Friday, 20 February 2026

பாரியின் பறம்புமலைக் கிளிகள் புரிந்த அரஞ்செயல்.

 பாரியின் பறம்புமலைக் கிளிகள் புரிந்த அருஞ்செயல்.


கிளிகள் மனிதர்கள் பேசுவதைக் கவனித்துத் தாமும் ஏறத்தாழ

அதேமாதிரி பேசும் தன்மை கொண்டவை. நன்றாகப் பழக்கினால்

மனிதர்கள் பேச்சை அப்படியே திருப்பிச் சொல்லும். ஆனால், தானே

முயன்று பேச இயலாது. "சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை"

என்ற சொல்லடைவை நோக்குக. சங்க இலக்கியமாகிய அகநானூறு

303 ஆம் பாடலில் கபிலர் வேறோரு பணியில் கிளிகளை ஈடுபடுத்தியதாகச்

சொல்லப்பட்டுள்ளது. அதன் விவரத்தை இக்கட்டுரையில் அறிவோம்.


தலைவன் ஒருவன் பொருள் தேடுவதற்காகத் தலைவியைப் பிரிந்துசென்றுவிட்டான்.

அவன் பிரிவைத் தாளாத தலைவி காதல் மிகுதிப்படத் தன் நெஞ்சுக்கு உரைத்தது.

"நெஞ்சமே! எனக்கும் தலைவனுக்கும் இடையே நிலவிவந்த களவுக் காதலைப்

பிறர் அறியாமல் மறைத்துவந்தேன். பேய் கனாக் கண்டதை யாருக்கும் சொல்ல

வாய்ப்பில்லை. அதுபோல என் காதலையும் யாருக்கும் தெரியாதவண்ணம்

கமுக்கமாகக் காத்துவந்தேன். ஆனால் அவர் பிரிவின் மூலம் வெளியே தெரிந்து

விட்டது. வெற்றிதரும் வேலையும் வீரம் செறிந்த படையையும் கொண்ட, போரில்பட்ட

பசும் புண்களையே அணிகலன்களாகக் கருதும் சேரனுக்குரிய கொல்லிமலை உச்சி

யிலிருந்து விழும் அருவியின் பேரோசை போல யான் இதுகாறும் மறைத்துவைத்திருந்த

களவுக் காதல் ஊரெங்கும் பரவி விட்டது. காதலர் பொருள் ஈட்டுவதற்காகப் பிரிந்து

சென்றுவிட்டார். அதனால் ஊரெங்கும் அலர்(கிசுகிசுப்பு) கிளம்பியுள்ளது. காதலர் திரும்பி

வந்தால் இந்த அலர் அடங்கும். ஆனால் அவர் திரும்புவதற்கான அறிகுறியே 

தென்படவில்லை.


அறிவே பற்றுக் கோடாகக் கொண்டு வேறு பொருளேதும் இல்லாத இரவலர் பாரியை நாடி

அவரின் பறம்பு மலைககுச் சென்றால் அவர்களுக்கு மலைபோன்ற களிறுகளைக் கூடக்

கொடுத்துவிடும் வழக்கத்தையுடையவர். ஒருமுறை சேர, சோழ மற்றும் பாண்டியராகிய

மூவேந்தரும் அப்பறம்பு மலையை முற்றுகையிட்ட பொழுது கோட்டைக்குள் வாழ்ந்துவரும்

குடிமக்கள் உணவில்லாத் தொல்லைக்கு ஆளாகக் கூடாது என்பதற்காகப் புலவர் கபிலர்

ஒரு ஏற்பாடு செய்தார். பெரும் எண்ணிக்கையில் கிளிகளை வளர்த்து அவைகளை

வெளியே பறந்துசென்று வயல்களில் விளைந்துள்ள நெற்கதிர்களை அலகுகளால்

கவ்விக்கொண்டுவரப் பழக்கினார். அதன்படி கிளிகள்கூட்டம் காலையிலே வெளியே

பறந்துசென்று வயல்களைத்தேடிக் கண்டுபிடித்துத்  தம் அலகுகளால் நெற்கதிர்களைக்

கவ்விக்கொண்டு மாலை கோட்டைக்குள் திரும்பிவந்தன. இந்த நெற்கதிர்களாலும்,

பறம்பு மலையில் இயற்கையாகக் கிடைத்த பலா, மா போன்ற பழவகைகளாலும், கொம்புத்

தேனாலும்  உணவுச் சிக்கல் எழாமல் பாரியும் கபிலரும் கவனித்துக் கொண்டனர்.

