Saturday 26 January 2019

சிறு கை யளாவிய கூழ்.

 சிறு கை யளாவிய கூழ்.

"அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை யளாவிய கூழ்".
(திருக்குறள்:64;அதிகாரம்:7--மக்கட்பேறு)
தம் மக்களின் சிறு கைகளால் துழாவிக் குழைக்கப்
பட்ட உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க
இனிமை யுடையது. மக்கட்பேறு என்னும் அதிகாரத்
தில் திருவள்ளுவர் குழந்தைகளின் பெருமையைச்
சொல்லுமிடத்தில் இவ்வாறு கூறுகின்றார். ஏறத்தாழ,
இதுபோன்ற கருத்து புறநானூற்றிலும் தெரிவிக்கப்
பட்டுள்ளது. அதனைப் பார்ப்போம்.
"படைப்புப் பலபடைத்துப் பலரோ(டு) உண்ணும்
உடைப்பெரும் செல்வர் ஆயினும், இடைப்படக்
குறுகுறு  நடந்து சிறுகை  நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறும் மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத்தாம் வாழும் நாளே!".
(புறநானூறு:188; பாடியவர்:பாண்டியன் அறிவுடை நம்பி)
பொருள்:
உலகத்தில் வாழ்க்கையைத் திறம்பட நடத்துவதற்கு
வேண்டிய வீடு, காடு, நன்செய், புன்செய்,துணி, மணி,
ஆடு, மாடு, நகை, நட்டு, பாத்திரம், பண்டம் முதலிய
பலவகைப் பொருள்களையும் குறைவின்றிப் படைத்துப்
பலருக்கும் பகிர்ந்து கொடுத்துத் தாமும் உண்ணும்
நிலையில் மிகப்பெரிய செல்வத்தை யுடையவராக
இருந்தாலும், விரைந்து நடக்காமல் தவழ்ந்து தவழ்ந்து
நடந்தும், சிறிய கைகளை நீட்டியும், வட்டில் கிண்ணம்
போன்றவற்றில் இட்டுவைத்த உணவைத் தரையிலே
எடுத்தெறிந்தும், யாரேனும் உண்ணத் தொடங்கினால்
அவருடன் சேர்ந்து உணவைக் கையால் கூடத்தொட்டும்,
வாயாற் கவ்வியும், கையை விட்டுத் துழாவியும், நெய்
விட்டுப் பிசைந்து வைத்த சோற்றை உடம்பு முழுதும்
படும்படி சிதறியும், இவை போன்ற பிற செயல்களைச்
செய்தும், பெற்றோர்களின் அறிவை இன்பத்தால்
மயக்கிவிடுகின்ற குழந்தைகளைப் பெறாமல் இருந்
தால், அவர்களுடைய வாழ்க்கைப் பயன், பிறவகையால்
நிறைந்திருந்தாலும், குழந்தைப்பேறு இல்லாத காரணத்
தால், குறையுடையதாகவே இருக்கும்.

இந்தப் பாடலில் சிறு குழந்தைகளின் செய்கைகளையும்,
நடவடிக்கைகளையும் எவ்வளவு அழகாக எடுத்தியம்பி
யுள்ளார்! நடையை விவரிக்கும்போது குறுகுறு நடந்து
என்ற சொற்களைக் கூறியுள்ளார். சிறு குழந்தைகள்
பெரியவர்களைப் போல விறுவிறு என்று நடக்க இயலாது.
தவழ்ந்தும், தள்ளாடியும், தடுமாற்றத்தோடும் நடை பயில்
வர். சிறுகை நீட்டி நடப்பர். அதாவது, பிஞ்சுக் கைகளை நீட்
டிக் கொண்டு நடப்பர். இட்டும் தொட்டும், கவ்வியும், துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும் அறிந்தும் அறியாம
லும் குறும்பு செய்திடுவர். அதாவது, உண்ணும் கலத்திலே
பெய்யப்பட்ட நெய்பிசைந்த சோற்றிலே கையை வைத்தும்
அக்கையாலேயே பெற்றோரைக் கட்டிக் கொண்டும், வாயால்
சோற்றைக் கவ்வியும், கையால் துழாவியும், நெய்ச்சோற்றை
மேனியில் சிதறியும் இயல்பாகவும், வேண்டுமென்றேயும்
குறும்புகள் செய்வர். அக்குறும்புகளால் உணவு வீணாகப்
போகிறதே என்று எண்ணும் பெற்றோரைத் தம் குறும்புச்
செய்கைகளால் மயக்கி அவர்களை இன்பத்தில் ஆழ்த்துவர்.
இத்தகைய மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை
இல்லைத் தாம் வாழும் நாளே. இத்தகைய மக்களைப் பெறாத
வர்களுக்குத் தம் வாழ்நாளெல்லாம் பயனற்ற நாட்களேயாகும்.

