்கண்  தெண்பனி  கொளவே.'"

அருஞ்சொற் பொருள்:

சிதலை=கறையான்; எண்கு=கரடி; சமம்=போர்; படிமம்=சிலை;

குடா அது=மேற்கில் உள்ள; மஞ்ஞை=மயில்; தெண்பனி=தெளிந்த கண்ணீர்.


மேலே  கூறப்பட்டது  சங்ககாலப் பாடல். இடைக்காலத்தில் இயற்றப்பட்ட பாடல் பின்வருமாறு:.

"மாதர்  துவரிதழ்வாய்  வந்தென்  உயிர்கவரும்;

சீத  முறுவல்  அறிவழிக்கும்;----மீதுலவி

நீண்ட  மதர்விழியென்  நெஞ்சம்  கிழித்துலவும்;

யாண்டையதோ  மென்மை  யிவர்க்கு".

பொருள்:

இவளுடைய அழகிய பவளம் போன்ற வாயானது  என்னுடைய உயிரைக்

கவர்கின்றது;  குளிர்ந்த சிரிப்பானது அறிவை அழிக்கின்றது;  காதின்

மீது உலாவி நீண்ட விழியானது என்னுடைய நெஞ்சத்தைக் கிழித்து

உலாவருகின்றது; ஆதலால் இவளுக்கு  மென்மை எங்குளதோ?

ஆதலால் இவளைப் பிரிய மனம் மறுக்கின்றது. நான் இவளைப்

பிரிந்து செல்லேன்.

Friday 17 June 2022

விடுகதைப் பாடலும் அறநெறியும். து முதலும் அறநெறியும்..

 புதிர் புகலும் அறநெறி.


விவேக சிந்தாமணி என்றொரு நூல் உள்ளது. நல்ல நீதி

நெறிமுறைகள், வாழ்வியல் நெறிகள், காதல், ஆடவர்

இயல்பு, ஆடவர் கடமைகள், மகளிர் இயல்பு, மகளிர் கடமைகள்,

போன்ற பல செய்திகளை உள்ளடக்கிய நூலாகும். படைக்கப்

பட்ட காலம் இதுவெனக் குறிப்பிட இயலவில்லை. 15 அல்லது

16ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் படைக்கப்பட்டிருக்கலாம்.

ஏனெனில் நிறைய வடமொழிக் கலப்பு உள்ளது. இயற்றிய

ஆசிரியரையும் இன்னாரெனக் குறிப்பிட்டுச் சொல்ல இயலவில்லை.

சில பாடல்கள் மிக அருமையாக உள்ளன. சில பாடல்கள் சுமாராக

உள்ளன. பாடல் எண்ணிக்கையிலும் வேறுபாடுகள் நிலவுகின்றன.

சில பதிப்புகளில் 135 பாடல்களும் வேறு சிலவற்றில் அந்த எண்ணிக்

கையை விடக் கூடக் குறைய உள்ளன. பெரும்பகுதிப்  பாடல்கள்

பஞ்ச தந்திரக் கதைகளைப் போல் உள்ளன. சரி, விவேக சிந்தாமணிப்

பாடல் கூறும் ஒரு புதிர் கலந்த அறநெறியைப் பற்றிப் பார்ப்போம்.


கீழ்வரும் பாடல் மதுரைச் சொக்கநாதப் பெருமானுக்குத்  தொண்டு

செய்ய அறிவுறுத்துகிறது. புதிர்(விடுகதை) கலந்த பாடல் இது:

"பண்புளருக்(கு) ஓர் பறவை;  பாவத்திற்(கு)  ஓர் இலக்கம்;

நண்பிலரைக் கண்டக்கால் நாற்காலி---திண்புவியை

ஆள்வார் மதுரை  அழகியசொக்  கர்க்(கு)அரவம்

நீள்வா  கனம்நன்  னிலம்".

பண்புளருக்கு ஓர்பறவை---ஈ: ஈதலைக் குறிப்பிடுகிறது.

பாவத்திற்கு ஓர் இலக்கம்--5: அஞ்சுதலைக் குறிக்கிறது.

நண்பிலரைக் கண்டக்கால் நாற்காலி: நாற்காலி நான்கு

கால்களையுடைய விலங்கைக் குறிக்கிறது.

திண்புவியை ஆள்வார் மதுரை அழகிய சொக்கர்க்(கு) அரவம்:பாம்பு--பாம்புக்குப்

பணியெனவும் பெயர் உள்ளது.

நீள்வாகனம்: இடபம்(ரிஷபம்)--விடை எனத் தூய தமிழில் சொல்வர்.(மாடு)

நன்னிலம்: நிலம்--செய்(நன்செய்/புன்செய்)

இனி பாடலில் கூறப்படும் செய்தியைப் பார்ப்போம்:

பண்புளருக்கு ஓர் பறவை= பண்புளவர்க்குக் கொடு.

பாவத்திற்கு ஓரிலக்கம்     = பாவம் புரிய அஞ்சு.

நண்பிலரைக் கண்டக்கால் நாற்காலி=நல்லவர் அல்லாதாரை விட்டு விலங்கு=நீங்கு.

திண்புவியை ஆள்வார் மதுரை அழகிய சொக்கர்க்கு

அரவம்     நீள்வாகனம்     நன்னிலம்=  

பணி             விடை              செய்

விளக்கவுரை:

பண்புள்ளவர்க்குக்  கொடு;  பாவம் புரிய அஞ்சு; நல்லவர் அல்லாதாரை விட்டு

நீங்கு;  உலகத்தை ஆளும்  மதுரை அழகிய சொக்கர்க்குப் பணிவிடை செய்.


பார்வை:

விவேக சிந்தாமணி, வர்த்தமானன் பதிப்பகம்

உரையெழுதியவர்  தேவார உரைமாமணி திரு வ.த.இராமசுப்பிரமணியம்,  M.A.

Monday 6 June 2022

அழியா வாழையும் ஒழியாக் கிணறும்.

 அழியா வாழையும் ஒழியாக் கிணறும்.


இடைக்காலத்தில் வாழ்ந்த ஔவையார் செங்கற்பட்டு நாட்டில்

உள்ள புல்வேளூர்ப் பூதன் என்ற வள்ளலின் கொடையால் நலம்

பெற்றவர். புல்வேளூர் இப்போது புல்லலூரென அழைக்கப்படுகிறது.

ஆயினும் கல்வெட்டுக்கள் அவ்வூரை எயிற்கோட்டத்துப் புல்வேளூர்

என்றே கூறுகின்றன. ஔவையாரைப் போற்றிய பூதன் வாழ்ந்த

புல்வேளூர் பெண்ணையாற்றின் வடகரையில் பல்குன்றக் கோட்டத்து

மீகொன்றை நாட்டில் உள்ளது. அங்குள்ள நடுகல் ஒன்றைப்   பூதங்கோவில்

என அவ்வூரார் கூறுகின்றனர். அதிலுள்ள கல்வெட்டு "மீ கொன்றை நாட்டு

மேல்வேளூர்ப் பொங்காலத் தொண்டைமான் மகன் வேம்படி என்பவன்"

வெட்சிப் போர் செய்து  ஆநிரை கவர்ந்துசென்றவரிடமிருந்து கரந்தைப்

போர் செய்து  பசுக்கூட்டத்தை மீட்டு அப்போரில் உயிர்நீத்ததன் பொருட்டு

நடப்பட்டதெனக் கூறுகிறது. அக்கல் நிற்குமிடம் பூதங்கோவில் என வழிவழியாக

வழங்கப் படுவதால், ஔவையாரைப் புரந்த வள்ளல் பூதனின் அரண்மனை

அவ்விடத்தில் இருந்திருக்கலாம் என்று எண்ணுவதில் தவறில்லை.


ஒருமுறை ஔவையார் புல்வேளூர்ப் பூதன் தன் நிலங்களுக்குக் கிணற்றுநீரைப்

பாய்ச்சுவதை மேற்பார்வை செய்து வருகையில்,  அவனைக் கண்டு தாம் நெடுந்

தொலைவிலுள்ள ஊரிலிருந்து வருவதாகவும்  வெய்யிலின் கொடுமையாலும்

பசிவருத்தத்தாலும் வாடுவதாகவும் தெரிவித்தார். பூதனுக்கு நண்பகல் உணவாக

வரகரிசிச் சோறும்  வழுதுணங்காய் வாட்டும் மிகப் புளித்த மோரும் வந்திருந்தது.

அவ்வுணவை ஔவைக்களித்து மனம் மகிழ்ந்தான். ஔவையார்க்கு அவ்வுணவு

அமிர்தமாயிருந்தது. ஔவையார் பசிதீர்ந்து மனங்களித்துப் பின்வரும் பாடலைப்

பாடினார்:

"வரகரிசிச்  சோறும்  வழுதுணங்காய்  வாட்டும்

முரமுரவென் றேபுளித்த  மோரும்---பரிவுடனே

புல்வேளூர்ப்  பூதன்  புகழ்புரிந்(து)  இட்டசோ(று)

எல்லா  வுலகும்  பெறும்."

வழுதுணங்காய்=கத்தரிக்காய்.


ஔவையார் அவ்விடத்தை விட்டுக் கிளம்பிய வேளையில் பூதன் வாழைத்

தோட்டத்துக்கு நீர்பாய்ச்சிக் கொண்டிருந்தான். "அழியா வாழையும் ஒழியாக்

கிணறும் ஆகுக" என்று வாழ்த்தினார் எனத் தொண்டை மண்டல சதகம் என்ற

நூல் தெரிவிக்கிறது. அவ்விவரம் பின்வருமாறு:

"சொல்லாயும் ஔவை பரிவாய்த் தனக்கிட்ட சோறுலகம்

எல்லாம்  பெறுமென்று பாட்டோதப் பெற்றவள் இன்னருளால்

கல்லாரல் சுற்றிக் கிணறேறிப் பாயும் கழனிபெற்றான்

வல்லாளன் பூத மகிபால னுந்தொண்டை மண்டலமே".


இந்நூலுக்கு உரையும் வரலாற்றுக் குறிப்பும் எழுதிய அறிஞர்

சி.கு.நாராயணசாமி முதலியார், புல்வேளூர் என்று இப்பாடலில்

குறிப்பிடப்பட்டது காஞ்சிபுரத்துக்கு வடக்கிலுள்ள எயிற்கோட்டத்துப்

புல்வேளூரேயாம் எனக்கருதி, அவ்வூரில் ஔவையார் குறிப்பிட்ட

கிணறும் நன்செய்நிலமும் இன்றும் உள்ளனவென்றும், மழையில்லாக்

கடுங்கோடையிலும் இக்கிணற்றுநீர் வற்றாது சுரந்து அருகிலுள்ள

வாழைக்கொல்லைக்குப் பயன்தருகிறது என்றும் எழுதியுள்ளார்.


இஃது உண்மையாயின், ஔவையாரின் வாக்குப் பலித்துள்ளதோ?

என்று வியப்படைகின்றோம்.


பார்வை: ஆராய்ச்சிப் பேரறிஞர் ஔவை சு.துரைசாமி பிள்ளை

உரையெழுதிய தமிழ் நாவலர் சரிதை நூல்.

Wednesday 18 May 2022

கூடலான் கூடாயினான்.

 கூடலான் கூடாயினான்.


கூடலான் என்னும் சொல்  ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் என்ற

பாண்டிய வேந்தனைக் குறிக்கும். ஆரியப் படை கடந்த நெடுஞ் செழியனும்

சேரன் செங்குட்டுவனும் சமகாலத்தில் வாழந்தவர்கள்.  கூடலான் ஏன்

கூடாயினான்? கோவலனை அநியாயமாகக் கொல்ல ஆணையிட்ட

காரணத்தால் கோவலன் மனைவி கண்ணகி நீதிகேட்டுத் தலைவிரி 

கோலத்தோடு தோன்றியதைக் கண்டு "நான் நீதிநெறி தவறித் தீர்ப்பு 

அளித்துவிட்டேனோ?" என்று எண்ணி நெஞ்சம் பதைபதைத்துப் பாதி

உயிர் நீங்கிக் கூடாயினான்.


ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் மாவீரனாகத் திகழ்ந்தவன்.

செங்கோல் வளையாமல் சிறந்த முறையில் ஆட்சி செலுத்தியவன்.

அவன் கி.பி.142 அளவில் ஆட்சி நடத்தியிருக்கலாம் என்று வரலாற்று

அறிஞர்கள் கூறுகின்றனர். அவன் நல்ல தமிழ்ப் புலமையும் கொண்டு

விளங்கினான். அவன் இயற்றிய பாடல் புறநானூற்றில் உள்ளது. கல்வி

யின் சிறப்பைக் கூறும் பாடல் அது. "உற்றுழி உதவியும் உறுபொருள்

கொடுத்தும்--பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே"(பாடல் எண்:183).


கோவலன் யார்?  நெடுஞ்செழியன் அவனுக்குக் கொலைத் தண்டனை 

விதிக்கக் காரணம் என்ன? சோழநாட்டுக் காவிரிப்பூம் பட்டினத்தில்

சிறப்புடன் வாழ்ந்த வணிகன் மாசாத்துவான் மகன் கோவலன். காவிரிப்பூம்

பட்டினத்தில் சோழவேந்தனுக்குச் சமமான செல்வந்தராகப் பல வணிகர்கள்

வாழ்ந்துவந்தனர். அவர்கள் செல்வநிலைப்படி மூன்று வகையினராக

அறியப்பட்டனர். இப்பர், கவிப்பர் மற்றும் பெருங்குடியர் என்ற மூன்றுவகைப்


பிரிவினர் சோழநாட்டில் வணிகத்தில் கோலோச்சினர். கோவலன் தந்தை

மாசாத்துவானும் கண்ணகியின் தந்தை மாநாய்கனும் பெருங்குடியர் என்ற

உயர்நிலை வணிகர்கள். கோவலனுக்கும் கண்ணகிக்கும் திருமணம் செய்விக்க

உறவினர்கள் முன்னிலையில் தீர்மானித்து நல்லநாளில் நடத்திமுடித்தார்கள்.

திருமணம் முடித்த கையோடு மணமக்களுக்கு வேறுவைத்தல்(தனிக்குடித்தனம்)

நிகழ்ச்சியையும் முறையாகச் செய்தனர்‌. திருமணம் நடைபெறும் பொழுது

கோவலனுக்குப் பதினாறு ஆண்டுகளும், கண்ணகிக்குப் பன்னிரண்டு ஆண்டுகளும்

நிறைவடைந்திருந்தன. கோவலனும் கண்ணகியும் சில ஆண்டுகள்  தொலையாத

இன்பமெலாம் துய்த்தார்கள்.


யார்கண் பட்டதோ? மாதவி என்னும் கணிகையர் குலப் பெண்ணைக் கோவலன் சந்திக்க

நேர்ந்தது. அவள் இசை, நடனம் என்னும் கலைகளில் தேர்ந்தவள். பேரழகு வாய்த்தவள்.

கலையுள்ளம் கொண்ட கோவலன் மாதவியை மணந்து அவளுடன் வாழந்துவந்தான்.

கண்ணகியை அறவே மறந்துவிட்டான். இடையில் மாதவி ஒரு பெண் குழந்தையைப்

பெற்றெடுத்தாள். கோவலன் தன் குலதெய்வமாகிய மணிமேகலையின் பெயரைத் தன்

மகளுக்குச் சூட்டினான்‌. ஊழ்வினையால் கோவலனுக்கும் மாதவிக்கும் ஊடல் நேர்ந்து

கோவலன் மாதவியைப் பிரிந்து கண்ணகியை நாடி வந்தான்.


