Friday 30 July 2021

குறிஞ்சி நிலத்தாரின் மாப்பிள்ளை முருகன்....

 "எங்கள்(குறிஞ்சி நிலப் பெண்டிர்) மாப்பிள்ளை முருகன். அவர் தந்தை

சிவபெருமான் அணியும் பொருளை நாங்கள் அணிவது குற்றமாகும்."


 காசு, பணம் புழங்காமல் பண்டமாற்று வாணிகம் வழக்கத்தில் இருந்த காலம்.

நெய்தல் நிலப் பெண்டிர்(கடலும் கடல்சார்ந்த பகுதியும்) தாம் உருவாக்கிய

முத்துவடங்களைக் கொடுத்து அவற்றிற்குப் பதிலாக யானைக் கொம்புகளைப்

பெறுவதற்காகக் குறிஞ்சி நிலத்தவரை அணுகுகின்றனர். குறிஞ்சி

நிலத்தவர் அப்பொழுது இருந்த சூழ்நிலையில் யானைக் கொம்புகளை

விடவும் நெல், கரும்பு முதலான உணவுப் பொருட்களை வாங்க எண்ணினர்.

அதனால் நெய்தல் நிலத்தவர் மனம் வருந்தா வண்ணம்  மறுப்புரை சொல்வது

எங்ஙனம்? என்று சிந்திக்கின்றனர். பின்னர் கீழ்க்கண்டவாறு பாடுகின்றனர்:

"பூங்கோதை மாதர் புனைகின்ற  முத்துவடம்

வாங்கோம் குடிக்கு வடுவென்று---யாங்கள்

முலைக்கோ(டு)  அணியிலது  முக்கணனார் சென்னித்

தலைக்கோடு பட்ட  தழும்பு".

பொருள் விளக்கம்:

பூமாலைகளை அணிகின்ற குறிஞ்சிநில மாதராகிய நாங்கள் நீங்கள் உருவாக்கியுள்ள

முத்து வடம்  வாங்கி எங்கள் மார்பில் ஒளிரும் படி அணிந்து கொண்டோமானால்

அதனை எங்கள் மாப்பிள்ளை(முருகன்)க்குத் தந்தையாராகிய சிவபெருமான் தலை

உச்சியில் மிளிரும் பிறைச்சந்திரன் என்று உலகத்தார் சொல்லமாட்டாரோ? அச்சொல்

எங்கள் குடிக்கு வடுவாகாதோ?(குற்றமாகாதோ?). எங்கள் மாப்பிள்ளை(முருகன்)யின்

தந்தையாகிய சிவபெருமான் அணிந்த பொருளை(முத்துவடம்) நாங்கள் அணிவது

பெரும் குற்றமாகும். எனவே, எங்கள் யானைக் கொம்புகளுக்குப் பண்டமாற்றாக

உங்கள் முத்துவடங்களை வாங்க மாட்டோம்.

மேல் விளக்கம்:

வடு=குற்றம்; கோடு=குவடு=உச்சி; முக்கணனார்=சிவன்;  சென்னி=தலை

சிவபெருமான் தலையுச்சியில் காணப்படும் பிறைச்சந்திரன் வெண்மை நிறத்தாலும்

வளைந்த தன்மையாலும் ஒளிர்கின்ற இயல்பாலும் முத்துவடங்களை ஒத்திருக்கும்

என்பதால் உலகத்தவர் அவற்றைச் சிவபெருமான் அணிகின்ற பொருள் என்றே

கூறுவர். அதனால் எங்கள் மாப்பிள்ளையின் தந்தையார்க்கு நாங்கள் அவமதிப்பு

இழைத்ததாகக் குற்றம் சாட்டப்படுவோம். அதனால் முத்துவடங்களை வாங்கோம்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தேர்செய்த கன்னான் எல்லாம் சரியாக உள்ளதா என்று பார்க்கவில்லையோ?


