Tuesday, 10 March 2026

கிருஷ்ணைய ஒப்பில்லாத மழவரைய ஜமீன்தார்.

 கிருஷ்ணைய ஒப்பில்லாத மழவரைய ஜமீன்தார்.


மழவர் குடிமக்கள் தண்டாரண்யம், குதிரைமலை, அதியமானின்

தகடூர், ஓரியின் கொல்லிமலை, திருச்சியிலுள்ள திருப்பாச்சில்

போன்ற தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வாழ்ந்துவந்த சங்ககால மக்கள்.

அகநானூற்றில் 187 ஆம் பாடலில் மாமூலனார் என்ற சங்கப்புலவர்

மழவர்களின் போர்த்திறனையும் அவர்களது குதிரைகளின் சிறப்பினையும்

அவர்களின் கால்களில் வீரக்கழல்கள் பொலிந்ததையும், பகைவரைப் பிறழ்ந்து

நோக்கி வீரத்தோடு போரிட்டு அழிக்கும் ஆற்றலையும் புகழ்ந்து 'வன்கண்

மழவர்' என்றும் தறுகண்மையுடையவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தகடூர் நாட்டில் மழவர் முதன்முதலாக அம்புவிடும் நாள் விழாவைத் தொடைவிழா

என்று மக்கள் கொண்டாடுவார்கள். அகநானூறு 187 ஆம் பாடல் கூறுவதாவது:

" நம்உயர்வு உள்ளினர் காதலர், கறுத்தோர்

தெம்முனை சிதைத்த கடும்பரிப் புரவி

வார்கழல் பொலிந்த வன்கண் மழவர்

பூந்தொடை விழவின் தலைநாள் அன்ன

தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றம்"

( கறுத்தோர்= பகைவர். ஞெமிரிய=பரப்பிய.

பூந்தொடை விழவு= முதன்முதல் அம்பு தொடுக்கும் நிகழ்வுக்கான விழா)

மழவரையர்களை வன்னியர் பிரிவான படையாட்சியர் என திருச்சிராப்பள்ளி

கஜட்டியர்(Tiruchirapalli gazetteer.) குறிப்பிடுகிறது.


மழவர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் சிறந்தது அரியிலூர்(அரி+இல்+ஊர்=கிருஷ்ணர்க்கு

உரித்தான இல்லத்தையுடைய ஊர்=அரியிலூர். இது நாளடைவில் மருவி அரியலூர்

என வழங்கப்படுவதாக டாக்டர் உ. வே.சா. குறித்துள்ளார்.)குறிப்பிடத்தக்கது. அவர்களின்

குலதெய்வம் 'ஒப்பில்லாதவள்' என்னும் அம்மனாகும். எனவே, மழவரையர்கள்

தங்கள் பெயருடன் ஒப்பில்லாத என்ற அடைமொழியைச் சேர்த்துக் கொள்வார்கள்.

அரியிலூர் குன்றை என்னும் பெயரிலும் அழைக்கப்படடது.


பதினாறாம் நூற்றாண்டுவாக்கில் பெரும்புலவர் அந்தகக்கவி வீரராகவமுதலியார்

இவ்வூருக்கு வந்தருந்தார்  அப்பொழுது ஆட்சிப் பொறுப்பிலிருந்தவர் கிருஷ்ணைய

ஒப்பில்லாத மழவரைய ஜமீன்தார் ஆவார். அவர் சிறந்த கொடைவள்ளல் ஆவார்.

ஏழை, எளியோர்க்கு அள்ளி, அள்ளிக் கொடுபபதில் இன்பம் காண்பவர். வீரராகவ

முதலியார் வருகை புரிந்த அன்று காலை முதலே ஏழை, எளியோர்க்கு அரிசி, பருப்பு,

பிற தானியங்கள், ஆடைகள் ஆகியவற்றை வழங்கிக் கொண்டிருந்தார். கவனித்துக்

கொண்டிருந்த புலவர், திருமால் மூன்று படிகள்தாம் அளந்ததாகப் புராணங்கள்

கூறுகின்றன. படி என்னும் சொல்லுக்குப் பல பொருள் உண்டு. ஒரு பொருள் உலகத்தைக்

குறிக்கும். மூன்று படிகள்= மூன்று உலகங்கள்= பாதாளம், நாமிருக்கும் பூமி, வான் உலகம்

என்னும் மூன்று படிகளைத் திருமால்(பெருமாள்) அளந்ததாகப் புராணங்கள் இயம்பும்.

