Saturday 27 April 2024

தூறெல்லாம் சோழன் சுரிகுஞ்சி..

 தூறெல்லாம் சோழன் சுரிகுஞ்சி.


அது பதின்மூன்றாம் நூற்றாண்டுக் காலம். தமிழகத்தில் ஒன்பதாம்

நூற்றாண்டு தொடங்கிப் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை இடைக்

காலச் சோழர்களின் ஆட்சி கொடிகட்டிப் பறந்த காலம். ஏறத்தாழ

நானூறு ஆண்டுகளுக்கு மேல் பேரரசைக் கட்டியாண்ட சோழர்கள்

பதின்மூன்றாம் நூற்றாண்டில் வலிமை குறைந்து ஆட்சிப் பரப்பை

இழக்கத் தொடங்கியிருந்த காலம். அதேநேரம் இடைக்காலப் பாண்டி

யர்கள் தலையெடுக்கத் தொடங்கிய காலம். முதலாம் சடையவர்மன்

சுந்தரபாண்டியன் கி.பி.1251இல் அரியணை ஏறி ஆட்சி நடத்திக்

கொண்டிருந்தார். கடந்த இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகளாகச்

சோழர்களிடம் அடிமைப் பட்டுக் கிடந்த பாண்டியர்கள் எழுச்சி பெறத்

தொடங்கினர்.


கொங்கு நாடு சங்க காலத்திலிருந்தே குறுநில மன்னர்களால் ஆளப்

பட்டு வந்தது. அவ்வப்பொழுது சேர, சோழ மற்றும் பாண்டிய வேந்தர்கள்

கொங்குப் பகுதியைக் கைப்பற்றித் தம் ஆளுகைக்கீழ்க் கொண்டு வருவர்.

பிறகு அது அவர்களின் பிடியிலிருந்து விலகி ஆங்காங்கே குறுநில மன்னர்களின்

ஆட்சிக்கீழ் சென்றுவிடும். கொங்கு நாட்டில் வீரம் செறிந்த தலைவர்கள்

பலர் தோன்றியுள்ளனர். அவர்கள் தமக்குரிய சிறு படையைத் திரட்டித்

தத்தம் நிலப் பகுதியைப் பாதுகாத்துக் கொள்வர். சேர, சோழ, மற்றும்

பாண்டிய வேந்தர்கள் தேவைப்படும் பொழுது இவர்  போன்ற குறுநில

மன்னர்களின் உதவியை நாடுவர். இவர்களும் அவர்கள் அழைப்புக்கு

இணங்கி உதவி செய்துவிட்டு உரிய ஊதியத்தைப் பெற்றுக் கொள்வர்.


அக்காலக் கட்டத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பழைய கோட்டை

என்ற ஊர் சிறப்போடு விளங்கியது. அங்கு வாழ்ந்த கொங்கு வேளாளர்

தலைவருக்குப் பழைய கோட்டைப் பட்டக்காரர் என்ற பெயர் நிலவியது.

அவர் கொங்கு வேளாளரின் நலம் கருதி நாட்டாண்மை செலுத்துவார்.

அந்த ஊருக்குக் காரை என்ற மற்றொரு பெயரும் இருந்தது. நத்தக்காரையூர்

என்ற பெயரில் அழைக்கப்பட்டது. சுந்தரபாண்டியன் காலத்தில் மேற்படி ஊரில்

சர்க்கரை மன்றாடியார் என்ற தலைவர் வாழ்ந்துவந்தார். சர்க்கரை என்பது

இயற்பெயர். மன்றாடியார் என்பது குலப்பெயர். மன்று என்பது கிராம நீதி

மன்றம் போன்றது. தம் குலத்தினரின் வழக்குகளை விசாரித்து நீதி/தீர்ப்பு

வழங்கியமையால்  மன்றாடியார் என்னும் பெயர் வாய்த்தது.


சர்க்கரை மன்றாடியார் காலத்தில் கொங்குப் பகுதி பாண்டியர் ஆட்சிக் கீழ்

இருந்தது. பாண்டியர் ஒருமுறை கொங்குப் பகுதிக்கு வந்தபோது சர்க்கரை

மன்றாடியார் அவரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது

பாண்டியர் தமது படையில் கொங்கு வீரர்களைக் கொண்ட ஒரு படைப் பிரிவை

உருவாக்க விரும்புவதாகவும் சர்க்கரையார் அப்பிரிவுக்குச் சேனாபதியாகப்

பணிபுரிதல் வேண்டும் என்றும் கோரினார். ஆழ்ந்த சிந்தனைக்குப்பின் அவர்

சம்மதித்தார்.