கோவலன் கண்ணகியிடம்  தான் செய்த பிழையை எண்ணிப் புலம்பினான்.

"சலம்புணர் கொள்கைச் சலதியோ(டு) ஆடிக்

குலந்தரு வான்பொருட் குன்றம் தொலைத்த

இலம்பாடு நாணுத் தரும்" என்று கண்ணகியிடம் உரைத்தான். அதாவது,  மாதவியொடு

வாழந்து  குல முதல்வர்கள் தேடித்தந்த செல்வத்தையெல்லாம் அவளிடம் இழந்து

வறியனாகிவிட்டதாக வருந்தினான். உடனே, கண்ணகி "நகைகேழ் முறுவல் நகைமுகம்

காட்டிச் சிலம்புள  கொண்ம்" என்றாள்.. "நாம் மதுரைக்குச் சென்று இச் சிலம்பை விற்றுக்

கிடைக்கும் பொருளை முதலாகக் கொண்டு வணிகம் செய்து பிழைப்பைத் தொடர்வோம்"

என்றான்.


பூம்புகாரை  விட்டு அதிகாலையிலேயே இருவரும் கிளம்பி ஒரு காவதத் தொலைவு கடந்து

(பத்து மைல்) அங்கு தென்பட்ட சோலைக்குட் புகுந்து ஓய்வெடுத்தனர். கண்ணகி செல்வச்

சீமான் மகள். துன்பம் என்பதையே அறியாதவள். அவளது 'வண்ணச்  சீறடி'யை மண்மகள்

அறிந்திலள்'. அவள் கொஞ்சுமொழியில் "மதுரை மூதூர் யாங்குளது?" என்று கணவனிடம்

வினவினாள். அவன் சாமரத்தியமாக "ஆறு, ஐந்து காவதத் தொலைவில் உள்ளது" என்றான்.

பூம்புகாரிலிருந்து முப்பது காவதத் தொலைவில்(முந்நூறு மைல்) மதுரை உள்ளது என்று

அறிந்தால் அவள் மலைத்துப் போய்விடுவாள் என்று  'ஆறைங்காவதம்' என்றான். பின்னர்

பக்கத்திலுள்ள வேறொரு சோலைக்குள் நுழைந்து அங்கு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த

கவுந்தியடிகள் என்னும் சமணத் துறவியைக் கண்டு வணங்கினர். அவர்  அவ் இரு

வரைப் பற்றிய அனைத்துச் செய்தியையும் அறிந்து "இப் பெண் இவ்வேனில் பருவத்தில்

எப்படி நடந்துவருவாள்?" என்று புலம்பினார். " நாளொன்றுக்கு ஒரு காவதம் நடந்தால்

போதும்; இடையிடையே சோலைகளில் தங்கி ஓய்வெடுத்துச் செல்வோம்" என்று

முடிவுசெய்தனர். இப்படியாக,  திருவரங்கம், உறையூர், கொடும்பாளூர் முதலிய ஊர்களைக்

கடந்திருந்தனர். பின்பு "பகற்பொழுதில்  சோலைகளில் ஓய்வெடுத்துவிட்டு இரவில்

நிலவொளியில் பயணத்தைத் தொடரலாம்" என்று தீர்மானித்தனர்.


இந்த முடிவுப் படியே பகல் முழுவதும் சோலைகளில் உள்ள மண்டபங்களில் தங்கி ஓய்வு

எடுத்தபின்னர்  நிலவு ஒளியில் மூவரும் மதுரைப் பதியை நோக்கி நடக்கத்  தொடங்கி

விடியுமட்டும்  தமக்குள் பல்வேறு செய்திகளைக் குறித்துப் பேசியபடியே பயணம் செய்

தனர். ஒருநாள் சுகமான தென்றல் தீண்டிய வேளையில் கவுந்தியடிகள் "மதுரைத் தென்றல்

வீசுகிறது; நாம் மதுரையை நெருங்கிவிட்டோம்" என்றுரைத்தார். அவர் கூற்றுப்படியே

விடியும் வேளையில் வைகையாற்றின் வடகரையை அடைந்தனர். சிறிதுநேர ஓய்வுக்குப்

பின்னர்  ஓடம் ஒன்றில் ஏறிப் பயணம் செய்து தென்கரையை அடைந்தனர்.


ஏறத்தாழ முப்பது நாட்களுக்குமேல் கடந்துவிட்டன. மென்மையான பாதங்கள் கன்றிச் 

சிவக்கப்  பரல்கற்களும்  மேடுபள்ளங்களும்  நிரம்பிய பாதையில் கடந்த ஒரு திங்களுக்கு

மேல் நடைப்பயணம் மேற்கொண்ட கண்ணகி மிகவும் சோர்ந்திருந்தாள். கவுந்தியடிகள்

தமது சமணமதத் துறவிகளைச்  சந்திக்க வேண்டியிருந்ததால் தாம் விடைபெற்றுப் பிரிய

எண்ணினார். அவ்வேளையில் மாதரி  என்னும் ஆயர்குல மூதாட்டி கவுந்தியடிகளைக்

கண்டவுடன் வணங்கினாள். அவளிடம் கோவலன்-கண்ணகி இணையரை அடைக்கலமாக

ஒப்படைத்துவிட்டுப் பிரிந்து. சென்றார். மாதரி இருவரையும் புறஞ்சேரியில் உள்ள ஆயர்

பாடிக்கு அழைத்துச் சென்றாள். செம்மண் பூசிய புதிய சிற்றில் ஒன்றில் அவர்களைத்

தங்கச்செய்து  சமையலுக்கு வேண்டிய பண்டபாத்திரங்களையும்  கொடுத்துதவினாள்.


செல்வத்தில் திளைத்திருந்த கண்ணகிக்குச் சமைக்கத் தெரியவில்லை. மாதரிமகள்

ஐயை என்பாளின் துணையோடு ஒருவிதமாகச் சமையலை முடித்துக் கோவலனுக்கு

உணவு பரிமாறினாள். தாம்பூலம் மடித்துக் கொடுத்தாள். கிட்டத்தட்ட ஏழெட்டு ஆண்டு

களுக்குப்பின் நடைபெறும் நிகழ்வு. கோவலன் கண்கள் பனித்தன. "நாம் பிரிந்திருந்த

பொழுது எப்படிச் சமாளித்தாய்?" என்று வினவினான். "போற்றா ஒழுக்கம் புரிந்தீர்;

இருப்பினும் உம் தாய் தந்தை மனம் நோகாமலிருப்பதற்காகப் பிரிவுத் துயரைக்

காட்டிக்கொள்ளாமல்  போலியான புன்முறுவல் செய்து ஏமாற்றினேன்" என்றாள்.

உடனே கோவலன் மதுரைஅகநகருக்குச் சென்று சிலம்பை விற்றுவரத்  தீர்மானித்துக்

கிளம்பினான். "சீறடிச் சிலம்பின் ஒன்றுகொண்(டு) யான்போய்--மாறி வருவன்

மயங்காதொழிக" என்றுகூறி  விடைபெற்றான்.


புறஞ்சேரியைக் கடந்து மதுரை அகநகருக்குள் நுழைந்து தேரோடும் தெருவில் நடந்து

செல்லும் பொழுது எதிரே பாண்டியன் தேவியின் காற்சிலம்பைத் திருடிய தலைமைப்

பொற்கொல்லன் நூறு பொற்கொல்லர்கள் பின்தொடர வந்துகொண்டிருந்தான்.

அவனிடம்  "அரசி அணியும்  தகுதிகொண்ட காற்சிலம்பு ஒன்றுள்ளது. அதற்குரிய

விலைமதிப்பிட உம்மால் இயலுமோ?" என்று கோவலன் வினவினான். உடனே,

பொற்கொல்லன் "விலை மதிப்பிட எனக்குத் தெரியாது. ஆனால் அரச குடும்பத்துக்

குரிய அணிகலன்களை உருவாக்கித்தரும் பணி தெரியும்" என்று விடையளித்தான்.

கோவலன் தான் கொண்டுவந்திருந்த பொதியை அவிழ்த்துச் சித்திர வேலைப்பாடு

மிக்க  கண்ணகி சிலம்பைக் காட்டினான்.  சிலம்பைப் பார்த்துப் பிரமித்துப் போனான்.

சற்றுத் தொலைவில்  தென்பட்ட தன் இல்லத்தைச் சுட்டி அங்குச் சற்று நேரம் தங்கி

யிருக்குமாறு கேட்டுக்கொண்டான். சிலம்பு டன் அரண்மனைக்கு விரைந்த தலைமைப்

பொற்கொல்லன் அரசனிருக்குமிடம் பற்றிக் கேட்டான். அரசன் அந்தப்புரம் நோக்கிச்

செல்வதாக அறிந்து "இதுவே தக்க தருணம்;  தன்னால் திருடப்பட்ட அரசியின்

சிலம்பைத் தான் கண்டுபிடித்து விட்டதாகவும், கள்வனைத் தனது வீட்டில் தங்க

வைத்துள்ளதாகவும்  பொய்யுரைததுத் திருட்டுக் குற்றத்திலிருந்து தப்பிடலாம்"

எனத் தனக்குள் கூறிக்கொண்டு அந்தப்புரம் சென்று வேந்தனின் திருவடிகளில்

விழுந்து வணங்கி  மேற்கண்டவாறு கூறினான்.


ஊழ்வினை உறுத்துவந்து ஊட்ட  வேந்தன்  ஆராய்ந்து பாராமல் பொற்கொல்லன்

கூறியதை நம்பி ஊர்க்காவலரைக் கூவியழைத்து "நீவிர் பொற்கொல்லனுடன்

சென்று  இவன் அடையாளம் காட்டும்  கள்வன்வசம் பாண்டிமா  தேவியின் சிலம்பு

இருக்குமாயின் அக்கள்வனைக் கொன்று அச்சிலம்பை அரண்மனையில் ஒப்படைப்

பீர்" என்று ஆணையிட்டான். பொற்கொல்லன் தான் திட்டமிட்டபடியே அனைத்தும்

நடைபெறுவது குறித்துக்  கழிபேருவகை யடைந்தான். ஊர்க்காவலரை  அழைத்துக்

கொண்டு தன் வீட்டையடைந்த பொற்கொல்லன் கோவலனைச் சுட்டிக் காட்டி

"இவனே கள்வன். இவனைக் கொன்று சிலம்பை மீட்டு அரண்மனையில் ஒப்படைப்

பீர்" என்றான். ஊர்க்காவலர்களில் ஒருவனத் தவிர ஏனையோர் " இவனைப்

பார்த்தால் கள்வனைப் போலத் தோன்றவில்லை; நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவனாக

இருக்கலாம்" என்று கூறிக் கொலை செய்யத் தயங்கினர். பொற்கொல்லன்

மேலும் மேலும் பொய்யுரைகளைக் கூறி அவர்களைக் குழப்பினான். இதற்கிடையில்

ஒரு  கல்லாக் களிமகன் தன் வாளால் கோவலனை வெட்டிவீழ்த்திவிட்டான்.


இந்தச் செய்தி புறஞ்சேரியில் வாழ்ந்த ஆயர்களுக்கு எட்டியது. அவர்கள் மூலமாக

மூதாட்டி மாதரிக்கும் அவள்மகள் ஐயைக்கும்  தெரியவர, ஐயை மூலமாகக் கண்ணகி

யறிந்து நிலைகுலைந்தாள். அதுவரை மென்மையானவளாகவும், அதிர்ந்து பேசத்

தெரியாதவளாகவும் பலபேர் முன்னிலையில்  நிற்கக் கூசியவளாகவும்  கணிக்கப்பட்ட

கண்ணகி  பெருங்குரலெடுத்துப் பேசினாள். "மதுரைவாழ் பெருமக்களே! உங்கள்

பாண்டிய வேந்தன்  ஒரு குற்றமும் புரியாத என் அன்புக் கணவனைக் கள்வன் என்று

குற்றம்  சாற்றிக்  கொலைத் தண்டனையை நிறைவேற்றியுள்ளான். நான் அரண்மனைக்

குச் சென்று பாண்டியனிடம் வாதாடி என் கணவன் கள்வன் அல்லன் என நிரூபிப்பேன்.

இப்பொழுது  உங்கள் முன் நிரூபிக்கிறேன்" எனக் கூறிக் "காய்கதிர்ச்  செல்வனே!

என் கணவன் கள்வனா?" என்று வினவ வானில் ஒரு குரல் கேட்டது. "உன் கணவன்

கள்வன் அல்லன். அவனைக் கள்வன் என்று குற்றம் சாற்றிய இவ்வூரை எரியுண்ணும்"

என்ற செய்தி  அறிவிக்கப்பட்டது.


உடனே கண்ணகி தனது மற்றொரு சிலம்பைக்  கையில் ஏந்தியவாறு மதுரை

அகநகருக்குள் நுழைந்து அரண்மனைக்குள் சென்றாள். வாயிற் காவலனிடம்

"வாயில்காப்பவனே!  அடியோடு அறிவு கெட்டுப்போன, நீதிநெறியுணர்வு நெஞ்சில்

சிறிதேனும் இல்லாத, அரச நீதி தவறிய மன்னவன் அரண்மனை வாயில்காப்போனே!

ஒற்றைச் சிலம்பேந்தியவளாய்க் கணவனைப் பறிகொடுத்துவிட்டுக் கதிகலங்கி நிற்கும்

பெண் அரண்மனை வாயிலில் வந்து நிற்பதாகப் போய்ச்  சொல்" என்று முழங்கினாள்.

கண்ணகி சொன்னதையும் தான் பார்த்ததையும் வாயிற் காவலன் அரசனிடம் சொன்

னான். வேந்தன் கண்ணகியை அழைத்துவரச்  சொன்னான்.


"காவி  உகுநீரும்  கையில்  தனிச்சிலம்பும்

ஆவி  குடிபோன  அவ்வடிவும்----பாவியேன்

காடெல்லாம். சூழ்ந்த  கருங்குழலும். கண்(டு)அஞ்சிக்

கூடலான் கூடாயி னான்."

குவளை மலர் போலும் கண்களில் கண்ணீரும் கையில்  ஒற்றைச் சிலம்பும்  உயிர் பிரிந்து

போனது போன்ற வாடிய மெல்லுடலும்  காடுபோல் மேனியில் புரளும் கரிய கூந்தலும்

உடைய கண்ணகியைக்  காணப் பயந்து கூடல் நகருக்கு அரசன்(பாண்டியன்) உயிரிழந்த

வெறும் கூடாயினான். (கவிக் கூற்று) ஆனால் பாவியாகிய நானிதைக் காண்கிறேனே.


வழக்குரைகாதை நிகழ்வுகளையும் அவற்றைத் தொடர்ந்து  நிறைவேறிய நிகழ்ச்சிகளையும்

அனைவரும் அறிவோம். கோவலன் கள்வன் அல்லன் என்பதனைக் கண்ணகி நிரூபித்தாள்.

