Sunday 24 March 2024

விதி வலியது. விதிப்படியே எல்லாம் நடக்கும் .

 வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

தொகுத்தார்க்கும்  துய்த்தல் அரிது.(குறள்:377).


தனிப்பாடல்கள் பல்வேறு சூழ்நிலையில் பாடப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பாடலுக்குப் பின்னும் ஒரு கதை/நிகழ்ச்சி இருக்கும்.

பின்வரும் தனிப்பாடலும் ஒரு விந்தையான சூழ்நிலையில் தான்

பாடப்பட்டது. பாடல் பின்வருமாறு:

"நாடெலாம் செந்நெல் விளையினும் நாட்டின்

        நதியெலாம் நவமணி தரினும்

காடெலாம் ஆடை காய்க்கினும் மேகம்

        கனகமே பொழியினும் மடவாய்!

ஆடலே புரியும்  அம்பல வாணர்

       அவரவர்க்(கு) அமைத்ததே யல்லால்

வீடெலாம் கிடந்து புரண்(டு)உருண்(டு) அழினும்

         விதியலால் வேறுமொன்(று) உளதோ?".

பொருள்: நாடெல்லாம் செழிப்பாய்ச் செந்நெல் விளைந்தாலும், நாட்டின்

நதியெல்லாம் நவமணிகளைத் தந்தாலும், காடெல்லாம் ஆடையாய்க்

காய்த்தாலும், மேகம் பொன்னையே பொழிந்தாலும், பெண்ணே!, ஆடல்

நிகழ்த்தும் அம்பல வாணர் அவரவர்க்கு இன்ன இன்ன பொருளை அனு

பவிக்கும் வாய்ப்பை வகுத்துக்கொடுத்ததைத் தவிர வேறு எதனையும்,

வீடெல்லாம் கிடந்து புரண்டு உருண்டு அழுதாலும், அனுபவிக்க வாய்ப்பில்லை.

இதை விதியென்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?

இந்தப் பாடல் எழுந்த சூழ்நிலை என்னவென்று அறிவோம்.


இப்பாடலை இயற்றிய புலவர் பெயர் தெரியவில்லை. ஆனால் அவர் வாழ்ந்த

காலம் மழைபொய்த்ததனால் வறட்சி ஏற்பட்டுப் பஞ்சம் நிலவிய கொடுங்

காலம்.புலவரை ஆதரிக்க மூவேந்தர்களோ அவரையொத்த கொடை வள்ளல்

களோ இல்லாத காலம். ஆங்காங்கே சில சமீன்தார்களும், நிலக்

கிழார்களும்  வாழ்ந்துவந்த காலம். கொடுமையான பஞ்சம் நிலவிய காலம்.

புலவர்க்கோ தமிழைத் தவிர வேறு தொழில் தெரியாது. பஞ்ச காலத்தில்

பிழைப்பு நடத்த அவர் இருந்த ஊரில் வழியில்லாத காரணத்தால் வேறு

ஊருக்குச் செல்ல முடிவுசெய்து தம்மிடமிருந்த ஒருசில பொருட்களை எடுத்துக்

கொண்டு மனைவியுடன் காட்டு வழியில் நடந்து சென்றார். வேற்றூரில் எப்படி

பிழைப்பு நடத்தப் போகிறோம் என்ற கவலையுடன் தள்ளாடி நடந்து

சென்றனர். வழியில் கள்வர் சிலர் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள்

புலவரையும் அவர் மனைவியையும் நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் தோற்றம்

கடுமையாக இருந்தது. புலவர் மனைவி அச்சத்துடன் நடுங்கியபடியே "அண்ணன்

மார்களே! நாங்கள் புலவர் குடும்பத்தினர். பஞ்சம் பிழைக்க வெளியூர் செல்கின்

றோம். எங்களுக்குத் துன்பம் இழைத்து விடாதீர்கள். எங்களைக் காப்பாற்றுங்கள்"

என்று கூறினாள். அக்கூட்டத்தில் ஒருவன் இரக்ககுணம் உடையவன் போலும்.