இந்தக் கருத்தை அப்படியே பிரதிபலித்துள்ளார் புகழேந்திப்
புலவர். தமது நளவெண்பா என்னும் நூலில் இதுகுறித்து
ஒரு பாடல் பாடியுள்ளார்:(நளவெண்பா:246)
பொன்னுடைய  ரேனும்  புகழுடைய  ரேனும்மற்
றென்னுடைய ரேனும் உடையரோ?--இன்னடிசில்
புக்களையும் தாமரைக்கை  பூநாறும் செய்யவாய்
மக்களையிங்  கில்லாத வர்.
பொருள்:
தங்கத்தை உடையவரானாலும், புகழை உடையவ
ரானாலும், வேறு எந்தச் சிறப்பான பொருளை
உடையவரானாலும் அவர்களெல்லாம் செல்வம்
உடையவராகி விடுவரோ? உடையவராகமாட்டார்.
சுவையான உணவைத் துழாவும் தாமரை போன்ற
கைகளையும், பூவாசம் கொண்ட சிவந்த வாயையும்
உடைய குழந்தைகளைப் பெற்றவரே செல்வம் உடை
யவராவார்; பெறாதவர் செல்வம் உடையவரல்லர்.
புகழேந்திப் புலவர் காலத்தால் பிந்தியவர். எனவே,
அவர் பாடல் புறநானூற்றின் அடியொற்றியே அமைந்
ததில் வியப்பேதும் இல்லை. ஆனால், திருக்குறளிலும்
புறநானூற்றிலும்  கிட்டத்தட்ட ஒரேமாதிரி கருத்துக்கள்
உள்ளன. எது முந்தியது? எது பிந்தியது? என்று  உறுதி
படக் கூற இயலவில்லை. திருக்குறள் இயற்றப்பட்டு
இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன.  ஆனால்,
புறநானூற்றுப் பாடல் எப்பொழுது இயற்றப்பட்டது?
புறநானூறு தொகுக்கப்பட்டது  கி.பி.இரண்டாம் நூற்
றாண்டாக இருக்கலாம். ஆனால் இயற்றப்பட்டது எப்
போது? ஆராய்ச்சிப் பேரறிஞர் ஔவை சு.துரைசாமிப்
பிள்ளையவர்கள், சில புறநானூற்றுப் பாடல்கள் தொல்
காப்பியர் காலத்துக்கும் முந்தியதாக இருக்கலாம் என்று
கருத்துக் கூறியுள்ளார். ஏனென்றால், புறநானூற்றுப்
பாடல்களை ஆராயும் பொழுது, அவற்றில் தமிழ்நாட்டின்
எல்லை வெவ்வேறு விதமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில பாடல்களில் தமிழகத்தின் வடக்கு எல்லை இமயமலை
என்றும் , தெற்கு எல்லை குமரிக் கோடென்றும்(குமரி மலை;
குமரிக் கடல் அன்று) கூறப்பட்டுள்ளது. அநேகமாக, குமரிக்
கண்டத்தைக் கடல் விழுங்குவதற்கு முன்பிருந்த தமிழகமாக
இருந்திருக்கலாம். எடுத்துக் காட்டு: பாண்டியன் பல்யாக
சாலை முதுகுடுமிப் பெருவழுதி மீது காரிகிழார் பாடிய பாடல்
(புறம்:எண் 6):
"வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்"
என்று வடக்கு மற்றும் தெற்கு எல்லைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
பிந்திய காலத்தில் எழுந்த பாடல்களில் வடக்கு எல்லையாக
வேங்கடமும், தெற்கு எல்லையாகக் குமரிக் கடலும் குறிப்
பிடப் பட்டுள்ளன. எனவே, திருக்குறளுக்கும் முந்திய காலத்
தைச் சேர்ந்த புறநானூற்றுப் பாடல்களும் உள்ளன. ஆனால்,
இது குறித்து நிறைய ஆராய்ச்சி தேவைப்படுகின்றது.வெகு
காலம் புறநானூறு போன்ற இலக்கியங்கள் எழுதப்படாமல்
வாய்மொழியாகவே சொல்லப்பட்டு வந்ததாகவும், பிற்பாடு
எழுத்தில் வடிக்கப்பட்டதாகவும் அறிஞர்கள் கருதுகின்றனர்.

