Wednesday 20 December 2023

பாயசத்தைக் கொண்டுவந்தீர்; இதில் தோசம் பிறந்திடும்.

 பாயசத்தைக் கொண்டுவந்தீர்; இதில் தோசம் பிறந்திடும்.


வெறிவிலக்கல் என்னும் துறை அகப்பொருள் இலக்கியத்தில் மிகச்

சுவையாகப் படைக்கப்படும் பகுதியாகும். தலைவனும் தலைவியும் களவியலில்

காதல் புரிந்து கொண்டிருக்கும் வேளையில் தலைவனைப் பிரிய

நேர்ந்தால் தலைவி நிறம் மாறி(பசலை நோயுற்று வெளுத்து) மற்றும்

மெலிந்து தோற்றப்பொலிவை யிழந்து தோன்றுவாள். தன் மகளின்

பொலிவிழந்த தோற்றத்தைக் கண்டு அன்னை தெய்வம் முருகன்

அச்சுறுத்தி யிருப்பானோ? என்னும் கவலையால் அவன் சினத்தைத்

தணிப்பதற்காக எடுக்கும் நிகழ்ச்சிதான்  வெறியாடல். இந்நிகழ்வில்

வேலன்(பூசாரி) கையில் வேலைத் தாங்கிக்கொண்டு தன்மேல் தெய்வம்

முருகன் ஏறியிருப்பதாக எண்ணி ஆட்டம் ஆடி ஆடொன்றைப் பலியிட்டு

அதன் குருதியினைத் தினைத் தானியத்தின்மேல் தெளித்து அந்தக்

கலவையை முருகனுக்குப் படைத்து வழிபடும் நிகழ்ச்சிதான் வெறியாடல்

என்பதாகும். இதனைச் செய்து முடித்தால் முருகன் தலைவியை நலம்

பெறச் செய்வான் என்னும் சங்ககால அன்னையர் நம்பிக்கை அடிப்படையில்

எழுந்த ஒரு சடங்காகும். ஆனால் இங்கே தலைவி முருகனால் அணங்கப்பட

வில்லை. அவள் மெலிவுக்குக் காரணம் அவளது களவியல் காதலும்

தலைவன் பிரிவும் ஆகும். எனவே, வெறியாடினால் பயனேதும் கிட்டாது.

ஆதலால் தோழி வெறியாடலை விலக்கி அறத்தொடு நிற்பது மரபு. இந்த

வெறிவிலக்கலைப் புலவர்கள் தம் கற்பனைக்கேற்றவாறு சுவையாகப் படைத்து

இலக்கியத்துக்கு மெருகேற்றுவர். இங்கே நமச்சிவாயப் புலவர் இந்த வெறி

விலக்கலை எங்கனம் கையாண்டுள்ளார் என்று பார்ப்போம்:


இங்கே ஒரு தலைவி தெய்வம் அழகர்மீது காதல்கொண்டு அவர் நினைவால்

மெலிகின்றாள். இந்திய நாட்டில் கடவுளின் அடியார்கள் நாயகன்- நாயகி

தோரணையில் பக்திப் பரவசத்தை வெளிப்படுத்துவது மரபு. ஆண்டாள்

திருமால் மீது காதல்கொண்டு பாடினாரல்லவா? இது பக்தி இலக்கியப்

படைப்பில் இயல்பானதே. நம் தலைவியும் சோலைமலை அழகர்மீது காதல்

கொண்டு அவர் நினைவால் பசலைநோயுற்றாள்; மெலிந்தாள். சங்ககால

வழக்கப்படி வெறியாடலை நிகழ்த்த அன்னை முடிவுசெய்தாள். அதற்காக,

பாயசத்தைக் கொண்டுவந்தாள்; வேலனையும் அழைத்து வந்தாள். தோழி அன்னை

யிடம் உரையாடினாள் "அன்னையே! பாயசத்தைக் கொண்டுவந்தீர்.( இங்கே

பாயசம் என்பது பாய்+அசம் என்று பிரிந்து பாய்கின்ற ஆட்டைக் குறிக்கும்.

அசம், வடமொழி அஜம், என்பதற்கு ஆடு என்பது பொருள்.) அநாவசியமான

உயிர்ப்பலியால் தோசம்தான் உண்டாகும். ஏனென்றால் இவளை வாட்டுவது

முருகன் அல்லன். இவள் மனங்கவர்ந்த காதலன்"  என்று கூறி அறத்தொடு

நின்றாள். சரி, பாடலைப் பார்ப்போம்:

"வண்டு துறைசோ லைமலைப்  பரிகாரி வந்தாலிவளுக்(கு)

அண்டு படாதவிக் காமச் சுரம் விடும் ஆதலினால்

பண்டு பழகினர் போலிந்த வேளையிற் பாயசத்தைக்

கொண்டுவந் தீரிதில் தோசம் பிறந்திடும் கோதையரே"

பொருள்:

"கோதையரே(தாய்மாரே!) இவளுக்கு வரக்கூடாத(அண்டு படாத)

இந்தக் காதல் நோய் வண்டுகள்தங்கும் சோலைமலையிலுள்ள

மருத்துவராகிய அழகர் வந்தால் நீங்கும். ஆதலினால் முன்

மருந்து கொடுத்துப் பழகினவர்போல இந்த வேளையில் பாய்கின்ற

ஆட்டைப் பலியிடுவதற்காகக் கொண்டுவந்தீர். அநாவசிய உயிர்ப்

பலியால் பாவம் உண்டாகும். அதனால் இதனைக் கைவிடுக." 


இனி, ஒப்பிலாமணிப்புலவர் இதனை எப்படிக் கையாள்கின்றார்

எனப் பார்ப்போம்:

"சீதார விந்தபுயன் தென்னவன்தன் திண்சிலம்பில்

போதாலும் கண்ணாலும் போர்செய்வோர்க்(கு)---ஓதும்

கொடியிடையார் தம்மாற் குணமாமோ? இந்தத்

துடியிடையார் கொண்ட துயர்".

பொருள்:

குளிர்ச்சியான தாமரையில் இருக்கும் வெற்றித் திருமகளைத்

தன் தோளில் தாங்கியிருக்கும் பாண்டியனின் திண்மையான

மலையகத்தில்  வாழுகின்ற உடுக்கை போன்ற இடையுடைய

தலைவி, தன் காதலன்(தலைவன்) பிரிவால்  கொண்ட பசலை

நோயை மற்றும் உடல்மெலிவை, மலர்க்கணையாலும் நெற்றிக்

கண்ணாலும் போர்புரியும் மன்மதனுக்கும் சிவபெருமானுக்கும்

உரியதாகச் சொல்லப்படும் கொடிகளாகிய மீனத்துக்கும்

இடபத்துக்கும்(ரிஷபத்துக்கும்) இடைப்பட்ட தாகிய ஆட்டைப்(மேஷத்தை)

பலியிட்டு வெறியாடல் நிகழ்த்துவது நீக்குமா?(நீக்காது; தலைவியின்

காதலனைச் சேர்ந்தால் தான் நீங்கும்).

(சீத அரவிந்தம்=குளிர்ச்சியான தாமரை; தென்னவன்=பாண்டியன்;

சிலம்பு= மலை;  போது= மலர்(மலர்க்கணை); கண்= நெற்றிக்கண்;

மன்மதனுக்குரிய கொடி மீனக்கொடி; சிவனுக்குரியது ரிஷபக்கொடி;

இடையார்=மீனத்துக்கும் ரிஷபத்துக்கும் இடையிலுள்ள மேஷம்(ஆடு)

பார்வை:

தனிப்பாடல் திரட்டு -- சாரதா பதிப்பகம் வெளியீடு; உரை--தமிழறிஞர்

உயர்திரு கா.சுப்பிரமணிய பிள்ளை.

Friday 1 December 2023

கவைமக நஞ்சுண்டாங்கு அஞ்சுவல்.ல்.

 கவைமக நஞ்சுண்டாங்கு அஞ்சுவல்.


தலைவனும் தலைவியும் பிறர் அறியாமல் சந்தித்துப் பழகி

வந்தாலும் இதுகுறித்த செய்தி அரசல் புரசலாக ஊர்மக்கள்

சிலருக்குத் தெரியவருகிறது. அவர்களில் ஒருவர் தலைவியின்

அன்னையிடம் தெரிவிக்க அன்னை முன்னெச்சரிக்கையாக

இருக்க எண்ணித்தன் மகளை இற்செறிக்க(வீட்டைவிட்டு

வெளியே செல்லத் தடைபோடுதல்) எண்ணி இது தொடர்பாகக்

கணவனிடம் ஆலோசனை செய்து கொண்டிருந்தாள். அவர்கள்

உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த தோழி தலைவியிடம்

அறிவித்துவிட்டாள். 


ஏற்கெனவே தலைவனும் தலைவியும் வரைந்து கொள்ளாமல்

(திருமணம் புரிந்துகொள்ளாமல்) காதலை நீட்டிப்பது குறித்துத்

தோழி வருத்தத்தில் திளைத்துக் கொண்டிருந்தாள்.  தலைவியின்

அன்னை இற்செறிக்கத் திட்டமிடுவதையறிந்த தோழிக்கு வருத்தம்

கூடியது. தலைவனிடம் "வரைந்து கொள்ள ஏற்பாடு செய்" என்று

உறுதிபடக் கூற முடிவெடுத்தாள். 


அன்றிரவு வழக்கம்போல் இரவுக்குறியில்(இரவு நேரத்தில் காதலன்-

காதலி சந்திக்கும் இடம்) தலைவியைச் சந்திக்க வந்தான். ஓரளவு

சீற்றம் காட்டிய தோழி" தலைவியின் அன்னை உங்கள் இருவரைப்

பற்றியும் ஏதோ கேள்விப்பட்டிருப்பாள் என நினைக்கிறேன்; அதனால்

தலைவியை இற்செறிக்கத் திட்டமிடுகின்றாள். அநேகமாக நீ இனி

தலைவியைச் சந்திக்க இயலாது." என்றாள். உடனே தலைவன் சற்றே

செருக்குடன் நான் வழக்கம்போல இரவுக்குறியில் இங்கு வந்து தலைவி

யைச் சந்திப்பது திண்ணம்; கூடிய விரைவில் அவளை வரைந்து கொண்டு

இல்வாழ்க்கை தொடங்குவேன்" என்று மொழிந்தான். உடனே தோழி"ஐய!

உம் வீரத்தை அறிவோம்; நீர்  பெரிய வீரரே. ஆயினும், கடற்கரையை

ஒட்டியமைந்துள்ள சோலையில், ஏராளமான மீன்கள் நீந்தித் திரியும் பெரிய

நீர்த்துறையில் வளைந்த கால்களையுடைய கொலைத் தொழிலில் தேர்ந்த

முதலைகள் வாழ்கின்றன. இது காரணமாக இத்துறையில் நீந்திக் கடக்க

எவரும் அஞ்சுவர்.. நீர் உம் ஆண்மைத் திறத்தால் இவ்விரவில் இத்துறையில்

நீந்தி வருகின்றீர். உமது இந்தச் செயலுக்காகத் தலைவி அஞ்சி வருந்துகிறாள்;

உமக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ? என்று பதறித் துடிக்கிறாள். உம் இருவரது

இடுக்கண்ணைக் கண்டு நான் நொந்து போகின்றேன்.  இரட்டைப் பிள்ளைகள்

நஞ்சுண்டால்(கவைமக நஞ்சுண்டாங்கு அஞ்சுவல்) இருவர் திறத்திலும் இரங்கும்

தாயைப் போல நான் இருவருக்காகவும் பதறித் துடிக்கிறேன். எனவே நீர் பகற்குறி,

இரவுக்குறி இவைகளைக் கைவிட்டு உடனடியாக வரைந்து கொள்ள ஏற்பாடு

செய்க. அதுவே உங்கள் இருவர்க்கும் நன்மை பயக்கும்" என்றாள். பாடல்

கீழ்க்கண்டவாறு:

"கொடுங்கால் முதலைக் கோள்வல் ஏற்றை

வழிவழக்(கு) அறுக்கும் கானல்அம் பெருந்துறை

இனமீன் இருங்கழி நீந்தி நீநின்

நயனுடை  மையின்  வருதி இவள்தன்

மடனுடை மையின் உயங்கும் யானது

கவைமக நஞ்சுண் டாஆங்(கு)

அஞ்சுவல் பெரும!என் நெஞ்சத் தானே!"

(குறுந்தொகை எண்:324; நெய்தல் திணை;

புலவர்:கவைமகனார்)

புலவர் பெயர் தெரியாததால் அவர் எழுதிய சொற்றொடரால்

அழைக்கப்படுகிறார்.


கவை என்னும் சொல் இருவேறு பட்ட கிளையைக் குறிக்கும். இங்கு

இரட்டைப் பிள்ளைகளைக் குறித்தது. இரட்டைப் பிள்ளைகள் ஒரே

நேரத்தில் நஞ்சுண்டால் பெற்றதாய் எப்படிப் பதறித் துடித்துத் திண்டாடு

வாளோ அந்த நிலையில் உள்ளதாகத் தோழி கூறுகிறாள். இந்த

உவமையால் இருவர்க்கும் நன்மை செய்யும் மருந்து விரைந்து தருதல் தேவை

என்று அறிவுறுத்துகின்றாள். நஞ்சைவிலக்க உடனடியாக மருந்து தருதல்

இன்றியமையாதது. அதுபோல இந்த இடுக்கண்ணை விலக்க வரைவுமேற்

கொள்ளல் உடனடித் தேவையாகும். வரைவு மேற்கொள்ளலே உரிய சிறந்த

மருந்தாகும் என்றாள். "கவை மகவு" என்ற தொடர் படித்து இன்பறத்தக்கது.

அருஞ்சொற் பொருள்:

கோள்வல் ஏற்றை=கொல்லுதல் வல்ல ஆண்(முதலை);

நயன்=அன்பு; உயங்கும்= வருந்தும்; அஞ்சுவல்=அஞ்சுவேன்.

Friday 10 November 2023

அன்றணைந்தான் வாராவிட் டால்....

 அன்றணைந்தான் வாராவிட்டால்..........


இலக்கிய உலகில் காளமேகப் புலவரைப் பற்றித் தெரியாதவர்கள்

தமிழகத்தில் இருக்க வாய்ப்பில்லை. ஆசுகவி பாடுவதில் வல்லுநர்.

அவர் கால்படாத இடமே தமிழகத்தில் இல்லை. அவர் வெறிவிலக்கல்

என்னும் அகத்துறையில் பாடிய ஒரு பாடலைப் பார்ப்போம்:

"முந்நான்கில் ஒன்றுடையான் முந்நான்கில் ஒனறெடுத்து

முந்நான்கில் ஒன்றின்மேல் மோதினான்---முந்நான்கில்

ஒன்றரிந்தால் ஆகுமோ? ஓஓ மடமயிலே!

அன்றணைந்தான் வாராவிட் டால்."

தலைவனும் தலைவியும்  களவுக் காதல் நிகழ்த்துகின்றனர். யாதோ

ஒரு காரணம் பற்றித் தலைவன் வரைவைத்(திருமணத்தை) தாமதப்

படுத்துகின்றான்.ஓரிரு நாட்களாக அவன் வாராதிருக்கின்றான்.

தலைவி இது காரணமாக நிறம் மங்கி மெலிவடைகின்றாள். அன்னை

இதற்குக் காரணம் அறிய எண்ணி அக்கால வழக்கப்படி வெறியாடல்

நிகழ்த்தி முருகனைத் தொழத் திட்டமிடுகின்றாள். இதனை அறியும்

தோழி வெறியாடலை விலக்க நினைத்து இப்பாடலைப் பாடுகின்றாள்:

முந்நான்கு(பன்னிரண்டு இராசிகளைக் குறிக்கிறது) இராசிகளில்

ஒன்றான மகரத்தைக் கொடியில் கொண்ட மன்மதன்(மகரம்=மீன்)

முந்நான்கில் ஒன்றான தனுசை(வில்லை)யெடுத்து முந்நான்கில் ஒன்றான

கன்னியின் மேல்(தலைவியின்மேல்) மோதினான். அதாவது மன்மதன்

தலைவியின்மேல் கரும்பு வில்லால் மலர்க்கணை தொடுத்தான். இதன்

விளைவால் சோர்வடைந்தாள். தலைவன் வந்து இவளுடன் பழகினால்

சோர்வு நீங்கித் தெளிவு பிறக்கும். அன்றணைந்த தலைவன் வாராவிடின்

முந்நான்கில் ஒன்றான மேஷத்தை(ஆட்டை)ப் பலியிட்டு வெறியாடினால்

பயனேதும் இல்லை என்று தோழி கூறி அறத்தொடு நிற்கின்றாள்(தலைவி

தலைவனொடு கொண்ட களவுக் காதலை வெளிப்படுத்துகின்றாள்).

பன்னிரண்டு இராசிகளைப் பயன்படுத்தி வெறியாடல் துறையில்

நான்கே வரிகளில் களவுக் காதலைக் கூறியவிதம் கவிஞரின்

புலமைக்குச் சான்றாகும்.


திருமலராயன் பட்டினம் என்ற ஊரில் அதிமதுரகவிராயர் என்ற புலவரொடு

நிகழ்ந்த புலமைப் போட்டியில்(யமகண்டம் என்ற கொடுமையான போட்டி)

கவிராயர் குழுக்கூட்டம் "எழுத்தாணி எனத் தொடங்கிச் சூரிக்கத்தி"  என

முடித்து வெண்பா ஒன்றைப் பாடுமாறு கேட்டுக்கொள்ளக் காளமேகம் பாடியது:

"எழுத்தா ணிதுபெண் இதனை முனி காதில்

வழுத்(து)ஆ ரணக்குகனை வாதுக்(கு)---அழைத்ததுவும்

மாரன்கை  வில்மான்முன் காத்ததுவும் நன்றாகும்

தீரமுள்ள சூரிக்கத் தி".