பாண்டியர் படையில் கொங்குப்படைப் பிரிவு உருவாக்கப்பட்டதை அறியாத

சோழ வேந்தர் சர்க்கரையாருக்கு ஒரு ஓலை அனுப்பினார்.. அதில் "வழக்கம்

போல  நீங்கள் உங்கள் படையை அனுப்பி உதவி புரியவும். தக்க ஊதியம்

வழங்கப்படும்" என்று எழுதப்பட்டிருந்தது. உடனே சர்க்கரையார் " நான் கூலிப்படை

திரட்டி வைத்திருக்கவில்லை. எனவே அனுப்ப இயலாது" என்று மறுமொழி

அனுப்பினார். சோழன் மிக்க சினமடைந்து " தாங்கள் படையை அனுப்பாவிட்டால்

தங்கள் பகுதி மீது போர்தொடுப்பேன்" என்று மிரட்டி ஓலைவிடுத்தார்.. சர்க்கரையார்

ஓலையைத் தூக்கி எறிந்து விட்டார்.

பாண்டிய உளவு வீரர்கள் இச்செய்தியைப் பாண்டிய வேந்தருக்குத் தெரிவித்தனர்.

பாண்டியர் சர்க்கரையாருக்கு அவசரமாக ஓலையை அனுப்பி" படையுதவி தேவையா?"

என்று விசாரித்தார். " படை ஏதும் அனுப்ப வேண்டாம். நாங்களே சமாளித்து விடுவோம்"

என்று பதில் ஓலை அனுப்பினார் சர்க்கரையார். சோழன் சொன்னபடியே படையெடுத்து

வந்து கருவூருக்குள் நுழைந்து விட்டார்.. சர்க்கரையார் தமது கொங்குப் படைவீரர்களோடு

சோழ நாட்டுப் படைகளை எதிர்கொண்டார். கடுமையான போர் நிகழ்ந்தது. குருதி

வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சோழப்படைகளுக்குப் பெருத்த இழப்பு நேரிட்டது.

சர்க்கரையாரும் சோழ வேந்தனும் நேருக்குநேர் சந்தித்துக் கொண்டனர். இடையில்

இருபதடித் தொலைவே இருந்தது. சர்க்கரையார் தொடுத்த அம்பு சோழனின் தலைக்

கவசத்தை வீழ்த்தியது. அடுத்து அவர் விடுத்த அம்பு சோழனின் தலைமுடியை உரசிச்

சென்றது. உரசிய வேகத்தில் அவர் தலைமுடியைப் பிய்த்துச் சென்றது. சோழனின்

சுருண்ட முடிக் கற்றை போர்க்களம் எங்கும் பரவலாகச் சிதறியது. தலைக்கு வந்த

தீங்கு தலைக் கேசத்தோடு போனது என்று எண்ணிய சோழன் புறங்காட்டி ஓடினார்..

அவரைத் தொடர்ந்து எஞ்சிய சோழ வீரர்களும் ஓடத் தொடங்கினர். போர்க்களக்

காட்சியை யாரோ ஒரு புலவர் மிக அருமையாக விவரித்துப் பாடியுள்ளார்:

"ஆறெல்லாம் செந்நீர்; அவனியெல்லாம் பல்பிணங்கள்;

தூறெல்லாம் சோழன் சுரிகுஞ்சி---வீறுபெறு

கன்னிக்கோன் ஏவலினால் காரைக்கோன் பின்தொடரப்

பொன்னிக்கோன் போன பொழுது".

(தூறு=புதர்; சுரிகுஞ்சி= சருண்ட தலைமுடி; கன்னிக்கோன்=கன்னியாகுமரிக்குத்

தலைவனான பாண்டியன்; காரைக்கோன்= நத்தக்காரையூர்த் தலைவனான

சர்க்கரை மன்றாடியார்; பொன்னிக்கோன்= காவிரிநாட்டுக்குத் தலைவனான

சோழன்).