தான் தவறு செய்துவிட்டதையறிந்த பாண்டியன் "பொன்செய் கொல்லன் தன் சொற் கேட்ட

யானோ அரசன்? யானே கள்வன்" என்று கூறி உடனே உயிர்துறந்தான்.  அவன் மனைவி

கோப்பெருந்தேவியும் கணவன் மீது விழுந்து உயிர்நீத்தாள். கண்ணகி மதுரையை

எரியுண்ணச் செய்தாள்.(தீத்திறத்தார் பக்கமே சேர்க! எனக் கண்ணகி தீக்கடவுளுக்கு 

ஆணையிட்ட தாகச்  சிலப்பதிகாரம் செப்புகிறது.) மிகுந்த மனத்துயருடன் வைகையில்

தென்கரை வழியாகவே  பதினான்கு நாட்கள் நடந்து  நெடுவேள்  குன்றம் அடைந்த

கண்ணகி மலையுச்சியில் ஏறி வேங்கை மரத்தின் கீழ் நின்றிருந்த பொழுது கோவலன்

வானிலிருந்து தேவர்களுடன் வந்து கண்ணகியை அழைத்துச் சென்றதாக நம்பிக்கை.

மலைவளம் காணவந்த சேரன் செங்குட்டுவனிடம் மலைவாழ் மக்கள் விவரிக்க அவன்

இமயத்தில் கல்லெடுத்து வந்து கண்ணகிக்குக்  கோட்டம் எழுப்பியதாகச் சிலப்பதிகாரம்

இயம்புகிறது. தெய்வமாகிய கண்ணகி "தென்னவன் தீதிலன்; யான் அவன் மகளா

வேன்" என்று கூறியதாக இளங்கோவடிகள் நவில்கின்றார். சேரன் செங்குட்டுவன் "வல்வினை

வளைத்த கோலை மன்னவன்  செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது" என்று

குறிப்பிட்டுள்ளான்.

"மெய்யில்  பொடியும்  விரித்த  கருங்குழலும்

கையில் தனிச்சிலம்பும்  கண்ணீரும்---வையைக்கோன்

கண்டளவே தோற்றான்;அக்  காரிகை தன்  சொல்,செவியில்

உண்டளவே  தோற்றான்  உயிர்".

Friday 6 May 2022

இருசிறை வாரணப் போர்.

 இருசிறை வாரணப் போர்(கோழிப் போர்)


வாரணம் என்ற சொல் யானையையும் கோழியையும் குறிக்கும்.

கோழி என்பதைத் தெளிவாகச் சுட்டிக் காட்டுவதற்காக இரண்டு

சிறகுகளையுடைய வாரணம்(இருசிறை வாரணம்) என்று குறிக்

கப்படுகிறது. கோழிப் போர், கோழிச் சண்டை, சேவல் சண்டை

என்பது பண்டைக் காலந்தொட்டு மக்களிடையே நிலவி வரும்

விளையாட்டு. "உறைக்கிணற்றுப் புறச்சேரி மேழகத்தகரோடு

சிவல் விளையாட" என்ற வரிகள் பட்டினப் பாலையில் பயின்று

வருகின்றன. போரில்லாத அமைதி  தவழும் காலத்தில் மக்கள்

ஆட்டுக் கடா(மேழகத் தகர்), சேவற் கோழி(வாரணம்), கவுதாரி(சிவல்),

காடை(குறும்பூழ்), காளை(ஏறு) முதலான வளர்ப்பு விலங்குகளை

மோதவிட்டு விளையாடி மகிழ்வர். கலிங்கத்துப் பரணியில் முதலாம்

குலோத்துங்கச் சோழ வேந்தன் போரில்லாத அமைதிச் சூழலில்

மற்போர், புலவர்களுக்குள் நிகழும் சொற்போர், சேவற்கோழிப் போர்,

யானைப் போர் முதலியவற்றை நிகழ்த்தச் செய்து கண்டு/கேட்டுக்

களித்ததாகக் கலிங்கத்துப் பரணி தெரிவிக்கிறது.

"வருசெருவொன் றின்மையினால்

மற்போரும் சொற்புலவோர்

வாதப் போரும்

இருசிறைவா ரணப்போரும்

இகல்மதவா ரணப்போரும்

இனைய கண்டே) கண்ணி எண்:276.


கோழிப் போர் நியதிகளை விவரிக்கும் நூல் உள்ளதாகப் பேசப்

படுகிறது. கோழிப் போர் விதிமுறைகளில் வித்தகர்கள் உள்ளனர்.

பண்டைய தமிழகத்தில் கீழைச்சேரி, மேலைச்சேரி போன்ற இடங்

களில் கோழிப் போர் சிறப்பாக நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.

இக் காலத்தில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சிப் பகுதியில் பூலாம்

வலசு கிராமத்திலும், கோவிலூரிலும் சிறப்பாக நிகழ்கிறது.


கோழிப் போரில் இருதரப்பினர் தத்தம் சேவல்களை எதிர்எதிரே

நிறுத்தி மோதவிடுவர். இதனை 'நேர்விடுதல்' என் அழைப்பர்.

இரு சேவல்களும் முரட்டுத்தனமாக மோதிப் போர் உச்சம் பெறும்

நிலையில் கோழிவிடுவோர் தத்தம் சேவல்களை மோதலிலிருந்து

பிரித்து விடுவர். கோழி விடுவோர் தக்க நேரத்தில் சேவல்களைப்

பிரித்துவிடத் தவறினால் சேவல்களின் சண்டை கட்டுப்படுத்த

முடியாத நிலைக்குச் செல்லும். விளைவு, ஏதாவது ஒரு சேவல்

உயிரிழக்கும் வாய்ப்பு உருவாகும். குறுந்தொகைப் பாடல் 305இல்

"உய்த்தனர் விடாஅர்; பிரித்திடை களையார்;

குப்பைக் கோழித் தனிப்போர் போல

விளிவாங்கு விளியின் அல்லது

களைவோர் இலையான் உற்ற நோயே"

தலைவனைப் பிரிந்த தலைவி காம உணர்வின் உச்சத்தில்

புலம்பும் பாடல் இஃது. "கோழிப் போரில் சண்டை உச்சத்தை

எட்டும் வேளையில் பிரித்துவிடுதல் மிகத் தேவையானதாகும்.

குப்பைக் தோழிகளுக்குள் நடக்கும் சண்டையில் பிரித்துவிட யாரும்

இல்லாமல் அவை தமக்குள் மோதி அழிந்துவிடும். குப்பைக் கோழியின்

நிலைமையில் யான் உள்ளேன். அரவணைக்கும் தலைவன் இன்றிக்

காமத்தின் உச்சநிலையில் வாடுகிறேன்" என்பது பொருள். இந்தக்

குறுந்தொகைப் பாடலில் கோழிகளுக்குள் நடைபெறும் சண்டையில்

அவைகளைப் பிரித்து விட்டுக் காக்கவேண்டிய தேவை வலியுறுத்தப்

படுகிறது.


கோழிப் போரில் இரு வகைகள் நிலவுகின்றன. கத்திக்கால் சண்டை

மற்றும் வெற்றுக்கால் சண்டை என்பன அவ்வகைகள். கத்திக்கால்

சண்டைக்கு அசில் வகைச் சேவல்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஏனெனில் இவ்வகைச் சேவல்களுக்கு இயல்பாகவே கால்களுக்கிடையே

முள்போன்ற அமைப்பு உண்டு என்பர். வெற்றுக்கால் சண்டை,

வெற்போர் அல்லது வெப்போர் என்ற பெயரிலும் அழைப்பர்.


கி.பி.ஐந்தாம் நூற்றாண்டில் சேவல் சண்டையில் இறந்த சேவலுக்கு நடுகல்

எழுப்பிப் போற்றியதாக வரலாற்று அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். விழுப்புரம்

அருகிலுள்ள அரசலாபுரம் என்ற ஊரில் சேவல் நடுகல் கிடைத்துள்ளது. அது

முகையூர் என்ற பகுதியில் மேலைச்சேரி சார்பாகப் போட்டியிட்டு மாண்ட

சேவலுக்கு எழுப்பப்பட்டதாகும். கீழைச்சேரிச் சேவல் 'பொற் கொற்றி' என்று

போற்றப்பட்டது.


புறப்பொருள் வெண்பாமாலை: பாடல் எண்: 348 கோழி வென்றி:

"பாய்ந்தும்  எறிந்தும்  படிந்தும்  பலகாலும்

காய்ந்தும் வாய்க்  கொண்டும்  கடுஞ்சேவல்---ஆய்ந்து

நிறங்கண்டு  வித்தகர்  நேர்விட்ட  கோழிப்

புறங்கண்டும்  தான்வருமே  போர்க்கு"

பொருள்:

எழப்  பாய்ந்தும்  காலின் முள்ளை யிட்டிடித்தும் தாழ்ந்தும் பலகாலும் சினங்

காட்டியும் கூவியும் கடிய சேவற்கோழி  போர்புரிந்து, கோழி நூல் வல்லவர்

எதிரில் விட்ட  பகைக்கோழியை வெற்றிகொண்டாலும், பின்னரும் 

போருக்குவரும்.(உ.வே.சாமிநாதையர் உரை).

Saturday 23 April 2022

ஓரில் பிச்சை பெறுக.

 செந்நெல் அமலை  வெண்மை வெள்ளிழுது ஓரில் பிச்சை பெறுக!


ஒரு தலைவன் பொருளீட்டுவதற்காகத் தலைவியைப் பிரிந்து

சென்றான். அப்பொழுது "நீவிர் எப்பொழுது திரும்பி வருவீர்?"

என்று வினவிய தலைவியிடம் வாடை வீசும் பருவத்தில்  திரும்பி

வருவதாகச் சூள்(உறுதி) உரைத்துச் சென்றான். தலைவனைப்

பிரிந்துள்ள தலைவிக்கு ஒவ்வொரு நாள் கழிவதும் ஒரு யுகம் கழிவது

போலத் தோன்றியது. நெடுந்தொலைவு சென்ற தலைவனைப் 

பிரிந்து ஏங்கும் தலைவிக்கு ஒருநாள் கழிவது  ஒரு வாரம் போல

நீண்டு கழியும் என்று வள்ளுவப் பெருமானும்  பாடியிருக்கிறார்.

"ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்

வருநாள்வைத்(து) ஏங்கு பவர்க்கு".(குறள்:1269)

எனவே,  பிரிவுத் துயரைத் தாள இயலாத தலைவி, தலைவன் சென்ற

ஓரிரண்டு நாட்களிலேயே வாடை வீசும் பருவம்(கார்காலம்) எப்பொழுது

வரும் என்று அறிந்து கொள்ளத் துடியாய்த் துடித்தாள். அவளிருக்கும்

பகுதியில் பிச்சை கேட்டுவரும் அறிவரிடம் கேட்கலாம் என்று முடிவெடுத்தாள்.


அறிவர் என்போர் துறவுள்ளமும் முக்காலத்தையும் அறியும் ஆற்றலும் கொண்ட

பெரியோர் எனக் கருதப்பட்டனர். "மறுவில் செய்தி மூவகைக் காலமும்

நெறியின் ஆற்றிய அறிவர்" என்று தொல்காப்பியர் சிறப்பித்துள்ளார்.

பொதுமக்களிடத்தில் அறிவர்க்கு நல்ல செல்வாக்கிருந்தது. அறிவர்கள்

துறவுள்ளம் உடையவராய் இருந்தமையால், துறவியரைப் போலவே பிச்சை

பெற்று வாழ்ந்தனர் என்பது கீழ்வரும் பாடல் மூலம் அறியமுடிகிறது.


தலைவியின் உள்ளக்கிடக்கையை அறிந்த தோழி ஒருநாள் பிச்சை கேட்டு

வந்த அறிவரிடம் தலைவியின் சார்பாகப் பேசினாள்:

"அறிவரே! மின்னலைப் போன்ற இடையையுடைய தலைவி நடுங்குவதற்குக்

காரணமான, இறுதியில் மழையையுடைய வாடைக் காலம் எப்பொழுது வரும்

என்று தெரிவிப்பீர்; அப்பொழுது தலைவியின் தலைவர் வருதல் உறுதி.

எனவே, அந்த நல்ல செய்தியைச் சொல்வீராக. நீர் யாம் கோரியதுபோலத்

தெரிவித்தால் குற்றமற்ற இத்தெருவிலுள்ள நாயில்லாத அகன்ற எம் இல்ல

வாயிலில் செந்நெல் சோற்று உருண்டையும் அதன்மேல் சொரிந்த மிக

வெள்ளிய நெய்யும் கலந்த" ஒரு வீட்டுப் பிச்சையுணவை"ப் பெற்று வயிறு நிரம்ப

உண்டு பசியாறலாம். நீவிர் வேறு இல்லங்களுக்குப் பிச்சை கேட்டு அலையத்

தேவையில்லை. உணவுண்டபின்னர் இக் குளிர் காலத்துக்கேற்ற வெந்நீரைச்

சேமச் செம்பில் பெற்று அருந்தலாம். எனவே வாடைப் பருவம் எப்பொழுது வரும்

என்ற செய்தியைச் சொல்வீராக. பாடல் பின்வருமாறு:

குறுந்தொகை:பாடல் எண்:277; புலவர்: ஓரில் பிச்சையார்.

புலவரின் உண்மைப் பெயர் கிடைக்கவில்லை. எனவே, இந்தப் பாடலில் பயின்று வரும்

"ஓரில் பிச்சை" என்னும் சொற்றொடரால் அவர் குறிப்பிடப்படுதல் மரபு.

"ஆசில்  தெருவில், நாயில்  வியன்கடைச்

செந்நெல்  அமலை  வெண்மை  வெள்ளிஇழு(து)

ஓரில்  பிச்சை  ஆர  மாந்தி

அற்சிர  வெய்ய  வெப்பத்  தண்ணீர்

சேமச்  செப்பில்  பெறீஇயரோ  நீயே

மின்னிடை  நடுங்கும்  கடைப்பெயல்  வாடை

எக்கால்  வருவ(து)  என்றி

அக்கால்  வருவரெம்  காத  லோரே."


அக்காலக் கட்டத்தில் அறிவர்களுக்குச் சமூகத்தில்  அளவுகடந்த  மதிப்பும் செல்

வாக்கும் போற்றுதலும் பேணுதலும் நிலவின. துறவியரைப் போன்று வாழ்ந்த

காரணத்தால் பொதுமக்களிடம் பிச்சைபெற்றுண்டு வாழ்க்கை நடத்தினர்.

(சமண, புத்தசமயத் துறவிகளும் பிச்சை பெற்று வாழ்வு நடத்தினர்).

ஆனால், அறிவர்கள் குறிப்பிட்ட சமயத்தைச் சேர்ந்தவர் அல்லர். பொதுவான

நன்னெறிகளை மக்களிடம் எடுத்துச்  சொல்லி வந்தனர். காதலர்களுக்குள்

நிகழும் ஊடல் தணிப்பதற்குப் பன்னிரண்டு வகை மனிதர்கள் உதவலாம் எனத்

தொல்காப்பியர் பட்டியலிடும் மனிதர்களுள் அறிவர்கள் ஒரு வகையினர்.

இவர்களை "ஊடல் தணிக்கும் வாயில்கள்" என்று தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார்.

இவர்கள் வீடு வீடாகச் சென்று பிச்சை பெற்று வாழ்ந்துவரும் வழக்கம் உடையவர்கள்.

இந்தப் பாடலில் குறிப்பிடப்படும் தலைவிக்காகத் தம் வழக்கத்தை மாற்றி

"ஒருவீட்டுப் பிச்சையுணவு" மட்டும் போதும் என்று நிறுத்திக்கொண்டாரா? என்பது

தெரியவில்லை. இல்லை, வழக்கம்போல் பலவீடுகளுக்கும் சென்று கொஞ்சம் கொஞ்சம்

பிச்சை பெற்று உண்டாரா?  ஒன்று மட்டும் நிச்சயம். தலைவி கோரியது போல் வாடைப்

பருவம் எப்பொழுது வரும் என்பதைத் தெரிவித்திருப்பார்.

