Thursday 27 January 2022

தன்னைத் தானே மாய்த்துக் கொண்ட தமிழறிவாள்.

 கண்ணாடியால் உயிரைப் போக்கிக்கொண்ட  தமிழறிவாள்.


உறையூரில் கணிகையர் குலத்தில் மரகதவடிவு என்ற பெண்

செல்வாக்கோடு வாழ்ந்து கொண்டிருந்தாள். அவளுக்கு ஒரு

பெண்குழந்தை பிறந்தாள். அக்குழந்தைக்குச் சண்பகவடிவு

என்ற பெயர் சூட்டி வளர்த்து வந்தாள். நாளொரு மேனியும்

பொழுதொரு வண்ணமுமாக அக்குழந்தை அழகும் பொலிவும்

மிளிர வளர்ந்துவந்தாள். ஐந்து வயது நிறைந்தவுடன் தகுதியான

ஆசிரியரிடம் கல்வி பயில ஏற்பாடு செய்தாள் மரகதவடிவு. மேலும்

தனித்தனி ஆசிரியர்களிடம் இசையும், நடனமும் கற்பதற்கும் உரிய

ஏற்பாடுகளைத் தொடங்கினாள். பன்னிரண்டு வயது நிறைவுற்ற

பொழுது சண்பகவடிவு இயல், இசை, நடனம் ஆகிய மூன்று துறை

களிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தாள். இருப்பினும் கல்வியைக்

கைவிடாமல் மேன்மேலும் கற்றுத் தமிழில் பெரும்புலமை பெற்றாள்.

இதனைக் கேள்விப்பட்ட சோழவேந்தன் அவளுக்குத் தமிழறியும்

பெருமாள் என்னும் பட்டத்தை அளித்தான். நாளடைவில் சண்பகவடிவு

என்னும் பெயர் மறைந்து தமிழறியும் பெருமாள் என்ற பெயரே நிலைத்து

விட்டது. பதினாறு வயதில் தமிழறிவாள் அழகிலும் அறிவிலும் இசை,

நடனம் முதலான கலைத் தேர்ச்சியிலும் ஒளிர்ந்துகொண்டிருந்தாள்.

இது காரணமாக அவளுக்குப் புலமைச் செருக்கும் கலைச் செருக்கும்

தோன்றி நாள்தோறும் கூடிக்கொண்டே வந்தன.


இவளது அழகு, அறிவு, ஆற்றல் முதலானவற்றைக் கேள்விப்பட்ட

சோழவேந்தன் தன் அவைக்கு அன்றாடம் காலை, நண்பகல் மற்றும்

மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் வந்து கலைநிகழ்ச்சிகள் நடத்த

ஆணையிட்டான். அவளுக்குப் பல்லக்கு பரிவார வசதிகள் செய்து

கொடுத்து மகள் போலப் பரிவும் அன்பும் செலுத்திவந்தான். தமிழறியும்

பெருமாள் மன்னனிடம் ஒரு வேண்டுகோள் வைத்தாள். தன் குல மரபுப்படி

தன்னை நாடி வருவோரிடம் தான் ஆயிரம் பொன் கேட்டுப் பெற எண்ணி

யுள்ளதாகவும்,  வரவிருக்கும் நபர்களுக்குப் புலமைச் சோதனை நடத்தத்

திட்டமிட்டுள்ளதாகவும் அச்சோதனையில் தோல்வியடைவோரை விரட்டிவிட

முடிவெடுத்துள்ளதாகவும் அதற்கு மன்னன் அனுமதியளித்தல் வேண்டும்

என்றும்  கோரிக்கை விடுத்தாள். அறிவுசார்ந்த நிகழ்ச்சி தானே என்ற நம்பிக்

கையில் வேந்தன் அவள் கோரிக்கைக்குச் சம்மதித்தான். அதன்படி நாளும்

தன்னை நாடி வருவோரிடம் கவி சொல்லிப் பொருள் கூறுமாறு சோதனை

செய்தாள். ஒருவரும் தக்க பொருள் கூறாததால் பணத்தை இழந்து  விரட்டுப்பட

நேர்ந்தது. தமிழறிவாளுக்குப் பணம் குவியத் தொடங்கியது. மேலும் அவள்

கன்னி கழியாமல் உடலைப் பேணிக் கொண்டாள். இதனாலும் அவள் ஆணவம்

பெருகியது.


ஒருநாள் அவள் பல்லக்கில் அரண்மனைக்குச் சென்றுகொண்டிருந்த பொழுது

தெருவில் நின்றுகொண்டிருந்த விறகுதலையன் ஒருவனைப் பார்க்க நேர்ந்தது.

அவன் கறைபடிந்த பற்களுடன் அருவருக்கத்தக்க தோற்றத்தில் கந்தல் துணி

யுடன் காட்சியளித்தான். அவள் உடனே தன் தோழியைப் பார்த்து "இவனைப்

போன்ற ஆடவரை எந்தப் பெண்ணாவது விரும்புவாளா" என்று கேட்கத்

தோழி "இவனைப் போன்றோரை விரும்பும் பெண்களும் உலகில் இருக்கத்தான்

செய்கின்றனர்" என்றாள்.  தோழி உரையைக் கேட்ட தமிழறிவாள் உடனே விறகு

தலையனை நோக்கிக் காறியுமிழ்ந்தாள். விறகு தலையன் இதனைக் கண்டு

அதிர்ச்சியடைந்து அருகிலுள்ளவர்களிடம் தமிழறிவாளின் செய்கை பற்றிச்

சொன்னான். அவர்கள் இதுபோல் அன்றாடம் நடைபெறுவதாகவும் அவள் ஆணவம்

எல்லைமீறிச் செல்வதாகவும் தெரிவித்தனர். விறகு தலையன் அவர்களிடம் அவளைச்

சந்திக்க வாய்ப்புண்டா? என்று வினவினான். அதற்கு அவர்கள் ஆயிரம் பொன்னுடன்

சென்றால் அவளைச் சந்திக்கலாம் என்று மறுமொழி கூறினர்.