எழுத்தாணிது பெண்= எழுத்து+ ஆண்+ இதுபெண்:

எழுத்துக்களில்  உயிரெழுத்துக்கள் பன்னி

ரண்டும் ஆணென்றும், உயிரமெய் எழுத்துக்

கள் பெண்ணென்றும்,  ஒற்றெழுத்துக்கள்

அலியென்றும் கருதப்படும்(பிங்கல

நிகண்டு).

பொருள்:

தமிழ் எழுத்துக்களைப் பற்றியும் மொழிஇயல்பைப் பற்றியும்

தமிழுக்கு அன்னை(அனை) எனக் கருதப்படும் அகத்திய முனி

காதில் ஓதிய வேதங்கள் போற்றும் குகனாம் முருகனைச் சண்டைக்கு

அழைத்தவன் சூரபத்மன்(சூர்);  மன்மதன் கையில் உள்ளவில்

கரும்பு வில்(இக்கு); முன்னாளில் திருமால் முதலையிடம் இருந்து

காத்தது யானை(அத்தி). சூர்+இக்கு+ அத்தி= சூரிக்கத்தி.

எழுத்தாணி என்று தொடங்கிச் சூரிக்கத்தி என்று வெண்பா

முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அர்த்தம் பண்ணும் பொழுது 'எழுத்தா

ணிதுபெண்' என்று படித்து எழுத்து+ ஆண்+ இது பெண் என்று படித்து

எழுத்து வகைகளை அதாவது மொழி இயல்பை என்று பொருள் கொள்ள

வேண்டும். அதுபோலவே, 'சூரிக்கத்தி' என்பதனைச் சூர்+இக்கு+அத்தி

என்று பிரித்துப் பொருள் கொள்ளவேண்டும். காளமேகப் புலவர் எந்தப்

போட்டியிலும் தோற்றதேயில்லை. திருஞான சம்பந்தர், கம்பர் போன்ற

பெருந் தமிழ் ஆளுகைகளுக்குச் சமமான புலமை கொண்டவர்

காளமேகப் புலவர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

பார்வை:

காளமேகப் புலவர் பாடல்கள்- உரையாசிரியர்:

புலியூர்க்கேசிகன்.

Sunday 29 October 2023

கற்றோர் பரவும் கநகாரி நகாரி காரி

 கற்றோர் பரவும் கநகாரி நகாரி காரி.


நால்வகைக் கவிகளுள் ஒன்றான சித்திரக்கவி என்பது

சித்திரம் எழுதி அதில் அமைப்பதற்கேற்ற கவி இயற்றுவதாகும்.

"கோமூத் திரியே கூட சதுர்க்கம்

மாலை மாற்றே எழுத்து  வருத்தனம்

நாக பந்தம் வினாவுத் தரமே

காதை கரப்பே கரந்துறைச் செய்யுள்

சக்கரம் சுழிகுளம் சருப்பதோ பத்திரம்

அக்கரச் சுதகமும் அவற்றின் பால".

அக்கரச் சுதகமும் என்னும் உம்மையால் இவைபோன்ற  வேறு சில

சித்திரக்கவிகளும் உள்ளன என்று மேற்படி சூத்திரத்தைத் தெரிவித்த

தண்டியலங்காரம் குறிப்பிடுகிறது. அவையாவன:

நிரோட்டம், ஒற்றுப்பெயர்த்தல், மாத்திரைச் சுருக்கம், மாத்திரை

வருத்தனம், முரசபந்தம், இரதபந்தம், திரிபாகி, திரிபங்கி, பிறிதுபடு

பாட்டு முதலியனவாகும். சித்திரக்கவிகள் தற்காலத்தில் பெருமளவில்

பயன்பாட்டில் இல்லை. ஏனென்றால் அவை மிறைக்கவிகள் என அழைக்கப்

படும். அவற்றைப் படித்துப் பொருள் உணர்வது மிக அரிய செயலாகும்.

எனவே, சித்திரக்கவி இயற்றுவோர் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகும்.


இங்கே அக்கரச் சுதகம் என்ற பிரிவில் பாடப்பட்ட பாடலொன்றைப் பார்ப்போம்.

அக்கரம்=அட்சரம்=எழுத்து; சுதகம்=குறைப்பு. எழுத்துக் குறைப்புப் பாடல். குறிப்பிட்ட

பொருளைத் தரும் ஒரு சொல்லைக் கூறி ஒவ்வொரு எழுத்தாக நீக்கிவர வெவ்வேறு

பொருள்படும் சொற்கள் உருவாகும். பின்வரும் பாடலைப் பார்ப்போம்:

"பொற்றூணில் வந்தசுடர், பொய்கை பயந்த அண்ணல்,

சிற்றாயன் முன்வனிதை யாகி அளித்த செம்மல்,

மற்றியார் கொல்லென்னின் மலர்தூவி வணங்கி நாளும்

கற்றோர் பரவும் கநகாரி நகாரி காரி".

கநகாரி என்னும் சொல் திருமாலைக் குறிக்கும். இனி

பாடல் சொல்லும் செய்தியைப் பார்ப்போம்:

பொற்றூணில் வந்த சுடர்= பொன் தூணில் வந்த சுடர்=பிரகலாதனிடம்

இரணியன் இந்தத் தூணில் நாராயணன் உள்ளாரா? என்று கேட்டவுடன்

அவன் ஆம் என்று கூறிட, இரணியன் அந்தத் தூணைக் கதாயுதத்தால் பிளக்க,

அத்தூணிலிருந்து தோன்றிய நரசிம்ம மூர்த்தி அவனை அழித்தார் என்கிறது புராணம்.

அந்த நாராயணன் கநகாரி என்று அழைக்கப்படுகிறார்.  

                              

'கநகாரி' என்ற சொல்லிலிருந்து 'க' என்ற எழுத்தை நீக்கினால் 'நகாரி' என்ற சொல்

உருவாகும். நகாரி என்ற சொல் முருகனைக் குறிக்கும். முருகன் சரவணப் பொய்கை

பயந்த(தந்த) அண்ணல் ஆவார். 'நகாரி' யிலிருந்து மேலும் ஒரு எழுத்தை('ந')நீக்க,

'காரி' என்ற சொல் உருவாகும். சிற்றாயனாகிய கிருஷ்ணர் பாற்கடலைக் கடைந்து

அமுதம் எடுத்த காலத்தில் மோகினி அவதாரங்கொண்டு பெற்ற பிள்ளையான

ஐயனாரை(ஐயப்பனை)க் குறிக்கும் சொல் 'காரி' ஆகும். ஆக, 'கநகாரி' என்ற சொல்

எழுத்துக் குறைப்பின் மூலம் 'நகாரி' மற்றும் ' காரி' என்ற வேறு சொற்களை உருவாக்கியது.

'கநகாரி' யான திருமாலையும், 'நகாரி' யான  முருகனையும், 'காரி'யான ஐயனாரையும்

(ஐயப்பனையும்) கற்றறிந்தோர் மலர்தூவி வணங்கித் தொழுவதாகப் பாடல் பகர்கிறது.


இனி, திரிபாகி என்ற சித்திரக்கவி வகையைப் பார்ப்போம். திரிபாகி மூன்றெழுத்து சேர

ஒரு சொல்லாகியும், அதில் முதல் எழுத்தும் கடைசி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகியும்,

இடையெழுத்தும் கடைசி எழுத்தும் சேர மற்றொரு சொல்லாகியும் வருவதாகும். பாடல்

பின்வருமாறு:

"மூன்றெழுத்தும் எங்கோ முதல்ஈ(று) ஒரு வள்ளல்

ஏன்றுலகம் காப்ப(து) இடைகடை---யான்றுரைப்பின்

பூமாரி பெய்துலகம் போற்றிப் புகழ்ந்(து)ஏத்தும்

காமாரி காரிமா ரி".

பொருள்:

இப்பாடலில் மூன்றெழுத்தும் எம்முடைய தலைவனாகிய 'காமாரி'(காமனுக்குப்

பகைவன் ஆகிய சிவபெருமான்) என்று பொருள்தரும். இதன் முதல் எழுத்தையும்

கடைசி எழுத்தையும் கூட்டக் 'காரி' என்ற சொல்லாகிக் கடையெழு வள்ளல்களில்

ஒருவனான காரி என்பவனைக் குறிக்கும்.. இதன் இடையெழுத்தையும் கடைசி

எழுத்தையும் கூட்ட 'மாரி' என்ற சொல்லாகி மழையைக் குறிக்கும். திரிபாகி

என்பதற்கு மூன்று பாகத்தையுடையது என்று பொருள்.


ஏனைய சித்திரக்கவிகளில் பெரும்பாலானவை பொருள் விளங்குவதற்குக்

கடினமான மிறைக்கவிகள். அவற்றை இயற்றுவதும் பொருள் கொள்வதும்

பலராலும் இயலாது. அவை வழக்காற்றிலும் இல்லாது மறைந்து வருகின்றன.


பார்வை:

தண்டியலங்காரம் உரையடன்--திருநெல்வேலித் தென்னிந்திய

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு.

Thursday 12 October 2023

காய் எனத் தொடங்கி இலை என்று முடிக்கும் கவிதை.

 காயென்று தொடங்கி இலையென்று முடிக்கும் பாடல்.


அழகிய சொக்கநாத பிள்ளை என்றழைக்கப்பட்ட புலவர் திருநெல்வேலியில்

வாழந்தவர். இராசவல்லிபுரம் என்ற ஊரில் வாழ்ந்துவந்த முத்துசாமி பிள்ளை

என்ற வள்ளல் புலவரை ஆதரித்துப் புரந்தவர். அவர் மீது பற்பல தனிப்பாடல்களை

இயற்றியுள்ளார். இரட்டுற மொழிதல்(சிலேடை), நடுவெழுத்தலங்காரம், மடக்கு(யமகம்)

முதலான புலமைத்திறம் காட்டும் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். அவரது

பாடல்களில் அவரை ஆதரித்த வள்ளலைப் பற்றித் தவறாமல் போற்றிப் புகழ்ந்துள்ளார்.

ஒருசமயம் 'காய்' எனத் தொடங்கி 'இலை' என முடிக்குமாறு பாடல் இயற்றச் சொன்ன

பொழுது அவர் பாடியது:

"காய்சினம்இல் லாதான்,  கருணைமுத்து சாமிவள்ளல்

வாய்மையுளான்,; பாடி வருவோர்க்குத்---தாய்நிகர்வான்;

எல்லையில்லா மாண்பொருளை ஈவான்; இவனிடத்தில்

இல்லையென்ற சொல்லே யிலை."

பொருள்:

தன்னை நாடி வருவோரிடம் தகிக்கும் கோபத்தைக் காட்டாது கருணை ததும்பும் இனிய

முகத்தோடு விளங்குபவன். உண்மையாக இருப்பவன்(போலியாக நடிப்பவன் அல்லன்);

தாய்போல் அன்பு காட்டுபவன்; தன்னிடத்தில் உதவி கேட்டு வருபவர்களுக்கு எல்லையற்ற

சிறப்புடைய பொருட்களைக் கொடுப்பவன்; இவனிடத்தில் உதவி கேட்பவர்களுக்கு இல்லை

என்ற சொல்லைச் சொல்லியதே இல்லை. ( உதவி கேட்போர் எல்லார்க்கும்  இல்லையென்று

சொல்லாமல் உதவுவான்).


இன்னொருமுறை 'படித்துறை' என்று தொடங்கி 'குளக்கரை' என்று முடிக்குமாறு பாடக் 

கேட்டபொழுது பாடியது:

"படித்துறையும் வாணரைக்காப் பாற்றிடவும் பொல்லா

மிடித்துயரால் ஏழையரை மேன்மேல்---துடித்துநிதம்

கையவிடா(து) ஆண்டிடவும் நாட்டன்முத்து சாமியெனும்

ஐயவுன்போல் யார்க்குளக்க ரை".

பொருள்:

படித்து வாழ்கின்ற மேதாவிகளைக் காப்பாற்றிடவும், பொல்லாத

வறுமைத்துயரால் ஏழைமக்கள் மேன்மேலும் நித்தம் துடிதுடித்து

வாழ்ந்திடா வண்ணம் அவர்களைக் கைவிடாமல் உதவிசெய்து

கரையேற்றவும் நாட்டமுடைய முத்துசாமியெனும் ஐயனே!

உன்போல் யாருக்கு உள்ளது அக்கரை?

யார்க்குளக்கரை---யார்க்கு+உளது+ அக்கரை= 'து' கெட்டது விகாரம்.


இனி அவரியற்றிய விடுகதைப் பாடலைப் பார்ப்போம்:

"முற்பாதி போய்விட்டால் இருட்டே யாகும்;

        முன்னெழுத்தில் லாவிட்டால் பெண்ணே யாகும்;

பிற்பாதி போய்விட்டால் ஏவற் சொல்லாம்;

         பிற்பாதி யுடன்முனெழுத் திருந்தால் மேகம்;

சொற்பாகக் கடைதலைசின் மிருகத் தீனி!;

          தொடரிரண்டாம் எழுத்துமா தத்தில் ஒன்றாம்;

பொற்பார்திண் புயமுத்து சாமி மன்னா!

           புகலுவாய் இக்கவியின் புதையல் கண்டே!"

பொருள்:

பாடலிலேயே விடையும் உள்ளது. 'புதையல்' என்பதே அச்சொல்.

'புதையல்' சொல்லின் முற்பாதி போய்விட்டால் இருட்டேயாகும்;

'புதையல்' இல் முற்பாதி--'புதை' போய்விட்டால் 'அல்' இருட்டைக் குறிக்கும். 

முன்னெழுத்து இல்லாவிட்டால்--'புதையல்'  --'பு' இல்லாவிட்டால்-- தையல்--பெண்.

பிற்பாதி போய்விட்டால்-- 'புதை' என்னும் ஏவற் சொல் உருவாகும்.

பிற்பாதியுடன் முன்னெழுத்து இருந்தால்--' யல்' லோடு முன்னெழுத்து சேர்ந்தால்

பு+யல்=புயல்= மேகம்.

சொற்பாகக் கடைதலை(சின் அசையாகும்--அர்த்தமில்லாதது)--'பு' வும் 'ல்'உம்

சேர்ந்தால் 'புல்'=மிருகத்தீனி.

தொடரிரண்டாம் எழுத்து 'தை' ---ஒரு மாதம்.

ஆக, புலவர் விடுகதைப் பாட்டுப்பாடி இறுதியில்  'புதையல்' என்ற விடையையும்

தெரிவித்துவிட்டார்.

Wednesday 27 September 2023

இறைவா, ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே!

 இறைவா! ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே!


சங்க காலத்தில் படைக்கப்பட்ட இலக்கியங்கள் பெரும்பாலும்

இயற்கையின் எழிலை விவரிப்பனவாக இருந்தன. இடையிடையே

கடவுளைப் பற்றிய செய்திகளும். கூறப்பட்டிருந்தன. பக்திக்காலம்

எனக் கருதப்படும் ஏழாம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தர், 

திருநாவுக்கரசர் ஆகிய சிவஞானச்செல்வர்கள் ஆயிரக்கணக்கான

பாடல்களை இயற்றி அவற்றை எந்தப்பண்களில் பாடி இறை

வனைத் தொழுதல் வேண்டும் என்ற விதிகளையும்  வகுத்துக்

கொடுத்தனர்.


சங்க காலத்துப் பாடல்கள் இயற்கையோடு இயைந்த அன்றைய

வாழ்க்கைமுறையை விவரித்தன. குறைந்த சொற்களைக்

கையாண்டு  அன்றைய வாழ்வியலை எடுத்துக் காட்டின.கலித்

தொகை, பரிபாடல் போன்றவை இசைக் கூறுகளோடு மிளிர்ந்

தாலும் பிற்காலத்தில் பின்பற்றப்பட்ட  மொழியை அழகுபடுத்தும்

மடக்கு, திரிபு முதலிய புலமைக்கு அறைகூவல் விடுக்கும் கூறுகள்

அன்றைய நாளில் பின்பற்றப்படவில்லை. திருஞானசம்பந்தர்

பக்திப் பாடல்களை இயற்றியதோடு மொழியை அழகுபடுத்தும்

விடயங்களிலும் கவனம் செலுத்தினார். எழுகூற்றிருக்கை,

ஏகபாதம், மடக்கு(யமகம்), மாலை மாற்று, பல்வகைச் சந்தம் 

போன்ற திறமைக்கு அறைகூவல் விடும் இலக்கியககூறுகளைக்

கையாண்டு தம் பாடல்களில் சுவையும், அழகும்ததும்பச் செய்தார்.


அவர் அடியொற்றியே பின்னாளில் திருத்தக்க தேவர், கம்பர்,

ஒட்டக் கூத்தர், அருணகிரிநாதர், வில்லிபுத்தூரார், காளமேகனார் 

போன்ற புலவர்கள் சித்திரகவி எனப்படும் கவிதைகளையும்

சந்தக்கவிதைகளையும் படைத்தனர். எடுத்துக்காட்டாகச் சில

பாடல்களைப் பார்ப்போம்:

மடக்கு(யமகம்):

"ஆல நீழல்  உகந்த(து) இருக்கையே;

யான பாடல் உகந்த(து)  இருக்கையே;

பாலி னேர்மொழி யாளொரு பங்கனே;

        பாத மோதலர் சேர்புர பங்கனே;

கோல நீறணி மேதகு பூதனே;

        கோதி லார்மன மேவிய பூதனே;

ஆல நஞ்சமு துண்ட களத்தனே;

        யால வாயுறை அண்டர் களத்தனே."