மன்னர்கள் வழக்கப்படி சோழமன்னன் வீரோதயன் தலைநகரில் உலா வந்து மக்களைச்

சந்தித்து நலம் விசாரித்தும் ஆட்சியில் ஏதேனும் குறை உள்ளதா? என்று விசாரித்தும்

அரண்மனைக்குத் திரும்பி ஒரு நாழிகை நேரம் கடந்து விட்டது.  மன்னன் உலாவந்த

தெருவிலுள்ள ஒரு வீட்டில் வாழும் மங்கையொருத்தி "மன்னன் உலா வந்த செய்தி

எனக்குத் தெரியாமல் போயிற்றே" என்று புலம்பிக் கொண்டிருந்தாள். "மன்னனின்

தேர்மணியின் ஓசை கேட்கவில்லையே;  தேரைச் செய்த கன்னான் தேர் ஊரும் பொழுது

ஒலியெழுப்ப உரிய ஏற்பாடு செய்யவில்லையா? தேரைச் செய்தபின்னர் அதன் முன்னும்

பின்னும் நன்றாகப் பாரத்து எல்லாம் செவ்வனே உள்ளனவா? என்று உறுதிப்படுத்திக்

கொள்ளத் தவறிவிட்டானோ? தேர்மணியின் ஓசையைக் கேட்டால்தான் மன்னர் உலா

வருகின்ற செய்தியை அறிந்து மக்கள் குழுமி மன்னனை வரவேற்கவும் ஆட்சியிலுள்ள

குறைகளைச் சுட்டிக்காட்டவும் இயலும்". இவ்வாறெல்லாம் அப்பெண் புலம்ப என்ன காரணம்?

அம் மடந்தை சோழ மன்னனை நேரில் காணப் பலகாலமாகக் கனவு கண்டு

கொண்டிருந்தாள். அக்கனவு சிதைந்துபோன ஆதங்கத்தால் அவள் புலம்பித்தள்ளிவிட்டாள்.

உண்மையில் நிகழ்ந்தது என்னவென்றால் தேரின் மணியோசை கேட்டுத் தெருவிலுள்ள

அனைவரும் மன்னனைப் பார்த்துச் சென்றுவிட்டனர். இவள் ஒருத்திதான் கவனக் குறை

வாக இருந்து நல்ல வாய்ப்பைத் தவறவிட்டவள். தன் தவறை மறைக்கத் தேரைச் செய்த

கன்னான் சரியாகச் செய்யவில்லை என்று அவன்மேல் பழிசுமத்தினாள். பாடல் வருமாறு:

"வீரோ  தயன்,அபயன்  மேவும்  கடைமணியின்

தேரோதை  கேட்கப்  பெறுகிலோம்---சீரோத

வார்த்தான்  ஒருவன்  வலமுமிட  மும்பிரித்துப்

பார்த்தான்  இல்லையோ  பண்டு?"

அருஞ்சொற் பொருள்:

வீரோதயன்= வீர+உதயன்(வடமொழி இலக்கணப்படி

குணசந்தி என்பர்); அபயன்= சோழமன்னன்;

தேரோதை= தேரோசை; சீரோத=வருகையை எடுத்துக் கூற;

ஒருவன்=கன்னான்(உலோகப் பாத்திர வேலை செய்பவன்)


பார்வை:

இவ்விரு பாடல்களும் 'தனிப்பாடல் திரட்டு,

முதல் பாகம்' , சரசுவதி மகால், தஞ்சை

வெளியிட்ட நூலில் உள்ளன. உரையாசிரியர்:

வித்துவான் ச.பாலசுந்தரம், பேராசிரியர்.





வெல்லமும் சர்க்கரையும்போல் இருந்தவள் பத்திரி(காளி)

போல் ஆனதேன்?