அருஞ்சொற் பொருள்:

அமலை=சோற்றுத் திரளை; இழுது=வெண்ணெய், நெய்.

அற்சிரம்=முன்பனிக் காலம்.

Saturday 9 April 2022

காதலுக்கு ஏற்படும் தடைகள்.

 காதலுக்கு ஏற்படும் தடைகள்.


சங்ககாலக் குடும்ப வாழ்வு களவியல், கற்பியல் என்ற

இரு பெரும் பிரிவுகளுக்குள்  அடைக்கப்பட்டிருந்தது.

களவியல் என்ற பெயரைக் கேட்டவுடன் சிலர் இதனைத்

தகாத செயலோ? என்று எண்ணி மனம் குழம்புகின்றனர்.

ஆடவன் ஒருவனும் பெண் ஒருத்தியும் ஒருவர் பால் மற்றவர்

இயற்கையால் ஈர்க்கப்பட்டு ஒருவருக்கொருவர் அன்பு செலுத்திப்

பிறர் அறியாமல் அடிக்கடி சந்தித்துப் பழகுதல் களவியல். அன்பு

ஒன்றே இவ்வாழ்வை வழிநடத்தும். நீண்டகாலம் களவியலை நடத்தும்

மரபில்லை. இரண்டு திங்களுக்குள் தங்களின் களவு வாழ்வைத்

தாய், தந்தை, உற்றார், உறவினர்க்குத் தெரியப்படுத்தி அனைவரும்

அறியக் காதலர்கள் இருவரும் வரைவு(திருமணம்) புரிந்து கொள்ளுதல்

வேண்டும். திருமணம் என்ற சடங்குக்குப் பிறகு நடத்தப்படும் வாழ்வு

கற்பியல் ஆகும். பெரியோர்கள் வகுத்த நெறிகளைக் கற்றுக்கொண்டு

அதன்படி வாழ்வது கற்பியல்  நெறியாகும். மக்கட்பேறு அடைதல் போன்ற

இன்றியமையாத நிகழ்வுகளெல்லாம் கற்பியலில்தான் நடைபெறும்.

மிகவும் கட்டுக்கோப்பாக நடைபெற்ற குடும்பவாழ்க்கையே களவியல்

மற்றும் கற்பியல் நெறிகளாகும். விதவிதமான கற்பனைகளை உருவாக்கி

இலக்கியத்தை நடத்திச் செல்லக் களவியல் பகுதி பயன்படும். எனவே,

சங்க நூல்களில் களவியல் நிகழ்வுகள் பெரும்பான்மையாகச் சொல்லப்

பட்டிருக்கும். 


இனி, அகநானூற்றில் பயிலும் ஒரு சுவையான பாடலை நோக்குவோம்.

பாடல் எண்:122; திணை: குறிஞ்சி; புலவர்: பரணர்.

தலைவனும் தலைவியும் இரவுக்குறியில் சந்தித்துக் கொள்கின்றனர்.

இரவுக்குறியில் சந்தித்துக் கொள்வதில் தலைவிக்கு அதிகத் தொல்லை

நேராது. ஏனென்றால் இரவுக்குறி நிகழ்விடம் தலைவியின் வீட்டுக்கு

மிக மிக அண்மையில்  அமைந்திருத்தல் மரபாகும். ஆனால், தலைவனோ 

அவன் வாழ்விடத்திலிருந்து நள்ளிரவில் புறப்பட்டு வழிநெடுகிலும் எதிர்ப்படும்

இடையூறுகளைக் கடந்துவரல்வேண்டும். எனவே, தலைவன் வருதற்குக்

காலதாமதம் ஏற்படும். அன்றும், தலைவி தன் தோழியோடு வந்து தலைவனது

வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றாள். இருவரும் உரையாடிக் கொண்

டிருக்கும்போது தலைவன் வந்துவிடுகின்றான். தலைவியும், தோழியும்  இருக்கும்

இடம் தலைவி வீட்டுக் கொல்லைப்புறமாகும். தலைவன் சிறைப்புறத்தில்(இரவுக்குறி

நிகழ்விடத்துக்கு அப்பால், அதே நேரம் தலைவியின் பேச்சைக் கேட்கும் தொலைவில்)

இருப்பதைத் தோழி தெரிவித்ததும் தலைவி கூறுகின்றாள்:


இந்த ஊரில் காதலர்கள் சந்தித்துக் கொள்வதற்கு எண்ணிலாத்  தடைகள் ஏற்படுகின்றன.

மிக்க தேன்(கள் என்றும் சொல்லலாம்)  உண்டு களிக்கும் மக்கள் நிறைந்துள்ள ஆரவாரம்

மிக்க இந்தப் பழமையான ஊர், விழா ஏதும் நடைபெறாத போதிலும் தூங்காமல் விழித்துக்

கொண்டுள்ளது. வளமிக்க கடை வீதியும் பிற வீதிகளும் ஒருவழியாக உறங்கினாலும்,

கண்டிப்பு மிக்க அன்னை உறங்காமல் விழித்திருக்கிறாள். பிடித்துக் கொள்ளும் கூற்றைப்

போலத் தப்புவதற்கு அரிதாகிய சிறைக்காவலையுடைய அன்னை உறக்கம் கொண்டாலும்,

உறங்காத கண்ணராம் ஊர்க்காவலர்  விரைந்து வருவர்.


விளங்குகின்ற வேலைக் கைக்கொண்ட அவ்விளைஞர் தூங்கினாலும்,  கூரிய பற்களையும்

 வலம் சுரிந்த வாலினையும் உடைய நாய் உற்சாகமாகக் குரைக்கும்.  மிகுந்த குரைப்பொலி

எழுப்பும் நாய் ஒருவேளை மேற்கொண்டு குரைக்காமல் துஞ்சினாலும்,  வானத்தில் உலவும்

நிலவு பகல் போல ஒளியைப் பாய்ச்சிக் காதலர்கள் பிறர் அறியாமல் சந்திக்க இடையூறு

புரிகின்றது. நிலவு மேற்கு மலைப் பக்கமாகச் சென்று மறைந்து அதனால் அடர்இருள்

சூழுமானால், வீட்டெலியை உண்பதற்காகத் தேடும்  வலிய வாயை உடைய கூகைச் சேவல்

பேய் அலையும் இந்த நடுயாமத்தில்  உள்ளம் நடுங்கும் படியாகக் குழறும். மரப்பொந்தில்

வாழும் கூகைச்சேவல் மேன்மேலும் குழறாமல் உறங்கினாலும் ,வீட்டில் வளர்க்கப்படும்

கோழி பொழுது விடிந்ததை அறிவிக்கக் கூவும்.


இவையெல்லாம் ஒருவழியாக உறங்கிய பொழுதில், ஒருநாளும் என்னிடத்திலிருந்து 

பிரிந்து நில்லாத நெஞ்சினரான நம் தலைவர்  வருகை புரிய மாட்டார். அப்பப்பா!

களவு வாழ்வில் தலைவனும் தலைவியும் சந்திப்பதற்கு இத்தனை தடைகளா?

அதனால், நல்ல குதிரைகளையும், காவல் வேலியையும் உடைய தித்தன் என்ற

வேந்தனது உறையூரைச் சூழந்திருக்கும்  கல் முதிர்ந்த புறங்காடு போல, நம்

களவுக் காதல் பல இடையூறுகளைச் சந்திக்க நேர்ந்துள்ளது. இவ்வாறு  தலைவன்

சிறைப்புறத்தானாக, தலைவியும் தோழியும் உரையாடிக் கொண்டிருக்கின்றனர்.

களவுக் காதலில் எதிர்நோக்கும் தடைகளைத் தவிர்ப்பதற்காகத் தலைவனை

வரைவு கடாவுமாறு(திருமணம் புரிந்து கொள்ளுமாறு) தூண்டுவதற்காகத்

தலைவியும் தோழியும் உரையாடியிருக்கலாம். அல்லது அங்கலாய்ப்பான

பேச்சாக இருக்கலாம். இனி பாடலைப் பார்ப்போம்:


"இரும்பிழி   மகாஅர், இவ்   அழுங்கல்   மூதூர்

விழவின்(று)   ஆயினும்   துஞ்சா   தாகும்;

மல்லல்   ஆவணம்   மறுகுடன்   மடியின்

வல்லுரைக்   கடுஞ்சொல்   அன்னை  துஞ்சாள்;

பிணிகோள்   அருஞ்சிறை   அன்னை   துஞ்சின்

துஞ்சாக்  கண்ணர்   காவலர்  கடுகுவர்;

இலங்குவேல்  இளையர்   துஞ்சின்   வைஎயிற்று

வலம்சுரித்   தோகை   ஞாளி   மகிழும்;

அரவவாய்   ஞமலி   மகிழாது   மடியின்

பகலுரு   உறழ,நில   வுக்கான்று   விசும்பின்


அகல்வாய்   மண்டிலம்   நின்றுவிரி  யும்மே;

திங்கள்   கல்சேர்வு   கனையிருள்   மடியின்,

இல்லெலி   வல்சி   வல்வாய்க்  கூகை

கழுது, வழங்   கியாமத்(து)   அழிதகக்   குழறும்;

வளைக்கண்   சேவல்   வாளாது   மடியின்

மனைச்செறி   கோழி   மாண்குரல்   இயம்பும்;

எல்லாம்  மடிந்த  காலை   ஒருநாள்

நில்லாநெஞ்   சத்(து)அவர்   வாரலரே;   அதனால்

அரிபெய்  புட்டில்   ஆர்ப்பப் பரிசிறந்(து)

ஆதி  போகிய  பாய்பரி   நன்மா


நொச்சி   வேலித்   தித்தன்   உறந்தைக்

கல்முதிர்   புறங்காட்(டு)   அன்ன

பல்முட்(டு)   இன்றால்   தோழி!நம்   களவே.


அருஞ்சொற் பொருள்:

இரும்பிழி=மிக்க தேன்(கள்); அழுங்கல்=ஆரவாரம்; மல்லல்=வளமை;

ஆவணம்= கடைத்தெரு; மறுகு=குறுந்தெரு; பிணிகோள்= பிணித்துக்

கொள்ளும்; கடுகுவர்=விரைவர்;  சுரிந்த=சுருண்ட; தோகை= வால்;

ஞாளி=நாய்; அரவம்=ஒலி; பகலுறு உறழ=பகலைப் போன்ற; கனை

இருள்=அடர் இருள்; கழுது=பேய்; அழிதக=அழியும் படியாக; அரி=பரல்;

புட்டில்=கெச்சை; ஆதி= நேரான ஓட்டம்; நொச்சி=காவல்; முட்டு

இன்றால்= தடை உள்ளது; வல்சி=உணவு.


திருவிழா ஏதும் நடைபெறாத போதிலும் ஊர்மக்கள் உறங்கவில்லை;

ஒருவழியாக அவர்கள் தூங்கினாலும் கண்டிப்பான அன்னை துஞ்ச

வில்லை; ஒருவழியாக அன்னை உறங்கினாலும் இரவுக் காவலர்

உறங்காமல் திரிகின்றனர்; சோர்வடைந்து அவர்கள் துஞ்சினாலும்

நாய்கள் உற்சாகமாகக் குரைக்கின்றன; நாய்கள் ஓய்ந்து படுத்தாலும்

வீட்டெலியைத் தேடி உண்ணும் கோட்டான் குழறுகின்றது; மரப்

பொந்துக் கோட்டான் அயர்ந்து போய்த் தூங்கினாலும் வீட்டில்

வளர்க்கப்படும் கோழி கொக்கரக்கோ எனக் கூவுகிறது. அப்பாடா!

ஊரே அடங்கிவிட்டது என்று நினைத்தால் தலைவர் வரவில்லை.

எத்தனை, எத்தனை தடைகள் சேர்கின்றன என்று தலைவி அங்க

லாய்ப்பது இலக்கியச் சுவையைக் கூட்டுகிறது.


பார்வை:

அகநானூறு(மணிமிடைப் பவளம்) மூலமும் உரையும் எழுதியவர்

புலியூர்க் கேசிகனார்.

Friday 25 March 2022

கண்டசுத்தி(கண்டசித்தி)

 கண்டசுத்தி(கண்டசித்தி).


கண்டசுத்தி என்பது ஒருவர் மனத்தில் எண்ணியதை, மற்றவர்

தம் மனத்தால் கண்டுணர்ந்து அதைப் பற்றிப் பாடுவதாகும்.

இதனைக் 'கண்டசித்தி' என்ற பெயராலும் குறிப்பிடுவர். இச்

செயல் மிகவும் அரிதான ஒன்றாகும். 'அபிதான சிந்தாமணி'

என்னும் கலைக்களஞ்சியத்தில் அந்தகக்கவி வீரராகவ முதலியார்

கண்டசுத்தி பாடுவதில் வல்லுநர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


சங்ககாலத்தில் பாண்டியமன்னன் ஒருவனுக்குப் பெண்களின்

கூந்தலுக்கு இயற்கைமணம்  உண்டா? இல்லையா? என்ற ஐயம்

மனத்தில் உதித்ததாகவும், இந்த ஐயத்துக்கு விடையளிக்கும் கவிதை

பாடும் புலவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகத் தரப்படும்

என்று அறிவித்ததாகவும், இறையனார் 'கொங்குதேர் வாழ்க்கை

அஞ்சிறைத் தும்பி' என்ற கவிதை பாடியதாகவும்  செவிவழிக் கதை

வலம் வருகிறதன்றோ!. இதுபோல், பதினேழாம் நூற்றாண்டில் ஈழ

நாட்டு யாழ்ப்பாணத்தை ஆண்ட பரராசசிங்கம் என்னும் மன்னன்

ஒருநாள் அருகிலுள்ள சோலைக்குச் சென்றிருந்தார். சோலை, நறுமணப்

பூக்களையுடைய செடிகளோடும், கண்கவர் கனிகளையுடைய மரங்களோடும்

அழகாகத் தோற்றமளித்தது. 


ஒருமரத்தில் பறவைக் கூடொன்று தென்பட்டது. அதில் தாய்க்கிளி

யொன்றும்  இரண்டு குஞ்சுகளும் வசித்தன. இவை மூன்றும் கூட்டை விட்டு

வெளியே வருவதும் அருகிலுள்ள வாழைமரத்தைப் பார்த்து அச்சத்துடன்

கூட்டுக்குள் நுழைந்து முடங்கிக் கொள்வதும், சிறிது நேரம் கழிந்தவுடன்

இதுபோலவே வெளியே வந்து பழையபடி கூட்டுக்குள் நுழைந்து பதுங்குவதும்

ஆகிய செயல்களைச் செய்தன. மன்னர் பரராசசிங்கம் இந்தக் காட்சியைக்கண்டு

திகைத்துப் போனார். கூடிருக்கும் மரத்துக்கு அருகில் என்ன உள்ளது? எதனைப்

பார்த்துத் தாய்க்கிளியும் குஞ்சுகளும் அஞ்சிக் கூட்டுக்குள் திரும்ப நுழைகின்றன?

என்று அறிய ஆவல்கொண்டார். கூடிருந்த மரத்துக் கருகில் சென்று பார்த்தார்.

வாழைமரம் ஒன்று நின்றிருந்தது. அதிலிருந்து ஒரு பசுங்குருத்து வெளிவந்து

நீட்டிக் கொண்டிருந்தது. இம்  மரத்தைப் பார்த்து ஏன் கிளிகள் அச்சமடைகின்றன?