பொருள்:

கல்லாலின் நிழலில். விரும்பியது இருக்கையே(இருப்பிடம்);

யான் பாடலில் விரும்பியது  இருக்கையே(ரிக்கு என்ற வேதப்

பாடலையே); பாலுக்கு நிகரான பேச்சுடைய உமையம்மையை

இடப்பங்கில் உடையவன்;  தமது திருவடியைத் துதியாதவராகிய

அசுரர் இருந்த திரிபுரத்தை அழித்தவன். அழகிய திருநீற்றைப்

பூசிய சிறந்த சிவகணங்களையுடையவனே! குற்றமற்ற

அடியார்கள் மனங்களில் தங்கியிருப்பவனே! அவர்தம் உயிருக்கு

உயிராய் இருப்பவனே!. ஆலகால நஞ்சை அமுதம் போல் உண்ட

கழுத்தை உடையவனே! ஆலவாயில் (மதுரைக் கோவிலில்) உறை

கின்ற தேவர்கள் தலைவனே!

இருக்கையே=இருப்பிடமே; இருக்கையே= நால்வேதங்களில்

முதலாவதாகவுள்ள இருக்கையே(ரிக், யஜுர், சாம, அதர்வணம்);

பங்கன்=உமையை இடப் பங்கில் உடையவன்; (திரிபுர) பங்கன்=

(திரிபுரத்தை) அழித்தவன்; பூதன்= பூதகணங்களையுடையவன்;

பூதன்(பூதம்=உயிர்) உயிருக்கு உயிராய் இருப்பவன்; (நஞ்சுண்ட)

களத்தன்=கழுத்தையுமடையவன்; (அண்டர்)களத்தன்=

அண்டர்கள்(தேவர்கள்) +அத்தன்=தேவர்களுக்குத் தலைவன்.

மடக்கு(யமகம்) என்பது செய்யுளில் முதலடியில் பயின்று

வரும் ஒருசொல் ஒரு குறிப்பிட்ட. பொருளைக் குறிக்கும்; அதே

சொல் அடுத்த அடியில் மடங்கி வந்து(திரும்பவந்து) வேறொரு

பொருளைத் தரும்.


இது போலவே ஒரு குறிப்பிட்ட எழுத்து வருக்கத்தைப் பயன்

படுத்திப்  பாடல்களை இயற்றியுள்ளார். அந்தவகையில்

அமைந்த ஒரு பாடலைப் பார்ப்போம்:

"ஒழுகலரி(து) அழிகலியில் உழியுலகு

பழிபெருகு வழியைநினையா

முழுதுடலில் எழுமயிர்கள் தழுவுமுனி

        குழுவினொடு கெழுவுசிவனைத்

தொழுதுலகில்  இழுகுமலம் அழியும்வகை

        கழுவும் உரை  கழுமலநகர்ப்

பழுதில்இறை எழுதுமொழி தமிழ்விரகன்

        வழிமொழிகள் மொழிதகையவே".

பொருள்:

அறம் அழிகின்ற கலியுகத்தில், உலகத்தில் ,அறவழியில்,

ஒழுகுவது(நடப்பது) அரியது என்றும்  பாவம் பெருகுகின்ற

வழிகள் பெருமளவில் நிலவுகின்றன என்றும் எண்ணிய

உடல் முழுவதும் மயிர்களைக்கொண்ட உரோமசமுனிவர்

தன் குழுவினொடு கழுமலத்தில் தங்கியிருந்து சிவனைத்

தொழுதுவந்தார். உலக இச்சையில் வழுக்கச்செய்யும் பந்த

பாசங்களை நீக்கும் அந்தத் தலத்தில் வணங்குவோரின்

குற்றம் குறைகளைப் போக்கும் தலைவரும், எழுதக்கூடிய

வேதமொழியாகிய தமிழில் விற்பன்னருமாகிய ஞான

சம்பந்தனின் வழிமொழித் திருவிராகப் பாசுரங்கள் பாடிப்

பயன்பெறும் தன்மையுடையவை. கழுமலம்=சீர்காழிப்பதி.


இது போன்ற சொல் விளையாட்டு மற்றும் எழுத்து விளையாட்டு

திருஞானசம்பந்தருக்கு மிகமிக உகந்தவை. இறைவனைப்

பாடிப் பரவிய பாடல்களில் இயற்கை வருணனை, பற்பல

சந்தங்கள், விதவிதமான யாப்பு வடிவங்கள், ஏகபாதம், எழுகூற்

றிருக்கை,  மாலைமாற்று, திருவிருக்கக் குறள், திருவிராகம்

முதலான உத்திகளைக் கையாண்டு  பக்தியையும் தமிழையும்

வளர்த்தார். அவர் அடியொற்றியே பிற்காலத்தில் கம்பர், 

அருணகிரிநாதர், காளமேகப் புலவர் போன்றவர்கள் விதவிதமான 

சந்தங்கள் யாப்பு முறைகளையும் கையாண்டு தமிழிலக்கியத்தை

வளப்படுத்தினர்.



 


     


















Tuesday 5 September 2023

அரி(து)அரோ நீ உற்ற நோய்க்கு மருந்து.

 அரிதரோ நீ உற்ற நோய்க்கு மருந்து.


தமிழ்நாட்டில் பெண்களுக்கான மரபுகளில் பூச்சூடிக் கொள்ளுதல்

குறிப்பிடத்தக்க ஒன்று. சங்க காலத்தில் பெண்கள் முல்லை மலரை

விரும்பிச் சூடிக் கொண்டனர். முல்லை மலர் கற்புக்குரிய மலர்ஆகக்

கருதப்பட்டது. "மௌவலும், தளவமும், கற்பும்" முல்லையைக் குறிக்கும்

சொற்கள் எனத் திவாகர நிகண்டு கூறுகிறது. நற்றிணையில் வினைமுற்றி

மீளும் தலைவன் தேர்ப்பாகனிடம் கூறும் பொழுது தலைவியைப் பற்றி

" முல்லை சான்ற கற்பின் மெல்லியற் குறுமகள்" என்று குறிப்பிடுகிறான்.

(பாடல் எண்:142). அக்காலத்தில் காதலன் காதலிக்கு முல்லையைச் சூட்டிக்

காதலை உறுதிசெய்தல் வழக்கமாய் இருந்தது. முல்லை மணம் கமழ இல்வாழ்வில்

ஈடுபடுவதால் இந்நிகழ்வுக்குத்  திருமணம் என்ற பெயர் வந்திருக்கலாம்.


கலித்தொகையில் ஒரு காட்சியைக் காண்போம். முல்லை நிலத்தில் இந்நிகழ்வு

நடந்தது. ஒரு தலைவி காளையொன்றை வீரமூட்டி வளர்த்து வருகிறாள். ஆனால்

ஏறு தழுவும் வீர விளையாட்டில் கலந்துகொள்ளச் செய்யவில்லை. வேலி தாண்டி 

விளையாடும் ஆடுகளை மேய்க்கும் ஆயர்களும், இந்தப் பசு

இவ்வளவு குடம் பால் தரும் என்று சுட்டிக் காட்டும் ஆயர்களும்,  ஏறுதழுவுதல்

நிகழ்ச்சிக்காகக் காளைகளை வளர்க்கும் ஆயர்களும் ஏறுதழுவுதல் நடத்தத் திட்ட

மிட்டனர்.ஒருநாள் காளைகளை வளர்ப்போர் தம் காளைகளைத் தொழுவத்தில் ஒன்றுகூடச்

செய்தனர். தலைவி  தன் காளையையும்  தொழுவத்தில் நிற்கச் செய்தாள்.

முரட்டுத்தனம் கொண்ட, செவியில் மச்சம் கொண்ட வீறுநடை போடும் காளை அது.

வீரமிக்க ஆயர்கள் இக்காளைகளை அடக்க ஆயத்தமாகத் தொடங்கினர். மாடுபிடி

ஆயர்கள் தத்தம் தலைகளில் முல்லைமலரால் வனையப்பட்ட தலைமாலைகளைச்

சூடியிருந்தனர். நிகழ்ச்சி தொடங்கியது. மாடுபிடி வீரர்கள் ஆளுக்கு ஒரு காளையை

நோக்கி ஓடி அவைகளை அடக்கியாளத் தலைப்பட்டனர். ஆனால் காளைகள்

பிடிபடாமல் துள்ளித் குதித்தன. கூரான கொம்புகளைப் பலவிதத்தில் அசைத்து

வீரர்களைத் தம்மை நெருங்கவிடாமல் மிரட்டின. அப்படியிருந்தும் ஒரு பொதுவன்(ஆயன்)

தலைவியின் காளையைத் தன் பிடிக்குள் அகப்படுத்தி அதனை அடக்கிவிட்டான். உடனே

அக்காளை அவன் பிடியிலிருந்து நழுவி அவன் தலைக்குமேல் துள்ளிக்

குதித்தது. அப்பொழுது அவன் தலைமாலை சிதறுண்டு அதிலிருந்த முல்லை மலர் தலைவி

யின் கூந்தலில் செருகிக்கொண்டது. அவள் அதனை எடுத்து எறிந்திருக்கலாம். ஆனால்

அவ்வாறு செய்யாமல் முல்லை மலர் மேல் தன் கூந்தல் முடிகளை இழுத்துவிட்டு மலர்

வெளியே தெரியாத வண்ணம் முடிகளால் மூடச் செய்தாள். எல்லாம் பருவக் கோளாறால்

நிகழ்ந்த செய்கை. காளையை அடக்க முயன்ற ஆயர்மகன் தோற்றப் பொலிவால் கவரப்பட்ட

அவள் மனம் தடுமாறியது. இதைத்தான் கண்டதும் காதல் என்ற முதுமொழியால் குறிப்பிட்டனர் போலும்.


தன் கூந்தலில் செருகியுள்ள முல்லை மலரால் தலைவி இருவேறு சிந்தனைகளுக்கு

ஆட்பட்டாள். ஒரு சிந்தனை இழந்த ஒன்றை மீட்டது போல மகிழ்ச்சியுணர்வை நெஞ்சில்

பதித்தது.. இன்னொரு சிந்தனை தன் அன்னைக்கு இச்செய்தி தெரிந்தால்

என்னாகும்? என்ற கவலையை உருவாக்கியது.ஏனெனில் வழக்கமாக மலரைச் சூடிக்

கொள்ளும்வழக்கம் அவளுக்கு இல்லை. இப்பொழுது வழக்கத்தை மீறித் தன் கூந்தலில் 

இருந்துமணம் எழுந்தால் தன் அன்னை கேள்விக்கணைகளால் துளைத்து விடுவாள். 

அயலான் எவரேனும் தலைவிக்குப் பூச்சூட்டிக் களவுக் காதல் புரிகின்றானோ? என்ற ஐயம்

எழும். தன்னை இற்செறிக்க வாய்ப்பு ஏற்படலாம். தான் மகிழ்வுடன் சுற்றித் திரிவது

பாதிக்கப்படலாம்.


இவ்வாறு இருவேறு பட்ட சிந்தனைகளால் குழம்பித் தவித்த தலைவி தன் தோழியிடம்

அறத்தொடு நிற்க முடிவுசெய்து நிகழ்ந்தவற்றை ஒளிவு மறைவில்லாமல் தோழியிடம்

எடுத்துரைத்தாள். அன்னை தன் களவுக்காதலைக் கண்டுபிடித்துவிடுவாளோ? என்று

அஞ்சுவதாகத் தெரிவித்தாள். "எல்லாத் தவறும் நீங்கும்" என்றாள் தோழி. "எவ்வாறு

நீங்கும்?" என்றாள் தலைவி. "நின் தலைவன் ஆயர்மகன்; நீ ஆயர்மகள்;

நின் தலைவனால் விரும்பப்படுகிறாய்;  நீ நின் தலைவனை விரும்புகிறாய்..

அன்னை வருத்தப்பட யாதொன்றும் இல்லை" என்றாள் தோழி. " உன் நெஞ்சமும்

அன்னை நெஞ்சமும் ஒன்றாய் இருப்பின் சிக்கலில்லை. ஆனால்....." என்றாள்

தலைவி. "நீ காதலிக்கவும் செய்கிறாய்; அதேநேரம் அன்னையை எண்ணி

அஞ்சவும் செய்கிறாய். அப்படியிருந்தால், உன் நோய்க்கு மருந்து கிடைப்பது

அரிதரோ." என்றாள் தோழி.  "மருந்து கிடைப்பது அரிதென்றால், நான் வருந்த

மாட்டேனா?" என்றாள் தலைவி. "அழுக்கில்லாத உன் கூந்தல் முடியில் அவன்

சூடியிருந்த பூ குடியிருக்கிறதென்றால் அந்தக் கடவுள் திருமாலே இந்த ஆயனை

உனக்குக் காட்டியுள்ளார் என்று பொருள். நீ என்னிடம் அறத்தொடு நின்றாய்;

நான் அன்னையிடம் அறத்தொடு நின்றேன். அதனால் உன் தந்தையோடு

தமையன்மார் ஒன்று சேர்ந்து உன்னை அந்தப் பொய்யில்லாத பொதுவனுக்கு

அடைநேர்ந்துள்ளனர்.(மகட்கொடை ஆகக் கொடுத்துள்ளனர்--பெண் கொடுத்துள்ளனர்).

அனைவரும் வரைவுக்கு(திருமணத்துக்கு)

ஒப்புதல் தெரிவித்துவிட்டனர்.


சங்க காலத்தில் களவியல் வாழ்வு, உடன்போக்கு முதலிய நிகழ்வுகள் சமூகத்தில்

அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும்  களவியல் வாழ்வை நீண்டகாலம் கொண்டு செலுத்தச்

சமூகம் அனுமதிக்காது. கூடியவிரைவில் அறத்தொடு நின்று களவியலை வெளிப்

படுத்தி வரைவுக்கு வழிவகுத்தல் வேண்டும். கற்பியல்வாழ்வுக்குப் பெற்றோர், உடன்

பிறந்தோர் மற்றும் உறவினர் முதலான அனைவரின் ஒத்துழைப்பும் தேவையாகும்.


இதுகுறித்த கலித்தொகைப் பாடலைப் பார்ப்போம்(பா.எ.:107):

தலைவி:"எல்லா! இஃது ஒன்று கூறு--- குறும்பிவர்

புல்லினத்தார்க்கும், குடம் சுட்டவர்க்கும், "எம்

கொல்லேறு கோடல் குறை" எனக் கோவினத்தார்

பல்லேறு  பெய்தார் தொழூஉ.

தொழுவத்து,

சில்லைச் செவிமறைக் கொண்டவன் சென்னிக் குவிமுல்லைக்

கோட்டம் காழ்கோட்டின் எடுத்துக்கொண்(டு) ஆட்டிய

ஏழை இரும் புகர் பொங்க, அப் பூ வந்தென்

கூழையுள் வீழ்ந்தன்று மன்.

அதனைக் கெடுத்தது பெற்றார்போல், கொண்டியான் முடித்தது

கேட்டனள், என்பவோ, யாய்.

தோழி: கேட்டால் எவன் செய்ய வேண்டுமோ?--மற்(று) இது

அவன்கண்ணி அன்றோ அது.

தலைவி: "பெய்போ(து) அறியாத் தன் கூழையுள் ஏதிலான்

கைபுனை கண்ணி முடித்தான், என்று, யாய் கேட்பின்,

செய்வ(து) இலாகுமோ மற்று?

தோழி: எல்லாத் தவறும் அறும்.

தலைவி: ஓஓ அஃது அறுமாறு?

தோழி தவறு அன்றாமாறு கூறலும் தலைவி பதிலும்.

"ஆயர்மகன் ஆயின், ஆயர்மகள் நீ ஆயின்,

நின் வெய்யன்ஆயின், அவன் வெய்யை நீ ஆயின்

அன்னை நோதக்கதோ இல்லைமன்--நின்நெஞ்சம்

அன்னை நெஞ்சாகப் பெறின்.

தோழி: அன்னையோ?

ஆயர் மகனையும் காதலை, கைம்மிக

ஞாயையும் அஞ்சுதி ஆயின், அரிதரோ---

நீ உற்ற நோய்க்கு மருந்து.

தலைவி: மருந்து இன்று யானுற்ற துயராயின், எல்லா

வருந்துவேன் அல்லனோ யான்.

தோழி: வருந்தாதி,

மண்ணி மாசற்ற நின் கூழையுள் ஏற அவன்

கண்ணி தந்திட்ட தெனக்கேட்டு  'திண்ணிதா

தெய்வமால் காட்டிற்று இவட்கு' என, நின்னையப்

பொய்யில் பொதுவற்(கு) அடைசூழ்ந்தார்-- தந்தையோ(டு)

ஐயன்மார் எல்லாம் ஒருங்கு.

(யாய்=என் தாய்; ஞாய்=உன் தாய்).

Friday 18 August 2023

புனவேழம் மேல்வந்த போது..

 புனவேழம் மேல்வந்த போது.


சொற்களால் உருவாக்கப்படுவது கவிதை, பாடல், பனுவல் என் அழைக்கப்

படுகிறது. அக்கவிதை சொல்லப்படும் முறையில் ஒரு நயம் அல்லது அழகு

இருத்தல் இன்றியமையாதது. அப்படியிருந்தால் தான் அக்கவிதை படிப்போர்க்கு

இன்பம் நல்கும். கவிதை சொல்லப்படும் முறையில் தென்படும் நயத்தை அல்லது

அழகை 'அணி' எனப் புலவர்கள் கூறுவர். அணிகள் பலப்பல. அவற்றை விவரிக்கும்

நூல்களும் பலப்பல. எடுத்துக்காட்டாக, தண்டியலங்காரம், மாறன் அலங்காரம்

முதலானவை. தண்டியலங்காரம் என்னும் நூலில் சொல்லப்பட்டுள்ள 'சுவையணி'

என்பதனைப் பார்ப்போம். 


உள்ளத்தில் தோன்றும் பலவித உணர்வுகளை மெய்ப்பாடு என்னும் பெயரில் பிறருக்குத்

தெரிவிக்கின்றோம். இந்த மெய்ப்பாடு எட்டு வகைப்பட்டவை. வீரம், அச்சம், இழிவு, வியப்பு,

காமம், அவலம், சினம், நகை(சிரிப்பு)  ஆகிய எட்டு உணர்வுகளும் மெய்ப்பாடு எனஅழைக்

கப்படும். அச்சம் என்னும் மெய்ப்பாட்டைப் புலப்படுத்தும் ஒரு பாடலைப் பார்ப்போம்.