வெற்றிக்குப் பிறகு சர்க்கரை மன்றாடியார் சடையவர்மன் சுந்தர பாண்டியனை

மதுரையில் சந்தித்துப் போர்க்களச் செய்திகளை எடுத்துரைத்தார். பாண்டியர்

பெருமகிழ்ச்சியடைந்து பலப்பல பரிசுகளைச் சர்க்கரையாருக்கு அளித்தார்.

மேலும்" இன்றுமுதல் நீங்கள் வெறும் சேனாபதியல்லர்; நல்ல சேனாபதி" என்ற

பட்டத்தையும் நல்கினார். அன்றுமுதல் அவர் பழையகோட்டைப் பட்டக்காரர்

நல்ல சேனாபதி சர்க்கரை மன்றாடியார் ஆனார். அவரின் வழித் தோன்றல்கள்

மேற்படி பட்டத்தை இன்றும் தம் பெயருக்குப்பின் சூடிக் கொள்கின்றனர்.


பார்வை: 'நல்ல சேனாபதி' நூல்-- ஆசிரியர் தமிழறிஞர் கி.வா.ஜெகந்நாதனார்.

Sunday 7 April 2024

குதிரையை அடக்கிய குப்பிச்சி(கொங்கு நாட்டு மற்போர் வீரர்)

 குதிரையை அடக்கிய குப்பிச்சி(கொங்குநாட்டு மற்போர் வீரர்)


கொங்கு நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பூந்துறை என்னும்

ஊரில் மாட்டையாக் குப்பிச்சி என்ற மற்போர் வீரர் இருந்தார்.கொங்கு

வேளாளரில் காடையென்னும் வமிசத்தில் தோன்றியவர் அவர். மற்போர்

புரிவதில் வல்லுநர். பல நாடுகளுக்குச் சென்று ஆங்காங்கு நிலவும்

சிறப்புக்களையும் பண்பாட்டுப் பாங்குகளையும் தெரிந்துகொள்ள ஆவல் 

கொண்டார். கொங்கு நாட்டில் விசயநகர மன்னர்கள் ஆட்சி செலுத்திய

காலம். குப்பிச்சி தான் திட்டமிட்ட படியே விசய நகரம் சென்றுசேர்ந்தார்.


அங்கே ஒரு ஆஸ்தான மற்போர் வீரர் இருந்தார். வெளிநாட்டிலிருந்து

வரும் மற்போர் வீரர்கள் அவரோடு மற்போர் புரிந்து வெற்றியடைந்தால்

மட்டுமே அரசரைப் பார்க்க முடியும். இல்லாவிட்டால் அந்த ஆஸ்தான

மல்லருக்குப் பணிந்து நடத்தல் வேண்டும். ஒரு நீண்ட சங்கிலியை அரண்மனை

முதல் வாயிலில் மேலே வளைவாகத் தொங்கவிட்டு அதன் ஒரு நுனியைத்

தன் இடக்கால் விரலால் பற்றிக்கொண்டிருப்பார். வெளிநாட்டிலிருந்து

வருபவர்கள் தலைவணங்கி அச்சங்கிலியின் கீழே நுழைந்து வரல் வேண்டும்.

தன் கால் பட்ட சங்கிலிக்கும் வருபவர்கள் பணிவுகாட்டல் வேண்டும் என்ற

இறுமாப்புடன் நடந்து கொண்டது வெளிப்படையாகத் தெரிந்தது. அந்நாட்டு

மன்னர் இதனைக் கவனிக்கவேயில்லை.


போதாக்குறைக்கு அவர் ஒரு அடங்காத முரட்டுக் குதிரையை வேறு வளர்த்து

வந்தார். ஆஸ்தான மல்லரைத் தவிர வேறு யாரையும் தன்மேல் சவாரி செய்ய

அக்குதிரை அனுமதித்ததில்லை. சொல்லப் போனால் வேறு யாரும் அக்குதிரைமீது

ஏறினால் உயிர் பிழைப்பது அரிதாகும். வேறு நபர் ஏறிவிட்டால் அக்குதிரை

குதிக்கும்; சுற்றிச் சுழலும்; வெறித்தனமாக ஓடும். இப்படியெல்லாம் செய்து

ஏறிய நபரைக் கீழே தள்ளிவிடும். இத்தனைக்கும் ஈடுகொடுத்து ஏறிய நபர்

இறங்காமல் சமாளித்துவிட்டால்  அருகிலுள்ள அவ்வூரின் பெரிய ஏரிக்குள்

பாய்ந்து செல்லும். மடமடவென்று நீரில் இறங்கி ஆழமான பகுதிக்குச் செல்லும்.

