Saturday 23 January 2021

பணத்தட்டு எவ்விடம்?

 பணத்தட்டு எவ்விடம்?


பழனி நகரத்தில் 1836ஆம் ஆண்டு தோன்றியவர் பழனிச்சாமி.

தனது மூன்றாவது வயதில் அம்மை நோயால் பாதிக்கப்பட்டுக்

கடவுள் அருளால் உயிர்தப்பினார். இருந்த போதிலும் கண் பார்

வையைப் பறிகொடுத்தார். மனந்தளராமல்  தமிழ், வடமொழி,

இசை முதலானவற்றைத் தகுதிவாய்ந்த ஆசிரியர்களிடம் முறைப்

படி கற்றுச் சீரிய புலமையடைந்தார்.


அவர் காலத்தில் தென் தமிழ் நாட்டில் மன்னர் என்ற பெயருக்

கேற்ற சகல தகுதிகளையும் அதிகாரத்தையும் கொண்டு விளங்

கியவர்கள் இராமநாதபுரத்தை யாண்ட முத்துராமலிங்க சேதுபதி

யும் அவர் தமையனார் பொன்னுச்சாமித் தேவரும் ஆவர். இவர்கள்

அவையில் தம் புலமையைக் காட்டிக் 'கவிச்சிங்கம்' என்ற பட்டம்

பெற்றார்  பழனிச்சாமி என்ற மாம்பழக் கவிச்சிங்க நாவலர்.மாம்பழம்

என்னும் பட்டம் அவர்க்கு முந்திய தலைமுறையினர் திருமலை மன்

னரிடம் பெற்றதாகும்.


ஒருமுறை  பொன்னுச்சாமித்தேவர்  மாம்பழக் கவிச்சிங்கத்துக்குப்

பரிசு அளிக்கும்போதில் ஓர் அழகிய வெள்ளித்தட்டில் வைத்துக்

கொடுத்தார். புலவருக்குத்  துணையாய் வந்த சிறுவன் வெள்ளித்

தட்டின் அழகைப் பற்றி விவரித்துச் சொன்னான். உடனே புலவருக்குத்

தட்டின் மீது பெருவிருப்பம் உண்டாயிற்று. நேரடியாகத் தேவரிடம் தமக்குத்

தேவை என்று சொல்வதற்கும்  கூச்சமாக இருந்தது. எனவே, '"பணத்தட்டு

எவ்விடம்?"  என்று வினவினார். பணத்தட்டு என்பதற்குப் பணத்தையுடைய

தட்டு என்றும் பணத்துக்குத் தட்டு(தட்டுப்பாடு) என்றும் பொருள்படும். இக்

கேள்வியை எதிர்பாராத தேவர் சமஸ்தானத்துக்குப் பணத் தட்டுப்பாடு

வந்தால்(ஏற்பட்டால்) பொதுமக்கள் உட்பட அனைவரும் பாதிக்கப்படுவர்;

புலவருக்குப் பணத்தட்டு வந்தால்  அவர் சமாளித்துக் கொள்வார்(புலமை

யும் வறுமையும் சேர்ந்தே இருப்பது தானே) என்று எண்ணிப் "பணத்தட்டு

அவ்விடத்துக்கே" என்று விடையிறுத்தார். புலவரும்  ஆசைப்பட்ட படியே

வெள்ளித் தட்டையும் பரிசையும்  எடுத்துச் சென்றார்.


ஒருமுறை வாயிற் காவலர் ஒருவர்  வேறு காவல் பணியிலிருந்து  இந்தப்

பணிக்கு மாற்றப் பட்டிருந்தார். மாம்பழக் கவிச்சிங்கம்  பழனியிலிருந்து

வந்தவர் ஆதலாலும் காவலர் இதற்குமுன் அவரைப் பார்த்ததில்லை

ஆதலாலும்  கவிச் சிங்கத்துக்கு அரசவைக்குள்  நுழைய அனுமதி

மறுத்துவிட்டார். இதற்குள் வேறு ஒரு காவலர் வந்து புலவரைப்பற்றி

எடுத்துச் சொல்லி உள்ளே அனுமதிக்கச்  செய்தார்.  கவிச்சிங்கம் சிறிது

தாமதமாக அரசவைக்குள்நுழைந்த காரணம் பற்றிப் பொன்னுச்சாமித்

தேவர் வினவ, அவர் நடந்த நிகழ்வை ஒரு பாடலில் கூறினார். பாடல் வருமாறு:

"தருமகுண மிகுமுனது சமுகமுறார் வறுமையெனச்

   சலிக்கக் காய்ந்து

வருமிரவி வெயிலதனால் மயங்கியின்று யானிங்கு

   வந்த போழ்தில்

அருமை தவிர் பாராச்சே வகர்தமது பெயர்ப்பொருளை

    அறியக் காட்டிக்

கருவமொடு தடு ப்பதென்னே காமர்பொன்னுச் சாமியெனும்

    கருணை மாலே!"