" கைநெறித்து வெய்துயிர்ப்பக் கால்தளர்ந்து மெய்பனிப்ப

மையரிக்கண் நீர்ததும்ப வாய்புலர்ந்தாள்--தையல்

சினவேல் விடலையாற் கையிழந்த செங்கண்

புனவேழம் மேல்வந்த போது".

பொருள்:

மிகுந்த சினங்கொண்ட வீரன் ஒருவன் காட்டுப் பகுதியில் சுற்றி வரும்பொழுது காட்டு

யானை ஒன்றை எதிர்கொண்டான். அந்த யானை சீற்றத்துடன் அவனைத் தாக்க

முயன்ற வேளையில் அவன் தன் கைவசம் இருந்த வேலை அதன் மீது எறிந்தான்.

அவ்வேல் யானையின் தும்பிக்கையைத் துண்டித்துக் கீழே விழுந்தது. வீரன் "இனிமேலும்

இங்கிருத்தல் தகாது" என்று எண்ணித் தப்பித்து ஓடிவிட்டான். தும்பிக்கையிழந்த யானை

மிகுந்த ஆவேசத்துடன் காட்டில் அலைந்து திரிந்தது. அந்த இக்கட்டான நேரத்தில்

சுள்ளி(சிறு விறகு) பொறுக்கவந்த பெண் ஒருத்தி தொலைவில் யானை ஆவேசத்துடன்

வந்துகொண்டிருப்பதைக் கண்டு தன் கைகளை நெரித்துக் கொண்டு, பெருமூச்சு உண்டாக,

கால்கள் தளர்ந்து தள்ளாட, உடலெல்லாம் பதறி நடுங்க, மைதீட்டப்பட்ட செவ்வரி பொருந்திய 

கண்களில் கண்ணீர் ததும்ப, வாய் உலர்ந்து போகச் செய்வதறியாது திகைத்து

நின்றிருந்தாள். (பிற்பாடு சுதாரித்து ஓடிப்போய்த் தப்பித்திருப்பாள்; பாடலில் அதுசொல்லப் படவில்லை.)


அருஞ்சொற் பொருள்:

வெய்துயிர்த்தல்=பெருமூச்செறிதல்; பனித்தல்=நடுங்குதல்; செவ்வரி= சிவந்த இரேகை;

புலர்தல்=உலர்தல்; விடலை= வீரன்; புனம்=காடு; வேழம்=யானை.

அச்சம் என்னும் மெய்ப்பாட்டை விவரிக்கும் மற்றொரு பாடல்:

"ஒருவர் ஒருவர்மேல் வீழ்ந்துவட நாடர்

அருவர் அருவரென அஞ்சி---வெருவந்து

தீத்தீத்தீ  யென்(று)அயர்வர் சென்னி படைவீரர்

போர்க்கலிங்கம் மீதெழுந்த போது".

பொருள்:சோழனுடைய படைவீரர் கலிங்க நாட்டின்(இன்றைய ஒடிசா) மீது படையெடுத்த

போது அவ்வடநாடர் ஒருவர்மேல் ஒருவர் வீழ்ந்து "அருவாளர் வந்துள்ளனர்; (தொண்டை

நாடு முற்காலத்தில் அருவா நாடு, அருவா வடதலை நாடு என்று அழைக்கப்பட்டது. அந்த

நாட்டு மக்கள் அருவாளர் எனப்பட்டனர். அவர்கள் கொச்சைத்தமிழ் பேசியமையால்

அப்பகுதி கொடுந்தமிழ் நாடு எனச் சொல்லப்பட்டது. காஞ்சிபுரம் அந்நாட்டின் தலைநகரம்.

தமிழரல்லாத வடவர் எல்லாத் தமிழரையும்  அருவாளர் என்றே அழைத்தனர். எனவே 

சோழப்படையினரை அருவாளர் என்றே கருதினர்)அருவாளர் வந்துள்ளனர் என்று கூவினர்.

அவர்கள் எரியூட்டிவிடுவார்கள் என்ற அச்சத்தில் "தீத்தீத்தீ" என்று கூக்குரல் இட்டனர். இந்த

இடத்தில் கலிங்கத்துப்பரணி 452ஆம் கண்ணியை நினைவுகூர்தல் தகும்.

"ஒருவர் ஒருவரின் ஓட முந்தினர்;

உடலின் நிழலினை ஓட அஞ்சினர்;

அருவர் அருவர் எனாஇ றைஞ்சினர்;

அபயம் அபயம் எனாந டுங்கியே."

கலிங்கத்துப் போர்க்களத்தில் சோழப்படையைக் கண்டு நடுங்கிய வடவர்நிலை மிகப்

பரிதாபமாக இருந்தது.

(சென்னி=சோழன்).












Sunday 30 July 2023

முனையதரையன்.

 முனையா! கலவி முயங்கியவாறெல்லாம் நினையாயோ, 

நெஞ்சத்து நீ?


முனையதரையன் திருக்கண்ணபுரத்தில் வாழ்ந்த ஒரு சிற்றரசன்.

விக்கிரம சோழன்(1118-1136) ஆட்சிக்காலத்தில் படைத்தலைவன் ஆகப்

பணியாற்றியவன்.  இவனும் கருணாகரத் தொண்டைமானும் ஒட்டக்

கூத்தர் பாடிய விக்கிரம சோழன் உலாவில் குறிப்பிடப்படுகின்றனர்.

"குலையப் பொருதொருநாட் கொண்ட பரணி

மலையத் தருந்தொண்டை மானும்---பலர்முடிமேல்

ஆர்க்குங் கழற்கால் அனகன் தனதவையுள்

பார்க்கு மதிமந்த்ர பாலகரில்---போர்க்குத்

தொடுக்குங் கமழ்தும்பை தூசினொடுஞ்  சூடிக்

கொடுக்கும் புகழ்முனையர் கோனும்"............(69--71)

முனையர்கோன் என்பவன்தான் இங்கு குறிக்கப்படும் முனையதரையன்.


இம்முனையதரையன் சிலகாலம் திருக்கண்ணபுரத்தில் தண்டத்தலைவனாகப்

பணியாற்றியுள்ளான்(வரிவசூல் செய்பவன்). அக்காலத்தில் நாட்டில் கொடும்

பஞ்சம் உருவாயிற்று. மக்கள் பஞ்சத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

மக்களின் துயரத்தைப் பார்க்கச் சகிக்காமல் அரசுக்குரிய திறைப்பொருளை

மக்களுக்காகச் செலவிட்டு அவர்களது துன்பத்தைக் குறைத்தான். பிற்பாடு நாடு

செழித்து வளம் பெருகத் தொடங்கியது. இருப்பினும் மக்களிடம் திறைபெறுவதற்கு

மனம் ஒப்பாமல் பஞ்சத்தின் பொழுது செலவழித்த பணத்தை அரசுக் கருவூலத்தில்

திரும்பச் செலுத்தாமல் காலம் கடத்தினான். மக்களின் நிதி நிலைமை இன்னும்

மேம்படட்டும் என்று காத்திருந்தான்.


இச்செய்தி விக்கிரம சோழன் செவிகளை எட்டியது. அவன் வெகுண்டு எழுந்தான்.

"பஞ்சகாலத்தில் தன்னைக் கேட்காமல் அரசுப் பணத்தை மக்களுக்காகச் செலவு

செய்ததை மன்னித்து விடலாம். ஆனால் நிலைமை சரியான பின்னரும் அரசுப்

பணத்தைத் திரும்பச் செலுத்தாமல் காலம் தாழ்த்துவதை மன்னிக்க இயலாது"

என்று கூறி முனையதரையனைச் சிறையில் அடைத்துவிட்டான்.


முனையதரையனுக்கும்  அரண்மனைப் பணிப்பெண் ஒருத்திக்கும் ஆழ்ந்த காதல்

அரும்பி நாளும் வளர்ந்து வந்தது. அப்பெண் இச்செய்தியைக் கேட்டுக் கொந்தளித்தாள்.

தானும் முனையதரையனும் நிகழ்த்திய காதல் களியாட்டங்களை நினைத்து மனம்

வெம்பினாள்; குமைந்தாள். உடனே முனையதரையனுக்கு மடல் அனுப்பினாள்.

அதில் கீழ்க்கண்டவாறு கவிதையை வரைந்திருந்தாள்:

"இன்றுவரில் என்னுயிரை நீபெறுவை; இற்றைக்கு

நின்று வரிலதுவும் நீயறிவை; ---வென்றி

முனையா! கலவி முயங்கியவா(று) எல்லாம்

நினையாயோ நெஞ்சத்து நீ?".

(கலவி= சேர்ந்து பழகியமை; முயங்குதல்=தழுவுதல்)


முனையதரையன் காதலி மனம் ஆறவேயில்லை. குறையாத கவலையோடு

திருக்கண்ணபுரக் கோவிலுக்குச் சென்று திருமாலிடம் முறையிட்டாள். "இன்னும் ஐந்து

நாட்களுக்குள் என் காதலன் விடுதலைபெற்று வராவிட்டால் நான் தீப்பாய்ந்து உயிர்நீப்

பேன். திருமாலே! உன் மேல் ஆணை" என்று ஆவேசமாக முழங்கினாள். பிற்பாடு பித்துப்

 பிடித்தவள்போல் தனக்குத்தானே பேசிக்கொண்டு வீடு போய்ச் சேர்ந்தாள்.


விக்கிரம சோழ வேந்தனும்  அன்றிரவு சரியாக உறங்கவில்லை. முனையதரையனையும்

கருணாகரத்தொண்டைமானையும் மிகவும் போற்றியவன். அவர்கள் வீரத்தையும் விசுவா

சத்தையும் மெச்சியவன். தற்பொழுது முனையதரையனைச் சிறையில் அடைத்துவிட்டேனே;

தனது செயல் தவறோ? என்று சிந்தித்துக் குழம்பினான்; ஒருவாறு உறக்கத்தில் ஆழ்ந்தான்.

கனவில் திருக்கண்ணபுரத் திருமால் தோன்றி" முனையதரையனைச் சிறையில் இட்டது

தவறு; உடனே விடுதலை செய்" என்று கூறியதாக உணர்ந்தான். காலை எழுந்தவுடன்

தன் ஆசானையும் அமைச்சரையும் அழைத்துவருமாறு அரண்மனைக் காவலர்கட்கு ஆணை

யிட்டான். ஒட்டக்கூத்தரும் அமைச்சரும் வந்து சேர்ந்தனர்.  அவர்களிடம் கனவைப் பற்றிச்

சொல்லி மேற்கொண்டு  என்ன செய்யலாம்? என்று அவர்கள் கருத்தைக் கேட்டான்.

முனையதரையனை விடுவிப்பது நலம் பயக்கும் என்று கூறினர். அதன்படி முனைய

தரையன் விடுதலைசெய்யப்பட்டான்.


முனையதரையன் உடனே விரைந்து சென்று தன் காதலியைச் சந்தித்தான். " பிரிந்தவர்

கூடினால் பேசல் வேண்டுமோ?" மௌனமாகக் காட்சிகள் அரங்கேறின. ஒருவாறு

இருவரும் இயல்புநிலைக்குத் திரும்பினர். பின்னர் முனையதரையன் காதலி சர்க்கரைப்

பொங்கலும் பொரிக்கறியும் சமைத்துத் திருக்கண்ணபுரக் கடவுளுக்குப் படைத்துவிட்டுத்

தன் மனத்துக்கினிய காதலனுக்கு ஊட்டிவிட்டாள். மறுநாள் கோவிலுக்குச் சென்றுவந்த

பொதுமக்கள் தாங்கள் திருமாலின் திருமேனிச்சிலையில் நெய்படிந்திருந்ததைக் கண்ட

தாகவும் அது முனையதரையன் காதலி படைத்த சர்க்கரைப் பொங்கலில் ஊற்றி

 இருந்த நெய்தான் என்றும் கூறிக்கொண்டனர். இதனைக் கேள்விப்பட்ட முனையதரையன்

அன்றுமுதல் திருக்கண்ணபுரத் திருமாலுக்குப் பொங்கலும் பொரிக்கறியும் நாளும்

படைக்க ஏற்பாடு செய்தான். அப் படையலுக்கு 'முனையோதனம்'  என்று பெயர். திருக்

கண்ணபுரத் திருமாலுக்குச் சவுரிப்பெருமாள் என்று பெயர். இதைத்தான் சோழமண்டல

சதகம் கூறுகிறது:

"புனையும் குழலாள் பரிந்தளித்த பொங்கல் அமுதும் பொரிக்கறியும்

அனைய சவுரி ராசருக்கே ஆமென் றருந்தும் ஆதரவின்

முனைய தரையன் பொங்கலென்று முகுந்தற் கேறு முதுகீர்த்தி

வனையும் பெருமை எப்போதும் வழங்கும் சோழ மண்டலமே!"


பார்வை:

தமிழ் நாவலர் சரிதை-மூலமும் உரையும் by

ஔவை சு.துரைசாமிப் பிள்ளை.

Sunday 9 July 2023

சேண் நாட்டார் ஆயினும் நெஞ்சிற்கு அணியர்.

 சேண் நாட்டார் ஆயினும் நெஞ்சிற்கு அணியர்.


வரைவில் வைத்துப் பொருள்வயின் பிரிந்து சென்றுவிட்டான்

ஒரு தலைவன். அதாவது, திருமணத்தை உறுதிசெய்துவிட்டு

அதற்காகப் பொருள் தேடிவரத் தொலைவிலுள்ள நாடுகளுக்குச்

செல்வது சங்ககால வழக்கம். அக்காலத்தில் பிரிவினால் தலைவனும்

துன்பம் கொள்வான்; தலைவியும் துன்பம் கொள்வாள். அவ்வேளையில்

காதலித்த பொழுது நிகழ்ந்த நேர்வுகளை அசைபோட்டு இருவரும்

தம்மைத் தேற்றிக்கொள்வர். இங்கே ஒரு தலைவியிடம் அவள் தோழி

தலைவனைப் பிரிந்ததால் ஏற்பட்ட துயரத்தை ஆற்றியிருந்த விதம்

பற்றி வினவினாள். அதற்குத் தலைவி விடையிறுத்தாள்: " நம்மைப்

பிரிந்து(என்னைப் பிரிந்து) தொலைவிலுள்ள நாட்டுக்குச் சென்று

அங்கே உறைகின்றார்;ஆயினும் என் நெஞ்சிற்கு அருகிலேயே எப்பொழுதும்

வீற்றிருக்கின்றார். அவரது நாட்டுக் கடலில் உருவாகும் அலைகள்,

விழுது தாழ்ந்த தாழையினது முதிர்ந்த கொழுவிய அரும்பு, நாரைகள் கோதுகின்ற

சிறகைப்போல விரிந்து மடல்கள் மலர்கின்ற கடற்கரைச் சோலையை

ஒட்டி அமைந்துள்ள எங்கள் சிற்றூரில் இல்முகப்பில் வந்து மீண்டுசெல்லும்‌.

அவர் தற்பொழுது வெகு தொலைவிலுள்ள நாட்டில் உறைகின்ற வேளையிலும்

என் நெஞ்சருகே எப்பொழுதும் வீற்றிருக்கின்றதாகவே உணர்கின்றேன்.

தலைவன் தற்பொழுது தங்கியுள்ள நாட்டின் நீரைக் கண்டு அவனது

பிரிவால் ஏற்பட்ட துயரை ஆற்றியிருந்தேன்". காதலர் பிரிய நேர்ந்தால்,

காதலனை நினைவுபடுத்தும் அவன் தொடர்புடைய எந்தப் பொருளைக்

கண்டாலும் காதலிக்குப் பிரிவுத் துன்பம் குறையும் என்பது இலக்கியச்

செய்தி. இனி, தொடர்புடைய பாடலைப் பார்ப்போம்:

குறுந்தொகை: பாடல் எண்: 228; புலவர்:வள்ளுவன் பெருஞ்சாத்தன்.

"வீழ்தாள் தாழை யூழுறு கொழுமுகை

குருகுளர் இறகின் விரிபுதோ (டு) அவிழும்

கானல் நண்ணிய சிறுகுடி முன்றில்

திரைவந்து பெயரும் என்பநம் துறந்து

நெடுஞ்சேண் நாட்டார் ஆயினும்

நெஞ்சிற்(கு) அணியர் தண்கடல் நாட்டே".

அருஞ்சொற் பொருள்:

குருகு= நாரை; தோடு= மடல்; கானல்=கடற்கரைச் சோலை;

நண்ணிய=பொருந்திய; முன்றில்=வீட்டின் முகப்பு;

திரை=அலை; பெயரும்= மீண்டு செல்லும்; சேண்=தொலைவு;

அணியர்=அருகில் உள்ளவர்.


இதே கருத்து குறுந்தொகை 361 ஆம் பாடலிலும் பயின்று

வருகிறது. தலைவனது மலையில் முதல்நாள் மாலை பெய்த மழை

யினால் உண்டாகிய அருவியால் அடித்துவரப்பட்ட காந்தள் மலர்

மறுநாள் காலையில் தலைவியின் ஊர்அருகே வந்தது. தம்

தலைவனோடு  தொடர்புடைய பொருட்களைத் தொட்டுத் தீண்டலும்,

தழுவுதலும், பாராட்டிப் போற்றுதலும் மகளிர் இயல்பு. பார்க்க பா.எ.361.

"அம்ம! வாழி தோழி அன்னைக்(கு)

உயர்நிலை உலகமும் சிறிதால்;; அவர் மலை

மாலைப் பெய்த மணங்கமழ் உந்தியொடு

காலை வந்த காந்தள் முழுமுதல்

மெல்லிலை குழைய முயங்கலும்

இல்லுய்த்து நடுதலும் கடியா தோளே".

