Friday, 31 July 2026

ஒற்றுப் பெயர்த்தல்

 ஒற்றுப் பெயர்த்தல்-சித்திரகவியில் ஒருவகை.


ஒற்றுப் பெயர்த்தல் என்பது ஒரு மொழியும் தொடர்

மொழியுமாய்ப் பொருள்படும் அவற்றை அப்பொருள் ஒழிய,

வேறுபொருள்பட வைப்பது. வேறுவகையில் சொல்வதானால்

"ஒன்றிநிற்கும் வேறு பொருளைப் பெயர்த்தெடுத்தல்" என்று

பொருள் கொள்ளலாம்.


சோழர்களின் பிற்காலத் தலைநகராக விளங்கிய கங்கைகொண்ட

சோழபுரத்திலுள்ள  தோற்றப்பொலிவுமிக்க மாபெரும் அரண்மனை

யாக வளங்கிய கங்காபுர மாளிகையை விவரிக்கும் ஒரு பாடலில்

ஒற்றுப் பெயர்த்தல் கையாளப் பட்டுள்ளது. பாடலை நோக்குவோம்:

"வண்புயலைக் கீழ்ப்படுத்து வானத் தருமலைந்து

மண்குளிரச் சாயல் வளர்க்குமாம்---தண்கவிகைக்

கொங்கார் அலங்கல் அநபாயன் கொய்பொழில்சூழ்

கங்கா புரமாளி கை".

பொருள்:

வளப்பத்தை யுடைய மேகங்கள் கீழாக, மேலோங்கி வானகத்தின்

கண் உண்டாகிய கற்பகப் பூக்களை உச்சிமீது உடையதாய்,

உலகெலாம் தன்னுருவச் சாயையாகிய நிழலைப் பெருக்கும்

குளிர்ச்சி பொருந்திய குடையினையும், மதுநிறைந்த மாலையையும்

உடைய அநபாயனது(இரண்டாம் குலோத்துங்க சோழனது)

கங்காபுரத்தின் மாளிகை(கங்கைகொண்ட சோழபுரத்தின்) மாளிகை

என்பது ஒருபொருள். ஒற்றுப் பெயர்த்தலைக் கையாண்டால் பொருள்

கீழ்க்கண்டவாறு மாறுபடும்:

கங்காபுரம்+ஆளி+கை=கங்காபுர மாளிகை.

அதாவது, ஒற்றுப் பெயர்த்தலுக்குப் பிறகு, பாடல்

மாளிகையை விவரிப்பதற்குப் பதிலாக, மாளிகையை

(மாநிலத்தையும்) ஆளுகின்ற அநபாயச் சோழனது

அதாவது, இரண்டாம் குலோத்துங்கச் சோழனது வள்ளல்

தன்மைமிக்க கை எனப் பொருள்படுகிறது. பாடலின்

வேறுபொருளாவது:

வளப்பத்தையுடைய மேகத்தைப் பழிக்கும் தன்மையை

யுடையதாய், வானகத்தில் உண்டாகிய கற்பகமரத்தோடு

பகைகொண்டு அதனைவிடவும் மக்களுக்கு அள்ளிக் கொடுத்து

உலகத்தில் வாழும் மக்களுடைய உள்ளமெல்லாம் குளிரும்

வணணம் காவல்புரிந்து மக்களைக் கண்போலக் காக்கும்

கங்கைகொண்ட சோழபுரத்தை(கங்காபுரத்தை) யாண்டுவரும்

குளிர்ந்த வெண்கொற்றக் குடையினையுடைய அநபாயச்

சோழனது கை எனப் பொருள் மாறிவிட்டது.

கங்காபுர மாளிகை என்பது ஒற்றுப் பெயர்த்தலுக்குப் பின்,

கங்காபுரம் ஆளி கை என மாறிப் பொருள் தருகிறது.


இனி, சொல்லணியியலில் மடக்கணிப் பாடலொன்றைப்

பார்ப்போம்:

மடக்கு யமகம் என்றும் அழைக்கப்படும். வந்த சொல்லே

திரும்பவந்து வேறு பொருள் தருவது மடக்கு எனப்படும்.

இதில் பலவகைகள் உள்ளன. முதல்மடக்கு, இடைமடக்கு, 

கடைமடக்கு, முதலடிமடக்கு, இரண்டாமடி மடக்கு, மூன்றாமடி

மடக்கு, நான்காமடி மடக்கு, முற்று மடக்கு போன்றவை அவை.

கீழ்க்கண்ட பாடலில் இரண்டாமடியில் மடக்கு பயின்று

வந்துள்ளது:

"கனிவாய் இவள்புலம்பக் காவலநீ நீங்கில்

இனியார் இனியார் எமக்குப்---பனிநாள்

இருவராத் தாங்கும் உயிரன்றி எங்குண்(டு)

ஒருவராத் தாங்கும் உயிர்?"

பொருள்:

கனிபோன்ற மொழியினையுடைய இவள் புலம்பும்படி

அரசனே! நீ பிரிந்த காலத்து எங்களுக்கு இனியராய்

(இனியவராய்) இனிமையான சொற்களைச் சொல்லிக்

காக்கும் தலைவர் இனியார்? இனியார், இனியார்? 