விறகு தலையன் காட்டுக்குச் சென்று தன் வழக்கமான பணிகளைக் கவனிக்கத்

தொடங்கினான். விறகுக்குத் தோதான மரக்கிளைகளை வெட்டித் தறித்து அடுக்கிக்

கொண்டிருந்தான். கடும் உழைப்பினாலும் வெயிலின் கொடுமையாலும் உடல் சோர்வுற்றது.

அருகிலிருந்த ஒரு மாமரத்தினடியில் துண்டை விரித்துப் படுத்துக் கொண்டான். 

அந்த மாமரத்தில் ஒரேஒரு மாம்பழம் கனிந்து தொங்கிக்கொண்டிருந்தது. அப்பொழுது

எதிர்பாராது வீசிய பலத்த காற்றால் கனி உதிர்ந்து விறகு தலையன் மீது விழுந்தது. அவன்

தூங்கி எழுந்தபிறகு உண்ணலாம் என்று தன்னருகிலேயே வைத்துக்கொண்டு தூக்கத்

தைத் தொடர்ந்தான். இதற்கிடையில் அம்மாமரத்தடியில் ஒரு முனிவர் ஏதோ ஒன்றைத்

தேடிக் கொண்டிருந்தார். சுற்றுமுற்றும் பார்த்தார். வெகுநேரம் தேடியும் அவர் தேடிய

பொருள் கிட்டாததால் உறங்கிக்கொண்டிருந்த விறகு தலையனை எழுப்பி "இம் மாமரத்

திலிருந்த கனியைக் கண்டாயா?" என்று வினவினார். அவன் உடனே எழுந்து "ஆம் ஐயா;

இம் மாமரத்திலிருந்து ஒரு கனி காற்றால் உதிர்ந்து கீழே விழுந்தது. நான் அதனை எடுத்து

வைத்துள்ளேன்" என்று கூறித் தான் வைத்திருந்த கனியை முனிவரிடம் நீட்டினான். அவர்

அக்கனியைக் கண்டு பெருமகிழ்ச்சியடைந்து "நல்ல செயல் செய்துள்ளாய்.. இது ஒரு 

அதிசய மாமரம். ஆண்டுக்கு ஒருமுறைதான் காய்க்கும். ஒரேஒரு கனி கொடுக்கும். நான் 

பல ஆண்டுகளாக இக்கனியைத் தவிர வேறெதையும் உண்ணாமல் வாழ்ந்து வருகிறேன்.

ஆண்டு முழுவதும் உண்ணாநோன்பிருந்து  இந்தக் கனி கிடைத்தவுடன் அதனை உண்டு

உயிர் வாழ்ந்து வருகிறேன். இந்தக் கனியைக் காணாமல் பதறிப் போய்விட்டேன். நல்ல

வேளை நீ எடுத்து வைத்திருந்தாய். உனக்கு ஒரு வரம் தருகிறேன்  இந்தக் காட்டிலுள்ள

பல மரங்களைச் சந்தன மரங்களாக மாற்றி விடுகிறேன். நீ அவைகளை வெட்டி விற்பனை

செய்து பொருள் சேர்த்துப் பணக்காரனாகலாம். மிக்க நன்றி." என்று கூறிச் சென்றுவிட்டார்.


விறகு தலையன் நல்லூழ் காரணமாகக் காட்டிலிருந்த பல மரங்கள் சந்தன மரங்களாக

மாறியிருந்தன. அவன் மற்ற மரக்கிளைகளை வெட்டித் தறித்து அடுக்கும் பொழுது ஒரு

கட்டுக்கு ஒன்றிரண்டு சந்தன மரத்துண்டு விகிதம்  சேர்த்துக் கட்டி விற்பனை செய்து

விரைவில் பணக்காரனானான். ஆயிரம் பொன்னைக் கொட்டி ஒரு பொற்கிழி உருவாக்கி

அதனை எடுத்துக் கொண்டு தமிழறியும் பெருமாளின் இல்லம் நோக்கி நடந்தான்.

அவனது நோக்கம் அவள் தன்னைப் பார்த்துக் காறியுமிழ்ந்ததைக் கண்டிப்பதும்

வாய்ப்புக் கிடைத்தால் அவளோடு பழகி உறவாடலாம் என்பதும். ஆனால் இவை

நிறைவேறும் என்ற நம்பிக்கை  அவனுக்கில்லை. தமிழறிவாளின் இல்லம் 

அரசனது அரண்மனையைப் போல் மதிற்சுவரோடும் கட்டுக்களோடும் விரிந்து

பரந்திருந்தது. ஒவ்வொரு கட்டின் முன்பும் பாதுகாப்புக்காக வலிமையான விலங்குகள்

நிறுத்தப்பட்டு(யானை, புலி, கரடி, கருங்குரங்கு, செந்நாய் போன்ற விலங்குகள்)

விளங்கியது. அவள் இல்லத்தின் முன்பு. நின்றான். அங்கிருந்த பணிப்பெண்கள் "தமி

ழறியும் பெருமாளைச் சந்திக்க வேண்டுமென்றால் ஆயிரம் பொன் செலுத்துதல் வேண்டும்; அவர்கள் ஒரு