ஆனால், கிருஷ்ணைய ஒப்பில்லாத மழவரைய ஜமீன்தார் நாள்முழுவதும் ஏழை, எளியவர்

களுக்கு அளந்து தானமாகக் கொடுத்தது நூறாயிரம் படிகள்(இலட்சம்) ஆகும். எனவே,

பெருமாள், நம் கிருஷ்ணைய ஒப்பில்லாத மழவரைய ஜமீன்தாருக்கு ஒப்பாவோரோ?

( அன்பின் மிகுதியால் பெருமாள் நம் மழவரையருக்கு ஒப்பாகமாட்டார் என்று உயர்வு

நவிற்சி யாகக் கூறிவிட்டார்.). பாடலை நோக்குவோம்:

" சேயசெங் குன்றை வரும்ஒப்பி லாதிக்குச் செங்கமலத்

தூயசெங் கண்ணன் இணைஒப்ப னோ?தண் துழாயணிந்த

மாயன் அளக்கும் படிமூன்று. க்ருஷ்ணைய மாமழவ

ராயன் அளக்கும் படியொரு நாளைக்(கு) இலட்சமுண்டே".

வீரராகவ முதலியாரின் கருத்துச் செறிந்த பாடலைக் கேட்ட அவையினர் அனைவரும்

கழியுவகை கொண்டனர் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?


பார்வை:"  என் சரித்திரம்"- நூலாசிரியர் டாக்டர் உ. வே. சா. அவர்கள்.

Friday, 20 February 2026

பாரியின் பறம்புமலைக் கிளிகள் புரிந்த அரஞ்செயல்.

 பாரியின் பறம்புமலைக் கிளிகள் புரிந்த அருஞ்செயல்.


கிளிகள் மனிதர்கள் பேசுவதைக் கவனித்துத் தாமும் ஏறத்தாழ

அதேமாதிரி பேசும் தன்மை கொண்டவை. நன்றாகப் பழக்கினால்

மனிதர்கள் பேச்சை அப்படியே திருப்பிச் சொல்லும். ஆனால், தானே

முயன்று பேச இயலாது. "சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை"

என்ற சொல்லடைவை நோக்குக. சங்க இலக்கியமாகிய அகநானூறு

303 ஆம் பாடலில் கபிலர் வேறோரு பணியில் கிளிகளை ஈடுபடுத்தியதாகச்

சொல்லப்பட்டுள்ளது. அதன் விவரத்தை இக்கட்டுரையில் அறிவோம்.


தலைவன் ஒருவன் பொருள் தேடுவதற்காகத் தலைவியைப் பிரிந்துசென்றுவிட்டான்.

அவன் பிரிவைத் தாளாத தலைவி காதல் மிகுதிப்படத் தன் நெஞ்சுக்கு உரைத்தது.

"நெஞ்சமே! எனக்கும் தலைவனுக்கும் இடையே நிலவிவந்த களவுக் காதலைப்

பிறர் அறியாமல் மறைத்துவந்தேன். பேய் கனாக் கண்டதை யாருக்கும் சொல்ல

வாய்ப்பில்லை. அதுபோல என் காதலையும் யாருக்கும் தெரியாதவண்ணம்

கமுக்கமாகக் காத்துவந்தேன். ஆனால் அவர் பிரிவின் மூலம் வெளியே தெரிந்து

விட்டது. வெற்றிதரும் வேலையும் வீரம் செறிந்த படையையும் கொண்ட, போரில்பட்ட

பசும் புண்களையே அணிகலன்களாகக் கருதும் சேரனுக்குரிய கொல்லிமலை உச்சி

யிலிருந்து விழும் அருவியின் பேரோசை போல யான் இதுகாறும் மறைத்துவைத்திருந்த

களவுக் காதல் ஊரெங்கும் பரவி விட்டது. காதலர் பொருள் ஈட்டுவதற்காகப் பிரிந்து

சென்றுவிட்டார். அதனால் ஊரெங்கும் அலர்(கிசுகிசுப்பு) கிளம்பியுள்ளது. காதலர் திரும்பி

வந்தால் இந்த அலர் அடங்கும். ஆனால் அவர் திரும்புவதற்கான அறிகுறியே 

தென்படவில்லை.