பனிக்காலத்தில் பிரியாதிருந்த இருவரும்  இப்போழுது

பிரிந்து தனியராய் வாழ்ந்தால் உயிர் தாங்குவது எவ்வாறு?

இப் பாடலில் இனியார்(இனிமையுடையவர்) இனியார்?

(இனி யாவர் உளர்?) என்று மடங்கி வந்து சுவையூட்டுகிறது.


ஆதாரம்:

தண்டி யலங்காரம் நூல்- வெளியிட்டவர்=தென்னிந்திய

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி.

Tuesday, 21 July 2026

வருந்தேன் தோழி. வாய்க்க அவர் செலவே.

 வருந்தேன் தோழி. வாய்க்க அவர் செலவே.


பொருள் ஈட்டுவதற்காகத் தலைவன் தலைவியைப் பிரிந்து

வெளி தேசங்களுக்குச் செல்ல எண்ணுகின்றான். போகும் இடம்

கரடு முரடானது. நீண்ட நீரில்லாத பாலை நிலத்து வழியே செல்லல்

வேண்டும். மரங்களின் பின்னே பாலை நிலத்தில் வாழ்ந்துவரும்

வழிப்பறி செய்யும் மறவர்கள் தனியாக ஆள்துணையின்றி எவரேனும்

வருகிறர்களா? என்று உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பர். தனியாக 

வருபவரை அம்பெய்து கொன்றுவிட்டு அவரிடமுள்ள பொருள்களை

வழிப்பறி செய்து கொள்ளையடிக்கத் திட்டமிட்டுத் தக்க தருணத்துக்காகக்

காத்துக்கொண்டிருப்பர். அதனால்தான் அவ்வழியே செல்லநேரும்

வணிகக் குழுக்கள்(சாத்து என்று அழைக்கப்படுவர்) கூட்டமாக வாள்,

கேடகம்(கேடயம்), வில், அம்பு முதலான பாதுகாப்புக்கான ஆயதங்களோடு

பயணம் செய்து கடப்பது வழக்கம். ஏனெனில் பாலை நிலத்து மக்கள்

ஆறலை கள்வர்கள்(வழிப்பறிக் கள்வர்கள்). ஈவிரக்கமற்ற கொடிய கள்வர்கள்.

உண்ண உணவும், பருகுவதற்குரிய நீரும், படுத்துறங்கத் தோதான இடமும்

அப்பாலை நிலத்தில் கிடைக்க வாய்ப்பில்லை. தலைவனைப் போலத் தனியாளாகப்

பொருள்தேடி வருபவர்கள் வணிகக் குழுக்களைக் கண்டு அவர்களோடு

இணைந்து பயணம் செய்தால் பாதுகாப்பான பயணமாக அமையும். உணவும் நீரும்

அவர்களின் கருணையால் கிடைத்துவிடும். வணிகக் குழுக்களைச் சந்திக்க வாய்ப்புக்

கிட்டவில்லையென்றால் தனியாளாக வருபவர்கள் மிகுந்த தொல்லைக்கு உள்ளாக

நேரிடும். உண்ணுவதற்குக் கட்டுச்சோறு, பருகுவதற்கு நீர், பாதுகாப்புக்கு உடைவாள்

முதலானவற்றையும் சுமந்துகொண்டு மிகவும் கவனமாகவும் முன்னெச்சரிக்கையோடும்

சுற்றுமுற்றும் கூர்ந்து நோக்கிக்கொண்டும் பயணித்தல் இன்றியமையாதது. ஏனெனில்

அறமற்ற, ஈவிரக்கமற்ற ஆறலை கள்வர்களிடம் அகப்பட்டுக் கொண்டால்  மரணம் உறுதி.

எனவேதான், பெண்கள் இவ்வழியே வருவதேயில்லை.


இங்கே குறிப்பிடப்படும் தலைவனும் தன் உயிரையொத்த தலைவியை உடன்அழைத்து

வராமல் தான் மட்டுமே வந்துள்ளான். உண்மையில் நடந்தது என்னவென்றால் தலைவி

தானும் உடன்வருவதாகப் பிடிவாதம் செய்தாள். அழுது அடம் பிடித்தாள். ஆனால் அவள்

தோழி பாலைநிலத்தின் தன்மையையும்  வழிநெடுகச் சந்திக்க வேண்டிய இடர்களையும்

விரிவாக எடுத்தரைத்தாள். தலைவியிடம் "தோழி! நீ மிக மென்மையானவள். உன் மேனி

தளிர் போன்ற வண்ணம் கொண்டுள்ளது. பாலைவழியே பயணம் மேற்கொணடால் உன்

உடல் வாடிவிடும். மேலும் உனக்குரிய உணவு, நீர், தங்குமிடம் போன்ற இன்றியமையாத

தேவைகளுக்காகத் தலைவன் பெருமுயற்சி மேற்கொள்ளல்வேண்டும். எனவே, நீ 

அவனுடன் பயணம் மேற்கொள்ளாதே. அவன் பொருள் ஈட்டும் உயர்ந்த நோக்கத்தோடு

இப் பயணத்தைத் தொடங்கியுள்ளான். எனக்கு இதில் யாதொரு வருத்தமும் இல்லை.