மக்கட் செல்வத்தின் பெருமையை அறிந்த வள்ளுவப் பெருந்
தகை,
"அமிழ்தினும் ஆற்ற  இனிதே,தம்  மக்கள்
சிறுகை  யளாவிய  கூழ்".
என்று பாடியுள்ளார். திருக்குறளும், புறநானூறும் ஒரே
கருத்தை வலியுறுத்துகின்றன.  இரண்டையும் படித்து
இன்பம் எய்துவோமாகுக!







Tuesday 15 January 2019

குறுந்தொகை காட்டும் காட்சிகள்

 குறுந்தொகை காட்டும் காட்சிகள்.

சங்க நூல்களில் எட்டுத் தொகை நூல்கள் மிகுந்த இலக்கியச்
சுவை  கொண்டவை. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு,
 பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநா
னூறு முதலியவை எட்டுத்தொகை நூல்களாகும். இவை பல்
வேறு புலவர்களால் வெவ்வேறு காலக்கட்டங்களில் பாடப்பட்டுப்
பிற்பாடு சில வரைமுறைப்படி தொகுக்கப்பட்டவை. இவற்றுள்
முதன்முதலில் தொகுக்கப்பட்டது குறுந்தொகை என அறிஞர்கள்
கருதுகின்றனர். ஏனென்றால் நச்சினார்க்கினியர், இளம்பூரணர்,
சேனாவரையர் போன்ற உரையாசிரியர்களால் அதிகமாக மேற்
கோள் காட்டப்படுபவை குறுந்தொகைப் பாடல்கள்தாம். நாலடிக்குக்
குறையாமல் எட்டடிக்கு மிகாமல் உள்ள அகப்பொருள் குறித்த
நானூறு பாடல்களைக் கொண்டவை.  நானூறு பாடல்களும்
அகவற்பா என்னும் யாப்பால் இயற்றப்பட்டவை. குறுந்தொகையிற்
பயின்று வந்த சில பாடல்களையும் அவை உருவாக்கும் காட்சிகளையும்
பார்ப்போம்.
திணை: குறிஞ்சி; பாடல் எண்:54; புலவர்:மீனெறி தூண்டிலார்.
"யானே  ஈண்டை  யேனே; என்நலனே
ஏனல் காவலர் கவணொலி வெரீஇக்
கான யானை கைவிடு பசுங்கழை
மீனெறி தூண்டிலின் இவக்கும்
கானக நாடனொ(டு) ஆண்டொழிந்(து) அன்றே".
தலைவி தோழியிடம் கூறியது:
யான் இவ்விடத்தில் உள்ளேன். என்னோடு  ஒன்றி
முன்பு இருந்த எனது பெண்மைநலன் என்னைவிட்டு
நீங்கிவிட்டது. எப்படி நீங்கியதென்றால், தினைப்புனம்
காவல்காப்பவர்கள் விடும் கவண்கல்லின் ஒலிக்குப்
பயந்து, தான் உண்பதற்காக வளைத்த மூங்கிலைக்
காட்டு யானை கைவிட்டதைப் போலவும், மீனைக் கவர்ந்த
தூண்டிலை  நீரிலிருந்து இழுத்தவுடன் மேலே எழும்பி
வருவதைப்போலவும் என் நெஞ்சம் கானக நாடனொடு
நாங்கள் பழகிக் களித்த அந்த இடத்திலேயே   நீங்கிவிட்டது.