ஆழமான பகுதியில் தன் மேல் ஏறியுள்ள நபரை விழவைக்கும். விழுந்தால்

மூச்சுத்திணறிச் சாகவேண்டியதுதான். இந்த அளவு முரட்டுத்தனம் கொண்ட

குதிரையாகும். இதனால் ஆஸ்தான மல்லரோடு யாரும் வம்பு, வழக்கு வைத்துக்

கொள்வதில்லை. அவருடன் யாதொரு மோதலும் மேற்கொள்ளாமல் மன்னரைப்

பார்த்து வணங்கிப் பரிசு ஏதேனும் கிடைத்தால் பெற்றுக்கொண்டு ஆஸ்தான

மல்லருக்கும் வணக்கம் தெரிவித்துவிட்டு வந்துவிடுவர். இப்படியாக ஆஸ்தான

மல்லர் போட்டி அரசு நிகழ்த்திக் கொண்டிருந்தார்.


இந்தச் சூழ்நிலையில் நம் குப்பிச்சி ஆஸ்தான மல்லருடன் மற்போர் நிகழ்த்தத்

தனக்குச் சம்மதம் என்று பலர் முன்னிலையில் அறிவித்துவிட்டார். ஆஸ்தான

மல்லர் திகைத்துப் போனார். தன்னோடு மற்போர் புரிய யாரும் இதுகாறும்

முன்வந்ததில்லை. அந்த அளவுக்கு அனைவரையும் அரட்டி உருட்டி வைத்திருந்தார்.

தற்பொழுது வெளியூர்க்காரர் தனக்கு அறைகூவல் விடுவதை ஏற்றுக்கொள்ள

இயலவில்லை. வேறுவழியின்றித் தானும் சம்மதிப்பதாகக் கூறினார். மன்னர்

காதுக்கு இந்தச் செய்தி எட்டியது. மளமளவென மற்போருக்கான ஏற்பாடுகள்

செய்யப்பட்டன. அரங்கம் தயார் செய்யப் பட்டது. பொதுமக்கள் ஏராளமாகக்

குழுமிவிட்டனர். மற்போர் தொடங்கியது. ஆஸ்தான மல்லர் வெகுநாட்கள் மற்போர்

புரியாமல் சுகவாசியாக இருந்தமையால் தொடக்கத்திலிருந்தே சுணக்கம்

காட்டினார். நம் குப்பிச்சியோ வெளிநாட்டில் தன் திறமையைக் காட்ட எண்ணி

முனைப்புடன் மற்போர் நிகழ்த்தினார். பிறகென்ன? குப்பிச்சி ஆஸ்தான மல்லரை

வீழ்த்தி வெற்றிக்கொடி நாட்டினார்.


ஆஸ்தான மல்லர் உடனே குப்பிச்சியிடம் அறைகூவல் விடுக்கலானார். "என் முரட்டுக்

குதிரையை அடக்கினால்தான் நான் தோல்வியை ஒப்புக்கொள்வேன்" என்றார்.

குப்பிச்சி அறைகூவலை ஏற்றக்கொண்டார். "நாளை இதே நேரத்தில் குதிரையை

அடக்கும் போட்டியை நடத்தலாம்" என்றார். மன்னர்"அப்படியே ஆகட்டும்" என்றார்.

குப்பிச்சி அன்றைய மாலைப் பொழுதில் சுண்ணாம்புக் கற்களை ஒரு துணியில்

நிரப்பி அதனை நன்கு மடித்துக் கொண்டார். குதிரையின் சேணத்தின்மீது இந்தச்

சுண்ணாம்புக்கல் கொண்ட துணியைத் தோதாகச் சுற்றிக் கொண்டால் குதிரை

ஆற்றுக்குள் இறங்கி ஆழமான பகுதிக்குச் செல்லும் முன்பே சுண்ணாம்புக் கற்கள்

பொங்கத் தொடங்கி வெப்பத்தை வெளிப்படுத்தும். சூட்டைத் தாங்க முடியாமல்

குதிரை கரைக்குத் திரும்பும் என்று தந்திரமாகத் திட்டமிட்டார்.