பொருள்:

அழகிய பொன்னுச்சாமி என்னும் பெயருடைய கருணை மிக்க

திருமாலின் அம்சமானவரே!  தருமகுணம் மிகும் உமது சமுகத்தை

அடையார் வறுமையால் சலித்து வாடுவர். நான் தங்களை நாடி

ஏறு வெயிலில் வரும்போது வெயில் கொடுமையால் மயக்க

நிலையை அடைவதுபோல் இருந்தேன். வாயில் காக்கும் பாராச்

சேவகர் என்னை நுழைய விடாமல் தடுத்தார்.(இருந்தாலும் வேறு

காவலர் ஒருவர் வந்து விளக்கிச்  சொல்லியதன் பேரில் என்னை

அனுமதித்தார்.). மன்னர் தவறு செய்த காவலரை அழைத்து வர

உத்தரவிட்டார். உடனே கவிச்சிங்கம்   "ஐயா! அவர் இதற்குமுன்

என்னைப் பாராச் சேவகர்(பார்த்திராத சேவகர்) தானே; எனவே,

பாராச் சேவகர் பணியில் கடுமையாக நடந்து கொண்டார். அவர்

தம் கடமையைச் சரியாகச் செய்தார். எனவே அவர்க்கு யாதொரு

தண்டனையும் தேவையில்லை"என்றார். பாரா என்னும் சொல்

தமிழ்ச் சொல் அன்று. ஆனால் அதன் பொருள் காவல் என்னும்

பொருளில் கையாளப் பட்டுள்ளது. பாராச் சேவகன்=என்னை

இதற்குமுன் பார்த்திராத சேவகர்;  பாராச்  சேவகன்=காவல் காக்கும்

சேவகன் என்று இருபொருள்படப் புலவர் கையாண்டுள்ளார்.

Friday 8 January 2021

சற்றே துவையலரை .....

 சற்றே துவையலரை; தம்பியொரு பச்சடிவை.


1967-68 கல்வியாண்டில் நான் பதினொன்றாம் வகுப்பில் படித்துக்

கொண்டிருந்த காலக் கட்டம். தமிழ்ப் பாட வகுப்பில் யாப்பிலக்கணம்

நடத்தப்பட்டது. ஆசிரியப்பா, வெண்பா முதலியவற்றை இயற்றுவது

குறித்துத் தமிழாசிரியர் நடத்திக் கொணடிருந்தார். என் தந்தையார்

முத்துசாமிப் புலவர் மதுரைத் தூயமரியன்னை உயர்நிலைப் பள்ளியில்

தமிழாசிரியராகப் பணி புரிந்ததால் வீட்டில் அவரிடம்  தமிழ் இலக்கணம்

நாள்தோறும் கற்றுவருவது வழக்கம் அதனால் பள்ளியில் நடத்தப்பட்ட

யாப்பிலக்கணம் எளிதாகப் புரிந்தது. ஒருநாள் என் தந்தையார் வெண்பா

வைப்பற்றி எனக்கு விளக்கிக் கொண்டிருந்த பொழுது ஒரு நிகழ்வைப்

பற்றிக் கூறினார். சைவ மடாலயங்களின் ஆதீனகர்த்தர்கள்(தலைவர்கள்)

தம் சீடர்களுக்குச் சைவ சமய வகுப்பும், தமிழ் வகுப்பும் நடத்துவது மரபாகும்.

ஒருநாள் ஆதீனகர்த்தர் பாடம் நடத்திக் கொண்டிருந்த வேளையில் மடத்துச்

சமையல் காரர் ஆதீனகர்த்தரை அணுகி "சுவாமி! நண்பகல் உணவுக்கு என்ன

சமைக்கவேண்டும்?" என்று மெல்லிய குரலில் வினவினார். ஆதீனகர்த்தர்

வெகு ஈடுபாட்டுடன் பாடம் நடத்திக்கொண்டிருந்ததால் பேச்சை நிறுத்தாமல்

"சற்றே துவையலரை;" என்று சொல்லிவிட்டுப் பாடத்தைத் தொடர்ந்தார். சிறிது

நேரம் கழிந்தபிறகு, "தம்பியொரு பச்சடிவை " என்றார். தொடர்ந்து பாடம் நடத்திவிட்டு

"வற்றலே தேனும் வறுத்துவை" என்றார். பாடம் தொடர்ந்தது. இடையில், "குற்றமிலை"