பாடல் எண்:40; திணை:முல்லை; புலவர்: செம்புலப் பெயல்
நீரார்.(புலவர்களின் இயற்பெயர் தெரியாத பொழுது அன்னார்
பயன் படுத்திய சிறந்த சொற்றொடரால் அன்னாரைக் குறிப்பது
இலக்கிய  வழக்கம்.  முதலாவது பாடலில் மீனெறி  தூண்டில்
என்ற தொடரால் மீனெறி தூண்டிலார் என்றும், இந்தப் பாடலில்
செம்புலப் பெயல் நீர் என்னும் தொடரால்  இப்புலவர் செம்புலப்
பெயல் நீரார் என்றும்  குறிப்பிடப் படுகின்றனர்.)
"யாயும்  ஞாயும்  யாரா கியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி யறிதும்?
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே."
தலைவன் தலைவியிடம் கூறியது:
என்தாயும் உன்தாயும் ஒருவருக்கொருவர் எவ்வகையில் உறவினர்?
என் தந்தையும் நின்தந்தையும் எந்த முறையில் உறவினர்?  இப்பொழுது இணைந்திருக்கும் யானும் நீயும் ஒருவரையொருவர்
எவ்வாறு முன்பு அறிந்துகொண்டோம்? நமக்குள் முன்பு எந்த
உறவு முறையும் இல்லை; பழக்கமும் இல்லை. செம்மண் நிலத்தில்
பெய்த மழைநீர் அம்மண்ணோடு இரண்டறக் கலந்து அதன் நிறத்
தை அடைதல்போல அன்புடைய நம் நெஞ்சம் தாமாகவே கலந்து
ஒன்றுபட்டன.

பாடல் எண:196; புலவர்:மிளைக் கந்தன்; திணை: மருதம்
"வேம்பின் பைங்காயென்  தோழி  தரினே;
தேம்பூங் கட்டி  யென்றனிர் இனியே;
பாரி பறம்பிற் பனிச்சுனைத்  தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய  தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர்;
ஐய வற்றால் அன்பின் பாலே."
தலைவனிடம் தோழி கூறியது:
முன்பு என் தோழி(நும் தலைவி) வேப்பங் காயைத் தந்தாலும்
இனிய பொலிவுடைய வெல்லக் கட்டி என்று பாராட்டினீர்.
இப்போழுது, பாரியின் பறம்பு மலையிலுள்ள, தை மாதத்தில்
குளிர்ச்சியுடன் நிலவும் தெளிந்த நீரைக் கொடுத்தாலும்
வெப்பமாக உள்ளதென்றும், உவர்ப்பாக இருக்கிறது என்றும்
கூறுகிறீர். என் தோழியிடத்து நீர் கொண்டிருந்த அன்பு முன்பை
விடவும் குறைந்து விட்டதே இதற்குக் காரணமாகும். அன்றும்
இவள்தான் கொடுத்தாள்; இன்றும் இவள்தான்  கொடுத்தாள்.
அன்று அவளிடம் அன்பாய் இருந்ததால் இனித்தது.  இன்று
அவ்வன்பு குறைந்துவிட்டதால்  வெப்பமாகவும், உவர்ப்பாகவும்
உணர்கிறீர். அனைத்துக்கும் உம் அன்பின் ஏற்றத்தாழ்வே
காரணம்.