அவன் புலவர் மனைவியிடம்" நீங்கள் எங்களோடு இருக்கலாம். எங்கள் தொழிலில்

எமக்குக் கிடைக்கும் இலாபத்தில் உங்களுக்கும் ஒரு பங்குண்டு. ஆனால், புலவர்

எங்கள் தொழிலில் எங்களுக்கு உதவுதல் வேண்டும்" என்று சொன்னான். புலவர்

" நீவிர் என்ன தொழில்புரிகின்றீர்?" என வினவினார். "நாங்கள் கள்வர்கள். ஆனால்,

ஏழைகளிடமும்  தருமவான்களிடமும் திருட மாட்டோம்;  தாமும் அனுபவியாமல்

பிறருக்கும் ஈயாமல்  வாழ்க்கை நடத்தும் கஞ்சர்களிடம் திருடுவோம்." என் நவின்றான்.

மேலும் "நல்லவர்கள் வீட்டுக்குத் திருடச் சென்றால் அபசகுனங்கள் தோன்றி எங்களை

எச்சரிக்கும். மேலும் கன்னம் வைக்கும் பொழுது தேள் கையில் கொட்டிவிடும். நாங்கள்

அவ்வீட்டில் திருடாமல் திரும்பி விடுவோம்" என்றான்.


நாலைந்து நாட்கள் கடந்து சென்றன. கள்வர்கள் புலவரையும் மனைவியையும் நன்கு

கவனித்துக் கொண்டனர். ஒருநாள் அக்கூட்டத்தின் தலைவன்  புலவரை நெருங்கி

"ஐயா, இன்றிரவு பக்கத்து ஊரிலிருக்கும் சமீன்தார் அரண்மனைக்குச் செல்லத்

திட்டமிட்டுள்ளோம். நீங்களும் எங்களுடன் வந்து தொழிலில் பங்கெடுத்துக் கொள்

ளுங்கள்" என்று தெரிவித்தான். புலவரும் "வேதாளத்துக்கு வாழ்க்கைப்பட்டால்

முருங்கைமரம் ஏறத்தானே வேண்டும்" என்று தமக்குள் சொல்லிக்கொண்டார்.

திட்டமிட்டபடியே அனைவரும் பக்கத்து ஊருக்குச் சென்று சமீன்தார் அரண்மனையை

நெருங்கினர். கள்வர் கூட்டத் தலைவன் அரண்மனையைச் சுற்றிவந்து நோட்டமிட்டான்.

ஓரிடத்தில் கன்னமிட்டு அத்துளை வழியே புலவரை நுழையச் செய்தான். "புலவரே,

உள்ளே போய் நோட்டமிட்டு அரண்மனைப் பொக்கிஷ அறை எங்குள்ளது என்று

அறிந்து எங்களுக்குத் தெரிவியுங்கள்" என்று உரைத்தான்.


புலவருக்கு முதலில் ஒன்றும் பிடிபடவில்லை. கும்மிருட்டாக இருந்தது. சிறிது நேரம்

பழகிய பின்னர் கண்கள் நன்றாகத் தெரிந்தன. அவர் நுழைந்த இடம் அரண்மனை

அந்தப்புரம் ஆகும். அங்கு ஒரு பெரிய அறையில் வேலைப்பாடமைந்த ஒரு மஞ்சத்தில்

சமீன்தார் மனைவியுடன் உறங்கிக் கொண்டிருந்தார். அலங்கார விளக்குகள் வெளிச்சம்

தந்தன. புலவருக்கு ஒன்றும் தோன்றாமல் மஞ்சத்தினடியில் பதுங்கிக்கொண்டு என்ன

செய்வது என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்.


நான்கு சாமப் பொழுது கடந்த நள்ளிரவு நேரம்.  திடீரென்று சமீன்தாரும் அவர் மனைவியும்

உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டனர். எழுந்து மஞ்சத்தில் அமர்ந்துகொண்டே பற்பல

விடயங்கள் குறித்துப் பேசிக் கொண்டனர். பேச்சின் நடுவில் சமீன்தார் மனைவியிடம் "நாம்

ஒரு செய்யுள் இயற்றுவோம்; முதலிரண்டடியை நான் பாடித் தொடங்குவேன்; மீதமுள்ள

இரண்டடியை நீ நிறைவு செய்" என்றார். சொன்னபடியே முதலிரண்டடியைப் பாடிவிட்டு

மீதமுள்ள இரண்டடியைப் பாடுமாறு மனைவியிடம் கூறிவிட்டுக் காத்திருந்தார். இருவரும்

தமிழ்ப் பயிற்சி யுடையவர்களே; இருப்பினும் சமீன்தாரிடம் காணப்பட்ட வேகம் அவர்

மனைவியிடம் இல்லை. அவள் இன்னும் சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

இதற்கிடையில், மஞ்சத்தின் கீழே படுத்திருந்த புலவர் தாம் திருட்டுக்குத் துணையாக

வந்திருப்பதை மறந்து சமீன்தாரின் பாடலை எப்படி நிறைவு செய்யலாம் என்று

யோசித்து மீதியுள்ள இரண்டடியை உரத்த குரலில் பாடிக்கொண்டே வெளியே வந்தார்.