கவி சொல்லுவார்கள். அதற்குப் பொருள் கூறல் வேண்டும். பொருள் கூறத் தவறினால்

முதற் கட்டிலிருந்து அடுத்த கட்டுக்குச் செல்ல இயலாது; இந்த இல்லத்திலிருந்து வெளி

யேற்றப் படுவீர்; ஆயிரம் பொன்னையும் இழக்க நேரிடும்" என்று உரைத்தனர். விறகு

தலையன் இந்த நிபந்தனைகளுக்குச் சம்மதித்து ஆயிரம் பொன்னையும் செலுத்தி முதற்

கட்டுக்குள் நுழைந்தான். அங்கிருந்த தாதியர் இவனை அற்பமாகப் பார்த்துவிட்டுப் பல

கட்டுக்களைக் கடந்து தமிழறிவாள் வாழும் பகுதிக்குச் சென்று விறகுதலையனைப்

பற்றி எடுத்துரைத்தனர். அவள் உடனே ஒரு ஓலை நறுக்கில் ஒரு கவியை எழுதி அவர்

களிடம் கொடுத்து விறகுதலையனிடம் திரும்ப அனுப்பி வைத்தாள். அப் பணிப்பெண்கள்

விறகு தலையனிடம் அந்த ஓலை நறுக்கைக் காட்ட அவன் திருதிருவென்று விழித்தான்.

அவன் கல்வி கற்காதவன் ஆதலால் ஓலை நறுக்கில் உள்ள கவிக்குப் பொருள் கூற

இயலாமல் பணிப் பெண்களால் விரட்டப்பட்டான். 

(விறகு தலையன்=விறகு சுமந்து விற்போன்)


தமிழறிவாள் இல்லத்திலிருந்து அடித்து விரட்டப்பட்ட விறகு தலையன்

அங்கு பணிபுரியும் தாதியரிடம் பெருங்குரலில் கத்தினான் " என்னிடம்

ஆயிரம் பொன் வாங்கிக்கொண்டு ஏமாற்றலாமா? நான் கொடுத்த பணையத்துக்கு

ஒப்புக்கொடுக்க வேண்டாமா?"" என்று அலறினான். உடனே பணிப்பெண்கள்

"ஈதென்ன வம்பு? இதுவரை எத்தனையோ நபர்கள் இதுபோல் விரட்டப்பட்டனர்;

யாரும் வம்பு வழக்கு தொடுக்கவில்லையே" என்று வியந்து கூறிவிட்டு இல்லத்துக்குள்

சென்றுவிட்டனர். பின்பு விறகு தலையன் தன்னைப் போல விரட்டப்பட்ட நபர்களைச்

சந்தித்து ஆலோசனை கேட்டான். "இவ்வூரிலும் தமிழறிவாளுக்குச் சமமான புலமை

கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்; ஆனால் அவளிடம் தோற்று அவமானம்

அடைய நேரிடுமோ என்று தயங்குகின்றனர். நீர் மதுரைக்குச் சென்று சங்கப் புலவர்கள்

நாற்பத்தொன்பது பேர்களில் யாரையாவது அழைத்து வந்தால் அப்படிப்பட்டவர் அவளை

வெல்ல வாய்ப்பு உண்டு. உடனே மதுரைக்குச் செல்க" என்ற அறிவுரை சொன்னார்கள்.


விறகு தலையன் உடனே கிளம்பி மதுரையை நோக்கிப் பயணம் மேற்கொண்டு மூன்றாம்

நாள் மதுரையை அடைந்து சங்கப் புலவர்களைச் சந்தித்து நடந்த நிகழ்வை விவரித்தான்.

நாற்பத்தொன்பது புலவர்களும் கலந்து ஆலோசித்துத்  " தலைமைப் புலவர் நக்கீரர் தாம்

இந்தச் சிக்கலைத் தீர்க்கும் திறமையுடையவர். அவர் இந்த விறகுதலையனுடன் உறையூர்

சென்று தமிழறிவாளை வென்று திரும்பட்டும்" என்று கூறினர். அதன்படி ஏற்பாடுகள் செய்யப்

பட்டன.  நக்கீரர் விறகுதலையனிடம் தமிழறிவாள் இல்லத்திலுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள்,

இல்ல அமைப்பு, விந்தையான விடயங்கள் மேலும் இவைபோன்ற பிற செய்திகளைத் தெரிவிக்

கச் சொன்னார். "அவள் இல்லத்தில் ஏழு மதிற்சுவர்தளும் அறுபத்துநான்கு கட்டுக்களும் உள்ள

தாகவும் ஒவ்வொரு கட்டுக்கும்  மொண்ணச்சிகள், கற்றுச்சொல்லிகள், சூத்திரப் பதுமைகள்

யானை, புலி, கரடி, குரங்கு, வேட்டை நாய், தானாக மூடிக் கொள்ளும் கிணறு, குங்குமச் சேறு,

சித்திர மண்டபம், கச்சேரி மண்டபம், தந்திர வேலைப்பாடு மிக்க கட்டில்கள் இருப்பதாகப் பேச்சுண்டு" என்றான். நக்கீரர் விறகு தலையனிடம் சில பொருட்களை வாங்கிவரச் சொன்னார்.

எண்ணெய்ச் சீலை, மூங்கிற்கழி, செம்பருத்திப் பூ, மல்லிகைப் பூ, காந்தக் கல், கட்டெறும்பு, 

நண்டு, வாழைத் தண்டு, கரும்பு, எலுமிச்சம் பழம் முதலியவற்றை வாங்கி வந்தான். இருவரும்

ஆயத்தம் செய்த பொருட்களோடு உறையூர்க்குப் பயணப்பட்டார்கள். மூன்றாம் நாளில் திருச்சி

யை அடைந்தனர்.  அங்கிருந்து மேற்கே பார்த்தபொழுது தமிழறிவாளின் இல்லம் தெரிந்தது..

