சேண் நாட்டார் ஆயினும் நெஞ்சிற்கு அணியர்.
வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிந்து சென்றுவிட்டான்
ஒரு தலைவன். அதாவது, திருமணத்தை உறுதிசெய்துவிட்டு
அதற்காகப் பொருள் தேடிவரத் தொலைவிலுள்ள நாடுகளுக்குச்
செல்வது சங்ககால வழக்கம். அக்காலத்தில் பிரிவினால் தலைவனும்
துன்பம் கொள்வான்; தலைவியும் துன்பம் கொள்வாள். அவ்வேளையில்
காதலித்த பொழுது நிகழ்ந்த நேர்வுகளை அசைபோட்டு இருவரும்
தம்மைத் தேற்றிக்கொள்வர். இங்கே ஒரு தலைவியிடம் அவள் தோழி
தலைவனைப் பிரிந்ததால் ஏற்பட்ட துயரத்தை ஆற்றியிருந்த விதம்
பற்றி வினவினாள். அதற்குத் தலைவி விடையிறுத்தாள்: " நம்மைப்
பிரிந்து(என்னைப் பிரிந்து) தொலைவிலுள்ள நாட்டுக்குச் சென்று
அங்கே உறைகின்றார்;ஆயினும் என் நெஞ்சிற்கு அருகிலேயே எப்பொழுதும்
வீற்றிருக்கின்றார். அவரது நாட்டுக் கடலில் உருவாகும் அலைகள்,
விழுது தாழ்ந்த தாழையினது முதிர்ந்த கொழுவிய அரும்பு, நாரைகள் கோதுகின்ற
சிறகைப்போல விரிந்து மடல்கள் மலர்கின்ற கடற்கரைச் சோலையை
ஒட்டி அமைந்துள்ள எங்கள் சிற்றூரில் இல்முகப்பில் வந்து மீண்டுசெல்லும்.
அவர் தற்பொழுது வெகு தொலைவிலுள்ள நாட்டில் உறைகின்ற வேளையிலும்
என் நெஞ்சருகே எப்பொழுதும் வீற்றிருக்கின்றதாகவே உணர்கின்றேன்.
தலைவன் தற்பொழுது தங்கியுள்ள நாட்டின் நீரைக் கண்டு அவனது
பிரிவால் ஏற்பட்ட துயரை ஆற்றியிருந்தேன்". காதலர் பிரிய நேர்ந்தால்,
காதலனை நினைவுபடுத்தும் அவன் தொடர்புடைய எந்தப் பொருளைக்
கண்டாலும் காதலிக்குப் பிரிவுத் துன்பம் குறையும் என்பது இலக்கியச்
செய்தி. இனி, தொடர்புடைய பாடலைப் பார்ப்போம்:
குறுந்தொகை: பாடல் எண்: 228;
யாப்பு: நேரிசை ஆசிரியப்பா.
புலவர்:வள்ளுவன் பெருஞ்சாத்தன்.
"வீழ்தாள் தாழை யூழுறு கொழுமுகை
குருகுளர் இறகின் விரிபுதோ (டு) அவிழும்
கானல் நண்ணிய சிறுகுடி முன்றில்
திரைவந்து பெயரும் என்பநம் துறந்து
நெடுஞ்சேண் நாட்டார் ஆயினும்
நெஞ்சிற்(கு) அணியர் தண்கடல் நாட்டே".
அருஞ்சொற் பொருள்:
குருகு= நாரை; தோடு= மடல்; கானல்=கடற்கரைச் சோலை;
நண்ணிய=பொருந்திய; முன்றில்=வீட்டின் முகப்பு;
திரை=அலை; பெயரும்= மீண்டு செல்லும்; சேண்=தொலைவு;
அணியர்=அருகில் உள்ளவர்.
இதே கருத்து குறுந்தொகை 361 ஆம் பாடலிலும் பயின்று
வருகிறது. தலைவனது மலையில் முதல்நாள் மாலை பெய்த மழை
யினால் உண்டாகிய அருவியால் அடித்துவரப்பட்ட காந்தள் மலர்
மறுநாள் காலையில் தலைவியின் ஊர்அருகே வந்தது. தம்
தலைவனோடு தொடர்புடைய பொருட்களைத் தொட்டுத் தீண்டலும்,
தழுவுதலும், பாராட்டிப் போற்றுதலும் மகளிர் இயல்பு. பார்க்க பா.எ.361.
யாப்பு: நேரிசை ஆசிரியப்பா.
"அம்ம! வாழி தோழி அன்னைக்(கு)
உயர்நிலை உலகமும் சிறிதால்;; அவர் மலை
மாலைப் பெய்த மணங்கமழ் உந்தியொடு
காலை வந்த காந்தள் முழுமுதல்
மெல்லிலை குழைய முயங்கலும்
இல்லுய்த்து நடுதலும் கடியா தோளே".
தலைவனது மலையில் மாலையிற் பெய்த மழையினால் உருவான
அருவியால் அடித்து வரப்பட்ட காந்தள் மறுநாள் தலைவியின் வீட்டருகே
வர, அதனை எடுத்துத் தலைவி தழுவிக் கொண்டாள்; அதன்கிழங்கை
வீட்டில் நட்டு வைத்தாள். அன்னையும் இச்செயலை விலக்கவில்லை.
(ஏனெனில் வரைவு உறுதிசெய்யப்பட்டுள்ளது). அன்னையின் உதவிக்கு
மேலுலகம் அளித்தாலும் அது சிறிதேயாகும்.
பார்வை: குறுந்தொகை மூலமும் உரையும்-ஆக்கியோர்
டாக்டர் உ.வே.சா.அவர்கள்.
No comments:
Post a Comment