திருக்குறளில் காமத்துப்பாலில் கற்பியலில் இறுதியாக

அமைந்துள்ள மூன்று அதிகாரங்கள்: புலவி, புலவி நுணுக்கம்,

ஊடல் உவகை ஆகியன. புலத்தல் என்பது ஊடுதல், பிணங்குதல்

என்பவற்றைக் குறிக்கும். அதாவது கணவன்-மனைவிக்கிடையே

நிகழும் செல்லச் சண்டை எனச் சொல்லலாம். திருவள்ளுவர்

"துனியும்  புலவியும்  இல்லாயின்  காமம்

கனியும் கருக்காயும் அற்று".  (குறள் 1306) என்று நவின்றுள்ளார்.

துனி பெரும்பிணக்கைக் குறிக்கும். புலவி அளவான பிணக்கைச்

சுட்டும்.  துனி மிகக் கனிந்து பதனழிந்து சுவைகெட்ட பழம் போல்வது.

இது  தேவையற்றது. புலவியின்மை(செல்லப் பிணக்கு இல்லாதது)

கருக்காய் போல்வது. இதுவும் தேவையில்லை. புலவி(அளவான

பிணக்கு) பக்குவமான கனிபோல் சுவையானது. இது இல்லறத்துக்கு

மிக மிகத் தேவையானது.


ஆனால் நாம் காணவிருக்கும் பாடலில் தலைவி புலவியை வெளிப்படுத்

தாமல் துனியை(பெரும் பிணக்கை) வெளிப்படுத்துகின்றாள். தலைவன்

குழம்பிப்போகின்றான். நேற்றுவரை வெல்லமும் சர்க்கரையும் போல மிக

மென்மையாகவும் இனிமையாகவும் இருந்த தலைவி இன்றிரவில் காளி

போலச் சினத்தோடிருப்பதன் காரணம் என்ன? என்று அவள் வளர்க்கும்

கிளியிடம் வினவுகின்றான். பாடல் பின்வருமாறு:

"வில்வமும் கொன்றையும் சூழ்நெல்லை நாதர் வியன்சிலம்பில்

செல்வமும் பாலன மும்பெறும் கிள்ளாய்! தினந்தினமும்

வெல்லமும் சர்க்கரை யும்போல் இருந்த, இம் மெல்லியலாள்

எல்லமண் பத்திரி யும்போல் இருந்ததென்? என்னளவே."

பொருள்:

இறைவனுக்குரிய வில்வ மரமும் கொன்றை மரமும் சூழ்ந்தோங்கும்

நெல்வேலி நாதரின் அகன்ற  மலையிடத்தில் விளங்கும் செல்வமும்

வீட்டில் தலைவி தரும் பாலன்னமும் நாடொறும் பெற்று வளரும்

கிளியே!  அன்றாடம் எனக்கு வெல்லமும் சர்க்கரையும் போல மென்

மையும் இனிமையும் கொடுத்துப் பேணிய  இம் மெல்லியலாள் இன்றைய

இரவில் சமண முனியைப் போலவும்  பத்திரி(காளி)யைப் போலவும்

வெகுண்ட தோற்றம் காட்டி இருப்பதற்குக் காரணம் என்ன? அறிந்து

தெரிவிப்பாயாக.


யாது காரணத்தாலோ தலைவி ஊடியிருக்கின்றாள். அவள் ஊடலுக்குக்

காரணம் தெரிந்தால்தான் அவ்வூடலைத் தணிக்க இயலும். வழக்கமான

ஊடல் சிறிது நேரமே  நீடிக்கும்.  அந்தச் சிறிது நேரப்பொழுதே அவனுக்கு

ஒரு யுகம் போலத் தோன்றும். இன்றைய இரவில் சமண முனிவரைப் போலக்

கூந்தலை விரித்துப் போட்டுப் பத்திரி(காளி) யைப் போல வெகுண்ட 

தோற்றம்  காட்டி இருக்கின்றாள்.  இவள் ஊடலைத் தணிப்பது எவ்வாறு?