"இதுவோ திருச்சி?இதுவோ உறையூர்?

இதுவோ தமிழறிவாள் எல்லை?----இதுவோ

இறைவளர்க்கும் சங்கம்? இவள்அழிப்ப தென்னே?

குறைவறத்தான் வெல்வேன் குறித்து" எனச் சூளுரைத்தார் நக்கீரர்.

உறையூரை மாலையில் அடைந்தவர்கள் நேரே தமிழறிவாள் இல்லத்துக்குச் சென்றனர். அவசர அவசரமாக

நக்கீரர் தம் பட்டாடை, தலைப்பாகை, கடுக்கன் முதலானவற்றை அகற்றி விறகுதலையனிடம்

ஒப்படைத்துவிட்டு அவனது அழுக்குப் படிந்த உடைகளைத் தாம் உடுத்திக்கொண்டார். அவனது

துண்டைத் தலையில் சுற்றிக்கொண்டு வாழைத்தண்டைத் தலைமேல் வைத்துக் கொண்டார்.

விறகு தலையன் ஆயிரம் பொன் கொண்ட பொன்முடிப்பை  நக்கீரரிடம் கொடுத்தான்.


நக்கீரர் முதல் கட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த தாதியரிடம் பொன்முடிப்பை யளித்தார்.

"விலைக்கு விறகு கொள்வீர்" என்னும் பொருள்படும் கீழ்க்கண்ட பாடலைப் பாடினார்:

"வெய்யோன் கதிரெரிப்ப வேற்கண்ணாள் பின்தொடரப்

பையவரு தென்றல் பயனறியேன்---துய்ய

மலர்த்தடங்கண் வாய்ந்த மயிலனையீர்! கொள்வீர்

விலைக்கு விறகோ விறகு".

தாதியர் திகைத்துப் போயினர். இதுவரையிலும் நாம்தான் கவி சொல்லிவந்தோம்.

முதல்முறையாக நம்மை நாடி வந்தவன் கவிசொல்கிறானே என்று  குழம்பினர்.

உடனே பல கட்டுக்களைக் கடந்து தமிழறிவாள் வசிக்கும் பகுதிக்குச் சென்று

அவளிடம்  விறகு தலையன் போல் நடிக்கும் நக்கீரர் மொழிந்த கவியைச் சொன்னார்கள்.

பதிலடியாகத் தமிழறியும் பெருமாள் பணிப்பெண்களிடம் கவிசொல்லி‌ அனுப்பினாள்.

"உள்ளீரம்; பச்சை;  புகையும்; எரியாது; ;

கொள்ளீர் விறகென்று கூறினீர்---மெள்ளவே

வீணரே!  போம்போம்போம் வீணரே! நீரும் தாம்

தாதரே சங்கத் தவர்".

"உம் விறகு ஈரமாயிருக்கும்; பச்சை விறகு; அதனால் அடுப்பில் வைத்தால்

புகையும்; எரியாது; இத்தகைய விறகை வாங்குக எனச் சொன்னீர்; நீர்

வீணரே! போம்" என்றாள்.

"விறகு நன்கு உலர்ந்து காய்ந்துள்ளது. அப்படியே விறகு புகைந்தாலும்

பலகணி(சன்னல்) வழியாகப் புகை போய்விடும். நீலவிழிப் பெண்களுக்கு

என் விறகு நின்று எரியும்.காதுகளில் பருமனான குண்டலம் அணிந்த பெண்களே!

என் விறகை விலைக்கு வாங்குவீர்" என்று சொல்லிக் கொண்டே நக்கீரர்

அடுத்த கட்டுக்குள் நுழைந்தார். இதற்குப் பதிலாக ஒரு கவியைத் தாதியர் மூலம்

சொல்லி அனுப்பினாள். "மரம் வெட்டும் பொழுது பால் வடிந்து ஈரமாக இருந்

திருக்கும். அந்த ஈரம் உலர்ந்து விறகு நன்கு காய்ந்துள்ளதா? உண்மையைப்

புதைக்காமல் உள்ள நிலவரத்தை உள்ளபடியே சொல்லும். வகையாக என்

வாசலுக்கு வந்து உம் விறகைப் புகழ வேண்டா". இதுதான் கவியின் பொருள்.


"ஈரம் உலர்ந்தே எலும்புபோ லேகாய்ந்து

பாரம் குறைந்து பசையுலர்ந்து---நேரே

பிறகொன்றும் இல்லையே தாய்உன்கை யாலே

விறகுதனைக் கொள்க விரைந்து".

என்று பாடிக்கொண்டே நக்கீரர் அடுத்த கட்டுக்குள் நுழைந்துவிட்டார். அவர்

மொழிந்த கவியைப் பணிப்பெண்கள் தமிழறிவாளிடம் போய்ச் சொல்ல அவள்

மறுமொழியைத் தன் கவிமூலமாகச் சொல்லி அனுப்பினாள்.:

"விறகோ விறகென்று மேன்மேலும் கூறும்

விறகுவிற்பான் தன்னருகின் மேவி---விறகு

விலைகேட்டு வாருமென்று மெல்லியலாள் கேட்டாள்

கலைவாய்த் தமிழறிவாள் காண்."


விலைகேட்டுக் கவியனுப்பிய தமிழறிவாளுக்கு "ஒரு கட்டு விறகு

விலை ஆயிரம் பொன் என்று விடையிறுத்துக் கொண்டே அடுத்த

கட்டுக்குள் நுழைந்தார் நக்கீரர். இதற்குத் தமிழறிவாள் ஒரு கவியைத்

தாதியரிடம் சொல்லி அனுப்பினாள். "விறகு பச்சையாய் உள்ளது.