அறிவே பற்றுக் கோடாகக் கொண்டு வேறு பொருளேதும் இல்லாத இரவலர் பாரியை நாடி

அவரின் பறம்பு மலைககுச் சென்றால் அவர்களுக்கு மலைபோன்ற களிறுகளைக் கூடக்

கொடுத்துவிடும் வழக்கத்தையுடையவர். ஒருமுறை சேர, சோழ மற்றும் பாண்டியராகிய

மூவேந்தரும் அப்பறம்பு மலையை முற்றுகையிட்ட பொழுது கோட்டைக்குள் வாழ்ந்துவரும்

குடிமக்கள் உணவில்லாத் தொல்லைக்கு ஆளாகக் கூடாது என்பதற்காகப் புலவர் கபிலர்

ஒரு ஏற்பாடு செய்தார். பெரும் எண்ணிக்கையில் கிளிகளை வளர்த்து அவைகளை

வெளியே பறந்துசென்று வயல்களில் விளைந்துள்ள நெற்கதிர்களை அலகுகளால்

கவ்விக்கொண்டுவரப் பழக்கினார். அதன்படி கிளிகள்கூட்டம் காலையிலே வெளியே

பறந்துசென்று வயல்களைத்தேடிக் கண்டுபிடித்துத்  தம் அலகுகளால் நெற்கதிர்களைக்

கவ்விக்கொண்டு மாலை கோட்டைக்குள் திரும்பிவந்தன. இந்த நெற்கதிர்களாலும்,

பறம்பு மலையில் இயற்கையாகக் கிடைத்த பலா, மா போன்ற பழவகைகளாலும், கொம்புத்

தேனாலும்  உணவுச் சிக்கல் எழாமல் பாரியும் கபிலரும் கவனித்துக் கொண்டனர்.

கிளிகள் நெற் கதிர்களைக் கவ்விக்கொண்டு கோட்டைக்குள் திரும்பி வருவதுபோல

நம் காதலர் நம் ஊருக்குத் திரும்பும் அறிகுறியே சிறிதும் இல்லை.


எனவே, யானும் என் காதலர் சென்ற வழியிலையே அவரைத் தேடிச் செல்ல உறுதி

கொண்டுள்ளேன். பட்ட மரங்களிலுள்ள சிள்வீடு எனும் வண்டுகள் பலவும் ஒருங்கு  கூடி

ஓசையிடுமல்லவா? அதுபோல உப்பு வணிகராம் உமணர்களின் வண்டிகளிற் பூட்டிய

கூட்டமான எருதுகளின் மணியோசை ஒலிக்கும். அத்தகைய பாலை வழியைக் கடந்து

நீர் வற்ற, வற்ற அதிலுள்ள மீன் நீருள்ள இடம் நோக்கியே செல்வதுபோலச் செல்வேன்.

இதை நீ அறிவாயாக". பாடல் பின் வருமாறு:

"இடைபிறர் அறிதல் அஞ்சி, மறைகரந்து

பேஎய் கண்ட கனவின், பல்மாண்

நுண்ணிதின் இயைந்த காமம் வென்வேல்

மறம்மிகு தானை, பசும்பூண், பொறையன்

கார்புகன் றெடுத்த சூர்புகல் நனந்தலை

மாஇருங் கொல்லி உச்சித்  தாஅய்

ததைந்துசெல் அருவியின் அலரெழப் பிரிந்தோர்

புலம்கந்(து) ஆக இரவலர் செலினே

வரைபுரை களிற்றொடு நன்கலன் ஈயும்

உரைசால் வண்புகழ்ப் பாரி பறம்பின்

நிரைபறைக் குரீஇயினம் காலைப் போகி

முடங்குபுறச் செந்நெல் தரீஇயர், ஒராங்கு

இரைதேர் கொட்பின ஆகி, பொழுதுபடப்

படர்கொள் மாலைப் படர்தந் தாங்கு

வருவரென் றுணர்ந்த, மடம்கெழு நெஞ்சம்

ஐயம் தெளியரோ, நீயே பலவுடன்

வறன்மரம் பொருந்திய சிள்வீடு, உமணர்

கணநிரை மணியின், ஆர்க்கும் சுரனிறந்(து)

அழிநீர் மீன்பெயர்ந் தாங்கு, அவர்

வழநடைச்  சேறல் வலித்திசின் யானே."

பாடல் எண்:அகநானூறு/நித்திலக் கோவை.303--திணை:பாலை--புலவர்:ஔவையார்.

குறிப்பு: குரீஇயினம்=குருவியினம்=குருவி பறவையைக் குறிக்கும் பொதுச்சொல்.

இப்பாடலில் கிளியைக் குறிப்பதாக உரையாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

"உலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை

வாய்மொழிக் கபிலன் சூழச் சேய்நின்று

செழுஞ்செய் நெல்லின் விளைகதிர் கொண்டு

வேந்தர் ஓட்டிய கடும்பரிப் புரவிக்

கைவண் பாரி"  -- பழைய உரைகாரர்.

பார்வை:

சங்க இலக்கியம்--அகநானூறு/நித்திலக் கோவை.

