Saturday 20 January 2024

பரிபாடல் கூறும் யானை வழிபாடும் கவழ மிச்சிலும்.

 பரிபாடல் கூறும் யானை வழிபாடும் கவழ மிச்சிலும்.


நிலத்தில் வாழும் உயிரினங்களில் மிகப் பெரியது யானை ஆகும். முற்

காலத்தில் டைனோசர் என்னும் மிகப் பெரிய உயிரினம் வாழ்ந்ததாகச்

சொல்லப்படுகிறது. ஆனால், இன்று அத்தகைய விலங்கினம் உயிர் வாழவில்லை.

யானையின் உயர்ந்த மற்றும் பருத்த உடலமைப்பு ஓரளவு அச்சமூட்டினாலும்

அனைவர்க்கும் யானையின் மீது ஈர்ப்பு ஏற்படுவது மறுக்க இயலாத

உண்மை.


யானைக்கும் நமக்கும் உள்ள தொடர்பு மிகமிகத் தொன்மையானது. மனித

இனம் உலகில் தோன்றிய காலத்திலேயே அல்லது அதற்கும் முற்பட்ட காலத்தி

லேயே யானை தோன்றியிருக்கக் கூடும். யானை காட்டு விலங்காக இருப்பினும்

இன்றுவரை யானைகள் வீட்டு விலங்குகள் போலவே வளர்க்கப்படுகின்றன.

கோவில்களிலும், பரம்பரை பரம்பரையாக யானை வளர்ப்போர் வீடுகளிலும் அரசு

அனுமதி பெற்று வளர்க்கப் படுகின்றன. 


நம் இலக்கியங்களில் யானையைப் பற்றிய செய்திகள் பரவலாகக் காணப்படும்.

சங்க இலக்கியம் முதல் இன்றைய கால இலக்கியம் வரை யானையைப் பற்றிய

செய்தி/தகவல் நிச்சயமாக இடம்பெற்றிருக்கும். சிறுவர் முதல் பெரியோர் ஈறாக

அனைவருமே யானையைப் பற்றிய செய்தியைப் படித்து இரசிப்பர்.. ஏனெனில்

குழந்தைப் பருவத்திலிருந்தே யானை நம்மைக் கவர்ந்திழுக்கத் தொடங்கிவிடுகிறது.

யானையின் செம்மாந்த தோற்றமும் நடையும் நம் கண்களை விட்டு அகலா. சிறு

வயதில் பெற்றோருடன் கோவிலுக்குச் சென்றால் தவறாமல் யானையைக் கண்டு 

குதுகலம்அடைந்து சற்று அச்சத்துடன் அதன் தும்பிக்கையினால் ஆசீர்வாதம் பெற்றுப் 

பரவசம்அடைந்த நிகழ்வு  பசுமையாக இருக்கிறது.


சங்க காலத்தில் மன்னர்கள் ஆட்சி செய்தனர். அதனால் மன்னர்களுக்குள் அடிக்கடி

போர் நடைபெற்றது. அப்போது  போர்களில் யானைகளைப் பயன்படுத்தினர்.

இளைஞர்கள் யானையுடன் போர்செய்து பழகுதல் வேண்டும். புறநானூற்றில்

புலவர் பொன்முடியார் பாடிய பாடலில்(பாடல் எண்:312) பின்வருமாறு பாடியுள்ளார்:

"ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;

சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே;

வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;

ஒளிருவாள் அருஞ்சமம் முருக்கிக்

களி(று)எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே".

தனியொருவனாக யானையுடன் போர்புரிந்து அதனைக் கொல்லுதல் இயலாத செயல்.

வேல்கொண்டோ வாள்கொண்டோ அதனைத் தடுக்க முயற்சி செய்யலாம். அதனைக்

காயப்படுத்தி அச்சுறுத்தி விரட்டலாம். அதனை வெல்ல முடியாது.

எனவேதான் வள்ளுவர் பின்வருமாறு பாடினார்:

"கான முயலெய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது.'


நற்றிணை ஒரு காட்சியைச் சொல் ஓவியமாகக் காட்டுகிறது:

"புலிபொரச் சிவந்த புலாவஞ் செங்கோட்(டு)

ஒலிபன் முத்தம் ஆர்ப்ப வலிசிறந்து

வன்சுவல் பராரை முருக்கிக் கன்றொடு

மடப்பிடி தழீஇய தடக்கை வேழம்

தேன்செய் பெருங்கிளை இரிய வேங்கைப்

பொன்புரை கவழம் புறந்தருபு ஊட்டும்"

யானை கூட்டமாக வாழும் விலங்கு. பிடி(பெண் யானை)

மற்றும் கன்று மீது அதிகமாகப் பாசத்தை வெளிக்காட்டும்.