கிளிகள் நெற் கதிர்களைக் கவ்விக்கொண்டு கோட்டைக்குள் திரும்பி வருவதுபோல

நம் காதலர் நம் ஊருக்குத் திரும்பும் அறிகுறியே சிறிதும் இல்லை.


எனவே, யானும் என் காதலர் சென்ற வழியிலையே அவரைத் தேடிச் செல்ல உறுதி

கொண்டுள்ளேன். பட்ட மரங்களிலுள்ள சிள்வீடு எனும் வண்டுகள் பலவும் ஒருங்கு  கூடி

ஓசையிடுமல்லவா? அதுபோல உப்பு வணிகராம் உமணர்களின் வண்டிகளிற் பூட்டிய

கூட்டமான எருதுகளின் மணியோசை ஒலிக்கும். அத்தகைய பாலை வழியைக் கடந்து

நீர் வற்ற, வற்ற அதிலுள்ள மீன் நீருள்ள இடம் நோக்கியே செல்வதுபோலச் செல்வேன்.

இதை நீ அறிவாயாக". பாடல் பின் வருமாறு:

"இடைபிறர் அறிதல் அஞ்சி, மறைகரந்து

பேஎய் கண்ட கனவின், பல்மாண்

நுண்ணிதின் இயைந்த காமம் வென்வேல்

மறம்மிகு தானை, பசும்பூண், பொறையன்

கார்புகன் றெடுத்த சூர்புகல் நனந்தலை

மாஇருங் கொல்லி உச்சித்  தாஅய்

ததைந்துசெல் அருவியின் அலரெழப் பிரிந்தோர்

புலம்கந்(து) ஆக இரவலர் செலினே

வரைபுரை களிற்றொடு நன்கலன் ஈயும்

உரைசால் வண்புகழ்ப் பாரி பறம்பின்

நிரைபறைக் குரீஇயினம் காலைப் போகி

முடங்குபுறச் செந்நெல் தரீஇயர், ஒராங்கு

இரைதேர் கொட்பின ஆகி, பொழுதுபடப்

படர்கொள் மாலைப் படர்தந் தாங்கு

வருவரென் றுணர்ந்த, மடம்கெழு நெஞ்சம்

ஐயம் தெளியரோ, நீயே பலவுடன்

வறன்மரம் பொருந்திய சிள்வீடு, உமணர்

கணநிரை மணியின், ஆர்க்கும் சுரனிறந்(து)

அழிநீர் மீன்பெயர்ந் தாங்கு, அவர்

வழநடைச்  சேறல் வலித்திசின் யானே."

பாடல் எண்:அகநானூறு/நித்திலக் கோவை.303--திணை:பாலை--புலவர்:ஔவையார்.

குறிப்பு: குரீஇயினம்=குருவியினம்=குருவி பறவையைக் குறிக்கும் பொதுச்சொல்.

இப்பாடலில் கிளியைக் குறிப்பதாக உரையாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

"உலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை

வாய்மொழிக் கபிலன் சூழச் சேய்நின்று

செழுஞ்செய் நெல்லின் விளைகதிர் கொண்டு

வேந்தர் ஓட்டிய கடும்பரிப் புரவிக்

கைவண் பாரி"  -- பழைய உரைகாரர்.

பார்வை:

சங்க இலக்கியம்--அகநானூறு/நித்திலக் கோவை.

உரை: முனைவர் தமிழண்ணல் மற்றும் கவிஞர் மீனவன்.

No comments:

Post a Comment