தலைவனது மலையில் மாலையிற் பெய்த மழையினால் உருவான

அருவியால் அடித்து வரப்பட்ட  காந்தள் மறுநாள் தலைவியின் வீட்டருகே

வர, அதனை எடுத்துத் தலைவி தழுவிக் கொண்டாள்; அதன்கிழங்கை

வீட்டில் நட்டு வைத்தாள். அன்னையும் இச்செயலை விலக்கவில்லை.

(ஏனெனில் வரைவு உறுதிசெய்யப்பட்டுள்ளது). அன்னையின் உதவிக்கு

மேலுலகம் அளித்தாலும் அது சிறிதே ஆகும்.


இதுபோன்ற நிகழ்வுதான் இராமபிரான் கொடுத்தனுப்பிய கணையாழி

யைக் கண்ட சீதையின் நிலைமை.

"மோக்குமுலை  வைத்துற முயங்குமொளிர் நன்னீர்

நீக்கி நிறை கண்ணிணை ததும்பநெடு நீள

நோக்குநுவ லக்கருதும் ஒன்றுநுவல் கில்லாள்

மேக்குநிமிர் விம்மலள் விழுங்கலுறு கின்றாள்".

(கம்பராமாயணம்--உருக்காட்டுப் படலம் எண்:67)

தலைவியின் நிலைமை இதுவென்றால், தலைவனின்

நிலைமை சொல்லவும் கூடுமோ? அவனும் பித்துப்

பிடித்தாற் போலப் பாதையில் தென்படும் மரம், மட்டை

களையும், குயில் கிளிகளையும், மான் குரங்குகளையும்

விளித்துப் புலம்பியிருப்பான். அன்பின் ஆற்றல் அத்

தகையது.அதுவும் காதலன்- காதலி ஆகிய இருவர்க்கும் இடையே

நிலவும் பேரன்பை விவரிக்கவும் கூடுமோ?


பார்வை: குறுந்தொகை மூலமும் உரையும்-ஆக்கியோர்

                  டாக்டர் உ.வே.சா.அவர்கள்.

Sunday 25 June 2023

கண்ணீரின் வலிமை.

 கண்ணீரின் வலிமை.


மனிதர்கள் இயல்பே பிறர் கண்ணீர் உகுக்கும் பொழுது மனம்

இளகுவதும் இரக்கம் காட்டுவதும் ஆகும்.  பெண்கள் கண்ணீர்

சிந்தினால் எப்படிப்பட்ட கல் நெஞ்சமும் கரைந்துவிடும். அதிலும்,

அழகும் அன்பும் ஒருங்கியைந்த காதல் தலைவி கண்ணீர் வடித்தால்

தலைவனால் தாங்க இயலுமோ? இப்படியொரு காட்சிதான் குறுந்தொகையில்

தீட்டப்பட்டுள்ளது. அதனைப் பார்ப்போம்.


தலைவனுக்கும் தலைவிக்கும் அண்மையில்தான் வரைவு(திருமணம்)

நடந்து முடிந்தது. குடும்பத்தைச் செவ்வனே நடத்தத் தேவையான பொருள்

தேடிவர வேற்றூருக்குச் செல்ல முடிவுசெய்து தன் தலைவியிடம்

உரையாடத் தொடங்குகின்றான்."பூங்குழையை அணிந்தவளே! நீலமணி

ஒழுகினாற் போன்ற கரிய நிற அறுகம்புல்லின் பிடிப்பு நீங்கிய மெல்லிய

தண்டைப் பிணையோடும் இணைந்து வயிறு நிரம்ப உண்ட ஆண்மான்

துள்ளி விளையாடும் காட்டைக் கடந்து நான் வேற்றூர்சென்று குடும்பத்துக்குத்

தேவையான பொருள் தேடிக்கொண்டு மீண்டுவர எண்ணியுள்ளேன். அதுவரையில்

உன்னால் பொறுத்திருத்தல் இயலுமோ?" என்று சொல்லி முடிக்குமுன்

அவள் கண்கள் கலங்கி முத்து முத்தாகக் கண்ணீர் சிந்தத் தொடங்கின.

அவள் கண்ணீரைக் கண்டதும் அவன் உடல் முழுவதும் பதற அவளைத்

தேற்றத் தொடங்கினான். 'நீர் விலங்கு அழுதல்' எனக் குறுந்தொகையில்

குறிப்பிடப் பட்டுள்ளது. நீர் கண்ணில்உள்ள பாவையை மறைக்கின்ற

அழுதல் எனக் கொள்ளலாம். காதல் மனையாள் கதறி அழுத பின்னர்

அவனால் அவளைப் பிரிந்து பயணம் மேற்கொள்ளுதல் இயலுமோ?

இதே போல ஒரு காட்சி அகநானூறு 5ஆம் பாடலிலும் காட்டப்பட்டுள்ளது.

"பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு"(21ஆம் வரி) என்று குறிப்பிடப்

பட்டுள்ளது. கண்ணிலுள்ள பாவையை மறைக்கும் நடுக்கத்தைத் தரும்

கண்ணீர் என்று உரையாசிரியர்கள் கூறுகின்றனர். அன்பிற்கினிய

தலைவி கண்ணீர் சொரிந்தால் அவன் நடுங்கமாட்டானா?  சிலப்பதிகாரத்தில்

இளங்கோவடிகள் "காவி உகுநீரும் கையில் தனிச்சிலம்பும் கண்டு"

"கூடலான் கூடாயினான்" என்று கண்ணகியைக் கண்ணீருடன் பார்த்த அளவிலேயே

பாண்டியன் நெடுஞ்செழியன் பாதிஉயிர் துறந்ததாக விவரித்தார். எனவே,

கண்ணீரை எளிதாக மதிப்பிட்டு விட முடியாது.


ஆகவே, பெண்களின் கண்ணீருக்கு மிக்க வலிமையுண்டு எனப் புலவர்கள்

இயம்புவது முற்றிலும் மெய்யே. நம் தலைவனும் பணிந்து பயணத்திலிருந்து

பின்வாங்கியதில் வியப்பேதும் இல்லை. தலைவியின் கண்ணீரோட்டம்

தலைவனின் கவின்தேரோட்டத்தைத் தடைசெய்தது. பாடல் பின்வருமாறு:

"மணிவார்ந் தன்ன மாக்கொடி யறுகை

பிணிகான் மென்கொம்பு பிணையொடு  மார்ந்த

மானே(று) உகளும் கானம் பிற்பட

வினைநலம் படீஇ வருதும் அவ்வரைத்

தாங்க வொல்லுமோ பூங்குழை யோயெனச்

சொல்லா முன்னம் நில்லா வாகி

நீர்விலங்(கு) அழுதல் ஆனா

தேர்விலங் கினவால் தெரிவை கண்ணே.

குறுந்தொகை பாடல் எண்:256;

புலவர் பெயர்: தெரியவில்லை.

அரும்பொருள்:

மணி=நீலமணி; பிணி=அறுகம் புல்லின் இலை இளையதாக உள்ள நிலை.

மானேறு= ஆண்மான்; உகளும்= துள்ளிக்குதிக்கும்;

வினைநலம் படுதல்=பொருள் முயற்சி முற்றுப் பெறுதல்

நீர்விலங்கு அழுதல்=நீர் கண்ணிலுள்ள பாவையை மறக்கச் செய்யும்

அழுகை; தேர்விலங்கியது=தேரோட்டத்தைத் தடைசெய்தது.

தெரிவை=பெண்(இங்கு தலைவி)


பார்வை:

குறுந்தொகை மூலமும் உரையும்: தமிழ்த் தாத்தா உ. வே.சாமிநாத ஐயர்.

Thursday 8 June 2023

சமணர் கழுவேற்றம்.

 சமணர் கழுவேற்றம்.


ஏழாம் நூற்றாண்டுக் காலம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

பாண்டிய நாட்டில், குறிப்பாக மதுரையில், பொதுமக்களை

ஒருவிதப் பதற்றம் ஆட்கொண்டிருந்தது. அன்று வரை சமணம்

கோலோச்சிக் கொண்டிருந்தது. ஆனால், இந்த நிலை தொடருமா?

என்ற ஐயம் சமணர்களிடம் கிளம்பியிருந்தது. ஏனெனில்

தொண்டை மண்டலத்தை ஆண்டுவந்த மகேந்திரவர்ம பல்லவன்

சமணத்தை விட்டு விலகிச் சைவ சமயத்தைத் தழுவிய செய்தியால்

மனம் தளர்ந்து சோர்ந்து போயினர். ஏனெனில் அரசர்கள் ஆதரவு

இருந்தால்தான் தங்கள் சமயத்தைத் தடையின்றிப் பரப்ப இயலும்.

தொண்டை மண்டலம் போலப் பாண்டிய மண்டலமும் மதம் மாறிவிட்டால்

தங்கள் நிலை என்னவாகும்? என்ற மனக்கிலேசம் அடைந்தனர்.

பாண்டிய நாட்டில் வேந்தனும் குடிமக்களும் சமணத்தைப் பின்பற்றி

வாழ்ந்துவந்தனர். பட்டத்தரசி மானி(பின்னாளில் மங்கையர்க்கரசி

என்று போற்றப்படுவார்) யும் அமைச்சர் குலச்சிறையாரும் சைவ

சமயத்தைப் பின்பற்றினர். ஆனால், வெளிப்படையாகத் திருநீறு

அணியாமலும் சிவத்திருப்பெயரை உச்சரிக்காமலும் மறைவாக

வழிபாடு செய்துகொண்டனர். ஏனென்றால் திருநீற்றைப் பார்த்தால்

வேந்தனுக்குக் "கண்டு முட்டு"(கண்டால் தீட்டு) ஏற்படும். சிவப்பெயரைக்

கேட்டால் "கேட்டு முட்டு"(கேட்ட தீட்டு) ஏற்படும்.


பட்டத்தரசி மானி வழக்கம்போல் கோவிலில் நீர் தெளிப்பது, கோலம்

போடுவது போன்ற திருப்பணி புரிந்து கொண்டிருந்த வேளையில்

சிவிகை ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து பதினான்கு வயதுடைய

இளவட்டச் சிறுவன் இறங்கினான். அவர் திருஞானசம்பந்தர்.

பட்டத்தரசி மனம் படபடத்தது. இந்தச் சிறுவனா சமணரை எதிர்த்து

வாதம் நிகழ்த்துவான்? இவனால் சமணருக்கு ஈடுகொடுக்க

முடியுமா? என்றெண்ணி நொந்துபோனாள். அவள் எண்ண

ஓட்டத்தைப் புரிந்துகொண்ட சம்பந்தர் பின்வருமாறு பாடினார்:

"மானி னேர்விழி மாதராய்! வழுதிக்கு மாபெரும் தேவிகேள்;

பானல் வாயொரு பால னீங்கிவன் என்றுநீ பரிவெய்திடேல்;

ஆனை மாமலை ஆதி யாய இடங்களிற் பல அல்லல் சேர்

ஈனர்கட்(கு) எளியே னலேன்திரு ஆலவாயரன் முன்னிற்கவே".

பொருள்: மான்போன்ற கண்கொண்ட பாண்டிமா தேவி! கேட்டுக்

கொள்ளுங்கள். என்னைச் சிறுவன் என்று பரிவோடு நோக்கல்

வேண்டா; என்முன் ஆலவாய் ஈசன் நிற்கின்றார். நான் அந்தச்

சமணர்களுக்கு எளியவன் அல்லன்; அவர்களைவிட வலியவன்.


அன்று இரவு திருஞான சம்பந்தர் சைவமடத்தில் தங்கினார்.

அரணமனையிலிருந்த பாண்டிமாதேவியைப் பெருத்த கவலை

வாட்டியது. சமணர்கள் திருஞானசம்பந்தருக்குக் கேடேதும்

விளைவிப்பார்களோ என்று கவலை கொண்டிருந்தார். அவர்

நினைத்தது போலவே நடந்தது என்று சம்பந்தர் பாடலின் மூலம்

தெரிகிறது. சம்பந்தர் பாடல் பின்வருமாறு:

"செய்யனே! திருஆலவாய் மேவிய

ஐயனே! அஞ்சல் என்றருள் செய்எனைப்

பொய்யர் ஆம் அமணர் கொளுவும் சுடர்

பையவே சென்று பாண்டியற்(கு) ஆகவே."

அரண்மனையிலிருந்த பாண்டிய வேந்தருக்குத் திடீரென்று

வெப்பு நோய் ஏற்பட்டுத் துடிதுடித்தார்.. அருகிலிருந்த மங்கையர்க்

கரசியார் சம்பந்தரை அழைத்துவர அமைச்சரை அனுப்பினார்.

சம்பந்தர் அரண்மனைக்கு விரைந்தார். சம்பந்தரைக் கண்டவுடன்

சமணர்கள் அவரை வாதுக்கு அழைத்தனர். மங்கையர்க்கரசியார்

"வேந்தே! வாதம் செய்வதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம். முதலில்

வெப்பு நோயைக் குணப்படுத்தக் கட்டளையிடுக"  என்றார். வேந்தரும்

சமணரிடம் "வெப்பு நோயை விரைந்து குணப்படுத்துக" என்று

ஆணையிட்டதாகவும் அவர்களால் இயலாமல் போகவே, சம்பந்தரிடம்

கேட்டுக் கொண்டதாகவும் அவர் "மந்திரமாவது நீறு; வானவர் மேலது

நீறு" என்னும் திருநீற்றுப் பதிகம் பாடித் திருநீற்றைப் பூசிவிட்டதாகவும்

வெப்பு நோய் உடனடியாக நீங்கியதாகவும் சைவர்கள் கூறுகின்றனர்.


இத்தோடு சமணர்கள் விட்டுவிடவில்லை. சம்பந்தரை அனல்வாதம்

மற்றும் புனல் வாதம் புரிய அறைகூவல் விடுத்ததாகச் சைவர்கள்

கூறுகின்றனர். அதன்படி, சமணர்கள் தங்கள் மத மந்திர ஓலைகளை

நெருப்பிலிட அவை கருதிப் போனதாகவும் சம்பந்தர் பச்சைப் பதிகம்

என்னும் திருநள்ளாற்றுப் பதிகத்தை நெருப்பிலிட அது வெந்து கருகாமல்

இருந்ததாகவும் கூறுகின்றனர். பின்னர், சமணர்கள் தமது மந்திர ஓலைகளை

வைகை ஆற்றிலிட அவை அடித்துச்செல்லப்பட்டதாகவும், சம்பந்தர்

" வாழ்க அந்தணர்" என்ற பதிகத்தை வைகையில் இட அது நீரோட்டத்தை

எதிர்த்துப் பயணம் செய்து திருவேடகம் என்ற ஊரில் தங்கியதாகவும்

சைவர்கள் தெரிவிக்கின்றனர். அத்தோடு மட்டுமல்லாமல், "வாழ்க அந்தணர்"

பதிகத்தில் "வீழ்க தண்புனல், வேந்தனும் ஓங்குக" என்று பாடியதால்

பாண்டியனுக்கு இருந்த கூன் முதுகு சரியாகி " நின்ற சீர் நெடுமாறன்" ஆக

ஆனதாகவும்  சைவர்கள் தெரிவிக்கின்றனர். பிற்பாடு, அனல்வாதம்,

புனல் வாதம் போட்டிகளில் தோற்றதால் சமணர்களைப் பாண்டியன்

கழுவேற்றியதாகப் பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் போன்ற

இலக்கியங்கள் பேசுகின்றன. சாமநத்தம் என்ற ஊரில் கழுவேற்றக் காட்சிகள்

செதுக்கப்பட்டுள்ளன. ஆனால் இம்மாதிரி நிகழ்வு எதுவும் நடைபெறவில்லை

என்று சமணர்கள் கூறுகின்றனர். அவர்கள் இலக்கியங்களிலும் இதைப் பற்றிய

யாதொரு குறிப்பும் இல்லை. சம்பந்தர் பாடல்களிலும் சமணர்கழுவேற்றத்தைப்

பற்றி எந்தச் செய்தியும் இல்லை. உண்மையில் ஏழாம் நூற்றாண்டில் உருவாக்கப்

பட்ட சமகால இலக்கியம் எதிலும் சமணர் கழுவேற்றம் குறிப்பிடப்படவில்லை.

ஒவ்வொரு நிகழ்வையும் பாடும் சம்பந்தரும் கழுவேற்றம் பற்றிப் பாடவேயில்லை.

கழுவேற்றம் முடிந்து நானூறு, ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகுதான் பெரிய

புராணம் முதலிய இலக்கியங்கள் இதைப் பாடுகின்றன. 


வரலாற்றாசிரியர்களும் தமிழறிஞர்களுமான எஸ்.வையுபரிப் பிள்ளை, கே.ஏ.நீலகண்ட

சாஸ்திரியார், இரா.இராகவையங்கார், கா.சுப்பிரமணிய பிள்ளை, க.கைலாசபதி, தெ. பொ.

மீனாட்சிசுந்தரனார், திரு.வி.க. ஆகியவர்கள் இதுபோன்ற நிகழ்வு நடைபெற்றிருக்க

வாய்ப்பேயில்லை என்று தெரிவிக்கின்றனர். சமணர்கள் தரப்பில் அவர்களின் தென்னகத்

தலைமையிடமான சிரவணபெல்குளாவிலோ, தமிழகத் தலைமையிடமான மேல்சித்தாமூர்

என்ற இடத்திலோ இதுகுறித்த ஆவணம் எதுவும் இல்லை. இத்தனைக்கும் சமணர்கள்

ஆவணங்களைப் பேணிப் பாதுகாப்பதில் வல்லுநர்கள். ஆனால் இது போன்ற நிகழ்வு

நடைபெற்ற சான்றோ, ஆவணமோ தம்மிடம் இல்லை என்கின்றனர். மேல்சித்தாமூர்ப்

பட்டாரகரும், தமிழ்ச் சமண அறிஞர் திரு டி.எஸ்.சிறீபால் அவர்களும் இம்மாதிரி

யாதொரு நிகழ்வும் தமிழகத்தில் நடைபெற்ற தில்லை என மொழிகின்றனர்.


