Sunday 16 April 2023

தாய்தந்த பிச்சையிலே பிறந்தேன் அம்மா!

 தாய்தந்த பிச்சையிலே பிறந்தேன் அம்மா!


1966ஆம் ஆண்டு வெளியான 'சரஸ்வதி சபதம்' என்ற

திரைப்படத்தில் தோற்றம்கண்ட இப்பாடலை நேற்று

தொலைக்காட்சியில் பார்த்துக் கேட்டுக் கொண்டிருந்த போது

இப்பாடல் பல சிந்தனைகளைக் கிளறி விட்டது. வறுமையில்

வாடும் ஒரு பெண் வீடு வீடாகப் பிச்சை எடுத்துக்கொண்டு

வரும் பொழுது பாடுவதாகக் காட்சியமைக்கப்பட்டிருந்தது.

அப்பெண் வறுமையைச் சாதாரணமாக எடுத்துச் சொல்ல

வில்லை. இலக்கிய நயமும் தத்துவ நயமும் இழைந்தோடிய

பாடல். இயற்றியவர் கவிஞர் கண்ணதாசன். இசையமைத்தவர்

K.V.மகாதேவன் அவர்கள்.


கவிஞர் தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த பற்றுக்கொண்டவர். சங்க

இலக்கிய மானாலும் பிற்கால இலக்கியமானாலும் சித்தர்கள்

இலக்கிய மானாலும் தனிப்பாடல் தொகுப்பானாலும் அனைத்திலும்

அவருக்கு ஆழ்ந்த ஈடுபாடும் பயிற்சியும் இருந்ததை எவரும் மறுக்க

இயலாது. வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் மேலே குறிப்பிடப்பட்ட

இலக்கியங்களின் சொற்களையோ/பொருளையோ எடுத்தாள்வது

அவருக்குக் கைவந்த கலை. இந்தத் திரைப்பாடலில் எந்த விதமான

இலக்கிய மேற்கோள்கள் வந்துள்ளன என்று நோக்கலாம்.

திரைப்பாடல்:

தாய்தந்த பிச்சையிலே பிறந்தேன் அம்மா! இங்கு

நீதந்த பிச்சையிலே வளர்ந்தேன் அம்மா!

ஏன் இந்த வாழ்க்கை என்று அறியேன் அம்மா!

இது இறைவனுக்கு ஓய்வு நேர விளையாட்டம்மா.

பெற்றவள் உடல்சலித்தாள்; பேதை நான் கால்சலித்தேன்;

படைத்தவன் கைசலித்து ஓய்ந்தான் அம்மா, அம்மா!

மீண்டும் பாவி ஒரு தாய் வயிற்றில் பிறவேன் அம்மா!

பார்க்க--பட்டினத்தார் பாடல்:

"மாதா உடல்சலித்தாள்; வல்வினையேன் கால்சலித்தேன்;

வேதாவும் கைசலித்து விட்டானே---நாதா

இருப்பையூர் வாழ்சிவனே! இன்னும் ஓர் அன்னை

கருப்பையூர் வாராமல் கா".

(வேதா=படைத்தவன்; கா= காப்பாற்று)

இருப்பையூரில் குடிகொண்டுள்ள சிவனே! மீண்டும் ஓர்

அன்னை வயிற்றில் பிறவாமல் என்னைக் காப்பாற்று.

திரைப்பாடல்:

"பத்தும் பறந்திடும்; பசிவந்தால் மறந்திடும்

இளமையில் கொடுமை இந்த வறுமை அம்மா!"

ஔவையார் பாடலை நோக்குக:

"மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை,

தானம், தவம்,உயர்ச்சி,  தாளாண்மை--தேனின்

கசிந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்

பசிவந் திடப் பறந்து போம்".

"கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்!

கொடிது, கொடிது வறுமை கொடிது;

அதனினும் கொடிது இளமையில் வறுமை".

திரைப்பாடல்:

"என்றும் இதுதான் நீதி என்றால், இறைவன்

வேண்டுமா?".

பார்க்க--திருக்குறள்(குறள் எண்: 1062)

"இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான்".

பிச்சையெடுத்துத்தான் உயிர் வாழ்தல் வேண்டும் என்ற நியதியை இறைவன்

படைத்திருந்தால் அக்கொடிய இறைவன் நிலையில்லாது அலைந்து

திரிந்து கெடுவான்.


ஆகா, அருமை; ஒரு பிச்சைக்காரப் பெண் பாடுவதாகக் காட்சிப் படுத்தப்பட்ட

பாட்டில் எத்தனை இலக்கிய நயத்தையும், தத்துவ நயத்தையும் கவியரசர்

எடுத்தாண்டுள்ளார்! அவரது தமிழ்ப் புலமையும் தத்துவ ஞானமும் மெச்சத்

தக்கவை. அன்னார் புகழ் என்றும் நின்று நிலவட்டும்!