உரை: முனைவர் தமிழண்ணல் மற்றும் கவிஞர் மீனவன்.

Thursday, 5 February 2026

ஊதல்வேண்டுமால் நாய்பயிர் குறிநிலை கொண்ட கோடே.

 எற்கண்டு பெயருங் காலை, யாழநின் கற்கெழு சிறுகுடி

எய்திய பின்றை ஊதல் வேண்டுமால் நாய்பயிர் குறிநிலை

கொண்ட கோடே.


தலைவியை மணந்துகொள்ளும் கருத்தின்றி நாடோறும்

இடையூறு மிக்க வழியில் தலைவன் வந்துபோய்க் கொண்டிருந்தான்.

இரவில் அந்த அஞ்சத்தக்க வழியில் தன்னந்தனியனாய்த் தலைவன்

வந்து போவதால் ஏற்படவிருக்கும் ஏதங்கள் ஏராளம். இந்த உண்மையை

அவனுக்கு உணர்த்தித் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துவதற்

காகத் தோழி இரவுக் குறியை முற்றிலும் தவிர்த்தல் நன்றென்று தலைவி

யிடம் அறிவுறுத்துகின்றாள். தோழியின் அறிவுரை மிகமிகச் சரியானதே

என்று முடிவுசெய்த தலைவி தலைவனுடன் தோழியை விரிவாக

உரையாடச் சொல்கின்றாள். பாடல் எண்:318. அகநானூறு/நித்திலக்குவியல்.

திணை:குறிஞ்சி. புலவர்:கபிலர். தோழி கூற்று.

"கான மானதர் யானையும் வழங்கும்.

வான மீமிசை உருமும் நனிவுரறும்.

அரவும் புலியும் அஞசுதக வுடைய

இரவுச் சிறுநெறி தமியை வருந்தி

வரையிழி யருவிப் பாட்டொடு பிரசம்

முழவுச்சேர் நரம்பின் இம்மென இமிரும்

பழவிறல் நனந்தலைப் பயமலை நாட!

மன்றல் வேண்டினும் பெறுகுவை, ஒன்றோ

இன்றுதலை யாக வாரல், வரினே

எம்முறு துயரமொடு யாமிவண் ஒழிய

எற்கணடு பெயருங் காலை, யாழநின்

கற்கெழு சிறுகுடி எய்திய பின்றை

ஊதல் வேணடுமால் சிறிதே வேட்டொடு

வேய்பயில் அழுவத்துப் பிரிந்தநின்

நாய்பயிர் குறிநிலை கொண்ட கோடே".

பொருள்:

மலையிலிருந்து விழுகின்ற அருவி ஒலியுடன், வண்டினங்களும்

இணைந்து ஒலிப்பது தண்ணுமை ஒலியுடன் கூடிய யாழ் நரம்பின்

ஒலிபோல இம்மென்று ஒலிக்கும். இத்தகைய இயற்கை வளமிக்கதும்

வெற்றியினையும் அகன்ற இடப் பரப்பினையும் உடையதுமான

பயன் மிகுந்த மலைநாட்டுத் தலைவனே!


காட்டில் பெரிய யானைகள் உட்படப் பல்வேறு விலங்குகளும் நடமாடும்.

வானில் மிக உயர்ந்த இடத்தில் இடியும் உரத்துமுழங்கும். அவ்வழியில்

கொடிய பாம்புகளும் புலிகளும் திரிவதால் அவ்வழியில் நடமாடும்

அனைத்து உயிரினங்களும் மனிதர்களும் அஞ்சி நடுங்குவர். இத்தகைய

ஒடுக்கமான குறுகிய வழியில் நீ தனியாளாய்த் துணையின்றி நள்ளிரவில்

வருகின்றாய். நீ தலைவியை மணந்துகொள்ள விரும்பினால் அவ்வாறு

பெறுவது உறுதி. எனவே, இன்றுமுதல் இனி இரவில் இங்கே வரவேண்டா.

(இரவுக்குறி மறுக்கப்பட்டது).


அவ்வாறு நீ வருவாயானால் உனக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்துவிடுமோ?