முழுவதும் எரியாது. இவ்வளவு குற்றமுள்ள விறகுக்கு உரிய சரி

யான விலையைக் கேட்டுவந்து  சொல்வீர் கிளி போன்ற பெண்களே!"

இதுதான் இந்தக் கவியின்‌ பொருளாகும்.


"ஐந்நூற்(று) இரட்டிப்பொன்; அப்புறமும் சோறுகறி;

என்னூர் விறகுவிலை இப்படியே---முன்னேநான்

சொன்னபடி யேயொழியச் சொல்லறியாப் பேதைகாள்!

சின்னூல் இடையாட்குச் செப்பு"

கவிபாடிக் கொண்டே நக்கீரர் அடுத்த கட்டுக்குள் நுழைந்தார். பணிப்பெண்கள்

தமிழறிவாள் தங்கியுள்ள பகுதிக்குச் சென்று நக்கீரர் பாடலைச் சொல்ல, அவள்

ஆயிரம் பொன்னும் கறிவகைகளும்  எடுத்துச் சென்று விறகுதலையனாக

நடிக்கும் நக்கீரரிடம் கொடுக்கச் சொன்னாள். நக்கீரர் விறகையும் ஆயிரம் பொன்

னையும் கறிவகைகளையும் பணிப்பெண்களிடமே  கொடுத்து "இவைகளை

உங்கள் தமிழறிவாளிடமே ஒப்படையுங்கள். எனக்குச் சமையல் செய்து போடுங்கள்"

என்று நக்கீரர் கவிமூலமாகச் சொன்னார்.


தாதியர் ஓடிச்சென்று தமிழறிவாளிடம் இதுபற்றிக் கூற அவள் ஆயிரம் பொன்னைப்

பணப்பெட்டகத்தில் சேர்க்குமாறும் கறிவகைகளைத் தொம்பரத்(பலபேர்களுக்காகச்

சமைக்கும் கட்டடம்)தில் சேர்க்குமாறும் சொல்லி, அந்தத் தொம்பரத்திலே சமைத்த

வெந்ததும் வேகாததும் கல்லும் நெல்லும் கொண்ட உணவைப் பரிமாறச் சொன்னாள்.

"கல்லொன்று; நெல்லிரண்டு; காணுமணல் மூன்(று)அரிசி

கல்லையுடன் அஞ்சுவகை காட்டிலேன்---வில்நுதலாய்!

வல்லபடி செய்த வகையெல்லாம் உங்களது

முல்லைநகை யாட்கு மொழி"

என்ற பாடலைப் பாடித் தமிழறிவாள் அளித்த சாப்பாட்டைக் குறை கூறினார்.


நக்கீரரைக் கச்சேரி மண்டபத்துக்கு அழைத்துவரச் சொன்னாள். ஒவ்வொரு கட்டைத்

தாண்டும் போதும் ஒவ்வொரு சிக்கலைச் சந்திக்க நேர்ந்தது. ஒரு கட்டில் சூத்திரப் புதுமைகள்

மிரட்டின.நக்கீரர் தண்டாலடித்தவுடன் அவை கலைந்து சென்றன. புலி வந்த பொழுது தான்

கொண்டுவந்திருந்த செம்பருத்திப்பூவைப் புலிமுன் எறிந்தார். அது இறைச்சி என்று எடுத்துச்

சென்றது. யானை வந்தபோது கரும்பை நீட்டினார். இப்படியாக ஒவ்வொரு கட்டினைத்

தாண்டும் போதும் ஒவ்வொரு அச்சுறுத்தலை எதிர்கொண்டார். ஆனாலும் ஒருவாறு சமாளித்

துக் கச்சேரி மண்டபத்தை அடைந்தார். தன் தோழியராகிய இயலறியும் பெருமாளையும், இசை

அறியும் பெருமாளையும் தனித்தனியாக அலங்கரித்து அனுப்பிப் பார்த்தாள். நக்கீரர் அவர்கள்

தமிழறிவாள் அல்லர் எனக் கண்டுபிடித்துக் கவி பாடி விரட்டிவிட்டார்.

"தறிபோலும் குண்டத்தாள் தானவளைப் போலே

நெறியாக வந்தென்முன் நின்றாய்--- சிறுபுலி தான்

தீரப் பசித்தாலும் தின்னாப்புல் தின்னுமோ?

நேரே முன் நில்லாதே போ". 


இறுதியில், நடந்த நிகழ்வைத் தன் தாய் மரகதவடிவிடம் கூறி இனித் தானே நேரில்

செல்வதாகத் தெரிவித்துத் தமிழறிவாள் நக்கீரர் முன் வந்து ஓர் இருக்கையில் ஒய்யாரமாக

அமர்ந்துகொண்டாள். கவி பாடியே இருவரும் வாதம் புரிந்தனர். நக்கீரர் ஒரு கேள்வி கேட்கத்

தமிழறிவாள் விடையிறுத்தாள். பின் அவள் கேள்விக்கணையைத் தொடுக்க நக்கீரர் தக்கபதில்

அளித்தார். இப்படியாக இருவரும் மாற்றி மாற்றிக் கவி சொன்னார்கள். இராப் பொழுது

முழுவதும் இப்படியாகக் கழிந்துகொண்டிருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் விடிந்துவிடும்

என்று அஞ்சிய நக்கீரர் "இவள் சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளாள். இவளை வழக்கமான

இலக்கிய இலக்கணங்களைக் காட்டி வெல்லவே இயலாது.  ஆகையினால் இவள் கேள்விப்

பட்டிராத நிகழ்வைக் கண்டசுத்தி(ஆசுகவி போன்றது) பாடி வெல்ல முயல்வோம்" என்று மனத்

துக்குள் கூறிக்கொண்டு கண்டசுத்தியாகக் கவி ஒன்றைப் பாடலானார்:

"நச்சுத்தேர் ஏறி நடுக்காட்டில் வேடுவச்சி

பச்சைக் கொடியாட நின்றாளே---இச்சித்தே

மேல வனங்கவர்ந்து மின்கொண்டு போகின்ற

மூலபலன் கண்டாய் மொழி".

