Thursday, 14 May 2026

முத்து ரகுநாத சேதுபதியும் சவ்வாதுப் புலவரும்.

 முத்துரகுநாத சேதுபதியும் சவ்வாதுப்புலவரும்.


அது பதினெட்டாம் நூற்றாண்டுக் காலம். அரசியல் சூழ்நிலை

குழப்பமாக இருந்த நேரம். கும்பினிக்காரர்கள் (இங்கிலாந்து

நாட்டைச் சேர்ந்த கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்தவர்கள்)

வணிகம் புரியும் பொருட்டு நம் நாட்டுக்குள் நுழைந்து சிறுகச்

சிறுக ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டிருந்த காலக்கட்டம்.

மூவேந்தர்களும், குறிப்பிடத்தக்க குறுநில மன்னர்களும் மறைந்து

விட்டனர். ஆங்காங்கே சில சமீன்தார்கள் ஆட்சி நடத்திக் கொண்டிருந்

தனர். இராமநாதபுரத்தில் சேதுபதிகள் ஓரளவு செல்வாக்கோடு திகழ்ந்தனர்.

மூவேந்தர்களைப் போலக் குடிமக்களைப் பேணுவதிலும் தமிழ்மொழியைப்

போற்றுவதிலும் கலைகளைப் பாதுகாப்பதிலும் ஈடுபாட்டுடன் நடந்துகொண்டனர்.

சேதுபதிகளில் குறிப்பிடத்தக்கவர் கிழவன் சேதுபதியாவார். வீரத்திலும் ஆட்சித்

திறத்திலும் மிளிர்ந்தார் என்று கூறினால் சற்றும் மிகையாகாது. அவரது ஆட்சிக்

காலம் கி. பி. 1673-1708 வரையாகும். அவருக்குப்பின் ஆட்சிக்கு வந்த சேதுபதிகளும்

திறம்படவே ஆட்சி நடத்தினர்.


சவ்வாதுப் புலவர் கி. பி 1745 ஆம் ஆண்டில் பரமக்குடியருகிலுள்ள எமனேஸ்வரம்

என்ற சிற்றூரில் பிறந்தவர். இஸ்லாமியத் தமிழ்ப்புலவர். சேதுபதி அரசவையில்

தமிழறிஞராகத் தொண்டு செய்தவர். இவரின் மைத்துனர் சர்க்கரைப் புலவரும்

சேதுபதி அரசவையில் தமிழ்த்தொண்டாற்றிக் கொண்டிருந்தார். இப் புலவர்களின்

காலத்தில் ஆட்சி புரிந்தவர் முத்துரகுநாத சேதுபதி ஆவார். சேதுபதிகள் ஆட்சிப்பணி

எவ்வளவு கடுமையாக இருப்பினும் தமிழவைக்கு நேரில்வந்து புலவர்கள் மற்றும் இதரக்

கலைஞர்களுடன் கலந்துரையாடி ஆட்சிப் பணிப்பளுவால் ஏற்பட்ட மன இறுக்கத்தைத்

தளர்த்துவது வழக்கம். சேதுபதிகள் அனைவருமே தாமே கவிபாடவும் வல்ல மேதைகள்.

அன்றாடம் அரசவையில் தமிழ்ப்புலவர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் குழுமுவது வழக்கம்.

நேரம் வாய்க்கும்பொழுது சேதுபதிகளும் கலந்துகொண்டு புலவர்களைப் பாடல் புனையச்

செய்தும், ஏற்கெனவே இயற்றிய இலக்கியங்களிலிருந்து சுவையான பகுதிகளை மேற்

கோள் காட்டிச் சொற்பொழிவாற்றச் செய்தும் அவையைக் கலகலப்பாக்குவர்.


ஒருமுறை புலவர்களுக்குள் சேதுபதியவர்களைப் போற்றும் போட்டி உருவாயிற்று.

ஒவ்வொரு புலவரும் சேதுபதியவர்களின் வீரத்தைப் பற்றியும், ஈகைத் தன்மையைப்

பற்றியும், நீதி நேர்மையைப் பேணுவது பற்றியும், கலைகளின் மீதுள்ள ஈடுபாட்டைப்

பற்றியும், இன்னும் பல்வேறு விதமான குண இயல்புகளைப் பற்றியும் பாடினர்.

எதிர்பாராத விதமாக ஒரு புலவர் சேதுபதி மன்னர் இறைவனைத்தவிர வேறு யாருக்கும்

தலைவணங்கியதில்லை என்று புகழந்தார். மற்றப் புலவர்கள் " ஆம், உண்மையே" என்று

ஒரே குரலில் முழங்கினர். இடையில் சவ்வாதுப் புலவர் குறுக்கிட்டு " சேதுபதி மன்னர்

மூன்று தருணங்களில் தலைசாய்ப்பதுண்டு" என்று மெல்ல மொழிந்தார். இதைக்கேட்ட

சேதுபதி மன்னர் சிறிது சினங்கொண்டார். ஏனைய புலவர்கள் " சவ்வாது! என்ன உளறு

கின்றீர். சுயநினைவோடுதான் பேசுகின்றீரா? " என்று சீறினர். அனைவரையும் கையால்

சைகைசெய்து அமைதிப் படுத்திய சவ்வாதுப் புலவர் உடனே பாடத் தொடங்கினார்:


             கட்டளைக் கலித்துறை.


"கிளையாளன் சேது பதிரகு நாயகன் கிஞ்சுகவாய்

இளையார் கலவி யிடத்தும்நம் ஈசரி டத்துமென்றும்

வளையாத பொன்முடி சற்றே வளையும் மகுடமன்னர்

தளையா டியகையிற் காளாஞ்சி யேந்தும் சமயத்துமே".

என்ற பாடலைப் பாடி முடித்தவுடன் சேதுபதியுள்ளிட்ட அனைவருமே " ஆகா! அருமை, மிக

அருமை. மிகச் சிறந்த கற்பனை மட்டுமல்லாது உண்மையும் ஆகும்" என்று சவ்வாதுப்

புலவரை மெச்சினர்.

பொருள்: சேதுபதி மன்னர் தலைசாய்க்கும் தருணங்கள் மூன்று:

1) கிளி போன்ற சிவந்த வாயையுடைய தன் மனைவியுடன் கூடி முயங்கும் பொழுது.

2)எல்லாம்வல்ல இறைவன் சிவபெருமானை வணங்கும் பொழுது.

3)போரில் தம்மை எதிர்த்த பகைமன்னர் தோல்வியடைந்ததனால் கைகளில் விலங்கு

போடப்பட்டுச் சேதுபதி மன்னருக்காகக் காளாஞ்சி என்னும் தாம்பூலம் உமிழும் கலத்தை

ஏந்தும் பொழுது. (தாம்பூலம் தரித்தபின்னர் அதனை மென்று சக்கையை உமிழ்வதற்காகத்

தலைசாயக்கும் பொழுது). இம் மூன்று தருணங்களைத் தவிர்த்து ஏனைய தருணங்களில்

சேதுபதி மன்னர் தலைசாய்த்து வணங்குவதில்லை.

அருஞ்சொற் பொருள்:

கிஞ்சுகம்=கிளி: தளை= விலங்கு: காளாஞ்சி: தாம்பூலம் மென்றபின்னர்ச் சக்கையை

உமிழும் கலம்.

பார்வை: 'தனிச் செய்யுள் சிந்தாமணி' - தனிப்பாடல் திரட்டு முதல் பாகம்.

No comments:

Post a Comment