பாடல் எண்:269; புலவர்:கல்லாடனார்; திணை:நெய்தல்
"சேயாறு  சென்று  தனைபரி  யசாவா(து)
உசாவுநர்ப்  பெறினே  நன்றுமற்  றில்ல
வயச்சுறா  வெறிந்த  புண்தணிந்(து)  எந்தையும்
நீல்நிறப்  பெருங்கடல்  புக்கனன்; யாயும்
உப்பை மாறி  வெண்ணெல் தரீஇய
உப்புவிளை  கழனிச் சென்றனள்  அதனால்
பனியிரும்  பரப்பின்  சேர்ப்பற்(கு)
இனிவரின் எளியள் என்னும்  தூதே".
தலைவன் வேலிக்கு அப்பாலிருக்கத் தலைவி தோழிக்குச்
சொல்லியது:
தோழி, என் தந்தையும்  வலிமையுடைய  சுறாமீன் வீசியதனால்
உண்டான புண் ஆறி நீலநிறப் பெருங்கடலில் மீண்டும் வேட்டை
யாடச் சென்றுவிட்டனன். என் தாயும் உப்பை விற்று வெண்ணெல்
லை வாங்கிவரும் பொருட்டு உப்பளத்துக்குச் சென்றனள். எனவே,
தலைவன் என்னோடு  அளவளாவுதற்கேற்ற  தருணம் இதுவே.
இப்போது இங்கே வந்தால் என்னைக் கண்டு பேச வாய்ப்புள்ளது.
இத்தகவலை  வெகு தூரம் நடந்து சென்று இக்கடற்கரையின்
தலைவனிடம்  சேதி சொல்லத் தூதுவனைப்பெற்றால் மிகவும்
நல்லது. இதுவே என் விருப்பம்.

பாடல் எண்:15; புலவர்: ஔவையார்; திணை: பாலை
"பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு
தொன்மூ(து)  ஆலத்துப்  பொதியில்  தோன்றிய
நாலூர்க்  கோசர்  நன்மொழி  போல
வாயா கின்றே; தோழி  ஆய்கழல்
சேயிலை வெள்வேல்  விடலையொடு
தொகுவளை  முன்கை  மடந்தை  நட்பே".
செவிலி  நற்றாய்க்குக்  கூறியது:
உடன்போக்குச் சென்ற  தலைவனும் தலைவியும் திருமணம்
புரிந்து கொண்டனர். கொடுப்போர் இல்லாமலும் கரணம்
(திருமணம்) நிகழ்வது  சமூகத்தால் அனுமதிக்கப்படடது என்ற
காரணத்தால் தோழி செவிலியிடம் தெரிவித்து அறத்தொடு
நின்றாள்.  செவிலி நற்றாயிடம் தெரிவித்து அறத்தொடு நின்றாள்.
அழகிய வீரக் கழலையும் வெள்ளிய வேலையும்  கொண்ட தலைவ
னொடு  பல வளைகளைப் பூண்ட முன்கைகளையுடைய நின்மகள்
செய்த நட்பு, ஆலமரத்தடியில் உள்ள பொதுவிடத்தில் தங்குதலை
வழக்கமாகக் கொண்ட நாலூர்க் கோசர்களின் மொழி உண்மை
யாவதைப் போல,  முரசு முழங்கவும் சங்கு ஒலிக்கவும் நிகழ்ந்த
திருமணத்தில் முடிந்து உண்மையாயிற்று.  ஆணுக்கும் பெண்ணுக்
கும் இடையில் நிலவிய களவு ஒழுக்கத்தை வெளிப்படுத்தினால்
அது அறத்தொடு நிற்றல் எனப்படும். .அதன்பிறகு வரைவு(திருமணம்)
நடந்தேறும். இனி, கற்பு ஒழுக்கம் தொடங்கிவிடும். சமூகத்தின் நன்
மைக்காக இத்தகைய கட்டுப்பாடுகள் மற்றும் நெறிமுறைகள்  வகுக்கப்
பட்டு முறையாகப் பின்பற்றப்பட்டன. 

குறுந்தொகையிலுள்ள  நானூறு  பாடல்களுமே  இலக்கியச்சுவை
மிக்கவை.  இங்கே சிலவற்றைப் பார்த்தோம்.  ஏனையவற்றையும்
படித்து இன்புறுதல்  நன்று.







Tuesday 1 January 2019

இலக்கியம் காட்டும் புலவிநுணுக்கம்

             தோற்றவர்  வென்றார்.