இப் பாடல் அதனை விளக்குகிறது. புலியுடன் போரிட்ட யானையின்

கோடுகள்(தந்தங்கள்) இரத்தத்தால் சிவந்து காணப்படுகின்றன.

அவற்றில் முத்துக்கள் பதிந்திருப்பது போலத் தோன்றும். அதிலிருந்து

புலவு நாற்றம் வருகிறது. அந்த வேழம்(ஆண் யானை) வேங்கை

மரத்தின் பருத்த அடியை முறித்துத் தன் கன்றுடனே பிடியை(பெண்யானையை)

அணைத்துக்கொண்டு வேங்கை மரத்தின் பூக்களை அவை உண்ணுமாறு

ஊட்டும். அவ்வளவு பாசம் உடையது யானை.


இனி, கலிங்கத்துப் பரணியில் போர்க்களக் காட்சியைக் காண்போம்.

சோழநாட்டுக் களிறும் கலிங்க தேசத்துக் களிறும் மோதிக் கொண்டன.

"மருப்பொடு மருப்பெதிர் பொருப்பிவை எனப்பொரு

மதக்கரி மருப்பினிடையே

நெருப்போடு நெருப்பெதிர் சுடர்ப்பொறி தெறித்தெழ

நிழற்கொடி தழற்கதுவவே"

(பாடல் எண்:411)

இரு மலைகளைப்போல மதங்கொண்ட களிறுகள் தம் தந்தங்களால்

ஆவேசமாக மோதிக் கொள்ள அவைகளின் தந்தங்களுக்கிடையே

தீப்பொறி எழுந்து நிழலுக்கு ஏற்றியிருந்த துகிற்கொடிகளைப் பற்றியது.


பரிபாடலில் செவ்வேளைப் பற்றிய(முருகனைப் பற்றிய) பத்தொன்பதாம்

பாடலில் யானைவழிபாடு குறிப்பிடப்படுகிறது. முருகனுக்குரிய யானை

யின் நெற்றியில் குங்குமத்தால் அழகுபடுத்திப் பூவோடு கூடிய நீரைத்

தெளித்துச் செவிக் கவரியைச் சார்த்திப் பொலிந்த பவழத்தாற் செய்த

நல்ல காம்பினை உடைய பொற்குடையை மேலே எடுத்து மனமகிழ்வுடன்

பூசனை புரிவர். அப்பொழுது அந்த யானைக்கு அளிக்கப்படும் கவழ மிச்சிலை

(யானை உண்டு மிச்சமிருக்கும்  உணவை)  உண்ணாவிட்டால் பெண்டிர்  தம் காதலரின்

அன்பை அடைய மாட்டார். கன்னிப் பெண்கள் நல்ல கணவரை அடையமாட்டார்.

இது அந்தக் காலத்தில் நிலவிய நம்பிக்கை. பாடல் வருமாறு:

"கன்னிமை கனிந்த காலத் தார்நின்

கொடியேற்று வாரணம் கொள்கவழ மிச்சில்

மறுவற்ற மைந்தர்தோள் எய்தார்;; மணந்தார்

முறுவல் தலையளி எய்தார்;நின் குன்றம்

குறுகிச் சிறப்புணாக் கால்".


யானை நம் நாட்டுக்குக் கிடைத்த அரும் பெரும் சொத்து. அதனைத் துன்புறுத்

தாமல் பேணிப் பாதுகாப்பது நமது கடமை.


பார்வை:

சங்க இலக்கிய வெளியீடு, வர்த்தமானன் பதிப்பகம்.


"

Friday 5 January 2024

தென்மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புதல் எக்காலம்?

 தென்மாவட்ட மக்களின் இயல்பு வாழக்கை திரும்புதல் எக்காலம்?