என்று  தீவிரமாகச் சிந்திக்கின்றான்.  கணவன் எந்தவிதக் குற்றமும்

செய்யாதபோதும்  அவன்  குற்றம் இழைத்ததாக மனைவி தானே மனத்தில் 

கற்பித்துக்கொண்டு செல்லச்சினம் காட்டுவதுதான் ஊடல்.  வழக்கமான

ஊடலில் கணவன்  மனைவியின் கை,காலைப் பிடித்துச்  சமாதானம்

செய்துவிடுவான்.  "பாகு கனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய

மணவாளா" என்று திருப்புகழில்  முருகப் பெருமானைப் போற்றியுள்ளார்

அருணகிரிநாதர்.


பழங்காலத்தில் கணவன்-மனைவிக்கிடையே நிகழும் ஊடலைத் தணிப்பதற்குச்

சிலர்  உதவி புரிந்துள்ளனர்.  அவர்களை  ஊடல் தணிக்கும் வாயில்கள்

என்று தொல்காப்பியர்  குறிப்பிட்டுள்ளார். அந்நூற்பா பின்வருமாறு:

"தோழி, தாயே, பார்ப்பான், பாங்கன்

பாணன்,  பாடினி,  இளைஞர்,  விருந்தினர்,

கூத்தர்,  விறலியர், அறிவர், கண்டோர்

யாத்த  சிறப்பின் வாயில்கள்  என்ப"

 ஏதோ ஒரு வழியில் கணவன் ஊடலைத் தணித்துச் சமாதானத்தை நிலை

நாட்டியிருப்பான். அன்றாட நிகழ்வு தானே!


கணவன் மனைவி இருவருக்கும்  ஊடலை எப்பொழுது நிறுத்திக்கொள்வது

என்னும்  நுட்பம் தெரிந்திருத்தல் மிக மிக இன்றியமையாதது. ஏனெனில்

ஊடல் என்பது  உப்புப்  போன்றது.  அளவாகவும் கச்சிதமாகவும் பயன்படுத்தல்

வேண்டும். திருவள்ளுவர் இதைத்தான் அறிவுறுத்துகின்றார். குறள்:

"உப்பமைந்  தற்றால் புலவி; அதுசிறிது 

மிக்கற்றால் நீள விடல்". (குறள:1302)


பார்வை:

தனிப்பாடல் திரட்டு,  முதல் பாகம், தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு

உரையாசிரியர்: வித்துவான் ச.பாலசுந்தரம், பேராசிரியர்.

Wednesday 14 July 2021

கொரனாவுக்குத் தடுப்பூசி மட்டுமே தீர்வு

 கொரனாவுக்குத் தடுப்பூசி மட்டுமே தீர்வாகும்.


1)சீனத்து  மண்ணில்  தோன்றித்

திக்கெட்டும்  பரவி  நிற்கும்

ஈனக்கொ  ரானா  நோயால்

        ஏற்பட்ட  துயரம்  கண்டும்

வானத்துத்  தெய்வ  மே!உன்

மனம் சற்றும்  இரங்கி  டாதோ?

ஏனிந்தப்  புறக்க  ணிப்பு,

        எங்கள் மேல்  கோபம்  ஏனோ?


2)ஈராண்டாய்ப்  பட்ட  பாட்டை

       இயம்பிடல்  இயலா(து)  அய்யா!

பாராண்ட  மன்னர்  தொட்டுப்

பாமர  மக்கள்  ஈறாச்

சூராதி  சூரர்  எல்லாம்

தொற்றுக்குத்  தோற்றே  போனார்;

சீரான வாழ்வி  ழந்து

         சிந்தையும்  உடலும்  நொந்தார்.


3)காய்ச்சலால்,  இருமல்  தன்னால்,

         கம்மிடும்  தொண்டைக்  கட்டால்,

பாய்ச்சிடும்  மூக்கு  நீரால்,

         பம்மிடும்  இரைப்பு  நோயால்,

பீய்ச்சிடும்  கழிச்சல்  நோயால்,

         பிழிந்திடும்  மேனி  நோவால்,

வாய்த்திடும்  உயிர்ப்புக்  காற்று

        குறைவதால்  அறிய லாமே.