என்று பதறித் துடித்துவிடுவோம். அந்தவிதப் பதற்றத்துக்கும் மயக்கத்துக்கும்

யாம் ஆளாகாமல் இருக்க நீ ஒரு நற்செயல் செய்தல்வேண்டும். தலைவியைக்

கண்டு உன் ஊருக்குத் திரும்பும் காலத்தில், உனது மலைகள் பொருந்திய

சிற்றூரினை அடைந்தபின்னர், நீ குறிசெய்வதற்காக ஊதுகின்ற ஊதுகொம்பை

ஊதுமாறு வேண்டுகின்றேன். (வேட்டையாடுபவர்கள் அடர்ந்த காட்டில் கூடவந்த

வேட்டைக்காரர்களோ, உதவிக்குவந்த நாய்களோ பலதிசைகளில் பிரிந்துசென்று

விட்டால் தலைவன் அவர்களையும் அவைகளையும் ஒருங்கிணைக்கவும் தான்

இருக்குமிடத்தைத் தெரிவிக்கவும் ஊதுகொம்பு மூலம் ஊதிக் குறிசெய்வது வேட்டைத்

தொழிலில் நடைமுறையிலிருக்கும் பழக்கம்). அந்த ஊதுகொம்பின் ஒலிகேட்டு யாம்

ஆறுதல் அடைவோம்.


தோழியின் உரையடலைக் கேட்ட தலைவன் நிலைமையை அறிந்துகொண்டு மேலும்

கால தாமதம் புரியாமல் வரைவு(திருமணம்) மேற்கொள்ள ஆயத்தம் புரிவான்.


பார்வை:

அகநானூறு/நித்திலக் குவியல்---வர்த்தமானன் பதிப்பகம்.

உரையாசரியர்கள்: முனைவர் தமிழண்ணல் மற்றும் கவிஞர் நா..மீனவன்.

Wednesday, 21 January 2026

அடிக்கடி உப்புமா வேண்டா உணர்.

 தொடர்ச்சியாய் உப்புமா வேண்டா உணர்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

யாப்பு:4காய், மா, தேமா.


பெருமாளின் அவதாரம் பத்தெனநம்

   புராணங்கள்   பீடு கொள்ளும்.

ஒருதேர்ந்த சிற்றுண்டி அதுபோல

   அவதார  உருவங்  கொள்ளும்.

திருவார்ந்த செல்வர்மற்றும் ஏழையென

   அனைவரையும்   திருப்தி செய்யும்.

பெரும்பூமி தனில்உப்பு மா, உணவு

   மக்களிடை  பிறங்கி நிற்கும்.


தோசை, இட்லி மீந்துவிட்டால் பிசைந்துப்மா

   உண்டாக்கிச்  சுவைக்கச் செய்வர்.

மாசில்சிறு தானியங்கள் கேழ்வரகு,

   கம்பு, தினை,  வளமார் சோளம்

ஆசையினால் அவல்,சேமி யா,வரகு

   ஜவ்வரிசி  அனைத்தும் கொண்டு

வாசமிக உப்புமா எனும்உணவை

   உருவாக்கி  மகிழ்வர் பெண்டிர்.


சமைத்திடுதல் எளிதாகும். செம்பாகச்

   சுவையுமுண்டு.  சமயம் மிச்சம்.

அமைந்திருக்கும் பொருள்கொண்டு பெருஞ்சிரமம்

   ஏதுமின்றி  அடுக்க ளையில்

தமைவருத்திக் கொள்ளாமல்  பெருங்கூட்டம்

  சமாளிக்கச் சமைத்தல் இஃதே.

சுமையெனவே தோன்றாமல் விருந்தோம்பத்

  தேர்வுசெய்யும்  சுருக்குப் பாதை.


இனும்வேறு நன்மைபல இருந்தாலும்

   எதிர்மறையாய் இடரும் உண்டே.

தினந்தோறும் விதவிதமாய் உப்புமா

   உண்டாலும்  தெவிட்டும் ஓர்நாள்.

நனிமேன்மை தரும்பலவாம் தாதுக்கள்

   குறைவதனால் நலியும் மேனி.

கனிகாய்கள் புலால்முதலாம் பலபொருட்கள்

   உள.அவற்றைக் கணக்காய் உண்போம்.


                    நேரிசை வெண்பா.

ஆண்டவன் தோற்றுவித்த அத்தனையும் நற்பொருளே.

யாண்டும் நினைவில் இருத்திடுக-நீண்டபுகழ்

உண்டி பலவுளவே, உத்தமமாய்த் தேர்வுசெய்து

மண்டிடுவோம் உள்ளம் மகிழ்ந்து.


பழகப் பழகப் பசும்பால் புளிக்கும்.

வழக்கிலுள்ள சொல்லடைவு, மக்காள்!-பிழைக்குமா?

தப்புமா என்சிறுநா? தையால்! தொடர்ச்சியாய்

உப்புமா வேண்டா உணர்.


அருஞ்சொற் பொருள்:

பீடு=பெருமை. பிறங்குதல்=விளங்குதல்.  மண்டுதல்=

நிரம்ப உண்ணுதல்.


உப்மா= உப்புமா (இடைக்குறை=விகாரம்)