மறுநாள் மன்னர் முன்னிலையில் பொதுமக்கள் கூடினர். ஆஸ்தான மல்லரும்

குப்பிச்சியும் வருகை புரிந்தனர். குதிரை கொண்டுவரப்பட்டது. ஆஸ்தான மல்லர்

குதிரைக்குத் தேவையான போதையூட்டிக் கொண்டு வந்திருந்தார். போட்டி

தொடங்கியது. குப்பிச்சி குதிரையை நெருங்கிச் சேணம், கடிவாளம் போன்றவற்றைச்

சரிசெய்வதுபோல் தான் தயாரித்து வைத்த சுண்ணாம்புக் கற்கள் நிரம்பிய துணியைச்

சேணத்தின் மீது சுற்றி வைத்துக் குதிரையின்மீது தாவியேறினார். சுண்ணாம்புக்

கற்கள் நிரம்பிய பகுதி குதிரையின் அடிவயிற்றைத் தொட்டுக்கொண்டிருந்தது.

குப்பிச்சி ஏறியவுடன் குதிரை சிலிர்த்துக்கொண்டு குதித்தது; சுழன்றது; தாவியது;

அதிவேகமாக ஓடியது. குப்பிச்சி குதிரையின் மீது படுத்தவண்ணம் அதன் கழுத்தை

இறுகப் பற்றிக் கொண்டார். குதிரையால் அவரைக் கீழே தள்ள இயலவில்லை. எனவே,

ஏரியை நோக்கி ஓடி அதற்குள் இறங்கியது ஆழமான பகுதியை நோக்கிச் செல்ல முயன்றது.

இதற்குள் சேணத்தைச் சுற்றியுள்ள துணியில் இருந்த சுண்ணாம்புக் கற்கள் தண்ணீர்

பட்டவுடன் பொங்கத் தொடங்கி வெப்பத்தை வெளிப்படுத்தியது.


சுண்ணாம்புக் கற்கள் நிரம்பிய துணி குதிரையின் அடிவயிற்றைத் தொட்டுக்கொண்டிருந்

ததால் வெப்பம் அதன் அடிவயிற்றைத் தாக்கியது. சூட்டைத் தாள மாட்டாத குதிரை

மேற்கொண்டு ஆழத்தை நோக்கிச் செல்லாமல் திரும்பிக் கரையை நோக்கி வரத்

தொடங்கியது. சுண்ணாம்புச் சூட்டால் குதிரையின் வெறி, வேகம் எல்லாம் தணிந்து

மெதுவாக நடை பயின்று கரையேறியது. மன்னருக்கும், ஆஸ்தான மல்லருக்கும்,

குழுமியிருந்த பொதுமக்களுக்கும் இந்தத் தந்திரம் தெரியாததால் குதிரையின்

ஆவேசம் தணிந்ததற்குக் காரணம் விளங்காமல் குப்பிச்சிக்குக் கிடைத்த தெய்வ

அருள் அவரைக் காப்பாற்றியதாக நம்பினர். குப்பிச்சி வெற்றி வீரராக அரங்கை

வலம்வந்தார். ஆஸ்தான மல்லர் நிறுவிய சங்கிலியை அகற்ற வேண்டுகோள்

வைத்தார். மன்னரும் பரிசுகள் நல்கி அவர் கோரிக்கையை நிறைவேற்றினார்.

இந்த நிகழ்வைக் கொங்கு மண்டல சதகம் என்ற நூல் விவரிக்கிறது(பா.எ.56):

"தேசுற் றிலகு விசய நகரத் திறலரசன்

வாசற் பணிக்கனை மண்கொளக் குத்தியம் மன்னனைக்கண்

டேசற் படுமய மாவினை யாட்டி யெவருமெச்ச

மாசற்ற நாடுகொள் குப்பிச்சி யுங்கொங்கு மண்டலமே."

விளக்கம்: விசயநகர அரசில் ஆஸ்தான மல்லரை வெற்றி கண்டு அவரது முரட்டுக்

குதிரையை அடக்கி எல்லோரும் மெச்ச அந்நாட்டில் சிறப்படைந்த குப்பிச்சி

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவரே.


பார்வை: நினைவு மஞ்சரி 2ஆம் பாகம்(நூல்)

ஆசிரியர்: தமிழ்த்தாத்தா  உ.வே.சாமிநாதையர்