கோ.செங்குட்டுவன் என்ற ஆராய்ச்சியாளர் எழுதிய " சமணர் கழுவேற்றம் ஒரு

வரலாற்றுத் தேடல் என்ற நூலில் கழுவேற்றத்துக்குப் பெரிய புராணம், திருவிளை

யாடற் புராணம் போன்ற இலக்கியங்களைத் தவிர வேறு இலக்கியங்களில்

யாதொரு சான்றும் இல்லை. இந்த இலக்கியங்கள் கழுவேற்றம் நடைபெற்றதாகச்

சொல்லப்படும் ஏழாம் நூற்றாண்டுக்கு மிகவும் பிற்பட்ட காலத்தைச் சேர்ந்தவை.

பெரிய புராணத்துக்கு ஆதாரமான இலக்கியங்கள் எட்டாம் நூற்றாண்டைச்

சேர்ந்த சுந்தரமூர்த்தியார் பாடிய 'திருத்தொண்டத் தொகை'. இதில் கழுவேற்றம்

பற்றி குறிப்பு எதுவும் இல்லை. இதனை அடிப்படையாகக் கொண்டு நம்பியாண்டார்

நம்பி(12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்) 'திருத்தொண்டர் திருவந்தாதி' என்ற நூலை

இயற்றினார். அதில் அவர் சைவப் பெருமையை நிலைநாட்டச் சம்பந்தர் சமணர்களைக்

கழுவேற்ற நடவடிக்கை எடுத்தார் என்று பாடியுள்ளார். இந்நூலை ஆதாரமாகக் கொண்ட

சேக்கிழார் மிக விரிவாகக் கழுவேற்றம் பற்றிப் பாடியுள்ளார். பெரிய புராணத்தில்

உள்ளது மிகைக் கூற்றுப் புராணங்கள் போன்ற மதத் தொன்மக் கதை மட்டுமே

என்று கோ.செங்குட்டுவன் கூறுகின்றார்.


மதுரைச் சாமநத்தம் என்ற ஊரில் உள்ள சுவர்ச் சித்திரங்கள்/செதுக்கல்கள் கழுவேற்றப்

பட்டவர்கள் சடை, தாடி, மீசையுடன் இருப்பதாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். இது மிகத்

தவறான விடயமாகும். சமணத்துறவிகள் முடியை முற்றிலும் நீக்குவது மதச் சட்டமாகும்.

இல்லறத்தினர்  முடியை மழித்துக் கொள்வர். மீசை வைத்துக் கொள்வதில்லை. இம்மாதிரி

ஓவியங்கள்/செதுக்கல்கள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. கழுவேற்றப் பட்டவர்கள்

சமணர்கள்தாமா? 


எண்ணாயிரம் சமணர் என்ற தொடர் எண்ணிக்கையைக் குறிக்கவில்லை. அது விழுப்புரம்

அருகில் உள்ள ஊர் என்று சிலபல அறிஞர்களும், அது ஒரு குழுப்பெயர் என்று சிலரும்,

மதுரையைச் சுற்றியுள்ள எட்டுக் குன்றங்களில் வாழ்ந்தவர்கள் என்று சிலரும் கருதுகின்

றனர். ஒரு சில சமணர்கள் தகாத செயல்களுக்காக அரசால் தண்டிக்கப்பட்டிருக்கலாம்.

ஆனால் சைவத்துக்கு மதம் மாறாததற்காக எண்ணாயிரம் பேர் கழுவேற்றப்பட்டனர் என்பது

ஆதாரம் இல்லாத புனைந்துரை என்று பல அறிஞர்கள் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றனர்.
















Wednesday 24 May 2023

கோரைக்கால் ஆழ்வான் கொடை.

 கோரைக்கால்  ஆழ்வான்  கொடை.


கோரைக்கால் என்னும் ஊரில் 'ஆழ்வான்' என்ற

பெயருடைய செல்வந்தன் ஒருவன் வாழ்ந்து வந்தான்.

யாருக்கும் எதுவும் ஈயாத கஞ்சனாக வாழ்ந்தவன்.

ஆனால், தன்னைப்போல வசதிமிக்க வேறு சில செல்

வந்தர்கள் புலவர்களால் பாராட்டப் படுவதைக் கேள்வி

யுற்று அவர்கள்மேல் பொறாமை கொண்டான். அதே

நேரம் அவர்களைப்போலக் கொடைகொடுக்கும் எண்ண

மும் அவனுக்கு அணுவளவும் இல்லை.


கொடை கொடுக்காமல் எவ்வாறு புலவர்களால் பாராட்

டப்பட இயலும் என்று கருமித்தனமாகச் சிந்தித்தான்.

அவனுக்கு ஒரு கபடமான திட்டம் மனத்தில் உதித்தது.

அதன்படி, புலவர்கள் தன்னைப் புகழ்ந்து  பாடுவதை

மகிழ்ச்சியுடன் கேட்டுவிட்டு யாதொரு பரிசும் தராமல்

மறுநாள் பெரிய பரிசு தருவதாக வாக்களித்துவிட்டுத்

தராமல் 'நாளை தருவேன், நாளை தருவேன் என்று

கூறி அவர்களை அலைக்கழித்து அவர்களே வெறுத்

துப் போய் விலகிக் கொள்ளுமாறு செய்வதே திட்டம்.


இப்படியே நாட்கள் உருண்டோடின. புலவர்கள் பலர்

ஆழ்வானைப் புகழ்ந்து பாடிப் பரிசு எதுவும் பெறாமல்

வெறுங்கையராய்த் திரும்பிச் செல்தல் வாடிக்கையாக

நிகழ்ந்தது. இந்நிலையில் ஔவையார் அவ்வூருக்கு

வந்தார். ஆழ்வானைப் பற்றி மக்கள் எடுத்துக் கூற,

அக்கஞ்சனைப் பற்றிய சகல விவரத்தையும் அறிந்து

கொண்டார். ஔவையார் அவன் இல்லத்துக்குச் சென்

றார்; அவன்மீது புகழாரம் சூட்டினார். வழக்கம்போல,

இரசித்துக் கேட்ட ஆழ்வான் " அம்மையே! உங்களுக்கு

யானை ஒன்றைப் பரிசளிக்க எண்ணியுள்ளேன்; நாளை

வந்து பெற்றுக் கொள்க" எனவுரைத்தான். ஔவையாரும்

அவன் பேச்சை நம்பியதுபோல் நடித்து அவன் வீட்டைவிட்டு

நீங்கினார். மறுநாள் அவன் மனைக்கு வந்தார். ஆழ்வான்,

"தாயே! யானையைக் கட்டித்  தீனி போடுதல் மிகவும் சிரமம்;

எனவே, யானைக்குப் பதிலாகக் குதிரை ஒன்றை அளிக்கத்

தீர்மானித்துள்ளேன். நாளே வந்து பெற்றுக் கொள்வீர்" எனச்

சொன்னான். ஔவையார் மனம் சலியாமல் ஆழ்வான் வீட்டை

விட்டு நீங்கி மறுநாள் வந்தார். கஞ்சன் குதிரைக்குப் பதிலாக

எருமை தருவதாகவும் மறுநாள் வந்து பெற்றுக் கொள்ளுமாறும்

கூறினான். ஔவையார் சற்றும் சளைக்காமல் மறுநாள் வந்தார்.

எருமைக்குப் பதிலாக எருது தர நினைப்பதாகவும் மறுநாள் வரு

மாறும் நவின்றான். ஔவையார் நமட்டுச் சிரிப்புச் சிரித்தபடியே

அங்கிருந்து அகன்று மறுநாள் வந்தார். கஞ்சப் பிரபு எருதுக்குப்

பதிலாகப் புடைவை தருவதாகவும் மறுநாள் வருமாறும் பகர்ந்தான்.


இந்தக் கண்கட்டி விளையாட்டை முடித்துவிட எண்ணிய ஔவையார்

"கரியாய்ப் பரியாகிக் காரெருமை தானாய்

எருதாய் முழப்புடைவை  யாகித்---திரிதிரியாய்த்

தேரைக்கால் பெற்றுமிகத் தேய்ந்துகால் ஓய்ந்ததே

கோரைக்கால் ஆழ்வான்  கொடை."

என்ற பாட்டை அவன் வீட்டுச் சுவரில் எழுதிவைத்து விட்டு  வெறுங்கையோடு

அவ்வூரிலிருந்து கிளம்பிச் சென்றார். அவ்வூர் மக்கள் அப்பாடலைப்

படித்துவிட்டு அக்கஞ்சனைத் தூற்றி வசைபாடினர். அன்றிலிருந்து

அவன் புலவர்களை ஏமாற்றும் எண்ணத்தைக் கைவிட்டான். ஆனால்,

வள்ளலாக மாறிவிடவில்லை. கஞ்சனாக வாழ்வது அவன் பிறவிக்

குணம். தெய்வம்தான் அதை மாற்ற முடியும்.


பாடலின் பொருள்:

ஆழ்வான் கொடுப்பதாகச் சொன்ன பரிசு முதலில் யானையாக

இருந்தது. மறுநாள் அதை மாற்றிக்  குதிரை என்றான். அடுத்த

நாள் எருமை என மாற்றினான். மீண்டும் அதை மாற்றி எருது

எனச்சொன்னான். கடைசியில் அதையும் மாற்றிப் புடைவை

என்றான். மறுநாள் சென்றால் புடைவையையும் மாற்றித் திரி

என்பான். தேரைக்கால் போலக் கால் தேய்ந்து ஓய்ந்து போனது.

கோரைக்கால் ஆழ்வானின் வள்ளல்தன்மை இந்தவிதத்தில்

உள்ளது.

Tuesday 2 May 2023

எம்மனோரிற் செம்மலும் உடைத்தே.ம்

எம்மனோரிற் செம்மலும் உடைத்தே.

நூல்: நற்றிணை; திணை: நெய்தல்; புலவர்: பெயர்
தெரியவில்லை; பாடல் எண்: 45
நெய்தல் நிலப் பகுதியில் தலைவன் ஒருவன் தலைவி
ஒருத்தியைக் கண்டு அவள் பால் காதல் கொண்டான்.
தலைவியின் தோழியிடம் தன் உள்ளக் கிடக்கையைத்
தெரிவித்துத் தனக்கும் தலைவிக்கும் இடையே காதல்
தழைக்க உதவுமாறு கோரினான். தோழி அவனுக்கு
விடையிறுக்கலானாள்: " ஐய! இத் தலைவி நீலநிறப்
பெருங்கடலுக்குட்சென்று மீன் பிடிக்கும் தொழிலை
மேற்கொண்டுள்ள  பரதவர் ஒருவரின் மகள். நாங்கள்
இந்தக்கடலை அடுத்துள்ள கானல் பகுதியில் அமைந்
துள்ள அழகிய சிறு குடியிருப்பில் வாழ்ந்து வருகிறோம்.
நீரோ பெரிய கொடிகள் அசையும் கடைத்தெருக்களை
யுடைய பழமையான ஊரில் விரைவாகத் தேரில் ஊர்ந்து
செல்லும் செல்வந்தரின் அன்புமகன். சுறாமீன் களைத்
துண்டு துண்டாக அறுத்து அவற்றை வெயிலில் காயவைத்து
அத்துண்டங்களைப் பறவைகள் கொத்தித் தின்னாமல் பாது
காக்கும் எமக்கு உம்மைப் போன்ற செல்வர்களின் தொடர்பு
எதற்கு? இவ்விடத்தைச் சுற்றிப் புலால் நாற்றம் கிளம்புகிறது.
நீர் செல்லாமல் இங்கு நிற்பது எதற்காக? கடல்நீரில் கிடைக்கும்
பொருட்களைக் கொண்டு நாங்கள் எங்களாலியன்ற சிறிய
நல்ல வாழ்க்கையை நடத்துகிறோம். உம்முடைய செல்வச்
செழிப்பு மிக்க வாழ்க்கைக்கு எமது சிறிய வாழ்க்கை நிகராக
முடியாது. ஆனால் எங்கள் கூட்டத்திலும் சிறப்பாக வாழும் செம்
மல்கள் உள்ளனர். அவர்களில் ஒருவரை என் தலைவி தேர்ந்
தெடுத்துக் காதல்செய்வாள்.  யாம் வாழ்ந்துவரும் வாழ்க்கை
யே எமக்குப் போதுமானதாகும்." என்று கூறினாள். சங்க
காலத்தில் சாதி, குலம் போன்ற சிக்கல்கள் இல்லாவிடினும்
பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் நிலவியிருக்கும். அதனால்
தான் தோழி தலைவியை விரும்பியவனை ஏற்றுக்கொள்ளா
மல் மறுப்புரை கூறியிருப்பாள்.  இனி, பாடலை நோக்குவோம்:
"இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி,
நீல் நிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு
மீன்எறி பரதவர் மகளே; நீயே
நெடுங்கொடி நுடங்கும்  நியம மூதூர்க்
கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே;
நிணச்சுறா அறுத்த உணக்கல் வேண்டி
இனப்புள் ஓப்பும் எமக்கு நலன் எவனோ?
புலவு நாறுதும்; செலநின் றீமோ!
பெருநீர் விளையுளெம் சிறுநல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ அன்றே;
எம்ம னோரிற் செம்மலும் உடைத்தே!"
அருஞ்சொற் பொருள்:
நண்ணிய=அடுத்துள்ள; காமர்=அழகிய;
நுடங்கும்=அசையும்; நியமம்=கடைத்தெரு;
நிணம்=புலால்; உணக்குதல்=உலர்த்துதல்;
ஓப்புதல்:=விரட்டுதல்; புரைவது=ஒத்திருப்பது.

Sunday 16 April 2023

தாய்தந்த பிச்சையிலே பிறந்தேன் அம்மா!

 தாய்தந்த பிச்சையிலே பிறந்தேன் அம்மா!


1966ஆம் ஆண்டு வெளியான 'சரஸ்வதி சபதம்' என்ற

திரைப்படத்தில் தோற்றம்கண்ட இப்பாடலை நேற்று

தொலைக்காட்சியில் பார்த்துக் கேட்டுக் கொண்டிருந்த போது

இப்பாடல் பல சிந்தனைகளைக் கிளறி விட்டது. வறுமையில்

வாடும் ஒரு பெண் வீடு வீடாகப் பிச்சை எடுத்துக்கொண்டு

வரும் பொழுது பாடுவதாகக் காட்சியமைக்கப்பட்டிருந்தது.

அப்பெண் வறுமையைச் சாதாரணமாக எடுத்துச் சொல்ல

வில்லை. இலக்கிய நயமும் தத்துவ நயமும் இழைந்தோடிய

பாடல். இயற்றியவர் கவிஞர் கண்ணதாசன். இசையமைத்தவர்

K.V.மகாதேவன் அவர்கள்.


கவிஞர் தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த பற்றுக்கொண்டவர். சங்க

இலக்கிய மானாலும் பிற்கால இலக்கியமானாலும் சித்தர்கள்

இலக்கிய மானாலும் தனிப்பாடல் தொகுப்பானாலும் அனைத்திலும்

அவருக்கு ஆழ்ந்த ஈடுபாடும் பயிற்சியும் இருந்ததை எவரும் மறுக்க

இயலாது. வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் மேலே குறிப்பிடப்பட்ட

இலக்கியங்களின் சொற்களையோ/பொருளையோ எடுத்தாள்வது

அவருக்குக் கைவந்த கலை. இந்தத் திரைப்பாடலில் எந்த விதமான

இலக்கிய மேற்கோள்கள் வந்துள்ளன என்று நோக்கலாம்.

திரைப்பாடல்:

தாய்தந்த பிச்சையிலே பிறந்தேன் அம்மா! இங்கு

நீதந்த பிச்சையிலே வளர்ந்தேன் அம்மா!

ஏன் இந்த வாழ்க்கை என்று அறியேன் அம்மா!

இது இறைவனுக்கு ஓய்வு நேர விளையாட்டம்மா.

பெற்றவள் உடல்சலித்தாள்; பேதை நான் கால்சலித்தேன்;

படைத்தவன் கைசலித்து ஓய்ந்தான் அம்மா, அம்மா!

மீண்டும் பாவி ஒரு தாய் வயிற்றில் பிறவேன் அம்மா!

பார்க்க--பட்டினத்தார் பாடல்:

"மாதா உடல்சலித்தாள்; வல்வினையேன் கால்சலித்தேன்;

வேதாவும் கைசலித்து விட்டானே---நாதா

இருப்பையூர் வாழ்சிவனே! இன்னும் ஓர் அன்னை

கருப்பையூர் வாராமல் கா".

(வேதா=படைத்தவன்; கா= காப்பாற்று)

இருப்பையூரில் குடிகொண்டுள்ள சிவனே! மீண்டும் ஓர்

அன்னை வயிற்றில் பிறவாமல் என்னைக் காப்பாற்று.

திரைப்பாடல்:

"பத்தும் பறந்திடும்; பசிவந்தால் மறந்திடும்

இளமையில் கொடுமை இந்த வறுமை அம்மா!"

ஔவையார் பாடலை நோக்குக:

"மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை,

தானம், தவம்,உயர்ச்சி,  தாளாண்மை--தேனின்

கசிந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்

பசிவந் திடப் பறந்து போம்".

"கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்!

கொடிது, கொடிது வறுமை கொடிது;

அதனினும் கொடிது இளமையில் வறுமை".

திரைப்பாடல்:

"என்றும் இதுதான் நீதி என்றால், இறைவன்

வேண்டுமா?".

பார்க்க--திருக்குறள்(குறள் எண்: 1062)

"இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான்".

பிச்சையெடுத்துத்தான் உயிர் வாழ்தல் வேண்டும் என்ற நியதியை இறைவன்

படைத்திருந்தால் அக்கொடிய இறைவன் நிலையில்லாது அலைந்து

திரிந்து கெடுவான்.