செம்மாந்து  திகழ்கின்ற   தமிழ்நாட்டின்  தென்பகுதி

       சிதைந்து வீழ

அம்மா!எம்  இயற்கையன்னாய்!  அடைமழையைப் பொழிவித்தாய்,

       அரண்டு  போனோம்;

விம்மாத்தல் செய்துநெஞ்சம் துடிதுடித்தோம்; கணீருகுத்தோம்;

       வெந்தோம், நொந்தோம்;

இம்,மாதுன் பத்தைவெல்ல வழியின்றித் தவிக்கின்றோம்,

        என்செய் வோமே?


முத்துக்  குளிப்பதிலே  முன்னின்றோம்; வான்பரப்பில்

பொத்துக்கொண்  டாற்போல்  பொழிந்த  பெருமழையால்

எத்திக்கும் வெள்ளம்;  இடுப்பு,  கழுத்துமட்டம்

சொத்து பொருளையெல்லாம் சூழ்ந்திழுத்து வந்ததுவே;

கத்தும் உயிரினங்கள் கண்ணிமைக்கும் நேரத்தில்

செத்து மிதந்தனவே; சிற்றில்லம் அத்தனையும்

பொத்துப்பொத் தென்று பொருத்துவிட்டு வீழ்ந்தனவே;

மொத்த இழப்பை மொழிந்தால்  மனம்நோகும்.


நன்செய் நிலமெல்லாம் நாசமுற்றுப் போயினவே;

அன்பாய் வளர்த்தபயிர் அய்யோ,வீண் ஆனதுவே;

தென்பாய் நடந்த சிறுகுறு வாணிகமும்

பொன்போற்  பொலிந்த பெருங்கொண்ட வாணிகமும்

தின்பண்ட வாணிகமும் சேதாரம் உற்றனவே;

தன்னம்பிக்  கைகெட்டுத் தள்ளாட நேர்ந்ததுவே;

மன்னவர்போல்  வாழ்ந்த  வளமான  வாழ்விழந்(து)

இன்னலுக்கா  ளானோரின்  எண்ணிக்கை  ஏராளம்.


வெள்ளமது  சிதைத்துவிட்ட. தென்மா வட்டம்

        மீண்டுவர  வெகுகாலம்  தேவை  யாகும்;

கள்ளமற்ற  பொதுமக்கள்  வாழ்வா  தாரம்

        கடும்வேக  வெள்ளத்தால்  பறிபோ யிற்றே;

உள்ளபடி மாந்தர்களின்  உள்ளச்  சோர்வை

        உடனடியாய் நீக்குதற்கும், வாழ்வா  தாரம்

விள்ளரிய  முறையினிலே  உயர்த்து  தற்கும்

       விரைவாக  நிதிதேவை;  திரட்டு  வோமே.


பொருள்நிறைந்தார் மனதார அள்ளித் தந்தார்;

        பொருள்குறைந்தார் உவகையுடன் கிள்ளித் தந்தார்;

இருள்நிறைந்த மழைவெள்ளச்  சேதந்  தன்னை

         எப்படியும்  முறியடித்துத்  துயருற்  றோரின்

மருள்நிறைந்த வாழ்வினிலே தெளிவுண்  டாக்கி

         வருங்கால வாழ்வையெதிர்  கொள்ளச்  செய்ய

அருள்நிறைந்த மையப்பே  ரரசில்  உள்ளோர்

         அரசுநிதி சாலவுமே  கொட்டித் தாரீர்.

(மையப் பேரரசு=நடுவண் அரசு)


மாநில  அரசும்  சீரார்  மையப்பே  ரரசும்  கூடி

ஊனெலாம் ஒடுங்கி யுள்ளம்  உருக்குலை வுற்று வாடும்

நானில மக்க ளெல்லாம் நலம்பெறத் திட்டம் தீட்டி

மேனிலை அடையும் வண்ணம் விரைவினில் சேவை செய்க.

(நானில மக்கள்=தூத்துக்குடி,திருநெல்வேலி,கன்னியாகுமரி,

தென்காசி முதலிய நான்கு மாவட்ட மக்கள்)


இருகரம் கூப்பி இந்த இரண்டுபே ரரசு தம்மை

உரிமையாய்க் கேட்டுக் கொள்வோம், உடனடிச் செய்கை வேண்டும்

தருணமி தனைநீர் ஓர்ந்து  தள்ளுக பயனில் வாதம்;

ஒருமையாம் கருத்தைப் பற்றி ஓம்புக மக்கள் தம்மை.

(ஒருமை=ஒற்றுமை; ஓம்புவோம்=பாதுகாப்போம்)