நக்கீரர் மதுரையிலிருந்து உறையூர்க்கு வரும் வழியில் அடர்த்தியான இருள்படர்ந்த காடு ஒன்று

தென்பட்டது. அதில் ஒரு வடதாரி மரத்தின் மேல் வள்ளிக்கொடி படர்ந்திருந்தது. அதனை வேடன்

ஒருவன் கண்டு கொடியை அறுத்துப் போட்டுக் கடப்பாரையால் வள்ளிக்கிழங்கை அகழ்ந்து

கொண்டிருந்தான். இந்த நிகழ்வைத் தான் கவியாகப் பாடினார். 


தமிழறிவாள் திகைத்துப் போனாள். "இந்தக் கவிதைக்குப் பொருளென்ன?

இது போன்ற செய்தியை எந்த இலக்கியத்திலும் படிக்கவில்லையே" என்று குழம்பினாள்.

இதுவரை யாரிடமும் தோற்காமலும் கன்னி கழியாமலும் வாழ்ந்த நமக்கு இழிவு நேருமோ என்று

அஞ்சிய தமிழறிவாள் அங்கிருந்த நிலைக்கண்ணாடியை உடைத்து அதிலிருந்து சிதறிய

கண்ணாடிச் சில்லால் வயிற்றைக் கிழித்துக் கொண்டு உயிர் நீத்தாள்.


பொழுது நன்றாக விடிந்து விட்டது. மரகதவடிவு கச்சேரி மண்டபத்துக்கு வந்து அங்கே வயிறு

பீறுண்டு குடல் வெளியே சிதறிக் குருதி கொட்டி அலங்கோலமாகச் செத்துக் கிடக்கின்ற

தமிழறிவாளைக் கண்டு கதறியழுதாள். உடனே சோழன் அரண்மனைக்குச் சென்று அவனிடம்

தகவல்சொல்லி அழுதாள். சோழமன்னனும் தமிழறிவாள் இல்லத்துக்கு வந்தான். அங்கே

நின்றிருந்த நக்கீரரைக் கண்டு "நீவிர் யார்?" என்று கேட்டான். நக்கீரர் தாம் மதுரைத் தமிழ்ச்

சங்கத்துத் தலைமைப் புலவர் என்பதாகப் பதிலளித்தார். இடையில், மரகதவடிவு மன்னனிடம்

நக்கீரர்மேல் ஐயமுள்ளதாகவும்,  அவரை நன்கு விசாரிக்க வேண்டுமென்றும் தெரிவித்தாள்.

நக்கீரர் தாம் கொல்லவில்லை என விடையிறுத்தார். சோழமன்னன் நக்கீரரிடம் விறகுதலை

யனாக நடித்த காரணம் என்ன? என்று கேள்வியெழுப்ப, நக்கீரர் உண்மையான விறகுதலையன்

மதுரைக்கு வந்ததிலிருந்து நடந்த நிதழ்வு அனைத்தையும் விரிவாக எடுத்துரைத்தார்.


சோழமன்னன் நக்கீரரை நோக்கி "ஐயா, நீர் கவி பாடி இந்தப் பெண்ணைப் பிழைக்க

வையும். என் மகள் போல இவளை நினைத்துச் சகல வசதிகளையும் செய்து கொடுத்தேன்"

என்று வேண்டிக்கொண்டான். நக்கீரர் கவிபாடலானார்:

"வீறா யிவளுக்கு மிக்கோரும் வேந்தனுக்கும்

மாறாக நாம் வந்த வாரறியக்---கூறாய்

விழுந்தநிணம் உள்ளடக்கி வெள்ளெலும்பும் ஒன்றாய்

எழுந்திருக்க வேண்டும் இனி" என்று பாடித்தம் கமண்டல நீரைத் தெளித்து ஏதோ மந்திரம்

முணுமுணுத்தார். உடனே தமிழறிவாள் உறக்கத்தினின்று எழுவது போல் எழுந்தாள். அங்கு

குழுமியிருந்த அனைவரும் பெருமகிழ்வுற்றனர்.


சோழமன்னன் நக்கீரரிடம் "ஐயா! நீரே இவளை மணந்து கொள்ள வேண்டும்" என்றார்.

நக்கீரர் உடனே "நான் இங்கு வந்ததே உண்மையான விறகுதலையன் குறையைக் களை

வதற்குத்தான். மேலும் தமிழறிவாளை மீண்டும் உயிர்பிழைக்க வைத்ததன் மூலம் நான்

இவளுக்குத் தகப்பன் போன்றவன் ஆகிவிட்டேன். எனவே, இவளை உண்மையான

விறகு தலையனுக்கு மணம்செய்து கொடுத்தல் வேண்டும்" என்றார். உடனே சோழமன்னன்

"இந்தப் பேரழகியான அறிவாளிக்கு அழகற்ற மூடனை மணவாளனாக ஆக்குதல் தகுமோ?"