திருவள்ளுவர் தான் இவ்வாறு  குறிப்பிடுகின்றார். திருக்
குறளில் காமத்துப்  பாலில்  கற்பியலில்  உள்ள கடைசி
மூன்று அதிகாரங்கள்  புலவி, புலவி நுணுக்கம் மற்றும்
ஊடல் உவகை  என்னும் தலைப்புகளைக் கொண்டவை.
இல்வாழ்வில்  கூடல்(ஆணும் பெண்ணும் இணைவது)
எவ்வளவு இன்றியமையாததோ அவ்வளவு ஊடலும்
இன்றியமையாததாகும்.  புலத்தல் என்றால் ஊடுதல்
என்பது பொருளாகும். அதாவது,  கணவன்- மனைவிக்குள்
உருவாகும் பிணக்கு அல்லது மனத் தாங்கல் அல்லது
செல்லச் சண்டை என்று எடுத்துக் கொள்ளலாம். ஊடல்
இல்லாவிட்டால் இல்வாழ்வு சுவைக்காது. திருவள்ளுவர்
"துனியும்  புலவியும்  இல்லாயின்  காமம்
கனியும்  கருக்காயும்  அற்று." (குறள்: 1306)
என்று கூறியுள்ளார். துனி என்பது பெரும் பிணக்கை
யும் புலவி என்பது அளவான பிணக்கையும் குறிக்கும்.
துனி மிகக் கனிந்து பதங்கெட்ட பழம் போன்றது. புலவி
பக்குவமான கனி போன்றது. புலவி இல்லாமை கருக்
காய் போன்றது. அதனால் கனி போன்ற புலவி அவசியம்
என்று கூறினார்.

இனி, திருக்குறளில் ஊடல் எவ்வாறு சித்திரிக்கப்  பட்டுள்
ளது என்று பார்ப்போம்.
"உள்ளினேன்  என்றேன்மற்(று) என்மறந்  தீர்என்று
புல்லாள்  புலத்தக்  கனள்."(குறள்:1316)
பொருள்:
கணவன் கூற்று: உன்னை நினைத்தேன் என்றேன்.
உடனே, அவளை நான் மறந்திருந்து  தற்போது நினைவு
படுத்திக் கொண்டதாகக் கருதி இடையில் என்னை
ஏன் மறந்தீர்?' என்று கூறிவிட்டு என்னைத் தழுவ வந்த
அவள் தழுவாமல்  ஊடல் கொண்டுவிட்டாள்.  கணவன்
எக்குற்றமும் செய்யாத போதும் குற்றம் இழைத்ததாகத்
தானே மனத்தில் கற்பித்துக் கொண்டு செல்லக் கோபம்
காட்டுவதுதானே ஊடல்.

இனி, கம்பராமாயணத்தில்  கம்பர் சித்திரிக்கும் ஊடற்
காட்சியைக் காண்போம். 
பால காண்டம், பூக் கொய் படலம்:
"மைதாழ் கருங்கண்கள் சிவப்புற வந்து தோன்ற
நெய்தாவும் வேலானொடு நெஞ்சு புலந்துநின்றாள்;
எய்தாது  நின்றம் மலர்நோக்கி எனக்கிது ஈண்டக்
கொய்துஈதி என்றோர் குயிலைக் கரம் கூப்புகின்றாள்".
இது அன்றாடம் வீடு தோறும் நடக்கின்ற நிகழ்வை
நினைவு படுத்தும்.  கணவன்- மனைவிக்குள் சிறு
பிணக்கு ஏற்படும் பொழுது தமக்குள் பேசிக் கொள்ளாமல்
தம் குழந்தை மூலமாகப் பேசிக் கொள்வார்கள். அது
போலவே இங்கு ஒரு காட்சி நடக்கிறது.  
பொருள்: நெய் பூசப் பெற்ற வேலேந்திய தன் கணவ
னோடு யாது காரணத்தாலோ(ஊடலுக்குத்தான்
காரணமே தேவையில்லையே!) நெஞ்சம் புலந்து
நின்ற  ஒருத்தி மை தீட்டப்பட்ட கரிய கண்களில்
செந்நிறம் வந்து தோன்ற( அதாவது சினந்து)  நின்றாள்.
தனது கைகளுக்கு எட்டாமல் இருந்த மலரைக் கண்டு
அதனை விரும்பினள். கணவன் அவள் அருகேதான்
வீற்றிருந்தான். இருப்பினும் ஊடல் காரணமாக, 
அவனிடம் வேண்டாமல் பக்கத்தில் ஒரு மரத்தில்
தங்கியிருந்த ஒரு குயிலைப் பார்த்துக்  கரம்கூப்பி
அம்மலரைப்  பறித்துத்  தருமாறு  மிகக் கெஞ்சி
வேண்டிக் கொண்டாள். ஊடல் நேரத்தில் உயர்திணை,
அஃறிணை  என்ற பாகுபாடு கூடத் தோன்றவில்லை.
இதில் கவனிக்கத் தக்க செய்தி என்னவென்றால்
நெய் பூசிய வேலைக் கைக்கொண்டவன்,  கண்மைபூசிய
மனைவியிடம் பணிய வேண்டியுள்ளது. 

