Saturday 9 May 2020

இறைவா! கொரோனாத் தொற்றிலிருந்து காத்தருள்க!


வீட்டினுள் இருப்போம்; வெளியே செல்லோம்.

ஊறுசெய் கொரோனா நோயால்
   உலகத்து மாந்தர் வாடித்
தேறுதல் சொல்வார் இன்றிச்
   சீர்செய்யும் மருந்தும் இன்றி
நூறுபல் லாயி ரம்பேர்
   நொய்வுடன் மாளு கின்றார்;
ஆறுதல் சொல்லும் நாடு
    யாங்கணும் இல்லை யம்மா!

ஊரெலாம்  அடங்கும் வண்ணம்
   உத்தர(வு) இட்ட மையச்
சீருறும் அரசின் சொல்லைச்
  சிந்தையில் ஆழத் தாங்கி
யாரொடும் நெருங்கி டாமல்
  இடைவெளி காப்போம்; நோயை
வேரொடும் வீழ்த்தும் வண்ணம்
  வீட்டினில் தங்கு வோமே.

தடுத்திடும் மருந்தும் இல்லை;
  சரிசெய்யும்  மருந்தும் இல்லை;
அடுத்தவர் தம்மை நீங்கி
  ஆறடி விலகல் நன்றாம்;
மிடுக்குடன் கவசம் மாட்டி
  வெளியினில் செல்லல் மேலாம்;
எடுத்திடும் முயற்சி யாலே
  இன்னல்செய் கொரோனா ஓயும்.

அடிக்கடி கையி ரண்டை
  அரசுகள் சொன்ன வண்ணம்
மடியின்றி வழலை கொண்டு
   மறுவறக் கழுவல் நன்றாம்;
இடியினைப் போலும் துன்பம்
   இழைத்திடும் கொரோனா, இல்லப்
படியினை மிதியா  வண்ணம்
   பாங்குறத் தூய்மை காப்போம்.

நோயினை எதிர்க்கும் சக்தி
    நும்முடல் பெற்று விட்டால்
பேயினை ஒத்த நோயைப்
   பிடரியைப் பிடித்துத் தள்ளிப்
'போயின கிருமி' என்று
   புகன்றிடல் எளிதாம்; மேலும்
தாயினைப் போலும் அன்பால்
   சகமக்கள் தம்மைக் காப்போம்.

உயிரினைப் பெரிதென்(று) எண்ணா
    உணர்வுடன் தொண்டு செய்யும்
நயமிகு மருந்து வர்கள்,
    நற்குணச் செவிலி யர்கள்,
தயக்கமே இலாது சட்டம்
   தழைத்திடக் காவல் காப்போர்,
அயர்வுறாத் தூய்மை செய்வோர்
    அத்தனை பேர்க்கும் நன்றி.

வையத்தில் பரவி விட்ட
    மாபெரும் கொடிய நோயாம்
நையச்செய் கொரோனா தன்னை
    நாட்டைவிட்(டு) அகற்ற எண்ணித்
துய்யநல் அறிவு ரையைச்
    சொல்லிடும் அரசு கட்குக்
கைகளைக் கூப்பி நன்றி
    கழறுதல் செய்வோம்; வாழ்க.
(மைய அரசு=மத்திய அரசு; மடியின்றி=
சோம்பல் இன்றி;வழலை=சவர்க்காரக்கட்டி=
சோப்பு; மறுவற=குற்றமற;கழறுதல்=சொல்லுதல்;
அரசுகள்=மத்திய மற்றும் தமிழக அரசுகள்)


தலைவணங்கி நன்றி நவில்வோம்.

உயிர் குடிக்கும் மிகக்கொடிய கொரோனாநோய்த்
  தொற்றாலே உழலு  வோர்க்குத்
தயக்கமின்றித் தம்உயிரைப் பணயம் வைத்து
  மருத்துவம்செய்  சால்பு  மிக்க
உயர்வுமிகு மருத்துவர்கள் அளப்பரிய
 தொண்டாலே உயிரைக் காப்பர்;
துயர் துடைக்கும் அவர்பணியை மெச்சிடுவோம்;
  தாள் பணிந்து சொல்வோம் நன்றி.

இன்னலுறும் பிணியாளர் தமைநெருங்கிச்
  சேவை செய்யும் இனிய சொல்லர்;
தன்னலமே கருதாது சலியாமல்
  உழைக்கின்ற  தகைமை யாளர்;
அன்னைநிகர் அன்புடனே செவிலியர்கள்
  எப்பொழுதும் ஆற்றும் தொண்டை
என்னவிதம் போற்றிடுவோம்; என்னவிதம்
  நன்றி சொல்வோம்;  இனிதே வாழ்க!