சமீன்தாரும் அவர் மனைவியும் திடுக்கிட்டுப் போனார்கள். அவர் மனைவி நாணத்துடன்

வேறு அறைக்குச் சென்றுவிட்டாள். சமீன்தார் புலவரைப் பார்த்துச் சினமடைந்தார்.

"யார் நீர்? இங்கு ஏன் வந்தீர்? எப்படி வந்தீர்?" என்று அடுக்கடுக்காய்க் கேள்விகளை எழுப்பி

அதட்டினார். புலவருக்கு உடலெங்கும் நடுக்கம் எடுத்தது; வாய் குழறியது; பேச்சுத்

திக்கியது. பின் ஒருவாறு மனம் தேறி தான் யார் என்பதனையும் திருடுவதற்காக

வந்ததையும் ஒரு வழியாகச் சொல்லி முடித்தார்.


சமீன்தார் புலவர் கூறிய கதையைக் கேட்டு அவர்பால் பரிவுகொண்டார். அவர் கையைப்

பற்றியிழுத்துப் பொக்கிஷ அறைக்குள் நுழைந்தார். பொக்கிஷ அறைக்குள் நுழைந்த

புலவர் பிரமிப்படைந்தார். இவ்வளவு நகைகளையும் பொற்காசுகளையும் பாத்திரபண்டங்

களையும் அவர் தம் வாழ்நாளில் பார்த்ததேயில்லை. ஒருவாறு பிரமிப்பு அகன்று இயல்பு

நிலைக்கு வந்தார். சமீன்தார் புலவரிடம் " உமக்கு எது வேண்டுமோ அதனை எடுத்துக்

கொள்க" என்று கூறினார். புலவர் வெகுநேரம் யோசித்து அங்கே தென்பட்ட ஓரளவு பெரிய

பெட்டியைக் காட்டி அதனை எடுத்துக் கொள்ளலாமா? என்று வினவினார். சமீன்தார் சரி

என்றார். புலவர் அப்பெட்டியைத் தூக்க முடியாமல் திணறித் தூக்கிக் கொண்டார். சமீன்

தாரும் ஒருகை கொடுத்தார். ஒரு வழியாகப் பெட்டியை வெளியே கொண்டுவந்துவிட்டனர்.

கள்வர்கள், வெகுநேரம் புலவர் வராததால் தப்பி ஓடிவிட்டனர். புலவர் சமீன்தாரிடம் விடை

பெற்றுக்கொண்டு மனைவி இருக்குமிடம் வந்து சேர்ந்தார்.


இருவரும் ஆவலுடன் பெட்டியைத் திறந்தனர். புலவரின் பொல்லாத விதி வேலை செய்தது.

பெட்டிக்குள் ஆடை, ஆபரணம், பொற்காசு ஏதுமில்லை. வெறும் உப்புத்தான் இருந்தது.

புலவரின் மனைவி "கீரைக் கறிக்கு உப்பு உதவும்" என்று கூறிவிட்டு அதனைத் தடவிப்

பார்த்தாள். அது சமையல் உப்பு அல்ல; வாண(வெடி) உப்பு. புலவர் பொல்லாத விதியை

நொந்து கொண்டு முதலில் கூறிய பாடலைப் பாடி மனந் தேறினார்.


ஆதாரம்: 'நான் கண்டதும் கேட்டதும்' நூல்--ஆசிரியர் டாக்டர் உ.வே.சாமிநாதையர்.

Friday 8 March 2024

பரிவட்டம்--விடாக் கண்டரும் கொடாக்கண்டரும்.

 பரிவட்டம்--விடாக்கண்டரும் கொடாக்கண்டரும்.


பொருநை(தாமிரவருணி)யாறு பாயும் திருநெல்வேலிச் சீமை

சங்க காலத்திலிருந்தே சிறப்புப் பெற்றுத் திகழ்கிறது. பொருநை

யாறு இந்த மாவட்டத்துக்கு மட்டுமே உரித்தான ஆறாகும். ஆண்டு

முழுவதும் நீர் வற்றாமல் ஓடும் இந்த ஆறு கடலோடு கலக்குமிடத்தில்

முத்து விளைகிறது. பொருநையாற்றில் பல துறைகள் அமைந்துள்ளன.