எனச் சொன்னார். பாடம் தொடரப்பட்டது. "காயமிட்டுக் கீரைகடை" என்று சமையற்

காரைப் பார்த்துச் சொல்லிப் பாடத்தைத் தொடர்ந்தார். கொஞ்ச நேரம் கழித்துப்

பாடத்தை முடித்துவிட்டுக் " கம்மெனவே மிளகுக் காயரைத்து வைப்பாய் கறி"

என்று சொல்லி முடித்தார். தமிழ்ப் பாட வகுப்பும் முடிந்தது; அவ்வப்பொழுது

சொல்லிய சமையற் குறிப்பும் முடிந்தது. ஆதீனச் சமையற்காரருக்கும் ஓரளவு

தமிழ் இலக்கண அறிவு உண்டு. ஆதீனகர்த்தர்  தமிழ்ப் பாடம் நடத்திக் கொண்டே

இடையிடையே கூறிய சமையற் குறிப்புகளை ஒன்று சேர்த்துச் சொல்லிப் பார்த்தார்;

அழகிய வெண்பா உருவாகியிருந்தது. பாடல் பின்வருமாறு:

"சற்றே துவையலரை; தம்பியொரு பச்சடிவை;

வற்றல்ஏ தேனும் வறுத்துவை;---குற்றமிலை;

காயமிட்டுக் கீரைகடை;  கம்மென வேமிளகுக்

காயரைத்து வைப்பாய் கறி."

(காயம்=பெருங்காயம்)

ஆதீனகர்த்தர் தமிழ்ப் பாடம் நடத்திக் கொண்டே இடையிடையே  வெண்பா மூலம்

சமையல் குறிப்புகளைத் தெரிவித்தது அவரது புலமையின் ஆழத்தை வெளிப்படுத்து

கின்றது. புலமையுள்ள பெரியோர்கள் சொல்வதே கவிதையாக உருவெடுக்கும்.


இந்தப் பாடலைக் கேட்ட நான் அன்றிரவு முழுவதும் சிந்தித்துச்  சமையல் தொடர்பான

கவிதை ஒன்றை எழுதினேன். அது பின்வருமாறு:

"வெங்காயச் சாம்பார்வை; வெண்டைக்காய்ப் பச்சடிவை;

மங்கா மிளகுரசம் வைத்துவிடு;---பங்கமில்பால்

பாயாசம்  செய்(து)அப்  பளத்தைப்  பொரித்து வைத்தால்

ஆயாசம் இல்லை அனாய்!"

(அனாய்=அன்னாய்=அன்னையே!)

கவிதை நன்றாக இயற்றவருகிறதா எனப் பரிசோதிக்க ஈற்றடி கொடுத்து அதனை

ஒட்டிப் பாடி நிறைவு செய்யுமாறு  கூறுவது வழக்கம். வெண்பா வுக்கான ஈற்றடி:

''தமிழ்வாழ்க வாழ்கவெனச் சாற்று' என்பது எனக்குக் கொடுக்கப்பட்ட ஈற்றடி.

"எத்திக்கும்  போற்றும்  எழில்மொழியாம்;  பேசுங்கால்

தித்திக்கும்;  கேட்டால்  செவிகுளிரும்---சொத்தாம்

அமிழ்தனைய  நன்மொழியாம்; ஆண்டாண்டாய்  நிற்கும்

தமிழ் வாழ்க  வாழ்கவெனச்  சாற்று")

(பேசுங்கால் தித்திக்கும்---பேசும்போது்  வாயினிக்கும்).


வெண்பாவுக்கு  ஈற்றடி கொடுத்துப் பாடச்  சொல்வது போலக் கட்டளைக்கலித்துறை

என்னும் பாவகைக்கும் ஈற்றடி கொடுத்துப் பாடச் செய்வது வழக்கம். எனக்குக்

கொடுக்கப்பட்ட ஈற்றடி: "போரும் பகையும் அமைதிநல் வாழ்வைப் புதைத்திடுமே".

யான் இயற்றிய பாடல் பின்வருமாறு:

"யாரும் உலகில்தீப் போரை விரும்பிடார்; ஏனெனில்நற்

சீரும் சிறப்பும் செழிப்பும் களிப்பும் சிதைத்துவிடும்;

ஊரும் நகரும்  உறையுள்  எலாமும் உருக்குலைக்கும்;

போரும் பகையும் அமைதிநல் வாழ்வைப் புதைத்திடுமே."

யான் தமிழிலக்கிய மாணவன் அல்லன். நான் கல்லூரியில் பயின்றது வணிகவியல்.

என் தந்தையார் கற்றுக் கொடுத்ததைக் கொண்டும், நானாகப் பயின்ற இலக்கண

இலக்கியங்களைக் கொண்டும் கவிதை இயற்றி வருகிறேன்.