என்று புரியாமல் அரண்மனைக்குத் திரும்பிவிட்டார். மனத்துக்குள் சோலையில்

கண்ட காட்சியே திரும்பத் திரும்பத் தோன்றி மறைந்தது. மறுநாள் அவைப் புலவர்களிடம்

இதைப் பற்றிக் கேட்டுப் பார்க்கலாம் என்று முடிவுசெய்து உறங்கிவிட்டார்.


மறுநாள் புலவரவை கூடியதும் அங்கிருந்த புலவர்களிடம் 'நான் மனத்தில் எண்ணியதை

உங்களில் எவரேனும் உம் மனத்தால் கண்டு கவிதை பாட இயலுமா?' என்று வினவினார்.

புலவர்கள் 'ஐயா!  இக்கலை கண்டசுத்தி என்னும் பெயருடையது. இதில் தேர்ந்தவர் நம்

ஈழநாட்டில் எவரும் இலர். தாய்த்தமிழ் நாட்டில் அந்தகக்கவி வீரராகவ முதலியார் என்னும்

புலவர் இதில் வல்லுநராகத் திகழ்வதாகக் கேள்விப்படுகிறோம். அவரை வரவழைத்தால்

தங்கள் எண்ணம் ஈடேறும்' என்று விடையிறுத்தனர்.


உடனே வீரராகவருக்குத்  தூதுவன்மூலம் செய்தி அனுப்பப்பட்டது. இருபது நாட்களுக்குள்

புலவர் யாழ்ப்பாணத்துக்கு வந்து சேர்ந்தார். ஒருநாள் ஓய்வுக்குப் பிறகு பரராசசிங்க

மன்னரைச் சந்திக்க அரண்மனைக்குள் நுழைந்தார். மன்னர் புலவரை முறையாக

வரவேற்று நல்லதோர் ஆசனத்தில் அமரச் செய்தார். மன்னரும் புலவரும் ஒருவருக்

கொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர். பிற்பாடு மன்னர் தாம் சோலையில் கண்ட

காட்சியொன்று மனத்தை நெருடிக்கொண்டிருப்பதாகக் கூறினார். அதனைக் கண்டசுத்தி 

மூலம் கவிதை பாடி வெளிப்படுத்த உம்மால் இயலும் என்று பல புலவர்கள் கூறுகின்றனர்.

நீவிர் அவ்வாறு பாடி எம்மை மகிழ்வித்தல் வேண்டும் என்றார்.


புலவர் சிறிது நேரம் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தார். பின்னர் பாடத் தொடங்கினார்:

ஓங்கிய பெரும் மத்தகத்தையுடைய யானையைச் செலுத்தித் திக்குவிசயம் செலுத்தி வந்து

செங்கோல் ஆட்சி நடத்துகின்ற எங்கள் அரசரே! காட்டில்(சோலையில்)உள்ள வாழை மரத்

தில் அண்மையில் வெளிவந்த பசுங்குருத்து காற்றினால் அலைப்புண்டு அசைவதைக் 

கண்ட அருகிலிருக்கும் மரத்தில் கூடுகட்டித் தங்கியுள்ள அழகிய சொற்களை உதிர்க்கும்

கிளிகள் நச்சுப் பாம்பு தான் அசைகிறது என்று தவறாக எண்ணி அஞ்சிக் கூட்டுக்குள்

சென்று முடங்குவதும் பின்னர் நச்சுப் பாம்பு அவ்விடத்தைவிட்டு விலகியிருக்கும் என்று

எண்ணி வெளியே வருவதும் பசுங்குருத்து அசைவதைக் கண்டஞ்சி மீண்டும் கூட்டுக்குள்

செல்வதும் ஆகிய மடமைமிக்க செயல்களைச் செய்யும் சோலைகளையுடைய நாட்டுக்குரிய

களங்கமில்லாத(அகளங்கா) வேந்தனே! நீ வீதியுலா வரும்போது நின்னைக் கண்டு தன்

மனத்தைப் பறிகொடுத்த மடந்தை ஒருதலைக் காதலால் துன்புறுகின்றாள். ஊழிக்காலத்தில்

கடலிலிருந்து கிளம்பும் வடவைக்கனல் என்னும் தீப்பிழம்பைப் பிழிந்து துருத்தி வைத்து 

ஊதி மீண்டும் காய்ச்சிக் குழம்பாகச் செய்து அதனைத் தெளித்தால் நறுமணப் புழுகு

என்று எண்ணி அம்மடந்தை  பொறுத்துக் கொள்வாளோ? பொறுக்க மாட்டாள்.(வடவைக்

கனல் கயவரைப் பாடிப் பரிசேதும் கிட்டாமல் வெறுங்கையராகத் திரும்பிவரும் புலவர்

மனம் போல் சுடும் தன்மையுடையது என்கின்றார் புலவர்). ஆக, இந்தப் பாடல் மூலமாக

மன்னன் சோலையில் கண்ட காட்சியும் அதற்குரிய காரணமும் வெளிப்படுத்தப் பட்டன.


பாடல் பின்வருமாறு:

வடவைக் கனலைப் பிழிந்து கொண்டு மற்றும் ஒருகால் வடித்தெடுத்து

 வாடைத் துருத்தி வைத்தூதி மறுகக் காய்ச்சிக் குழம்புசெய்து

புடவிக் கயவர் தமைப் பாடிப் பரிசு பெறாமல் திரும்பிவரும்

 புலவர் மனம்போற் சுடுநெருப்பைப் புழுகென் றிறைத்தாற் பொறுப்பாளோ?

அடவிக் கதலிப் பசுங்குருத்தை நச்சுக் குழலென் றஞ்சியஞ்சி

 அஞ்சொற் கிளிகள் பஞ்சரம்விட்(டு) அகலா நிற்கும் அகளங்கா!

திடமுக் கடவா ரணமுகைத்த தேவ தேவ சிங்கமே!

 திக்கு விசயம் செலுத்திவரும் செங்கோல் நடாத்தும் எங்கோனே!

பஞ்சரம்=பறவைக்கூடு; வாரணம்=யானை; புடவி=பூமி.

கண்ட சுத்தி மனத்தையறியும் கலைபோல் தோன்றுகிறது. தற்காலத்தில் இவ்விதத்

திறமையுள்ளவர் எவரேனும் இருக்கின்றாரா? எனத் தெரியவில்லை.

Saturday 12 March 2022

பாயாத வேங்கை; பூவாத புண்டரிகம்.

 பாயாத வேங்கை; பூவாத புண்டரிகம்.


வேங்கை என்பது புலியையும், வேங்கை மரத்தையும் குறிக்கும் சொல்லாகும்.

புண்டரிகம் என்பது தாமரையையும், புலியையும் குறிக்கும் சொல்லாகும்.

எனவே, வேங்கைமரத்தைக் குறிக்க அடைமொழி சேர்த்துப் 'பாயாத வேங்கை'

என்ற சொற்றொடர் பயன்படுத்தப்படுகின்றது.  அதுபோலவே, புலியைக் குறிக்கப்

'பூவாத புண்டரிகம்' என்ற சொற்றொடர் பயன்படுத்தப்படுகின்றது. இனி, இவை

பயன்படுத்தப்பட்ட பாடலைப் பார்ப்போம்:(தண்டியலங்கார மேற்கோள் செய்யுள்)

"பாயாத வேங்கை மலரப் படுமதமா

பூவாத புண்டரிகம் என்றஞ்சி---மேவும்

பிடிதழுவி மாறதிருங் கானிற் பிழையால்

வடிதவழும் வேலோய் வரவு".

பொருள்:

கூர்மைபெற்ற வேலை ஏந்தியவனே! பாயாத வேங்கை, அதாவது, வேங்கை மரமானது

மலர்ந்துள்ளது. அதனைப் பூவாத புண்டரிகம், அதாவது புலியென்று ,தவறாக நினைத்து

வெருவிய  பெண் யானைகள் பலம்பொருந்திய ஆண்யானைகளின் பக்கம் பாதுகாப்பைத்

தேடிப் புகலடையும். தம் அருகில் அடைக்கலம் தேடி வந்த பிடி யானைகளைக் களிற்று

யானைகள் தழுவிக்கொண்டு புலிகளின் உறுமலுக்கு ஈடுகொடுக்கும் வண்ணம் பிளிறும்.

இத்தன்மை யுடைய கானகத்தில் நீ இடையாமத்தில்(இரவு வேளையில்) தனித்து வருதல்

தவறாகும். இக் கூற்று தலைவனிடம் தலைவி கூறியதாகும். யானைகளின் உளவியல்

மிக மிக நுட்பமானது. பருத்த உடலையும் கூர்மையான கொம்பையும் கொண்டிருந்தாலும்

பிடி யானை புலியைக் கண்டு அச்சம் கொள்ளும். களிற்று யானை புலியைத் துணிவுடன்

எதிர்கொள்ளும். எனவேதான் திருவள்ளுவர் தம் திருக்குறளில் கீழ்க்கண்டவாறு பாடினார்.

"பரியது கூர்ங்கோட்ட(து) ஆயினும் யானை

வெரூஉம் புலிதாக் குறின்".


காதலின் போது காதலர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சந்தித்துக் கொள்வது சங்ககால

வழக்கம்.  பகலில் சந்தித்துக் கொண்டால் அச்சந்திப்பு பகற்குறி எனப்படும். இரவில்

சந்தித்துக் கொண்டால் அச்சந்திப்பு இரவுக்குறி எனப்படும். குறிஞ்சி நிலப்பகுதியில்

பகற்குறியில் சிக்கல் ஏதும் உருவாகாது. ஆனால் இரவுக்குறியில் தலைவன் தலைவி

யைச் சந்திக்க வரும்போது கொடிய புலி, யானை, கரடி போன்ற விலங்குகளாலும், 

பாம்பு போன்ற ஊர்வனவற்றாலும், பேய், காற்று, கருப்பு போன்றவற்றாலும், எதிர்பாராத

மழை, சூறாவளி போன்றவற்றாலும்  இடர் நிகழ வாய்ப்புண்டு. எனவே, தலைவி இது

குறித்துத் தன் கவலையைத் தலைவனிடம் எடுத்துரைக்கின்றாள். ஏற்கெனவே பகற்

குறிக்கு வாய்ப்பில்லாமல் இரவுக்குறியை நாடியுள்ளனர். குறிஞ்சி நிலப்பகுதியில்

தினை கதிரறுத்த பிற்பாடு தினைப்புனம் காக்கும் வேலை தலைவிக்கு வாராது.

அன்னை பாதுகாப்பாக இற்செறித்துவிடுவது வழக்கம்( தலைவிக்கு நேரும் வீட்டுச்

சிறை அனுபவம்). இற்செறிப்புக் காரணமாகப் பகற்குறி வாய்ப்பு பறிபோகிறது. இரவுக்

குறியில் தலைவனுக்குப் பலவிதமான அச்சுறுத்தல்கள் நேரிடும். பிறகு, காதலர்கள்

எவ்வாறு சந்தித்துக் கொள்வது? இதற்குத் தீர்வு வரைவு கடாவுதல் ஒன்றே. அதாவது,

தலைவன் தன் தமரோடு(சுற்றத்தாரோடு) தலைவியின் வீட்டுக்குச் சென்று அவளின்

தந்தையிடம் மகட்கொடை(பெண் கேட்டல்) வேண்டித் திருமணம் புரிதல் வேண்டும்.

ஏனென்றால் களவு வாழ்வை இரு திங்களுக்குமேல் அனுமதித்தல் மரபில்லை.


இதே கருத்தை எடுத்தியம்பும் குறுந்தொகை 141ஆம் பாடலை நோக்குவோம்:

"வளைவாய்ச் சிறுகிளி விளைதினைக் கடீஇயர்

செல்கென் றோளே யன்னை யெனநீ

சொல்லின் எவனோ? தோழி! கொல்லை

நெடுங்கை வன்மான் கடும்பகை உழந்த

குறுங்கை யிரும்புலிக் கொலைவல் ஏற்றை

பைங்கட் செந்நாய் படுபதம் பார்க்கும்

ஆரிருள் நடுநாள் வருதி

சாரல் நாட! வாரலோ வெனவே"

பொருள்:

இரவுக் குறியில் தலைவியைச் சந்திக்கும் தலைவன் வழக்கம்போல் அன்றும்

வந்துள்ளான். அவன்வரும் வழியில் அவன் எதிர்கொள்ள இருக்கும் இடர்களை

எண்ணி அஞ்சிய தலைவி தோழியிடம் " நீ தலைவனிடம் இனி இரவில் வாராதே;

எம் தாய் எம்மைத் தினைப்புனத்தைக் காவல் காக்கும்படி ஆணையிட்டனள்.

ஆதலின் பகற்குறியில் தினைப்புனத்திற்கு வருவீரேல் தலைவியைச் சந்திக்க

வாய்ப்புள்ளது என்று கூறு. அதனால் என்ன குற்றம் உருவாகும்?" என்று நவின்றாள்.

விளக்கவுரை:

தோழி! மலைப்பக்கத்தை யுடைய நாட! கொல்லையில் உள்ள நீண்ட தும்பிக்கையை

யுடைய யானையினது கடுமையான பகையினால்  வருந்திய, குறுங்காலையுடைய,

கொலைசெய்வதில் தேர்ச்சி பெற்ற பெரிய ஆண்புலியானது தன் இரைக்காக ஏதாவது

விலங்கு(பசிய கண்ணையுடைய செந்நாய் போன்றவை) அந்த வழியில் வருகின்றதா?

என்று  கண்ணை விழித்துப் பார்த்திருக்கும். இப்படிப்பட்ட ஆபத்து நிறைந்த வழியில்

இருள் சூழ்ந்த நள்ளிரவில் வருகின்றாய். அங்ஙனம் வருதல் எனக்கு அச்சத்தையும்

மனவுளைச்சலையும்  கொடுக்கிறது. அவ்வாறு வாராதே. வளைந்த அலகையுடைய

சிறு கிளிகள் விளைந்த தினைப் பயிரைக் கொத்திச் சேதப்படுத்துகின்றன. அக்

கிளிகள் அவ்வாறு தினைப் பயிருக்கு ஊறு விளைவிக்கா வண்ணம்  காவல் புரிய

அன்னை ஆணையிட்டனள். தலைவ! நீ பகற்குறியில் அங்கு வந்து சந்திப்பாயாக!

என்று தலைவனிடம் கூறுவதில் என்ன

குற்றம் ஏற்படும்? என்றாள் தலைவி.

புலவர்: மதுரைப் பெருங் கொல்லனார்.

அருஞ்சொற் பொருள்:

நெடுங்கை வன்மான்=நீண்ட துதிக்கையுடைய யானை;

குறுங்கை யிரும்புலி=குறுகிய முன்னங்காலையுடைய புலி.

ஏற்றை=ஆண்புலி; நடுநாள்=நள்ளிரவு.

Thursday 17 February 2022

ஏகம்பவாணனும் மூவேந்தரும்.

 ஏகம்ப வாணனும் முடியுடை மூவேந்தரும்.