ஆகா, அருமை; ஒரு பிச்சைக்காரப் பெண் பாடுவதாகக் காட்சிப் படுத்தப்பட்ட

பாட்டில் எத்தனை இலக்கிய நயத்தையும், தத்துவ நயத்தையும் கவியரசர்

எடுத்தாண்டுள்ளார்! அவரது தமிழ்ப் புலமையும் தத்துவ ஞானமும் மெச்சத்

தக்கவை. அன்னார் புகழ் என்றும் நின்று நிலவட்டும்!





Wednesday 22 March 2023

சங்க காலத்தில் நிலவிய பாதுகாப்பு அரண்கள்.

 சங்க காலத்தில் நிலவிய நாடு பாதுகாக்கும் முறைகள் (அரண்).


சங்க காலத்திலும், சங்கம் மருவிய காலத்திலும், ஏன், விடுதலை

பெறும் காலம் வரையிலும் நாட்டைப் பாதுகாத்துக் கொள்ள வலு

வான கோட்டை, கொத்தளங்கள்  உருவாக்கப்பட்டுப் பயன்பாட்டில்

இருந்தன. அதாவது வலுவான கோட்டை எழுப்பப்பட்டு அதைச் சுற்

றிலும் ஆழமான குழி தோண்டப்பட்டு அக்குழி நீரால் நிரப்பப்பட்டு

அதில் முதலைகள் வளர்க்கப்படும். அகழியை ஒட்டி வெட்டவெளியும்

(செண்டு வெளி என்றும் சொல்லப்படும்) அதனை ஒட்டிக் குளிர்ந்த

நிழல்தரும் மரங்கள் நெருங்கி வளர்ந்திருக்கும் அடர்த்தியான காட்டுப்

பகுதியும்  அதனை ஒட்டி  நீண்ட  மற்றும் உயர்ந்த மலைப் பகுதி

யும் அமைந்த வலுவான இயற்கை மதிலரண் உருவாக்கப் பட்டிருந்தது.

உலகத்தில் உள்ள எல்லா நாடுகளுமே தத்தமக்கு இம்மாதிரியான

பாதுகாப்பு அரணை வைத்துக்கொண்டிருந்தன. சில நாடுகளுக்கு

இயற்கையாகவே வலுவான அரண் அமைந்துவிடும்.

"மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்

காடும் உடைய(து) அரண்".(திருக்குறள் பாடல் எண்:742). சில நாடுகளுக்கு

இயற்கை அரண் அமைந்து விடாது. அத்தகைய நாடுகள் செயற்கையாக

அரண் ஏற்படுத்திக் கொண்டன. நூலேணி கொண்டு ஏறமுடியாத உயரமும்

துளைக்க இயலாத அகலமும் செம்பை உருக்கிச் சாந்தாக  இட்டுக் கருங்

கல்லால் கட்டிய திண்மையும் பகைவர் நெருங்குவதற்கு அருமையும் ஆகிய

இந்நான்கு சிறப்புகளூம் கொண்டு வலுவான மதிலரண் அமைப்பது நன்று

என்று அரசியல் நூல்கள் பேசும்.

"உயர்(வு)அகலம் திண்மை அருமைஇந் நான்கின்

அமை(வு)அரண் என்றுரைக்கும் நூல்"(கு.எ.:743).

சரி, அரண் அமைந்து விட்டது. பாதுகாப்புக் கருவிகள்(ஆயுதங்கள்) யாவை?

சிலப்பதிகாரத்தில் நாட்டைப் பாதுகாக்கக் கோட்டைக்குள்  வைக்கப்பட்டிருந்த

ஆயுதங்கள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. மற்றச் சங்க இலக்கியங்களில்

அக்கால ஆயுதங்களைப் பற்றி ஆங்காங்கே சொல்லப்பட்டிருந்தாலும் சிலப்பதி

காரம் போல விரிவாகச் சொல்லப்படவில்லை. ஏனென்றால் மற்ற நூல்களை

இயற்றியோர் வெறும் புலவர்கள் தாம். சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோ

சேரநாட்டு இளவரசர். கோட்டையையும் அவற்றில் வைக்கப்படும் ஆயுதங்களை

யும் பலமுறை பார்த்துப் பயன்படுத்திப் பயிற்சியும் பெற்றவர் அன்றோ? சிலப்பதி

கார மதுரைக் காண்டத்தில்  பதினைந்தாவது காதையாகிய அடைக்கலக் காதையில்

வரிகள் 207 முதல் 217 முடிய உள்ள வரிகளில் குறிப்பிடப் பட்டுள்ளன. அவை பின்வருமாறு:

"மிளையும் கிடங்கும் வளைவிற் பொறியும்

கருவிரல் ஊகமும் கல்லுமிழ் கவணும்

பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும்

காய் பொன் உலையும் கல்லிடு கூடையும்

தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை அடுப்பும்

கவையும் கழுவும் புதையும் புழையும்

ஐயவித் துலாமும் கைபெயர் ஊசியும்

சென்றெறி சிரலும் பன்றியும் பணையும்

எழுவும் சீப்பும் முழுவிறற்கணையமும்

கோலும் குந்தமும்  வேலும் பிறவும்

ஞாயிலும் சிறந்து .............."


பொருள்:

காவல் அரணான காடும்(மிளையும்) ,அகழியும்(கிடங்கும்) ,வரும் எதிரிகளைக் கண்டவுடன்

வளைந்து தானே தாக்கும் இயந்திர வில்லும், கருத்த விரல்களைக் கொண்ட கருங்குரங்கு

உருவிலான பொறியும், கல்லெறிந்து தாக்குகின்ற கவண்பொறியும், மதிலருகே வருபவர்

மீது கொட்டுவதற்காகக் கொதிக்க வைத்த எண்ணெய்க் குண்டமும், சாணம் கரைத்துக்

காய்கின்ற மிடாவும், இரும்பு உருக்கி வைத்த உலைக்கூடமும், கற்கள் நிரப்பி வைக்கப்

பட்ட கூடைகளும், தூண்டில் வடிவிலான கருவியும், கழுத்தில் மாட்டி இழுக்கும் சங்கிலியும்,

ஆண்டலைப்  பறவை வடிவாகச் செய்யப்பட்ட நெருப்படுப்பும், அகழியிலிருந்து மதில் ஏற

முயல்பவர்களை நெட்டித்  தள்ளும்  கவைவடிவான கருவியும், கூரிய இரும்புக் கோலும்,

அம்புக் கட்டும், மறைந்திருந்து தாக்கும் இடுக்கு வழிகளும், நெருங்கி வருபவர் தலையை

நசுக்குகின்ற மரங்களும், மதில் மேல் ஏறுபவர் கையைக் குத்தித் தாக்கும் ஊசிப் பொறி

களும்,, பகைவர் மேல் பாய்ந்து தாக்கும் சிச்சிலி என்ற எந்திரமும், மதில் மேல்  ஏறுபவர்

களைக் குத்திக் கிழிக்கும் பன்றி வடிவில் அமைந்த பொறியும், மூங்கில்தடிகளும், கோட்டைக்

கதவுகளுக்குப் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்ட பெரிய மரங்களும், வலிமை வாய்ந்த

கணைய மரங்களும், எறிகோலும், குத்துக் கோலும், ஈட்டியும் நிறைந்து  மதுரை மூதூரில்

காவல் மதில் சிறந்து விளங்கியது.


தற்பொழுது நிலவும் காலச் சூழலுக்கு ஏற்பப் புதுப்புதுப்பாதுகாப்பு  உத்திகளும்  முன்பின்

கேள்விப்பட்டிராத ஆயுதங்களும் நடைமுறைக்கு வந்துவிட்டன. ஒவ்வொரு நாடும் காலத்

துக்கு ஏற்பப் புதிய தொழில் நுட்பத்தைக் கற்றுக் கொண்டு  நவீன ஆயுதங்களைக் கொள்

முதல் செய்து தத்தமது நாட்டைப் பாதுகாத்துக் கொள்வது கடமையாகும்.

Friday 3 March 2023

மௌரியப் படையெடுப்பு.

 மௌரியர் மேற்கொண்ட தமிழகப்

படையெடுப்பு வெற்றியடையாதது ஏன்?


தமிழ்நாட்டில் சங்ககாலம் தழைத்துச் செழித்திருந்த நேரத்தில்

வடக்கே கங்கைச் சமவெளியில் மகதநாடு(இன்றைய பீகார், வங்காளம்

முதலான பகுதிகளை உள்ளடக்கிய நாடு) சிறந்தோங்கித் திகழ்ந்தது.

நந்த வமிசத்தின் கடைசி மன்னன் தனநந்தன் ஆட்சியைத் தோற்கடித்துச்

சந்திரகுப்த மௌரியர்  கி.மு.322இல் மௌரிய ஆட்சியை நிறுவினார்.

மகத நாடு கிழக்கில் அஸ்ஸாம் வரையிலும் மேற்கில் ஈரான் வரையிலும்

விரிந்து பரந்திருந்தது. அசோகரின் தந்தையான பிம்பிசாரர் காலத்தில்

தமிழ்நாடு(அந்த நாளில் கேரளா சேரநாடு என்ற பெயரில் தமிழ்நாடாகத்தான்

கருதப்பட்டது) நீங்கலாக ஏனைய பாரதப் பகுதி முழுவதையும் தம் ஆட்சிக்குக்கீழ்

வைத்திருந்தார். தமிழ்நாட்டையும் மௌரியப் பேரரசின் கீழ் கொண்டுவர

எண்ணிப் பெரும் படையுடன் தமிழ்நாட்டின் மீது படையெடுத்தார். அந்நாளில்

தமிழ்நாட்டைச் சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்களும் முதிரமலைத்

தலைவனான பிட்டங்கொற்றன், வாட்டாறு மற்றும் செல்லூரை ஆண்ட

எழினி ஆதன், சோழநாட்டின் அழுந்தூர்ப் பகுதியை ஆண்ட அழுந்தூர் வேளான

திதியன், கொங்கு நாட்டுப் பகுதியை ஆண்ட மோகூர்ப் பழையன் போன்ற

சிற்றரசர்களும் ஆட்சி புரிந்து வந்தனர்.


படையெடுத்து வந்தவர்கள் வேங்கடத்துக்கு அப்பாலுள்ள மொழிபெயர் தேயங்களான

(கொச்சைத் தமிழும் பிராகிருதம் என்ற மொழியும் கலந்த கலப்பு மொழி பேசிய பகுதிகள்)

ஆந்திரா, கருநாடகப் பகுதிகளில் வாழ்ந்த தெலுங்கர் மற்றும் கன்னடர்(இரு பிரிவினரும்

வடுகர் என்ற பெயரில் அழைக்கப்பட்டனர்), விந்திய மலைக்கு அப்பால் வாழ்ந்த கோசர்

(வட வடுகர் என்று அழைக்கப்பட்டனர்), மகத நாட்டு மக்கள்(இன்றைய பீகார் மற்றும்

வங்காளப் பகுதிகளில் வாழ்ந்தவர்கள்) ஆவர். படை மிக மிகப் பெரியது.


மௌரியரின் படையில் தேர்கள் பல இருந்தன.


பாரதத்தில் உள்ள தென்திசை நாடுகளை வெற்றிகொள்ளப் பெரும் படையுடன்

வந்த மெளரியர்கள் ஆந்திர, கருநாடகப் பகுதிகளை வென்று கைப்பற்றிக்கொண்டு

தமிழ்நாட்டையும் வெல்ல எண்ணி வடுகரை(தெலுங்கர் மற்றும் கன்னடர்)யும் தம்

படையில் இணைத்துக் கொண்டு  அவர்கள் வழிகாட்டி முன்னே செல்லத் தம் தேர்கள்

சிக்கலின்றி உருண்டுசெல்லத் தோதாகப் பாறைகளை உடைத்து வழியமைத்துக்கொண்டு

தமிழ்நாட்டுக்குள் நுழைய முயன்றனர்.

"முரண் மிகு  வடுகர் முன்னுற  மோரியர்

தென்திசை மாதிரம் முன்னிய வரவிற்கு

விண்ணுற ஓங்கிய பனியிருங் குன்றத்து

எண்கதிர்த் திகிரி உருளிய குறைத்த"

(அகநானூறு பாடல் எண்: 281--புலவர் மாமூலனார்)

மௌரியப் படையும் கோசர் படையும் இணைந்து கொண்கானத்தின் கடற்கரைப்

பகுதியான துளு நாட்டைத் தாக்கினர். துளு நாடு அந்நாளில் தமிழர் ஆட்சியின் கீழ் 

இருந்தது. நன்னன் என்னும் தமிழ்மன்னனை வென்று நாட்டைவிட்டு விரட்டினர்.

பிறகு,  முதிரமலைத் தலைவனும் சேரர்களின் தானைத் தலைவனும் ஆகிய பிட்டங்

கொற்றனுடன் போரிட்டனர். முடிவு என்ன? என்ற தகவல்  இலக்கியத்தில் இல்லை.

பின்னர் வாட்டாறு என்ற ஊரையும்  செல்லூர் என்ற ஊரையும் ஆண்ட எழினி ஆதன்

என்ற அரசனோடு  போரிட்டு அவனைக் கொன்றனர். தொடக்கத்தில் சிற்றரசர்களோடு

நடந்த போர்களில் கிடைத்த வெற்றியினால் உற்சாகமடைந்த மௌரியர்கள் கொங்கு

நாட்டு மோகூரை ஆண்ட பழையன் என்ற பாண்டியவம்சத்து மன்னனைத் தாக்கினர்.

பழையன் பணியாமல் போரிட்டான். கூடுதலான மௌரியப் படைகள் குன்றுகளையும்

பாறைகளையும் தகர்த்துக் கொண்டு தேர்களில் வந்தும் பழையனைப் பணியவைக்க

முடியவில்லை. கோசரும் மௌரியரும் அங்கிருந்து விரட்டப்பட்டனர். பிற்பாடு அவர்கள்

சோழ நாட்டுக்குள் நுழைந்து அழந்தூர்ச் சிற்றரசன் அழுந்தூர்வேளான திதியனைத்

தாக்கினர். அவன் மிகக் கடுமையாகப் போராடி அவர்களை விரட்டிவிட்டான். மோகூர்ப்

பழையனாலும் அழுந்தூர்த் திதியனாலும் விரட்டப்பட்ட மௌரியப் படை தொடக்கத்தில்

தாம் வென்ற துளு நாட்டுக்குத் திரும்ப எண்ணி அதனை நோக்கிப் பயணித்தனர்.

அப்பொழுது இளஞ்சேட்சென்னி என்னும் சோழ வேந்தன் மிகப்பெரும் படையுடன்

அவர்களை எதிர்த்தான். கடுமையான போர்முடிவில் மௌரியர் தோற்றுப்பின்வாங்கினர்.

சோழன் அவர்களைத் துளுநாடுவரை துரத்திச் சென்று துளுநாட்டின் தலைநகரான பாழி

நகரைத் தாக்கினான். அங்கும் கடும்போர் நிகழ்ந்தது. இறுதியில் பாழிநகரை அழித்து

மௌரியரை அங்கிருந்தும் விரட்டியடித்தான். இதனால் "செருப்பாழி எறிந்த இளஞ்சேட்

சென்னி" என்ற பட்டம் பெற்றான். அகநானூறு

375இல் புலவர் இடையன்சேந்தங்கொற்றனார் பாடியது:

"எழாஅத் திணிதோள் சோழர் பெருமகன்

விளங்குபுகழ் நிறுத்த இளம்பெரும் சென்னி

குடிக்கடன் ஆகலின் குறைவினை முடிமார்

செம்புறழ் புரிசைப் பாழி நூறி

வம்ப வடுகர் பைந்தலை சவட்டி"

பொருள்:

போர்த்திறமையும் கணையமரம் போன்ற

தோள்வலிமையும் கொண்ட சோழர் பெருமகன் இளம்பெருஞ் சென்னி, தன்புகழை நிலைநாட்டுவதற்காகப் பாழி

நகரில் இருந்த செம்பிட்டுச் செய்த கோட்டையை அழித்தான். அந்தக் கோட்டை

யில் தன்னை எதிர்த்த வம்பவடுகக் குடி

மக்களின் தலைகளை யானைகளை ஏவி

மிதிக்கச் செய்து சவட்டினான்.


இந்த இளஞ்சேட்சென்னிக்கு மகனாகப்

பிறந்தவர் புகழ்பெற்ற கரிகாற் பெருவளத்தான் என்ற திருமாவளவன்.


மௌரியப் படையெடுப்பு தோல்வியில் முடிந்த காரணத்தால் தமிழ்நாடு வடநாட்டவரால்

ஆளப்படாமல் தப்பித்தது. பாரதம் முழுவதையும் ஒருகுடைக்கீழ் கொண்டுவந்த மௌரிய

ரால் தமிழ்நாட்டை வெற்றிகொள்ள இயலவில்லை. இதற்கு என்ன காரணம் என விளங்க

வில்லை. கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவனான கலிங்கவேந்தன் காரவேலன்

தன் ஹதிகும்பா கல்வெட்டில் தான் 113 ஆண்டுக்காலம்  நீடித்திருந்த தமிழர்கள் 

கூட்டமைப்பை மிகவும் சாமர்த்தியமாகவும் வெற்றிகரமாகவும்

முறியடித்ததாகக்  கூறிக் கொள்கிறான். சங்க இலக்கியத்தில் அப்படியொரு அமைப்பைப்

பற்றிய செய்தி ஏதும் இல்லை. சங்க இலக்கியங்கள் மூவேந்தரின் ஒற்றுமையைப்

பற்றிய செய்தியையும் குறிக்கவில்லை. ஆனால் மௌரியப் படையெடுப்பைப் பற்றியும்

அதனைச் சோழ வேந்தன் இளஞ்சேட்சென்னி முறியடித்ததைப் பற்றியும் பல புலவர்கள்

பாடியுள்ளனர். இது நாடறிந்த செய்தியாக அக்காலத்தில் விளக்கியிருக்கலாம்.  ஏனென்

றால் மௌரியப் படையெடுப்பு முதல் அந்நியப் படையெடுப்பாக இருந்திருக்கும்.