இவ்வாற்றின் மேல் கரையில் குறுக்குத்துறையமைந்துள்ளது.  இதற்கு

வடபால் உள்ள மற்றொரு துறை சிந்துபூந்துறை யாகும். இத்துறையில்

ஆற்றின் இடையில் திருவுருமா என்ற முருகன்  தலம் அமைந்துள்ளது.

அங்கே உயரமான பாறையொன்றில் முருகக் கடவுளின் திருவுருவம்

உள்ளது. அப்பாறையே திருவுருமாமலை யாகும். அவ்வாலயத்தைச்

சார்ந்து ஒரு பெரிய மண்டபம் உள்ளது. நாடோறும் உள்ளூர் மக்களும்

வெளியூர் மக்களும் அங்கு வந்து ஆற்றில் நீராடி அம்மண்டபத்தில்

பார்த்திப பூசை, உடையவர் பூசை, ஏட்டருச்சனை முதலியன  நிகழ்த்தி

விட்டுத் தத்தம் இடங்களுக்குத் திரும்பிச் செல்வது வழக்கம்.


ஏறத்தாழ நூறு/நூற்றிருபது ஆண்டுகளுக்கு முன்பு  சைவப்பிரபுவாகிய

செட்டியார் ஒருவர் குறுக்குத்துறைக்குவந்து நீராடிவிட்டு  மண்டபத்தில்

பூசை நிகழ்த்தத் தொடங்கினார். வேலைப்பாடமைந்த ஒரு பெட்டியிலிருந்து

மூர்த்திகளையும் வெள்ளியினால் உருவாக்கப்பட்ட பூசைப் பாத்திரங்களையும்

சரிகைக்கரையிட்ட பட்டுப் பரிவட்டங்களையும் வெளியே எடுத்து வைத்தார்.

வேறொரு பிரம்புக் கூடையிலிருந்து பலவிதமான பழவகைகள், தேன், பன்னீர்,

பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, கலவைச் சந்தனம், மலர்மாலைகள் முதலானவற்றை 

எடுத்து வைத்தார். அவர் பரப்பிவைத்த பொருட்களெல்லாம் அருகிலிருந்தோர் 

கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன. நறுமணம் அவர்கள் மூக்கைத் துளைத்தது.


சற்று நேரத்தில் சைவகுரு ஒருவரும் அங்கே வந்து சேர்ந்தார். அவர் ஏழ்மை நிலை

யில்உள்ளவர் போலும். அவர் தம்முடைய பழைய பிரப்பம் பெட்டியைத் திறந்து சில மூர்த்தி

களையும்  கந்தல் பரிவட்டங்களையும் சில பூசைப் பாத்திரங்களையும் வெளியே எடுத்து

வைத்தார். கந்தல் பரிவட்டத்தை நீரில் நனைத்துப் பிழிந்து உலர்த்தினார். அவரும்

பூசையைத் தொடங்கினார். அவர் மனத்தில் தாழ்வு மனப்பான்மை பீறிட்டெழுந்தது.

அருகிலிருந்த செல்வந்தரான செட்டியார்பால்  காரணமில்லாமல் பொறாமை உருவானது.

செட்டியார் தம் பரிவட்டம் ஒன்றை நமக்குத்தந்தால் குறைந்தா போய்விடுவார்?  நாமும்

கடவுளுக்குச் சாத்தி மகிழலாமே என்று எண்ணினார். நேரடியாக அவரிடம் கேட்பதற்கு

வெட்கப்பட்டுத்  தயங்கினார். அவர் நல்ல தமிழ்ப் புலமை கொண்டவராதலால் உடனடியாகப்

பாடல் ஒன்றை இயற்றினார். வழக்கம்போல் தேவாரம், திருவாசகம் போன்ற பழமையான

பாடல்களைப் பாடிய பின்னர் உரத்த குரலில் தாம் புதிதாக இயற்றிய பரிவட்டம்  வேண்டும்

பாடலைப் பாடத் தொடங்கினார். அப்பாடல் பின்வருமாறு:

"நரிவட்டம் இருங்களத்தில் அந்தகா சுரனைவென்ற

      நம்பா! செம்பொற்

கிரிவட்டத் தனத்(து)உமையாள் பங்காளா! எளியன்மொழி

      கேளா(து) ஏனோ?