என்று வினவினான். உடனே நக்கீரர் பேசத் தொடங்கினார்:

"இந்தத் தமிழறிவாள் முற்பிறவியில் இளவரசியாகவும் விறகு தலையன் இளவரசனாகவும்

வாழ்ந்தவர்கள். எதிர்பாராமல் இவர்கள் சந்தித்துக் கொண்ட பொழுது இளவரசி இளவரசனுக்கு

அருகிலுள்ள மண்டபத்துக்கு வருமாறு ஓலையனுப்ப இளவரசன் கல்வியறிவு இல்லாததனால்

தெருக்கோடியில் வசித்த ஒருவனிடம் ஓலையைக் காட்ட அந்த மனிதன் இளவரசியைத்தானே

அடையலாம் என்ற எண்ணத்தில் சதி செய்து மண்டபத்தில் இளவரசியை நெருங்க அவள் தன்

கைவசமிருந்த குறுவாளால் தன்னைத்தானே மாய்த்துக்கொண்டாள். பிறகு நடந்ததையறிந்த

இளவரசனும் நஞ்சருந்தி மாண்டு போனான். இருவரும் அந்த மண்டபத்தில் பேயாக அலைந்து

கொண்டிருந்த நாட்களில் ஔவையாரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் இவர்களின் பேய்வாழ்வை

மாற்றி இந்த ஊரில் பிறக்க வரங்கொடுத்து எனது முயற்சியால் இருவரும் மணம்செய்து

நல்வாழ்வு வாழ்வர் என்ற வரமும் கொடுத்தார். ஔவையாரின் ஆசீர்வாதத்தால் இப்பெண்

தமிழறியும் பெருமாளானாள். எனவே ஔவையாரின் ஆசிப் படியே இவர்கள் இருவர்க்கும்

திருமணம் செய்துவைப்போம்" என்று கூறி முடித்தார். அவர் கூற்றுப்படியே அனைத்தும் நல்ல

விதமாக நடந்து முடிந்தது.(இந்தக் கதை விநோத ரச மஞ்சரி என்ற நூலிலும் காணப்படுகிறது. தமிழறியும் பெருமாள் என்ற சிறு நூலிலும் காணப்படுகிறது.

1942ஆம் ஆண்டில் தமிழறியும் பெருமாள் என்ற பெயரில் திரைப்படமாகவும்

வெளிவந்தது.

Sunday 9 January 2022

கரணம் தப்பினால் மரணம்.

 கரணம்  தப்பினால்  மரணம்.


இக்காலத்தில்  இச்சொற்றொடருக்கு, சரக்கஸில்

வித்தை காட்டுபவர் தவறாக வித்தை செய்து மரணம்

அடைவது என்பது போன்ற பொருள் வழங்கி வருகிறது.

உண்மையான பொருள் அகப்பொருள் குறித்தது. இதனை

இங்கு பார்ப்போம்.


நாகரிகம் வளர்ச்சியடையாத காலக்கட்டத்தில்  முறையான

குடும்ப நெறிகளைப் பின்பற்றாமல் மக்கள் வாழ்ந்து வந்தனர்.

நாகரிகம் வளர்ச்சியுற்றபிறகு குடும்ப நெறிமுறைகள், கற்பு,

ஒருவனுக்கு ஒருத்தி- ஒருத்திக்கு ஒருவன் போன்ற ஒழுக்கங்கள்

வலியுறுத்தப்பட்டன. தொடக்கத்தில் குடும்ப நெறிகள், இல்லற

ஒழுக்கம் முதலியவை நன்கு பேணப்பட்டாலும்  திருமணத்துக்குரிய

சடங்குகள் பின்பற்றப்படவில்லை. ஆங்காங்கே ஒருசிலர் குடும்ப

வாழ்வில் பொய், பித்தலாட்டம், குற்றங்கள் இழைத்ததைக் கண்ட

மற்றும் கேட்ட பெரியோர்கள், பலர் முன்னிலையில்  திருமணச்

சடங்குகளை நிகழ்த்தி மணமக்களின் குடும்ப வாழ்வைத் தொடங்கி

வைத்தனர். திருமணம், வதுவை, வரைவு, மன்றல், கரணம் என்ற

பெயர்களில் அழைக்கப்பட்டது. தொல்காப்பியம், கற்பியலில் உள்ள

ஒரு நூற்பா இவ்விவரத்தைத் தெரிவிக்கின்றது. அது பின்வருமாறு:

"பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப".

(ஐயர்=பெரியோர்; யாத்தனர்=உருவாக்கினர்; கரணம்=திருமணம்)


தமிழ்மக்களின் திருமண முறையைப் பற்றிய விவரங்கள் அகநானூறு

86 மற்றும் 136ஆம் பாடல்களில் காணப்படுகின்றன.

சங்க காலம் பொற்காலம்; ஒழுக்கமும்  நெறியும் பண்பாடும்

உச்சத்தில் இருந்த காலக் கட்டம் அது.  இருப்பினும், அந்தக்

காலத்திலும்  ஒருசிலர் ஏமாற்று வேலை செய்துள்ளனர்.

காதலித்த  பெண்ணைக் கைவிடுதல், திருமணம் செய்யாமல்

ஏமாற்றுதல் போன்ற செயல்களை  ஒருசிலர் செய்துள்ளனர்.

அப்படி ஒரு நிகழ்வு குறுந்தொகை 25ஆம் பாடலில் காட்டப்

பட்டுள்ளது. அந்தப் பாடலைப் பார்ப்போம்:

புலவர் கபிலர். கு.தொ.எண்: 25

"யாரு மில்லைத்  தானே  கள்வன்

தானது  பொய்ப்பின்  யானெவன்  செய்கோ?

தினைத்தாள்  அன்ன  சிறுபசுங்  கால

ஒழுகுநீர்  ஆரல்  பார்க்கும்

குருகும்  உண்டுதான்  மணந்த  ஞான்றே!"


பொருள்:

சாதலே வந்த போதும் தாய்தந்தை எதிர்த்த போதும்

காதலி உனையெந் நாளும் கைவிடேன் என்று சொன்னான்;

ஆதலின் அவனை நம்பி அன்புடன் கூட லுற்றேன்;

பாதகன் தானோ அன்னான்? வரைவினை

விரும்ப வில்லை.