அதனாலேதான் "வம்ப மோரியர்"(புதிதாக வந்த மௌரியர்) என்று சங்க நூல்கள்

குறித்தன. மௌரியப் படையெடுப்பு தோல்வியடைந்தமையால், பிம்பிசாரருக்குப் பின்

ஆட்சிக்கு வந்த அசோகர் தமிழ் வேந்தர்களை நண்பர்களாகக் குறிப்பிட்டார். மௌரியப்

பேரரசு கி.மு.185இல் முடிவுக்கு வந்தது.

Sunday 12 February 2023

அகவன் மகளே! அகவன் மகளே!

 அகவன்மகளே! அகவன்மகளே!


குறுந்தொகையில் பயின்றுவரும் ஒரு பாடல் காட்சியைக்

காண்போம். களவொழுக்கத்தில்  ஈடுபட்ட ஒரு தலைவி

தன் தலைவனை நினைத்து அந்த ஏக்கத்தில் இயல்பான

வாழ்க்கையை  மறந்து அயர்வோடும் சோர்வோடும் நட

மாடிவந்தாள்..  சரியாக உண்ணாமல், உறங்காமல்  பித்துப்

பிடித்தவள் போல அலையும் மகளது துயரம் கண்ட தாய்மார்

(பெற்ற தாய் மற்றும் செவிலித்தாய்) யாது காரணத்தால்

இத்துயரம் விளைந்தது? என்று அறிய எண்ணி அகவல்

மகளை(கட்டுவிச்சி--குறி சொல்பவள்) அழைத்து வந்து

கட்டுப் பார்க்கச்  சொன்னார்கள்.  களவொழுக்கம் என்பது,

குடும்பத்தார்க்குத் தெரியாமல் நடைபெறும் நிகழ்வு தானே!

எனவே, மகளது  தளர்ச்சிக்குக் காரணத்தை யறியத் தாயர்

பதறித் துடித்துக் கட்டுப் பார்க்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு

செய்தனர்.


கட்டுப் பார்த்தல் என்பது நெல்லைக் குவித்து வைத்துக்

கொண்டு முருகன் முதலான தெய்வங்களை வணங்கி

அந்நெல் மணிகளை எண்ணிப் பார்த்து, அங்கு அப்போது

நிகழும் நிமித்தங்களையும் கணக்கில் கொண்டு குறி

பார்ப்பது. அச்சமயம் கட்டுவிச்சி தெய்வங்களைப் பற்றியும்

மலைவளத்தைப் பற்றியும் பாடுவது வழக்கம். நெல்மணி

களை எண்ணி ஒற்றைப் படையில் வந்தால் ஒருவித பலனை

யும் இரட்டைப் படையில் வந்தால் வேறுவிதப் பலனையும்

சொல்வது வழக்கம்.

இந்நிகழ்ச்சி நடைபெறும் பொழுது, தலைவியின் தோழியான

வள் இதுதான் தக்க தருணம், தலைவியின் காதலை வெளிப்

படுத்தி விடலாம் என்று முடிவுசெய்து  "கட்டுவிச்சியே! பாடு;

நன்றாகப் பாடு; அவருடைய(தலைவன்) நல்ல, நெடிய  குன்றைப்

பற்றிப் பாடினாயே, அந்தப் பாட்டை மீண்டும் பாடு" என்று

மறைமுகமாக(சாடையாக)த் தாய்மார் அறிந்து கொள்ளும்

வகையில்  பாடலை அரங்கேற்றினாள். அப் பாடல் பின்வருமாறு:

"அகவன் மகளே!  அகவன் மகளே!

மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்

அகவன் மகளே!  பாடுக  பாட்டே;

இன்னும் பாடுக பாட்டே, அவர்

நன்னெடுங்  குன்றம்  பாடிய  பாட்டே."

(மனவுக் கோப்பன்ன--சங்குமணியினால் ஆகிய கோவையைப்

போன்ற வெண்மை நிறத்தையுடைய ; நன்னெடுங் கூந்தல்--நல்ல

நீண்ட கூந்தலையுடைய;  கட்டுவிச்சி வயது முதிர்ந்த மூதாட்டி

என்று தெரிவிக்கப் பட்டுள்ளது)

இந்தப் பாடல் மூலமாகத் தலைவி ஒரு தலைவனோடு களவு

ஒழுக்கத்தில் ஈடுபட்டுள்ள செய்தியினைத். தாய்மாருக்கு  வெளிப்

படுத்திவிட்டாள் தோழி. இதன்மூலம் தோழி அறத்தொடு நின்றாள்.

ஏனென்றால் களவொழுக்கம் வெளிப்பட்ட பிறகு கற்பொழுக்கம்

ஆரம்பம் ஆகிவிடும்.  தாய்மார் தந்தையிடம் தெரிவித்து, அவர்

மூலமாக ஊராருக்குத் தெரிவித்து வரைவு(திருமணம்)க்கான

பணிகள் மளமளவென்று நடைபெறும். ஒரு தலைவனுக்கும்

தலைவிக்கும்  இடையே  பிறர் அறியாதவாறு  நிகழும் காதல்

நிகழ்வை  அனைவரும் அறிய வெளிப்படுத்துதல் அறத்தொடு

நிற்றல் எனப்படும்.

பாடலின் பொருள்:(யான் இயற்றியது)

அருமைமிகும்  சுவையான  உணவை  வேண்டாள்;

ஆழ்ந்தநல்ல  சுகமான  உறக்கம்  வேண்டாள்;

பருவமகள்  செயல்பாட்டில்  தளர்ச்சி  கண்டு

        பதறியதாய்  குறிசொல்வாள்  உதவி  நாடத்

திருமுருகன்  தனைவணங்கி  முறத்தில்  நெல்லைச்

       சிறப்புறவே  கொட்டி,யவள்  பாட  லானாள்;

அருகிருந்த  தோழி,குறி  சொல்லும்  பெண்ணை

       அவர்நெடிய  குன்றுபற்றிப்  பாடச் 

சொன்னாள்.


இன்னும் இதுபோன்ற பல பாடல்கள் குறுந்தொகையில்

உள்ளன. ஐந்தே வரிகளில் ஒரு நாடகத்தையே அரங்கேற்

றிய புலவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

(குறுந்தொகை எண்: 23; புலவர் ஔவையார்)

Tuesday 24 January 2023

செம்புலப் பெயல்நீர் போல்....

 செம்புலப்  பெயல்நீர் போல அன்புடை  நெஞ்சம்...


குறுந்தொகை  இலக்கியத்தில் பயின்றுவரும் ஒரு சொல்லோவியத்

தைக் காண்போம்.  விதியின்  வலிமையால் ஒரு தலைவனும்

ஒரு தலைவியும்  சந்தித்துத்  தம் இதயங்களைப் பரிமாறிக்

கொள்கின்றனர். இந்த இயற்கைப் புணர்ச்சி(தலைவனும்

தலைவியும்  முதன்முதலில்  சந்தித்து அளவளாவுதல் இயற்

கைப் புணர்ச்சி எனச் சொல்லப்பட்டுள்ளது) நிகழ்வுக்குப்

பின்னர் தலைவன்  தன்னைப்  பிரிந்து சென்று விடுவான்

என அஞ்சிய  தலைவி குறிப்பு வேறுபாட்டை(எண்ணத்தின்

வேறுபாட்டை) வெளிப்படுத்தினாள். அதனைக் கண்ட

தலைவன் கூறியது:

புலவர்:செம்புலப் பெயல்நீரார்(இவரது உண்மைப் பெயர்

இலக்கியத்தில் குறிப்பிடப் படவில்லை. அதனால்அவரது

பாடலில்  பயிலும் ஒரு சொல்லையோ, சொற்றொடரையோ

அவர் பெயராகக் குறிப்பது சங்க இலக்கிய வழக்கம்)

"யாயும்  ஞாயும்  யாரா  கியரோ?

எந்தையும்  நுந்தையும்  எம்முறைக்  கேளிர்?

யானும்  நீயும்  எவ்வழி  அறிதும்?

செம்புலப்  பெயல்நீர்  போல

அன்புடை  நெஞ்சம்  தாம்கலந்  தனவே!"

பொருள்:(இக் கவிதை என்னால் இயற்றப் பட்டது)

உன்தாயும்  என்தாயும்  உறவினர்கள்  அல்லர்;

  உன்தந்தை  என்தந்தை  எவ்வகையில்  கேளிர்?

உன்தனையான்  என்தனைநீ  எவ்விதத்தில்  அறிவோம்?

  ஊழ்தானே  நமையொன்றாய்  இணைத்ததென ஓர்வோம்;

பன்னரும்நல்  செம்மண்சேர் நிலத்தனிலே பெய்த

  பாங்கான  மழைநீர்போல் நம்மனங்கள்  அன்பால்

ஒன்றிணைந்தே  ஐக்கியமாய்  ஆனதிதை  யாரும்

  ஒருபோதும்  பிரித்திடவே  இயலாது, மெய்யே!


தெளிவுரை:

என்னுடைய  தாயும், உன் தாயும் ஒருவருக்கொருவர்

உறவினர் அல்லர்; என் தந்தையும் உன் தந்தையும்

எந்த வகையில் உறவினர் ஆவர்?  உறவினர் அல்லர்;

இப்போது  விதியால் சந்தித்துச் சேர்ந்திருக்கும்

யானும்  நீயும்இதற்கு முன்பு  அறிமுகமானவர் அல்லர்;

இவ்வாறு நாம் இருவரும்  ஒருவரையொருவர் அறியாத

நிலையில் , செம்மண் நிலத்தின் மீது  பொழிந்த மழை

நீர் அம்மண்ணோடு  இரண்டறக் கலந்து அதன் நிறத்தை

அடைவது. போல,  அன்புடைய  நம் இருவரது நெஞ்சங்

களும் தாமாகவே ஒன்றுபட்டுப் பிரிக்க முடியாதபடி

கலந்து விட்டன.  (இனி யாராலும் நம்மைப் பிரிக்கவே

இயலாது என்னும் குறிப்புத் தோன்றப் பாடப்பட்டுள்ளது.)

புலவரின்  உவமைநயம்  பாராட்டுக் குரியது.

Thursday 5 January 2023

சிலமந்தி அலமந்து முகில் பார்க்கும்.

 சிலமந்தி அலமந்து முகில்பாரக்கும்.


இயற்கைப் பேரிடரை எதிர்கொள்வது மனித குலத்துக்கே மிகவும்

அறைகூவல் விடுக்கும் விடயமாகும்.  ஐந்தறிவு கொண்ட உயிரினங்கள்

அஞ்சுவது இயல்புதானே. 'இடியேறுண்ட நாகம் போல' என்பது பழமொழி.

பேரிடியைக் கேட்டால் நாகம் அஞ்சும் என்பது இலக்கியச் செய்தி. ஆனால்

நாகத்துக்குக் காது என்ற புலனேயில்லை; அதனால் கேட்க இயலாது

என்பது அறிவியல் கூறும் செய்தி. அதனால்தான் இலக்கியத்தில் பாம்பைக்

'கட்செவி' என்று குறிப்பிடுவார்கள்(கண் என்னும் புலன் செவி என்னும்

புலனின் பணியையும் கவனித்துக் கொள்ளும் என்பது இலக்கிய நம்பிக்கை).

இயற்கைச் சீற்றத்தைக் கண்டு அஞ்சாத உயிரினமேயில்லை  என்பதுதான்

நினைவலிருத்திக் கொள்ள வேண்டிய செய்தி.


பக்தி இலக்கியத்தில் கூட இயற்கை வருணனை அழகாகக் குறிப்பிடப்படுகிறது.

திருஞான சம்பந்தர் தமது தேவாரத்தில் திருவையாற்றுப்  பதிகத்தில்

ஒரு காட்சியை விவரிக்கிறார். அது பின்வருமாறு:

ஐந்து புலன்களின் இயக்கங்களும் முடங்கி அறிவு மங்கிக் கோழை உருவாகி

மேல்நோக்கி வந்து மூச்சுத் திணறவைக்கும் பொழுதில் என்ன செய்வது என்று

தடுமாறும் நேரத்தில் " அஞ்சல் வேண்டா" என்று கூறி அருள்புரியும் கடவுள்(சிவன்)

வீற்றிருக்கும் கோவில் அமைந்திருக்கும் திருவையாற்றில் சிவன்கோவிலில்

நடனமாடும் மங்கையர்கள் முழவு என்னும் இசைக் கருவியின் முழக்கத்துக்கேற்ப

நடனமாடுகின்றனர். அம்முழவோசை இடியோசை போல் அதிர்கின்றது. இந்த

அதிர்வினால் திருவையாற்றில் வாழும் சில மந்திகள் இடி இடிக்கிறது; மழைவரும்

என்று அஞ்சி அருகிலுள்ள மரங்களில் ஏறி முகிலை(மேகத்தை) உற்று நோக்கு

கின்றன. கருத்த உச்சிமேகம் இரண்டு அல்லது மூன்று நாழிகையளவு மழையைப்

பொழியும்.  வெளுப்பான மேகம் அதிக மழையைப் மொழியாது. மழையின்

அளவைப் பொருத்துத்  தங்குமிடத்தைத் தேர்வுசெய்து ஓய்வெடுக்கலாம் என்ற

எண்ணம் தோன்றியிருக்கலாம். இந்த இடத்தில் திருஞான சம்பந்தர் 'சில மந்திகள்'

என்று ஏன் குறிப்பிட்டார்? புதிதாகத் திருவையாற்றுக்கு வந்த மந்திகள் இதுபோன்ற

கோவில் நடன நிகழ்வையும் அதனால் எழும்பும் முழவோசையையும் கேட்டிருக்க

மாட்டா. பழைய மந்திகள் "இது இயல்பான நிகழ்வு" என்று பழக்க வழக்கத்தினால்

தெளிவு பெற்று இது குறித்து அஞ்சமாட்டா. இவ்வளவு செய்தியையும் உள்ளடக்கிய

பாடல் பின்வருமாறு:

"புலனைந்தும்  பொறிகலங்கி  நெறிமயங்கி  அறிவழிந்திட்(டு)

         ஐம்மேல்  உந்தி

அலமந்த  போதாக  அஞ்சலென்(று)  அருள்செய்வான்

         அமருங்  கோவில்

வலம்வந்த  மடவார்கள்  நடமாட  முழவதிர

         மழையென்(று)   அஞ்சிச்

சிலமந்தி  யலமந்து  மரமேறி  முகில்பார்க்கும்

         திருவை  யாறே"

(ஐ=கோழை; அலமருதல்=அஞ்சுதல், வருந்துதல்; முகில்=மேகம்)

மந்திகள் இயல்பாக மரத்தில் ஏறி விளையாடுவதைப் பார்த்துத் தம் கருத்தை ஏற்றி

மிக அழகாக விவரித்துள்ளார் திருஞான சம்பந்தர். இதனைத் தற்குறிப்பேற்ற அணி

என்பர் புலவர் பெருமக்கள்.


இதனைப் போன்ற ஒரு காட்சியைப் படைத்துள்ளார் பாவேந்தர் பாரதிதாசன்.

அவர் இயற்றிய பாடல் பின்வருமாறு:

"கிளையினிற் பாம்பு தொங்க, விழுதெனக் குரங்கு தொட்டு

விளக்கினைத் தொட்ட பிள்ளை வெடுக்கெனக் குதித்த தைப்போல்

கிளைதொறும் குதித்துக் தாவிக் கீழுள்ள விழுதை யெல்லாம்

ஒளிப்பாம்பாய் எண்ணி யெண்ணி உச்சிபோய்த் தன்வால் பார்க்கும்".

பொருள்:

ஓர் ஊரில் ஆலமரமொன்று பரந்து விரிந்து பற்பல விழுதுகளைத்

தொங்க விட்டுக்கொண்டு கண்ணுக்குக் குளிர்ச்சியாகத் தோற்றம்

அளித்தது. ஒரு விழுதில் பாம்பொன்று சுற்றிக் கொண்டு ஓய்வெடுத்

தாற்போல்  அமைதியாக இருந்தது. அவ்வழியே வந்த ஒரு குரங்கு

விழுதில் பாம்பு சுற்றிக் கொண்டிருந்தைக் கவனிக்காமல் விழுதைப்

பிடித்து விளையாட நினைத்தது. குரங்கு விழுதைத் தொட்டவுடனே

பாம்பு சீறிக்கொண்டு தலையைத் தூக்க, அதனைக் கண்ட குரங்கு

அலமந்து விழுதிலிருந்து கையை விடுவித்து அருகிலுள்ள கிளைக்குத்

தாவி அங்கிருந்து அடுத்தடுத்த கிளைகளுக்குத் தாவி  ஒரு நொடியில்

உச்சியை அடைந்து பாம்பினால் ஏற்பட்ட பீதியடங்காமல் தன்வாலை உற்று

உற்றுப் பார்த்துத் தன்வால்தான், பாம்பன்று, என்று உறுதிப் படுத்திக்

கொண்டு அமைதியடைந்தது. "பாம்பென்றால் படையும் நடுங்கும்" அல்லவா?

ஒரு விழுதில் பாம்பைக் கண்டு பீதியடைந்த குரங்கு பிற விழுதுகளையெல்லாம்

அச்சத்துடனேயே உற்று நோக்கிக் கிளைகளிலே தாவியேறி மர உச்சிக்குப்

போன பின்னும் பீதியடங்காமல் தன்வாலைக்கூடப் பாம்பு தானோ என்று

அச்சத்துடனேயே உற்று உற்றுப் பார்த்துத் தன்வால்தான், பாம்பன்று என

உறுதிசெய்த பின்னரே நிம்மதியடைந்தது. அருமையான கற்பனையன்றோ?