தென்பெண்ணை யாற்றங் கரையில், திருக்கோவலூர்ப் பகுதியில்

ஆற்றூர் என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு குறுநில மன்னனாக

ஆட்சி புரிந்தவன்  ஏகம்பவாணன். ஆற்றூரை 'ஆறை' என்று அழைப்பது

இலக்கிய வழக்கம். ஏகம்பவாணன் ஆட்சிக்காலத்தில்  முடியுடை மூவேந்தராகிய

சேர, சோழ மற்றும் பாண்டியர்கள் செல்வாக்கிழந்து பெயரளவில் தம் ஆட்சிப்

பகுதிகளை ஆண்டுகொண்டிருந்தனர். ஏகம்பவாணன் ஆட்சிக் காலத்தில்

பாண்டிய நாட்டை சிறீவல்லப மாறன் ஆட்சி புரிந்து வந்தான். ஏகம்பவாணன்--

சிறீவல்லபமாறன் ஆட்சிக்காலம் பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி

யாகும். (மண்ணின் மைந்தர்களான சேர, சோழ மற்றும் பாண்டியர்களின் அதிகாரம்

தாழ்ந்தும் விசய நகர மற்றும் நாயக்க மன்னர்களின் அதிகாரம் ஓங்கியும் இருந்த

காலக்கட்டம் அது.)


ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு மூவேந்தரும் திருக்கோவலூரில் சந்தித்துக்

கொண்டனர். மரியாதை நிமித்தமாக ஏகம்பவாணனை நேரில் சந்திக்க அவன்

அரண்மனைக்குச் சென்றனர்.ஏகம்பவாணன் அங்கே காணப்படாமையால் அவன்

மனைவியிடம் இதுபற்றி விசாரித்தனர். அப்பெண்மணி "வாணர் ஐயா கழனிக்குச்

சென்றிருக்கிறார்" என்று தகவல் தெரிவித்தாள். மூவேந்தரும் தாம் முடியுடை வேந்தர்

என்ற தோரணையில் " ஏகம்ப வாணர் முடி(நாற்று)நடப் போயிருக்கிறாரோ?" என்று

ஏளனமாக வினவியுள்ளனர். ஏகம்பவாணன் மனைவி கல்வியில் தேர்ந்தவள்.

அவள் உடனே ஒரு பாடல் மூலம் விடையிறுத்தாள்:

"சேனை  தழையாக்கிச்  செங்குருதி   நீர்தேக்கி

யானை  மிதித்த  அடிச்சேற்றில்---மானபிரான்

மாவேந்தன் ஏகம்ப வாணன் பறித்துநட்டான்

மூவேந்தர் தங்கள் முடி."

மூவேந்தருடைய படைவீரர்களைக் கொன்று குவித்து அவர் உடல்களின் தசைகளைத்

தழையாக்கி அவ்வீரர்கள் சிந்திய இரத்தமாகிய நீரைத் தேக்கி  அக்களத்தில்  யானை

களைக் கொண்டு உழச்செய்து ஏகம்பவாணனாகிய பெருவேந்தன் சேர,, சோழ, மற்றும்

பாண்டிய மன்னரது மகுடங்களைப் பறித்து நட்டான் என்று முகத்தில் அறைந்தது போல்

பதில் கூறியதால் மூவேந்தரும் வாயடைத்து ஒன்றும் பேசாமல் திரும்பிச்  சென்றனர்.


ஏகம்பவாணன் அரண்மனைக்குத் திரும்பியதும் அவன் மனைவி மூவேந்தர்கள் இங்கு

வந்ததையும் ஏளனமாகப் பேசியதையும் ஒன்றுவிடாமல் எடுத்துரைத்தாள். அனைத்தையும்

கேட்டுக்கொண்ட ஏகம்பவாணன் "தாங்கள் பெருவேந்தர்கள் என்ற பழைய பெருமையில்

பேசிவிட்டனர். இன்றைய நிலையென்ன? குறுநில மன்னனாகிய நம்மைவிட  மிகத் தாழ்ந்த

நிலையிலுள்ளனர்.  அவர்கட்குத்  தக்க பாடம் புகட்டுவோம்" என்று பெருஞ்சிரிப்புச் சிரித்து

விட்டுத் தனக்குப் பணிபுரியும் பூதத்தையனுப்பி மூவேந்தரையும் சிறைப்பிடித்து வரச்

சொன்னான். பூதம் அவ்வாறே முதலில் சேரனையும் அடுத்துச் சோழனையும் சிறைப்பிடித்து

வந்தது. பாண்டியன் அணிந்துள்ள வேப்பமாலைக்குப் பயந்து அவனைச் சிறைப்பிடிக்க

இயலாமல் திரும்பிவந்து ஏகம்பவாணனிடம் செய்தியைச் சொன்னது. உடனே ஏகம்பவா

ணன் நான்கு அழகிய தாதியரை அனுப்பிப் பாண்டியன் அணிந்துள்ள வேப்பமாலையைப்

பரிசாகப் பெற்றுவருமாறு பணித்தான். அவர்களும் ஆடிப் பாடிப் பாண்டியனிடம் வேப்ப

மாலையைப் பரிசாகப் பெற்று வந்து ஏகம்பவாணனிடம் அளிக்க அவன் பூதத்தை ஏவிப்

பாண்டியனைச் சிறைப்பிடித்தான்.


முதலில் சிறைப்பிடிக்கப்பட்ட சேரனும் சோழனும் ஏகம்பவாணனுக்குத் திறை(வரி/கப்பம்)

செலுத்தச் சம்மதித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுச் சிறையிலிருந்து விடுதலை பெற்றுச்

சென்றுவிட்டனர். பாண்டியன் தன் மனைவிக்குச் செய்தியனுப்பி "நீ நேரில் இங்கு வந்து

சிறைமீட்க ஏற்பாடு செய்க" என்று உத்தரவிட்டான். இதற்கிடையில் ஏகம்பவாணன்  தன்

னைப் புகழ்ந்து பாடிய பாணனுக்குப் பாண்டிய நாட்டைப் பரிசாகத் தந்துவிட்டான்.

பாண்டியன் மனைவி ஆறைநகர்க்கு வந்தவுடன் ஏகம்பவாணனைச் சந்தித்து வணக்கம்

தெரிவிக்கும் வழக்கமான நடைமுறைகள் முடிந்த பிறகு பாண்டியனைச் சிறைப்பிடித்த

காரணத்தை வினவினாள். ஏகம்பவாணன் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் கூறினான்.

சேர, சோழ மன்னர்கள் திறை செலுத்தச் சம்மதித்து ஒப்பந்தம் போட்டு விடுதலையாகித்

தத்தம் ஊர்களுக்குத் திரும்பிச் சென்று விட்டனர் என்று கூறினான்.பாண்டியன் மனைவி

"பாண்டிய மன்னரும் திறை செலுத்தவும் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளவும் ஆயத்தமாக 

உள்ளார். அவரை விடுதலை செய்யுங்கள்" என்ற கோரிக்கை வைத்தாள். ஏகம்பவாணன்

"பாண்டியனைப் பொருத்தவரை வேறொரு செய்தியும் உண்டு. உங்கள் பாண்டிய நாட்டை

என்னிடம் உதவிகோரிவந்த பாணன் ஒருவனுக்குத்  தானமாகக் கொடுத்து விட்டேன். இப்

பொழுது பாண்டியனை விடுதலை செய்தாலும் அவன் தன் நாட்டுக்குத் திரும்பிச் செல்ல

இயலுமா?" என்று வினவினான்.


பாண்டியன் மனைவி நிலைமையின் தீவிரத்தன்மையை உணர்ந்து கொண்டனள். உடனே

"என்கவிகை, என்சிவிகை, என்கவசம், என்துவசம்,

என்கரியீ(து), என்பரியீ(து) என்பரே---மன்கவன

மாவேந்தன் ஏகம்ப வாணன் பரிசுபெற்ற

பாவேந்த ரைவேந்தர் பார்த்து".

என்ற பாடலை மொழிந்தனள். இதன் பொருள்:

ஏகம்பவாணன் அரண்மனை முன்றிலில் அவன் ஆளுகைக்கு உட்பட்ட சிற்றரசர்கள் 

நின்றுகொண்டிருந்தனர். அரண்மனைக்குள் புலவர்களும் பாணர்களும் ஏகம்ப

வாணன் மீது கவிபாடிக் கொண்டிருந்தனர். நிகழ்ச்சி முடிவுற்றதும் வாணன் தன்

அருகில் குவித்துவைக்கப்பட்ட வெண்கொற்றக் குடை(கவிகை), பல்லக்கு(சிவிகை),

கவசவுடை, கொடி(துவசம்), யானை(கரி), குதிரை(பரி) போன்றவற்றைப் புலவர்க்கும்

பாணர்க்கும் பரிசுகளாக அள்ளிக் கொடுத்தான். அவற்றைப் பெற்றுக்கொண்ட புலவர்களும்

பாணர்களும் பெருமகிழ்வோடு அரண்மனையிலிருந்து வெளியே வந்தனர். முன்றிலில்

நின்றுகொண்டிருந்த சிற்றரசர்கள் புலவரையும் பாணரையும் நோக்கி "உமக்குப் பரிசாகக்

கிடைத்த கவிகை,, சிவிகை, கவசவுடை, துவசம், கரி, பரி போன்றவை எங்கள் பொருள்கள்.

எங்களைப் போரில் வென்று ஏகம்பவாணன் எங்களிடமிருந்து பறித்துக்கொண்டவை."

என்று பொருமிப் புலம்பினர்.


பாண்டியன் மனைவியின் இந்தக் கவிதையைக் கேட்டு ஏகம்பவாணன் மனம் மகிழ்ந்து

"அம்மணி! உம் கோரிக்கையை  நிறைவேற்ற நாம் முடிவுசெய்து விட்டோம்; நீவிர் தக்க

இழப்பீட்டைப் பாணனுக்குக் கொடுத்துவிடுக; நாம் பாண்டியனை விடுதலைசெய்வோம்.

ஆண்டுதோறும் திறை செலுத்துவது தொடர்பாக ஒப்பந்தத்தில் பாண்டியன் கையெழுத்

திடட்டும்" என்று நவின்றான். இப்படியாக ஏகம்பவாணன் சினம் முற்றிலுமாக அடங்கியது.


பின்குறிப்பு:

இந்தக் கதையில் ஏகம்பவாணனிடம் பூதம் ஒன்று அடிமைவேலை பார்த்ததாகக் குறிப்பு

உள்ளது. இந்தக்கதை காணப்படும் விநோதரசமஞ்சரி என்னும் நூலிலும், தமிழ்நாவலர்

சரிதை என்னும் நூலிலும் தொண்டை மண்டல சதகம் என்ற நூலிலும் பூதத்தைப் பற்றிய

செய்தி உள்ளது. பூதம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அன்றைய அரசியல் சூழ்நிலையில்

ஏகம்பவாணன் சேர, சோழ மற்றும் பாண்டிய மன்னர்களைப் போரில் வெல்வதும் அவர்

களைச் சிறைப்பிடிப்பதும் எளிதாகவே நிறைவேறியிருக்கும். ஏனென்றால் சேர, சோழ

மற்றும் பாண்டிய மன்னர்கள் ஆட்சிப் பரப்பிலும் படைப் பெருக்கிலும் சாதாரண சிற்றரசர்

போன்ற அதிகாரமே கொண்டிருந்தனர். எல்லாம் காலத்தின் கோலம்! வேறு என்ன 

சொல்வது?

Thursday 27 January 2022

தன்னைத் தானே மாய்த்துக் கொண்ட தமிழறிவாள்.

 கண்ணாடியால் உயிரைப் போக்கிக்கொண்ட  தமிழறிவாள்.


உறையூரில் கணிகையர் குலத்தில் மரகதவடிவு என்ற பெண்

செல்வாக்கோடு வாழ்ந்து கொண்டிருந்தாள். அவளுக்கு ஒரு

பெண்குழந்தை பிறந்தாள். அக்குழந்தைக்குச் சண்பகவடிவு

என்ற பெயர் சூட்டி வளர்த்து வந்தாள். நாளொரு மேனியும்

பொழுதொரு வண்ணமுமாக அக்குழந்தை அழகும் பொலிவும்

மிளிர வளர்ந்துவந்தாள். ஐந்து வயது நிறைந்தவுடன் தகுதியான

ஆசிரியரிடம் கல்வி பயில ஏற்பாடு செய்தாள் மரகதவடிவு. மேலும்

தனித்தனி ஆசிரியர்களிடம் இசையும், நடனமும் கற்பதற்கும் உரிய

ஏற்பாடுகளைத் தொடங்கினாள். பன்னிரண்டு வயது நிறைவுற்ற

பொழுது சண்பகவடிவு இயல், இசை, நடனம் ஆகிய மூன்று துறை

களிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தாள். இருப்பினும் கல்வியைக்

கைவிடாமல் மேன்மேலும் கற்றுத் தமிழில் பெரும்புலமை பெற்றாள்.

இதனைக் கேள்விப்பட்ட சோழவேந்தன் அவளுக்குத் தமிழறியும்

பெருமாள் என்னும் பட்டத்தை அளித்தான். நாளடைவில் சண்பகவடிவு

என்னும் பெயர் மறைந்து தமிழறியும் பெருமாள் என்ற பெயரே நிலைத்து

விட்டது. பதினாறு வயதில் தமிழறிவாள் அழகிலும் அறிவிலும் இசை,

நடனம் முதலான கலைத் தேர்ச்சியிலும் ஒளிர்ந்துகொண்டிருந்தாள்.

இது காரணமாக அவளுக்குப் புலமைச் செருக்கும் கலைச் செருக்கும்

தோன்றி நாள்தோறும் கூடிக்கொண்டே வந்தன.


இவளது அழகு, அறிவு, ஆற்றல் முதலானவற்றைக் கேள்விப்பட்ட

சோழவேந்தன் தன் அவைக்கு அன்றாடம் காலை, நண்பகல் மற்றும்

மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் வந்து கலைநிகழ்ச்சிகள் நடத்த

ஆணையிட்டான். அவளுக்குப் பல்லக்கு பரிவார வசதிகள் செய்து

கொடுத்து மகள் போலப் பரிவும் அன்பும் செலுத்திவந்தான். தமிழறியும்

பெருமாள் மன்னனிடம் ஒரு வேண்டுகோள் வைத்தாள். தன் குல மரபுப்படி

தன்னை நாடி வருவோரிடம் தான் ஆயிரம் பொன் கேட்டுப் பெற எண்ணி

யுள்ளதாகவும்,  வரவிருக்கும் நபர்களுக்குப் புலமைச் சோதனை நடத்தத்

திட்டமிட்டுள்ளதாகவும் அச்சோதனையில் தோல்வியடைவோரை விரட்டிவிட

முடிவெடுத்துள்ளதாகவும் அதற்கு மன்னன் அனுமதியளித்தல் வேண்டும்

என்றும்  கோரிக்கை விடுத்தாள். அறிவுசார்ந்த நிகழ்ச்சி தானே என்ற நம்பிக்

கையில் வேந்தன் அவள் கோரிக்கைக்குச் சம்மதித்தான். அதன்படி நாளும்

தன்னை நாடி வருவோரிடம் கவி சொல்லிப் பொருள் கூறுமாறு சோதனை

செய்தாள். ஒருவரும் தக்க பொருள் கூறாததால் பணத்தை இழந்து  விரட்டுப்பட

நேர்ந்தது. தமிழறிவாளுக்குப் பணம் குவியத் தொடங்கியது. மேலும் அவள்

கன்னி கழியாமல் உடலைப் பேணிக் கொண்டாள். இதனாலும் அவள் ஆணவம்

பெருகியது.


ஒருநாள் அவள் பல்லக்கில் அரண்மனைக்குச் சென்றுகொண்டிருந்த பொழுது

தெருவில் நின்றுகொண்டிருந்த விறகுதலையன் ஒருவனைப் பார்க்க நேர்ந்தது.