எவருமே  அறியா  வண்ணம் என்நலம்  துய்த்த  பின்பு

கவருநல்  மொழிகள் கூறிக் 'கைவிடேன், பிரியேன் என்றும்

தவறிடின் தரியேன் ஆவி; சத்தியம்' என்றும் சொன்னான்;

இவன்உரை நம்பற் பாற்றோ?எய்த்திடு வானோ கள்வன்?


களவினில் நிகழ்ந்த நேர்வைக் கண்டவர் எவரும் இல்லை;

தளர்கிற(து) என்றன் நெஞ்சம்; சாட்சிசொல்  வாரும் இல்லை;

குளத்தினில் ஆரல் உண்ணும்  குருகிதைப் பார்த்த போதும்

விளம்பிட வாய்ப்பே இல்லை; வேதனை அதிகம்  ஆகும்.


ஐயகோ  தலைவன்  சூளை அணுவள  வேனும் நம்பேன்;

பையவென்  நலத்தைத்  துய்த்துப்  பலப்பல உறுதி சொன்னான்;

பொய்யுரை ஆகப் போனால் புகார்செயச் சாட்சி இல்லை;

செய்வது தேர்ந்தி  லேனே; செத்தொழிந்  திடல்தான் தீர்வோ?

சூள்: உறுதிமொழி


விளக்கவுரை:

சங்க காலத்தில் களவொழுக்கம், கற்பொழுக்கம் இரண்டுமே

நிலவின. களவொழுக்கம் குறைந்த காலமே அனுமதிக்கப்

பட்டது. அந்தக் காலத்திலேயே  தலைவி, தோழி முதலானவர்கள்

திருமணத்தை வலியுறுத்த ஆரம்பித்து விடுவார்கள்.

களவொழுக்கத்தில் ஏற்படும் இடையூறுகளைப் பற்றித்

தலைவியோ, தோழியோ விரிவாக எடுத்துரைத்துத் தலைவ

னைச் சம்மதிக்கச் செய்துவிடுவர். பிறகு கற்பொழுக்கம்

நடைமுறைக்கு வந்துவிடும். ஆனால் இந்தப் பாடலில் கூறப்

படும் தலைவன் திருமணத்தைத்  தவிர்த்திட

முயல்கின்றான். தலைவிக்கு அச்சவுணர்வு மேலிடுகிறது. களவொழுக்

கம் என்பதால் யாருக்கும் இதைப்பற்றித் தெரியாது. "நேரில்

கண்ட சாட்சிகள் எவரும் இலர். இந்தச் சம்பவத்தைக் குளத்

தின் அருகில் ஆரல்(விலாங்கு) மீன் அகப்படுமா என்று

குளத்து நீரை உற்று நோக்கிக் கொண்டிருந்த  நாரை ஒன்று

பார்த்தது; அவன் கூற்றைக் கேட்டது. ஆனால் நாரை வந்து

சாட்சி சொல்லும் வாய்ப்பே இல்லை. காதலன் வாக்குறுதி

பொய்யாகிப் போனால் நான் என்ன செய்வேன்? என்னிடம்

பழகி நலந்துய்த்து விட்டுத் திருமணத்தைத் தவிர்த்திடப் பார்க்கின்றான்.. இவன் கள்வன்தான்."


இவ்வாறு புலம்பித் தவிப்பதாகப் பாடல் மொழிகிறது. ஆக,

ஏமாற்றுக் காரர்கள் எந்தக் காலத்திலும்  இருப்பார்கள்

என்ற எண்ணம் ஏற்படுகின்றது. இந்தப் பாடலில் கூறப்

பட்ட தலைவி என்ன ஆனாள்? திருமணம் நிகழ்ந்ததா?


குறுந்தொகை 290ஆம் பாடலில்  ஒரு தலைவி இயம்புவது:

"யாம்எம் காதலர்க் காணேம் ஆயின்

செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க்

கல்பொரு சிறுநுரை போல

மெல்ல மெல்ல இல்லா குதுமே"

பொருள்:

என் தலைவனைக் காணவில்லை என்றால், செறிந்த

மிகுந்த துயரமுடைய நெஞ்சத்துடன், மிகுந்த வெள்ளத்தில்

பாறையின் மேல் மோதும் சிறு நுரையைப் போல மெல்ல

மெல்ல இல்லையாகிவிடுவேன்(உலகத்திலிருந்து மறைந்து

விடுவேன்--செத்துவிடுவேன்).


இப்பாடல் கற்பனைப் பாடல்தான். ஆனால் இம்மாதிரி

நடந்த ஒருசில நிகழ்வுகளைக் கேள்விப்பட்டுத்தான்

புலவர்கள் இலக்கியம் படைக்கின்றார்கள். ஒருவேளை,

இதில் குறிப்பிடப்பட்ட தலைவன் தலைவியைக் கைவிட்

டிருந்தால் அவள் உயிரை மாய்த்துக் கோண்டிருக்கலாம்.

எனவேதான் 'கரணம் தப்பினால் மரணம்' என்ற பழமொழி

உருவானது. கரணம் என்றால் திருமணம் என்பது

பொருளாகும். இது போல ஒரு சில நிகழ்வுகளே நடந்துள்

ளன. இருந்த போதிலும் இதைக் கேள்விப்பட்ட  அக்காலப்

பெரியோர்கள், நெறிமுறைகள், பழக்க வழக்கங்களை

மேலும் கடுமையாக்கி முறைப்படுத்திவிட்டனர். இருப்பினும்

அவ்வப்பொழுது கரணம் தப்பி மரணம்

நிகழ்ந்திருக்கும்.

 

.