"கோடுயர் வெற்பன் கூப்பிய கையொடு
பாடகச் சீறடி  பணிந்தபின் இரங்கின்று"
பொருள்: தலைவன் கூப்பிய கையொடு தலைவியின்
பாடகம்(ஒருவித அணிகலன்--பாதத்தில் அணிவது)
அணிந்த அவளது சிறற்றடியில்  வணங்கிய பின்பு
அவள் நெஞ்சு நெகிழ்ந்தது.
"அணி வரும் பூச்சிலம்(பு)  ஆர்க்கும் அடிமேல்
மணிவரை மார்பன்  மயங்கிப்---பணியவும்
வற்கென்ற நெஞ்சம் வணங்காய்  சிறுவரை
நிற்கென்றி  வாழியர்  நீ".
பொருள்: அழகு மிகும் பொலிவுடைய சிலம்பு ஆரவாரிக்கும்
அடிகளிலே  மலைபோன்ற  மார்பையுடையவன் கலங்கி வணங்கி
னாலும சிறிது நேரம் ஊடல் தீராது நிற்பேன் என்று  சொல்வாயாக".
புறப்பொருள் வெண்பாமாலை --பாடல் எண்:322.

அவ்வளவு வல்லமை யுள்ளவன் இந்த மெல்லியலாளிடம்
தோற்றுத்தான் போவான். தோற்றால்தான் இல்லறத்
தில் வெற்றிபெற முடியும்.  ஊடலில் கணவன் தோற்றால்
அடுத்து நிகழவிருக்கும் கூடலில் வெற்றிபெற முடியும்.
எனவேதான்  திருவள்ளுவர் தோற்றவர் வென்றார் என்றார்.
"ஊடலின் தோற்றவர்  வென்றார்; அதுமன்னும்
கூடலிற்  காணப் படும்".(குறள்: 1327)
பொருள்: ஊடலில் தோற்றவரே  வென்றவராவர். அவ்வெற்றி
ஊடல் தீர்ந்தபின் கூடி மகிழ்தலில் அவரால் மிகுதியாக
அறியப்படும்.

ஊடலில்  கவனமாக இருக்க வேண்டிய செய்தி என்னவென்
றால் அதை அளவாகக் கையாள வேண்டும் என்பதுதான்.
சரியான நேரத்தில் ஊடலை நிறுத்திவிட வேண்டும். இல்லை
யெனில்  வெறுப்பு உருவாகி நாளடைவில் பிரிவுக்கும் வழி
வகுத்துவிடும். எனவேதான் திருவள்ளுவர் திருக்குறளில்
"உப்பமைந்  தற்றால்  புலவி; அதுசிறிது
மிக்கற்றால்  நீள விடல்"(குறள்:1302) என்று பாடியுள்ளார்.
உணவில் உப்பை அளவோடு சேர்ப்பது போல இல்வாழ்வில்
புலவி என்னும் ஊடலை அளவாகப் பயன்படுத்தல் வேண்டும்.
இறுதியாக ஒரு செய்தி.
"ஊடுதல் காமத்திற்(கு) இன்பம்; அதற்கின்பம்
கூடி  முயங்கப்  பெறின்".(குறள்:1330)
காமத்திற்கு இன்பமாவது  ஊடுதலாகும்.  ஊடல் நீங்கிக்
கணவன்-மனைவி கருத்தொன்றி  இணைசேர்ந்தால்,
அப்புணர்ச்சியே  ஊடலுக்கு  இன்பமாகும்.