அவன் கறைபடிந்த பற்களுடன் அருவருக்கத்தக்க தோற்றத்தில் கந்தல் துணி

யுடன் காட்சியளித்தான். அவள் உடனே தன் தோழியைப் பார்த்து "இவனைப்

போன்ற ஆடவரை எந்தப் பெண்ணாவது விரும்புவாளா" என்று கேட்கத்

தோழி "இவனைப் போன்றோரை விரும்பும் பெண்களும் உலகில் இருக்கத்தான்

செய்கின்றனர்" என்றாள்.  தோழி உரையைக் கேட்ட தமிழறிவாள் உடனே விறகு

தலையனை நோக்கிக் காறியுமிழ்ந்தாள். விறகு தலையன் இதனைக் கண்டு

அதிர்ச்சியடைந்து அருகிலுள்ளவர்களிடம் தமிழறிவாளின் செய்கை பற்றிச்

சொன்னான். அவர்கள் இதுபோல் அன்றாடம் நடைபெறுவதாகவும் அவள் ஆணவம்

எல்லைமீறிச் செல்வதாகவும் தெரிவித்தனர். விறகு தலையன் அவர்களிடம் அவளைச்

சந்திக்க வாய்ப்புண்டா? என்று வினவினான். அதற்கு அவர்கள் ஆயிரம் பொன்னுடன்

சென்றால் அவளைச் சந்திக்கலாம் என்று மறுமொழி கூறினர்.


விறகு தலையன் காட்டுக்குச் சென்று தன் வழக்கமான பணிகளைக் கவனிக்கத்

தொடங்கினான். விறகுக்குத் தோதான மரக்கிளைகளை வெட்டித் தறித்து அடுக்கிக்

கொண்டிருந்தான். கடும் உழைப்பினாலும் வெயிலின் கொடுமையாலும் உடல் சோர்வுற்றது.

அருகிலிருந்த ஒரு மாமரத்தினடியில் துண்டை விரித்துப் படுத்துக் கொண்டான். 

அந்த மாமரத்தில் ஒரேஒரு மாம்பழம் கனிந்து தொங்கிக்கொண்டிருந்தது. அப்பொழுது

எதிர்பாராது வீசிய பலத்த காற்றால் கனி உதிர்ந்து விறகு தலையன் மீது விழுந்தது. அவன்

தூங்கி எழுந்தபிறகு உண்ணலாம் என்று தன்னருகிலேயே வைத்துக்கொண்டு தூக்கத்

தைத் தொடர்ந்தான். இதற்கிடையில் அம்மாமரத்தடியில் ஒரு முனிவர் ஏதோ ஒன்றைத்

தேடிக் கொண்டிருந்தார். சுற்றுமுற்றும் பார்த்தார். வெகுநேரம் தேடியும் அவர் தேடிய

பொருள் கிட்டாததால் உறங்கிக்கொண்டிருந்த விறகு தலையனை எழுப்பி "இம் மாமரத்

திலிருந்த கனியைக் கண்டாயா?" என்று வினவினார். அவன் உடனே எழுந்து "ஆம் ஐயா;

இம் மாமரத்திலிருந்து ஒரு கனி காற்றால் உதிர்ந்து கீழே விழுந்தது. நான் அதனை எடுத்து

வைத்துள்ளேன்" என்று கூறித் தான் வைத்திருந்த கனியை முனிவரிடம் நீட்டினான். அவர்

அக்கனியைக் கண்டு பெருமகிழ்ச்சியடைந்து "நல்ல செயல் செய்துள்ளாய்.. இது ஒரு 

அதிசய மாமரம். ஆண்டுக்கு ஒருமுறைதான் காய்க்கும். ஒரேஒரு கனி கொடுக்கும். நான் 

பல ஆண்டுகளாக இக்கனியைத் தவிர வேறெதையும் உண்ணாமல் வாழ்ந்து வருகிறேன்.

ஆண்டு முழுவதும் உண்ணாநோன்பிருந்து  இந்தக் கனி கிடைத்தவுடன் அதனை உண்டு

உயிர் வாழ்ந்து வருகிறேன். இந்தக் கனியைக் காணாமல் பதறிப் போய்விட்டேன். நல்ல

வேளை நீ எடுத்து வைத்திருந்தாய். உனக்கு ஒரு வரம் தருகிறேன்  இந்தக் காட்டிலுள்ள

பல மரங்களைச் சந்தன மரங்களாக மாற்றி விடுகிறேன். நீ அவைகளை வெட்டி விற்பனை

செய்து பொருள் சேர்த்துப் பணக்காரனாகலாம். மிக்க நன்றி." என்று கூறிச் சென்றுவிட்டார்.


விறகு தலையன் நல்லூழ் காரணமாகக் காட்டிலிருந்த பல மரங்கள் சந்தன மரங்களாக

மாறியிருந்தன. அவன் மற்ற மரக்கிளைகளை வெட்டித் தறித்து அடுக்கும் பொழுது ஒரு

கட்டுக்கு ஒன்றிரண்டு சந்தன மரத்துண்டு விகிதம்  சேர்த்துக் கட்டி விற்பனை செய்து

விரைவில் பணக்காரனானான். ஆயிரம் பொன்னைக் கொட்டி ஒரு பொற்கிழி உருவாக்கி

அதனை எடுத்துக் கொண்டு தமிழறியும் பெருமாளின் இல்லம் நோக்கி நடந்தான்.

அவனது நோக்கம் அவள் தன்னைப் பார்த்துக் காறியுமிழ்ந்ததைக் கண்டிப்பதும்

வாய்ப்புக் கிடைத்தால் அவளோடு பழகி உறவாடலாம் என்பதும். ஆனால் இவை

நிறைவேறும் என்ற நம்பிக்கை  அவனுக்கில்லை. தமிழறிவாளின் இல்லம் 

அரசனது அரண்மனையைப் போல் மதிற்சுவரோடும் கட்டுக்களோடும் விரிந்து

பரந்திருந்தது. ஒவ்வொரு கட்டின் முன்பும் பாதுகாப்புக்காக வலிமையான விலங்குகள்

நிறுத்தப்பட்டு(யானை, புலி, கரடி, கருங்குரங்கு, செந்நாய் போன்ற விலங்குகள்)

விளங்கியது. அவள் இல்லத்தின் முன்பு. நின்றான். அங்கிருந்த பணிப்பெண்கள் "தமி

ழறியும் பெருமாளைச் சந்திக்க வேண்டுமென்றால் ஆயிரம் பொன் செலுத்துதல் வேண்டும்; அவர்கள் ஒரு

கவி சொல்லுவார்கள். அதற்குப் பொருள் கூறல் வேண்டும். பொருள் கூறத் தவறினால்

முதற் கட்டிலிருந்து அடுத்த கட்டுக்குச் செல்ல இயலாது; இந்த இல்லத்திலிருந்து வெளி

யேற்றப் படுவீர்; ஆயிரம் பொன்னையும் இழக்க நேரிடும்" என்று உரைத்தனர். விறகு

தலையன் இந்த நிபந்தனைகளுக்குச் சம்மதித்து ஆயிரம் பொன்னையும் செலுத்தி முதற்

கட்டுக்குள் நுழைந்தான். அங்கிருந்த தாதியர் இவனை அற்பமாகப் பார்த்துவிட்டுப் பல

கட்டுக்களைக் கடந்து தமிழறிவாள் வாழும் பகுதிக்குச் சென்று விறகுதலையனைப்

பற்றி எடுத்துரைத்தனர். அவள் உடனே ஒரு ஓலை நறுக்கில் ஒரு கவியை எழுதி அவர்

களிடம் கொடுத்து விறகுதலையனிடம் திரும்ப அனுப்பி வைத்தாள். அப் பணிப்பெண்கள்

விறகு தலையனிடம் அந்த ஓலை நறுக்கைக் காட்ட அவன் திருதிருவென்று விழித்தான்.

அவன் கல்வி கற்காதவன் ஆதலால் ஓலை நறுக்கில் உள்ள கவிக்குப் பொருள் கூற

இயலாமல் பணிப் பெண்களால் விரட்டப்பட்டான். 

(விறகு தலையன்=விறகு சுமந்து விற்போன்)


தமிழறிவாள் இல்லத்திலிருந்து அடித்து விரட்டப்பட்ட விறகு தலையன்

அங்கு பணிபுரியும் தாதியரிடம் பெருங்குரலில் கத்தினான் " என்னிடம்

ஆயிரம் பொன் வாங்கிக்கொண்டு ஏமாற்றலாமா? நான் கொடுத்த பணையத்துக்கு

ஒப்புக்கொடுக்க வேண்டாமா?"" என்று அலறினான். உடனே பணிப்பெண்கள்

"ஈதென்ன வம்பு? இதுவரை எத்தனையோ நபர்கள் இதுபோல் விரட்டப்பட்டனர்;

யாரும் வம்பு வழக்கு தொடுக்கவில்லையே" என்று வியந்து கூறிவிட்டு இல்லத்துக்குள்

சென்றுவிட்டனர். பின்பு விறகு தலையன் தன்னைப் போல விரட்டப்பட்ட நபர்களைச்

சந்தித்து ஆலோசனை கேட்டான். "இவ்வூரிலும் தமிழறிவாளுக்குச் சமமான புலமை

கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்; ஆனால் அவளிடம் தோற்று அவமானம்

அடைய நேரிடுமோ என்று தயங்குகின்றனர். நீர் மதுரைக்குச் சென்று சங்கப் புலவர்கள்

நாற்பத்தொன்பது பேர்களில் யாரையாவது அழைத்து வந்தால் அப்படிப்பட்டவர் அவளை

வெல்ல வாய்ப்பு உண்டு. உடனே மதுரைக்குச் செல்க" என்ற அறிவுரை சொன்னார்கள்.


விறகு தலையன் உடனே கிளம்பி மதுரையை நோக்கிப் பயணம் மேற்கொண்டு மூன்றாம்

நாள் மதுரையை அடைந்து சங்கப் புலவர்களைச் சந்தித்து நடந்த நிகழ்வை விவரித்தான்.

நாற்பத்தொன்பது புலவர்களும் கலந்து ஆலோசித்துத்  " தலைமைப் புலவர் நக்கீரர் தாம்

இந்தச் சிக்கலைத் தீர்க்கும் திறமையுடையவர். அவர் இந்த விறகுதலையனுடன் உறையூர்

சென்று தமிழறிவாளை வென்று திரும்பட்டும்" என்று கூறினர். அதன்படி ஏற்பாடுகள் செய்யப்

பட்டன.  நக்கீரர் விறகுதலையனிடம் தமிழறிவாள் இல்லத்திலுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள்,

இல்ல அமைப்பு, விந்தையான விடயங்கள் மேலும் இவைபோன்ற பிற செய்திகளைத் தெரிவிக்

கச் சொன்னார். "அவள் இல்லத்தில் ஏழு மதிற்சுவர்தளும் அறுபத்துநான்கு கட்டுக்களும் உள்ள

தாகவும் ஒவ்வொரு கட்டுக்கும்  மொண்ணச்சிகள், கற்றுச்சொல்லிகள், சூத்திரப் பதுமைகள்

யானை, புலி, கரடி, குரங்கு, வேட்டை நாய், தானாக மூடிக் கொள்ளும் கிணறு, குங்குமச் சேறு,

சித்திர மண்டபம், கச்சேரி மண்டபம், தந்திர வேலைப்பாடு மிக்க கட்டில்கள் இருப்பதாகப் பேச்சுண்டு" என்றான். நக்கீரர் விறகு தலையனிடம் சில பொருட்களை வாங்கிவரச் சொன்னார்.

எண்ணெய்ச் சீலை, மூங்கிற்கழி, செம்பருத்திப் பூ, மல்லிகைப் பூ, காந்தக் கல், கட்டெறும்பு, 

நண்டு, வாழைத் தண்டு, கரும்பு, எலுமிச்சம் பழம் முதலியவற்றை வாங்கி வந்தான். இருவரும்

ஆயத்தம் செய்த பொருட்களோடு உறையூர்க்குப் பயணப்பட்டார்கள். மூன்றாம் நாளில் திருச்சி

யை அடைந்தனர்.  அங்கிருந்து மேற்கே பார்த்தபொழுது தமிழறிவாளின் இல்லம் தெரிந்தது..

"இதுவோ திருச்சி?இதுவோ உறையூர்?

இதுவோ தமிழறிவாள் எல்லை?----இதுவோ

இறைவளர்க்கும் சங்கம்? இவள்அழிப்ப தென்னே?

குறைவறத்தான் வெல்வேன் குறித்து" எனச் சூளுரைத்தார் நக்கீரர்.

உறையூரை மாலையில் அடைந்தவர்கள் நேரே தமிழறிவாள் இல்லத்துக்குச் சென்றனர். அவசர அவசரமாக

நக்கீரர் தம் பட்டாடை, தலைப்பாகை, கடுக்கன் முதலானவற்றை அகற்றி விறகுதலையனிடம்

ஒப்படைத்துவிட்டு அவனது அழுக்குப் படிந்த உடைகளைத் தாம் உடுத்திக்கொண்டார். அவனது

துண்டைத் தலையில் சுற்றிக்கொண்டு வாழைத்தண்டைத் தலைமேல் வைத்துக் கொண்டார்.

விறகு தலையன் ஆயிரம் பொன் கொண்ட பொன்முடிப்பை  நக்கீரரிடம் கொடுத்தான்.


நக்கீரர் முதல் கட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த தாதியரிடம் பொன்முடிப்பை யளித்தார்.

"விலைக்கு விறகு கொள்வீர்" என்னும் பொருள்படும் கீழ்க்கண்ட பாடலைப் பாடினார்:

"வெய்யோன் கதிரெரிப்ப வேற்கண்ணாள் பின்தொடரப்

பையவரு தென்றல் பயனறியேன்---துய்ய

மலர்த்தடங்கண் வாய்ந்த மயிலனையீர்! கொள்வீர்

விலைக்கு விறகோ விறகு".

தாதியர் திகைத்துப் போயினர். இதுவரையிலும் நாம்தான் கவி சொல்லிவந்தோம்.

முதல்முறையாக நம்மை நாடி வந்தவன் கவிசொல்கிறானே என்று  குழம்பினர்.

உடனே பல கட்டுக்களைக் கடந்து தமிழறிவாள் வசிக்கும் பகுதிக்குச் சென்று

அவளிடம்  விறகு தலையன் போல் நடிக்கும் நக்கீரர் மொழிந்த கவியைச் சொன்னார்கள்.

பதிலடியாகத் தமிழறியும் பெருமாள் பணிப்பெண்களிடம் கவிசொல்லி‌ அனுப்பினாள்.

"உள்ளீரம்; பச்சை;  புகையும்; எரியாது; ;

கொள்ளீர் விறகென்று கூறினீர்---மெள்ளவே

வீணரே!  போம்போம்போம் வீணரே! நீரும் தாம்

தாதரே சங்கத் தவர்".

"உம் விறகு ஈரமாயிருக்கும்; பச்சை விறகு; அதனால் அடுப்பில் வைத்தால்

புகையும்; எரியாது; இத்தகைய விறகை வாங்குக எனச் சொன்னீர்; நீர்

வீணரே! போம்" என்றாள்.

