கிருஷ்ணைய ஒப்பில்லாத மழவரைய ஜமீன்தார்.
மழவர் குடிமக்கள் தண்டாரண்யம், குதிரைமலை, அதியமானின்
தகடூர், ஓரியின் கொல்லிமலை, திருச்சியிலுள்ள திருப்பாச்சில்
போன்ற தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வாழ்ந்துவந்த சங்ககால மக்கள்.
அகநானூற்றில் 187 ஆம் பாடலில் மாமூலனார் என்ற சங்கப்புலவர்
மழவர்களின் போர்த்திறனையும் அவர்களது குதிரைகளின் சிறப்பினையும்
அவர்களின் கால்களில் வீரக்கழல்கள் பொலிந்ததையும், பகைவரைப் பிறழ்ந்து
நோக்கி வீரத்தோடு போரிட்டு அழிக்கும் ஆற்றலையும் புகழ்ந்து 'வன்கண்
மழவர்' என்றும் தறுகண்மையுடையவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தகடூர் நாட்டில் மழவர் முதன்முதலாக அம்புவிடும் நாள் விழாவைத் தொடைவிழா
என்று மக்கள் கொண்டாடுவார்கள். அகநானூறு 187 ஆம் பாடல் கூறுவதாவது:
" நம்உயர்வு உள்ளினர் காதலர், கறுத்தோர்
தெம்முனை சிதைத்த கடும்பரிப் புரவி
வார்கழல் பொலிந்த வன்கண் மழவர்
பூந்தொடை விழவின் தலைநாள் அன்ன
தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றம்"
( கறுத்தோர்= பகைவர். ஞெமிரிய=பரப்பிய.
பூந்தொடை விழவு= முதன்முதல் அம்பு தொடுக்கும் நிகழ்வுக்கான விழா)
மழவரையர்களை வன்னியர் பிரிவான படையாட்சியர் என திருச்சிராப்பள்ளி
கஜட்டியர்(Tiruchirapalli gazetteer.) குறிப்பிடுகிறது.
மழவர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் சிறந்தது அரியிலூர்(அரி+இல்+ஊர்=கிருஷ்ணர்க்கு
உரித்தான இல்லத்தையுடைய ஊர்=அரியிலூர். இது நாளடைவில் மருவி அரியலூர்
என வழங்கப்படுவதாக டாக்டர் உ. வே.சா. குறித்துள்ளார்.)குறிப்பிடத்தக்கது. அவர்களின்
குலதெய்வம் 'ஒப்பில்லாதவள்' என்னும் அம்மனாகும். எனவே, மழவரையர்கள்
தங்கள் பெயருடன் ஒப்பில்லாத என்ற அடைமொழியைச் சேர்த்துக் கொள்வார்கள்.
அரியிலூர் குன்றை என்னும் பெயரிலும் அழைக்கப்படடது.
பதினாறாம் நூற்றாண்டுவாக்கில் பெரும்புலவர் அந்தகக்கவி வீரராகவமுதலியார்
இவ்வூருக்கு வந்தருந்தார் அப்பொழுது ஆட்சிப் பொறுப்பிலிருந்தவர் கிருஷ்ணைய
ஒப்பில்லாத மழவரைய ஜமீன்தார் ஆவார். அவர் சிறந்த கொடைவள்ளல் ஆவார்.
ஏழை, எளியோர்க்கு அள்ளி, அள்ளிக் கொடுபபதில் இன்பம் காண்பவர். வீரராகவ
முதலியார் வருகை புரிந்த அன்று காலை முதலே ஏழை, எளியோர்க்கு அரிசி, பருப்பு,
பிற தானியங்கள், ஆடைகள் ஆகியவற்றை வழங்கிக் கொண்டிருந்தார். கவனித்துக்
கொண்டிருந்த புலவர், திருமால் மூன்று படிகள்தாம் அளந்ததாகப் புராணங்கள்
கூறுகின்றன. படி என்னும் சொல்லுக்குப் பல பொருள் உண்டு. ஒரு பொருள் உலகத்தைக்
குறிக்கும். மூன்று படிகள்= மூன்று உலகங்கள்= பாதாளம், நாமிருக்கும் பூமி, வான் உலகம்
என்னும் மூன்று படிகளைத் திருமால்(பெருமாள்) அளந்ததாகப் புராணங்கள் இயம்பும்.
ஆனால், கிருஷ்ணைய ஒப்பில்லாத மழவரைய ஜமீன்தார் நாள்முழுவதும் ஏழை, எளியவர்
களுக்கு அளந்து தானமாகக் கொடுத்தது நூறாயிரம் படிகள்(இலட்சம்) ஆகும். எனவே,
பெருமாள், நம் கிருஷ்ணைய ஒப்பில்லாத மழவரைய ஜமீன்தாருக்கு ஒப்பாவோரோ?
( அன்பின் மிகுதியால் பெருமாள் நம் மழவரையருக்கு ஒப்பாகமாட்டார் என்று உயர்வு
நவிற்சி யாகக் கூறிவிட்டார்.). பாடலை நோக்குவோம்:
" சேயசெங் குன்றை வரும்ஒப்பி லாதிக்குச் செங்கமலத்
தூயசெங் கண்ணன் இணைஒப்ப னோ?தண் துழாயணிந்த
மாயன் அளக்கும் படிமூன்று. க்ருஷ்ணைய மாமழவ
ராயன் அளக்கும் படியொரு நாளைக்(கு) இலட்சமுண்டே".
வீரராகவ முதலியாரின் கருத்துச் செறிந்த பாடலைக் கேட்ட அவையினர் அனைவரும்
கழியுவகை கொண்டனர் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
பார்வை:" என் சரித்திரம்"- நூலாசிரியர் டாக்டர் உ. வே. சா. அவர்கள்.
No comments:
Post a Comment