கரிவட்டத்(து) உரிபுனைந்த குறையோ?நம் செட்டியார்

       கையில் மேவும்

பரிவட்டம் தனில்நினைவோ? வேண்டுமென்றால் அவரதனைப்

பாலிப் பாரே."

பொருள்: நரி வட்டமிடும் போர்க்களத்தில் அந்தகாசுரனை வென்ற

சிவபெருமானே! உமையம்மையை இடப்பக்கத்தில் உடையவனே!

எளியேனின் சொல் கேளாதது ஏனோ?  யானையின் தோலைப்

போர்த்தியிருக்கும் மனக்குறையோ?(தாருகாவனத்து முனிவர்கள்

ஏவிவிட்ட யானையைக் கொன்று அதன் தோலை உரித்துப் போர்த்திக்

கொண்டதாகப் புராணம் கூறும்.) அருகிலிருக்கும் செல்வந்தரான

செட்டியார் கையிலுள்ள பரிவட்டம் பற்றிய நினைவா? வேண்டுமென்று

நீ தெரிவித்தால் செட்டியார் பரிவட்டம் ஒன்றைக் கொடுப்பாரே.

சைவகுரு தமது உள்ளக்கிடக்கையைச் சிவபெருமான் கோரிக்கையாக

எடுத்துரைத்த தந்திரத்தை மெச்சத்தான் வேண்டும்.


செல்வச் செட்டியார் சைவகுருவைவிடவும் கெட்டிக்காரர். பரிவட்டம்

வேண்டுமென்று தம்மிடம் நேரடியாகக் கேட்கத் தயங்கிச் சிவபெரு

மான் வேண்டுவது போலப் பாடுகின்றாரோ?  என்று

சிந்தித்துத் தாமும் சைவகுருவைப் போலவே பாட்டால் விடையளித்து

விடுதலே நன்று என்ற முடிவெடுத்துப் பாடல் இயற்றத் தொடங்கினார்.

சைவகுருவைப் போலச் செட்டியார் பெரும் புலவர் அல்லர். ஓரளவே

புலமையுடையவர். எனவே தியானத்தில் இருப்பதுபோல் கண்களை

மூடிக்கொண்டு வெகுநேரம் சிந்தித்து இறுதியில் பாடலை இயற்றி

முடித்தார். உடனே கண்களைத் திறந்து சைவகுருவைவிடவும் உரத்த

குரலில் பாடத் தொடங்கினார்:

"கொத்தாரும் குழலுமையாள் வாழும் பங்கிற்

        கோமானே! எளியன்மொழி கொள்ளா        தேனோ?

அத்தார்கள் ஆணை;யென(து) ஐயன் ஆணை;

         அம்மைமேல் ஆணை;யுயர் அண்டர்    ஆணை;

பத்தார்கள் ஆணை; யுன்றன் பாத‌த்(து) ஆணை;

         பண்டாரம் தொண்டைகட்டப் பாடிப் பாடிச்

செத்தாலும் எலும்பெலும்பாய்த் தேய்ந்திட்  டாலும்

          தேவரீர் உடைமையொன்றும் செலவி டேனே".

பொருள்:

உமையம்மையை இடப் பக்கத்தில் கொண்ட கோமானே!

எளியேனின் பேச்சைக் கேளாதது ஏனோ? பெரிய சமயத்

தலைவர்கள்மேல் ஆணை; என் ஐயன் சிவபெருமான்மேல் ஆணை;

உமையம்மைமேல் ஆணை; முப்பத்து முக்கோடி தேவர்கள்மேல்

ஆணை; பக்தகோடிகள்மேல் ஆணை; ஈசனே! உன் பாதத்தின்மேல்

ஆணை; சைவகுரு தொண்டைகட்டும்படி பாடிப் பாடிச் செத்தாலும்

எலும்புகள் வெளியே தெரியும்படி உடல் தேய்ந்திட்டாலும்

தேவரீர்! உமக்காக நான் வைத்துள்ள பொருள் எதனையும் செலவு

செய்யமாட்டேன், அதாவது, உமக்குரிய பொருளை நான் பிறருக்குத் தரமாட்டேன்."

சைவகுரு விடாக்கண்டர்;  செல்வந்தரான செட்டியார் கொடாக்கண்டர்.


பார்வை:

'நான் கண்டதும் கேட்டதும்' நூல் ஆசிரியர் டாக்டர் உ.வே.சாமிநாதையர்.