"விறகு நன்கு உலர்ந்து காய்ந்துள்ளது. அப்படியே விறகு புகைந்தாலும்

பலகணி(சன்னல்) வழியாகப் புகை போய்விடும். நீலவிழிப் பெண்களுக்கு

என் விறகு நின்று எரியும்.காதுகளில் பருமனான குண்டலம் அணிந்த பெண்களே!

என் விறகை விலைக்கு வாங்குவீர்" என்று சொல்லிக் கொண்டே நக்கீரர்

அடுத்த கட்டுக்குள் நுழைந்தார். இதற்குப் பதிலாக ஒரு கவியைத் தாதியர் மூலம்

சொல்லி அனுப்பினாள். "மரம் வெட்டும் பொழுது பால் வடிந்து ஈரமாக இருந்

திருக்கும். அந்த ஈரம் உலர்ந்து விறகு நன்கு காய்ந்துள்ளதா? உண்மையைப்

புதைக்காமல் உள்ள நிலவரத்தை உள்ளபடியே சொல்லும். வகையாக என்

வாசலுக்கு வந்து உம் விறகைப் புகழ வேண்டா". இதுதான் கவியின் பொருள்.


"ஈரம் உலர்ந்தே எலும்புபோ லேகாய்ந்து

பாரம் குறைந்து பசையுலர்ந்து---நேரே

பிறகொன்றும் இல்லையே தாய்உன்கை யாலே

விறகுதனைக் கொள்க விரைந்து".

என்று பாடிக்கொண்டே நக்கீரர் அடுத்த கட்டுக்குள் நுழைந்துவிட்டார். அவர்

மொழிந்த கவியைப் பணிப்பெண்கள் தமிழறிவாளிடம் போய்ச் சொல்ல அவள்

மறுமொழியைத் தன் கவிமூலமாகச் சொல்லி அனுப்பினாள்.:

"விறகோ விறகென்று மேன்மேலும் கூறும்

விறகுவிற்பான் தன்னருகின் மேவி---விறகு

விலைகேட்டு வாருமென்று மெல்லியலாள் கேட்டாள்

கலைவாய்த் தமிழறிவாள் காண்."


விலைகேட்டுக் கவியனுப்பிய தமிழறிவாளுக்கு "ஒரு கட்டு விறகு

விலை ஆயிரம் பொன் என்று விடையிறுத்துக் கொண்டே அடுத்த

கட்டுக்குள் நுழைந்தார் நக்கீரர். இதற்குத் தமிழறிவாள் ஒரு கவியைத்

தாதியரிடம் சொல்லி அனுப்பினாள். "விறகு பச்சையாய் உள்ளது.

முழுவதும் எரியாது. இவ்வளவு குற்றமுள்ள விறகுக்கு உரிய சரி

யான விலையைக் கேட்டுவந்து  சொல்வீர் கிளி போன்ற பெண்களே!"

இதுதான் இந்தக் கவியின்‌ பொருளாகும்.


"ஐந்நூற்(று) இரட்டிப்பொன்; அப்புறமும் சோறுகறி;

என்னூர் விறகுவிலை இப்படியே---முன்னேநான்

சொன்னபடி யேயொழியச் சொல்லறியாப் பேதைகாள்!

சின்னூல் இடையாட்குச் செப்பு"

கவிபாடிக் கொண்டே நக்கீரர் அடுத்த கட்டுக்குள் நுழைந்தார். பணிப்பெண்கள்

தமிழறிவாள் தங்கியுள்ள பகுதிக்குச் சென்று நக்கீரர் பாடலைச் சொல்ல, அவள்

ஆயிரம் பொன்னும் கறிவகைகளும்  எடுத்துச் சென்று விறகுதலையனாக

நடிக்கும் நக்கீரரிடம் கொடுக்கச் சொன்னாள். நக்கீரர் விறகையும் ஆயிரம் பொன்

னையும் கறிவகைகளையும் பணிப்பெண்களிடமே  கொடுத்து "இவைகளை

உங்கள் தமிழறிவாளிடமே ஒப்படையுங்கள். எனக்குச் சமையல் செய்து போடுங்கள்"

என்று நக்கீரர் கவிமூலமாகச் சொன்னார்.


தாதியர் ஓடிச்சென்று தமிழறிவாளிடம் இதுபற்றிக் கூற அவள் ஆயிரம் பொன்னைப்

பணப்பெட்டகத்தில் சேர்க்குமாறும் கறிவகைகளைத் தொம்பரத்(பலபேர்களுக்காகச்

சமைக்கும் கட்டடம்)தில் சேர்க்குமாறும் சொல்லி, அந்தத் தொம்பரத்திலே சமைத்த

வெந்ததும் வேகாததும் கல்லும் நெல்லும் கொண்ட உணவைப் பரிமாறச் சொன்னாள்.

"கல்லொன்று; நெல்லிரண்டு; காணுமணல் மூன்(று)அரிசி

கல்லையுடன் அஞ்சுவகை காட்டிலேன்---வில்நுதலாய்!

வல்லபடி செய்த வகையெல்லாம் உங்களது

முல்லைநகை யாட்கு மொழி"

என்ற பாடலைப் பாடித் தமிழறிவாள் அளித்த சாப்பாட்டைக் குறை கூறினார்.


நக்கீரரைக் கச்சேரி மண்டபத்துக்கு அழைத்துவரச் சொன்னாள். ஒவ்வொரு கட்டைத்

தாண்டும் போதும் ஒவ்வொரு சிக்கலைச் சந்திக்க நேர்ந்தது. ஒரு கட்டில் சூத்திரப் புதுமைகள்

மிரட்டின.நக்கீரர் தண்டாலடித்தவுடன் அவை கலைந்து சென்றன. புலி வந்த பொழுது தான்

கொண்டுவந்திருந்த செம்பருத்திப்பூவைப் புலிமுன் எறிந்தார். அது இறைச்சி என்று எடுத்துச்

சென்றது. யானை வந்தபோது கரும்பை நீட்டினார். இப்படியாக ஒவ்வொரு கட்டினைத்

தாண்டும் போதும் ஒவ்வொரு அச்சுறுத்தலை எதிர்கொண்டார். ஆனாலும் ஒருவாறு சமாளித்

துக் கச்சேரி மண்டபத்தை அடைந்தார். தன் தோழியராகிய இயலறியும் பெருமாளையும், இசை

அறியும் பெருமாளையும் தனித்தனியாக அலங்கரித்து அனுப்பிப் பார்த்தாள். நக்கீரர் அவர்கள்

தமிழறிவாள் அல்லர் எனக் கண்டுபிடித்துக் கவி பாடி விரட்டிவிட்டார்.

"தறிபோலும் குண்டத்தாள் தானவளைப் போலே

நெறியாக வந்தென்முன் நின்றாய்--- சிறுபுலி தான்

தீரப் பசித்தாலும் தின்னாப்புல் தின்னுமோ?

நேரே முன் நில்லாதே போ". 


இறுதியில், நடந்த நிகழ்வைத் தன் தாய் மரகதவடிவிடம் கூறி இனித் தானே நேரில்

செல்வதாகத் தெரிவித்துத் தமிழறிவாள் நக்கீரர் முன் வந்து ஓர் இருக்கையில் ஒய்யாரமாக

அமர்ந்துகொண்டாள். கவி பாடியே இருவரும் வாதம் புரிந்தனர். நக்கீரர் ஒரு கேள்வி கேட்கத்

தமிழறிவாள் விடையிறுத்தாள். பின் அவள் கேள்விக்கணையைத் தொடுக்க நக்கீரர் தக்கபதில்

அளித்தார். இப்படியாக இருவரும் மாற்றி மாற்றிக் கவி சொன்னார்கள். இராப் பொழுது

முழுவதும் இப்படியாகக் கழிந்துகொண்டிருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் விடிந்துவிடும்

என்று அஞ்சிய நக்கீரர் "இவள் சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளாள். இவளை வழக்கமான

இலக்கிய இலக்கணங்களைக் காட்டி வெல்லவே இயலாது.  ஆகையினால் இவள் கேள்விப்

பட்டிராத நிகழ்வைக் கண்டசுத்தி(ஆசுகவி போன்றது) பாடி வெல்ல முயல்வோம்" என்று மனத்

துக்குள் கூறிக்கொண்டு கண்டசுத்தியாகக் கவி ஒன்றைப் பாடலானார்:

"நச்சுத்தேர் ஏறி நடுக்காட்டில் வேடுவச்சி

பச்சைக் கொடியாட நின்றாளே---இச்சித்தே

மேல வனங்கவர்ந்து மின்கொண்டு போகின்ற

மூலபலன் கண்டாய் மொழி".

நக்கீரர் மதுரையிலிருந்து உறையூர்க்கு வரும் வழியில் அடர்த்தியான இருள்படர்ந்த காடு ஒன்று

தென்பட்டது. அதில் ஒரு வடதாரி மரத்தின் மேல் வள்ளிக்கொடி படர்ந்திருந்தது. அதனை வேடன்

ஒருவன் கண்டு கொடியை அறுத்துப் போட்டுக் கடப்பாரையால் வள்ளிக்கிழங்கை அகழ்ந்து

கொண்டிருந்தான். இந்த நிகழ்வைத் தான் கவியாகப் பாடினார். 


தமிழறிவாள் திகைத்துப் போனாள். "இந்தக் கவிதைக்குப் பொருளென்ன?

இது போன்ற செய்தியை எந்த இலக்கியத்திலும் படிக்கவில்லையே" என்று குழம்பினாள்.

இதுவரை யாரிடமும் தோற்காமலும் கன்னி கழியாமலும் வாழ்ந்த நமக்கு இழிவு நேருமோ என்று

அஞ்சிய தமிழறிவாள் அங்கிருந்த நிலைக்கண்ணாடியை உடைத்து அதிலிருந்து சிதறிய

கண்ணாடிச் சில்லால் வயிற்றைக் கிழித்துக் கொண்டு உயிர் நீத்தாள்.


பொழுது நன்றாக விடிந்து விட்டது. மரகதவடிவு கச்சேரி மண்டபத்துக்கு வந்து அங்கே வயிறு

பீறுண்டு குடல் வெளியே சிதறிக் குருதி கொட்டி அலங்கோலமாகச் செத்துக் கிடக்கின்ற

தமிழறிவாளைக் கண்டு கதறியழுதாள். உடனே சோழன் அரண்மனைக்குச் சென்று அவனிடம்

தகவல்சொல்லி அழுதாள். சோழமன்னனும் தமிழறிவாள் இல்லத்துக்கு வந்தான். அங்கே

நின்றிருந்த நக்கீரரைக் கண்டு "நீவிர் யார்?" என்று கேட்டான். நக்கீரர் தாம் மதுரைத் தமிழ்ச்

சங்கத்துத் தலைமைப் புலவர் என்பதாகப் பதிலளித்தார். இடையில், மரகதவடிவு மன்னனிடம்

நக்கீரர்மேல் ஐயமுள்ளதாகவும்,  அவரை நன்கு விசாரிக்க வேண்டுமென்றும் தெரிவித்தாள்.

நக்கீரர் தாம் கொல்லவில்லை என விடையிறுத்தார். சோழமன்னன் நக்கீரரிடம் விறகுதலை

யனாக நடித்த காரணம் என்ன? என்று கேள்வியெழுப்ப, நக்கீரர் உண்மையான விறகுதலையன்

மதுரைக்கு வந்ததிலிருந்து நடந்த நிதழ்வு அனைத்தையும் விரிவாக எடுத்துரைத்தார்.


சோழமன்னன் நக்கீரரை நோக்கி "ஐயா, நீர் கவி பாடி இந்தப் பெண்ணைப் பிழைக்க

வையும். என் மகள் போல இவளை நினைத்துச் சகல வசதிகளையும் செய்து கொடுத்தேன்"

என்று வேண்டிக்கொண்டான். நக்கீரர் கவிபாடலானார்:

"வீறா யிவளுக்கு மிக்கோரும் வேந்தனுக்கும்

மாறாக நாம் வந்த வாரறியக்---கூறாய்

விழுந்தநிணம் உள்ளடக்கி வெள்ளெலும்பும் ஒன்றாய்

எழுந்திருக்க வேண்டும் இனி" என்று பாடித்தம் கமண்டல நீரைத் தெளித்து ஏதோ மந்திரம்

முணுமுணுத்தார். உடனே தமிழறிவாள் உறக்கத்தினின்று எழுவது போல் எழுந்தாள். அங்கு

குழுமியிருந்த அனைவரும் பெருமகிழ்வுற்றனர்.


சோழமன்னன் நக்கீரரிடம் "ஐயா! நீரே இவளை மணந்து கொள்ள வேண்டும்" என்றார்.

நக்கீரர் உடனே "நான் இங்கு வந்ததே உண்மையான விறகுதலையன் குறையைக் களை

வதற்குத்தான். மேலும் தமிழறிவாளை மீண்டும் உயிர்பிழைக்க வைத்ததன் மூலம் நான்

இவளுக்குத் தகப்பன் போன்றவன் ஆகிவிட்டேன். எனவே, இவளை உண்மையான

விறகு தலையனுக்கு மணம்செய்து கொடுத்தல் வேண்டும்" என்றார். உடனே சோழமன்னன்

"இந்தப் பேரழகியான அறிவாளிக்கு அழகற்ற மூடனை மணவாளனாக ஆக்குதல் தகுமோ?"

என்று வினவினான். உடனே நக்கீரர் பேசத் தொடங்கினார்:

"இந்தத் தமிழறிவாள் முற்பிறவியில் இளவரசியாகவும் விறகு தலையன் இளவரசனாகவும்

வாழ்ந்தவர்கள். எதிர்பாராமல் இவர்கள் சந்தித்துக் கொண்ட பொழுது இளவரசி இளவரசனுக்கு

அருகிலுள்ள மண்டபத்துக்கு வருமாறு ஓலையனுப்ப இளவரசன் கல்வியறிவு இல்லாததனால்

தெருக்கோடியில் வசித்த ஒருவனிடம் ஓலையைக் காட்ட அந்த மனிதன் இளவரசியைத்தானே

அடையலாம் என்ற எண்ணத்தில் சதி செய்து மண்டபத்தில் இளவரசியை நெருங்க அவள் தன்

கைவசமிருந்த குறுவாளால் தன்னைத்தானே மாய்த்துக்கொண்டாள். பிறகு நடந்ததையறிந்த

இளவரசனும் நஞ்சருந்தி மாண்டு போனான். இருவரும் அந்த மண்டபத்தில் பேயாக அலைந்து

கொண்டிருந்த நாட்களில் ஔவையாரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் இவர்களின் பேய்வாழ்வை

மாற்றி இந்த ஊரில் பிறக்க வரங்கொடுத்து எனது முயற்சியால் இருவரும் மணம்செய்து

நல்வாழ்வு வாழ்வர் என்ற வரமும் கொடுத்தார். ஔவையாரின் ஆசீர்வாதத்தால் இப்பெண்

தமிழறியும் பெருமாளானாள். எனவே ஔவையாரின் ஆசிப் படியே இவர்கள் இருவர்க்கும்

திருமணம் செய்துவைப்போம்" என்று கூறி முடித்தார். அவர் கூற்றுப்படியே அனைத்தும் நல்ல

விதமாக நடந்து முடிந்தது.(இந்தக் கதை விநோத ரச மஞ்சரி என்ற நூலிலும் காணப்படுகிறது. தமிழறியும் பெருமாள் என்ற சிறு நூலிலும் காணப்படுகிறது.

1942ஆம் ஆண்டில் தமிழறியும் பெருமாள் என்ற பெயரில் திரைப்படமாகவும்

வெளிவந்தது.