மருத்துவநல் மனையதனில் குவிகின்ற
  கழிவுகளை வாரிக் கொட்டிக்
கருத்துடனே தூய்மைசெய்து நோய்த்தொற்று
  நிகழாமல் காத்தல் செய்யும்
பெருந்தொண்டு புரிகின்ற துப்புரவுப்
   பணியாளர் பிறங்கி வாழ்க!
இருகரமும் கூப்பியவர் நற்பணிக்கு
   நன்றி தனை இயம்பு வோமே.

காரணமே இல்லாமல் வீதிவலம்
   வருவோரைக்  கடிந்து தத்தம்
சீரியநல் மனைகளிலே கிடந்திட வே
   வலியுறுத்திச்  சேவை யாற்றும்
தீரமிகு காவலரே! தலைசாய்த்து
   வணங்குகிறோம்; தீய  நோயை
ஊரடங்கை நிலைநாட்டிப் பரவாமல்
   தடுக்கின்ற உமக்கு நன்றி.

இப்பெரிய செயலினிலே இனும்பலபேர்
   ஒன்றாக  இணைந்து கூடித்
தப்பறவே உதவுகின்றார்;  அன்னவர்கள்
   தமக்கு நன்றி  சாற்று வோமே!
இப்புவியில் கொரோனாவை ஒழிப்பதற்கு
   மருந்தில்லை; எனினும் ஏற்ற
ஒப்பிலதாம் ஊரடங்கும் சமுதாய
   இடைவெளியும்  உதவும் மாதோ!


கடவுளே! எங்களைக் காப்பாய்; கொரோனாவைக் கட்டிவிடு.

சீனாவில் தோன்றி யகிலமெல் லாம் சுற்றித் தீக்கொரனா
ஆனாத செல்வ வளநாடு தம்மை  அலறவைத்து
நானா விதத்தில் பொதுமக் களைவாட்டி நாசம்செய்து
தானா எவர்க்கும் அடங்காமல் நாளும் தகிக்கிறதே!

இத்தாலி இஸ்பெயின் செர்மனி நல்பிரான்ஸ் இங்கிலந்து
மெத்தப் புகழ்சேர் கனடா அமெரிக்கா மேன்மைமிகு
இத்தகு நாடெல்லாம் கையற்று நிற்க இயம்பவொணாச்
சித்தம் குலைய மனிதர்கள் சாகச் செயல்செயுமே!

பாரத தேசமும் தப்ப இயலாமல் பாழ்பிணியால்
கோர விளைவினைச் சந்தித்துத் திண்டாட்டம் கொள்கிறது;
சீரழி கின்ற இருநூறு நாடு திகைத்து நிற்கப்
பேரழி வைச்செய்யும் பொல்லாநோய் என்று பிடிவிடுமே?

ஆண்டவா! போதும்; அளவற்ற துன்பம் அடைந்துவிட்டோம்;
நீண்ட‌,எண் ணிக்கையில் தொற்றால் மரணம் நிகழ்ந்துளது;
தாண்டவம் ஆடும் வறுமை, பணியின்மை, தாங்கரிய
சீண்டும்  பணமின்மைச் சிக்கல்கள் என்றுதான் தீர்ந்திடுமே?

கொத்துக்கொத் தாகக் கொரானோநோய்த் தொற்றால் குவலயத்தார்
செத்து மடிகின்ற செய்தியைக் கேட்டுத் திகைப்படைந்தோம்;
சித்தம் தடுமாறிச்  செய்வ தறியாது தேம்புகின்றோம்;
அத்தனே! நீயுன் கடைக்கண்ணால் நோக்கின் அகன்றிடுமே!

கடவுளே! எங்களைக் காப்பாய்; கொரோனாவைக் கட்டிவிடு;
அடங்காப் பிணியை அடியோடு மாய்ப்பாய், அவனிதனில்;
திடசித்தம், நோயை எதிர்க்கும் வலிமை திரும்பிடச்செய்;
மடமக்கள் யாமெலாம்  நின்றாள் பணிந்து வணங்குதுமே!

படியோர் புகழும் இறைவா! அருள்செய்க; பாரிலெங்கும்
துடியாய்த் துடித்துக் கொரோனாநோய்த் தொற்றால் துயரடைந்து
மடியும் மனிதரைக் கண்டுளம் நைய  வதங்குகிறோம்;
அடியோம்; உமது திருத்தாள் சரணம் அடைக்கலமே!