4)பள்ளிகள்  திறக்க  வில்லை;

         படிப்பினில்  தேக்கம்;  மக்கள்

அள்ளிடும்  பொருளை  விற்கும்

         அத்தனை  கடையும்  மூடல்;

துள்ளியே  சுறுசு  றுப்பாய்த்

         தொழில்புரி  வாரும்  இல்லை;

விள்ளுதல்  இயலா  தய்யா,

          வீழ்ந்ததே  பொருளா  தாரம்.


5)முதல் அலைத்  தாக்கத்  நாலே

          முற்றிலும்  உருக்கு  லைந்தோம்;

இதமுறும்  இடைக்கா  லத்தில்

          மெத்தனம்  காட்டி  விட்டோம்;

மதங்கொண்ட  யானை  போல

          வந்ததே  இரண்டாம்  தாக்கம்;

சிதைந்ததே  அமைதி  வாழ்வு;

          சீர்செய்தல்  அரிதே  ஆகும்.


6)ஆதர  வற்ற  மாந்தர்,

          அன்றாடம்  காய்ச்சும்  ஏழை,

நாதியில்  மனிதர்,  மாற்றுத்

          திறனுடை  மக்கள்  போன்றோர்

சோதனைக்(கு)  ஆளா  கின்றார்;

         சுத்தமாய்  வாழ்வா  தாரம்

ஏதுமே  இலாமல்  வாழும்

         இன்னலைச்  சந்திக்  கின்றார்.


7)அரசுகள்  வருவாய்  இன்றி

          அரும்பொருள்  தட்டுப்  பாட்டால்

"தருகவே  நிதியை"  என்று

          தமதுமக்  களையே  வேண்டி

அருநிதி  திரட்டி, நல்லோர்,

          ஆன்றவர், கற்றோர் தங்கள்

புரையிலாக்  கருத்தை  ஏற்றுப்

          பொருத்தமாய்ச்  சேவை  செய்யும்.


8)ஊரடங்  கிடத்தான்  ஆணை

          உறுதியாய்  விடுத்துள்  ளாரே;

சீருறும்  அரசின்  சொல்லைச்

          சிந்தையில்  இருத்தி  வைத்து

யாரொடும்  நெருங்கி  டாமல்

          இடைவெளி  காப்போம்;  நோயை

வேரொடும்  வீழ்த்தும்  வண்ணம்

          வீட்டினில்  தங்கு  வோமே.


9)அடிக்கடி  கையி  ரண்டை

           அரசுகள்  நவின்ற  வாறே

மடியின்றி  வழலை  கொண்டு

            மறுவறக்  கழுவல்  நன்றாம்;

இடியினைப்  போலும்  துன்பம்

             இழைத்திடும்  கொரனா,  இல்லப்

படியினை  மிதியா  வண்ணம்

              பாங்குறத்  தூய்மை  காப்போம்.


10)மண்ணுக்குள்  கொத்துக்  கொத்தாய்

              மாண்டவர்  உடல்பு  தைத்தல்

கண்ணுக்குள்  கண்ணீர்  சிந்தக்

              காரணம்  ஆகும்  அய்யா!

விண்ணுக்குள்  ஆளும்  தெய்வம்

              மீட்டிட  அனுப்பி  வைத்த

தண்மைகொள்  தடுக்கும்  ஊசி

             தவறாமல்  போட்டுக்  கொள்க.


11)தடுத்திடும்  ஊசி  தன்னைத்

             தாமதம்  இன்றிப்  போட்டு

மிடுக்குடன்  கவசம்  மாட்டி

             வெளியினிற்  செல்ல  நேர்ந்தால்

அடுத்தவர்  தம்மை  நீங்கி

              ஆறடி  கடந்து  நிற்பீர்;

எடுத்திடும்  முயற்சி  யாலே

               இன்னல் செய்  கொரனா  ஓயும்.

அருஞ்சொற் பொருள்:

உயிர்ப்புக்  காற்று=ஆக்சிஜன்.

மடியின்றி=சோம்பலின்றி

வழலை=சோப்புக் கட்டி