நீயும் இதுபோலவே மனத்துயரை விலக்கிவிட்டுத் தலைவன் மேற்கொண்ட பெருளீட்டும்

முயற்சி முழு வெற்றிபெற வாழ்த்துவாயாக" என்றுரைத்தாள்.


தொடர்புடைய பாடல்:

நூல்= நற்றிணை. பாடல் எண்: 148. திணை: பாலை. புலவர்:கள்ளம்பாளனார்.

"வண்ணம் நோக்கியும் மென்மொழி கூறியும்

நீஅவண் வருதல் ஆற்றாய் எனத்தாம்

தொடங்கி ஆள்வினைப் பிரிந்தோர் இன்றே

நெடுங்கயம் புரிந்த நீரில் நீளிடைச்

செங்கால் மாஅத்து அம்புடைப் பொருந்தி

வாங்குசிலை மறவர் வீங்குநிலை அஞ்சாது

கல்அளைச் செறிந்த வள்உகிர்ப் பிணவின்

இன்புனிற்று இடும்பை தீரச் சினம்சிறந்து

செங்கண் இரும்புலிக் கோள்வல் ஏற்றை

உயர்மருப்பு ஒருத்தல் புகர்முகம் பாயும்

அருஞ்சுரம் இறப்ப என்ப

வருந்தேன் தோழி, வாய்க்கஅவர் செலவே.


அருஞ்சொற் பொருள்:

கயம்=ஆழம். ஆள்வினை=முயற்சி. அளை=குகை.

உகிர்=நகம். பிணவு=பெண். புனிறு,= ஈன்றணிமை.

ஏற்றை= ஆண் விலங்கு. மருப்பு= தந்தம். ஒருத்தல்=ஆண்.

புகர்=புள்ளி, கறை. இறப்ப=கடந்த.


இப்பாடலில் ஒரு காட்சி விவரிக்கப்பட்டுள்ளது.

அதாவது, ஒரு கற்குகையில் பெண்புலி ஒன்று அண்மையில்

குட்டிகளை ஈன்று பசிக் கொடுமையால் தவிக்கின்றது. பெண்

புலியின் பசிப்பிணி தீர்க்கவேண்டும் என்று எண்ணிய ஆண்புலி

உயர்ந்த கோடுகளை(தந்தங்கள்) யுடைய ஆண்யானையின்

புள்ளிகள் பொருந்திய முகத்தில் பாய்ந்து அதனைக் கொன்று

பெண்புலிக்குப் படைத்தது. இந்த உவமைமூலமாகத் தலைவனும்

தலைவியும் இல்லறம் நடத்தத் தேவைப்படும் பொருளை ஈட்டுவதற்

காக அச்சம் கொள்ளத்தக்க பாலைவழியே பிற தேசங்களுக்குச்

செல்கின்றான் என்று குறிப்பாகப் புலவர் உணர்த்துகிறார்.


ஆதாரம்:

சங்க இலக்கியம்-- நற்றிணை மூலமும் உரையும்- வர்த்தமானன்

பதிப்பகம். உரையாசிரியர்: முனைவர் கதிர் மகாதேவன்.

Sunday, 5 July 2026

புதுக்கோள் யானையின் பிணித்தற்றால் எம்மே.

 புதுக்கோள் யானையின் பிணித்தற்றால் எம்மே.


தலைவன் தான் ஒருத்தியைக் கண்டு அவள் நெற்றியழகால்

புதிதாகப் பிடிக்கப்பட்டுத் தளையால் பிணிக்கப்பட்ட காட்டுயானை

போலக் கட்டுண்ட நிலையைத் தன் பாங்கனிடம் உரைத்தது.

நூல்: குறுந்தொகை--பாடல் எண்: 129-- திணை:குறிஞ்சி--

இயற்றியவர்:கோப்பெருஞ்சோழன்.


தலைவன் கூற்று:

எலுவ(தோழ!) இளையோர்களுக்கு ஆதரவான நண்பனே! 

அறிவுடையோர்க்கு(புலவர்க்கு) உற்றவனாக விளங்கும்

தோழனே! நான் என் மனத்தை வருடிக்கொண்டிருக்கும்

ஒரு செய்தியை நவில்கின்றேன். நீ கவனித்துக் கேட்பாயாக.

அன்றொருநாளில் மனத்துக்கு உகந்த ஒரு காட்சியைக் கண்டேன்.

பரந்த கடலின் நடுவே வளர்பிறையில் எட்டாம்நாள் பக்கத்தில்

பசுமையான வெள்ளிய நிலவொளியை வீசும் பிறைமதி தோன்றிய

தைப் போலத் தலைவியின் கூந்தலுக்கு அணுக்கத்தில் விளங்கிய

அவளது சிறிய நெற்றி(நுதல்) என் கண்களில் பட்டது. அதனால் நான்

புதிதாகப் பிடிக்கப்பட்டுத் தளையால் பிணிக்கப்பட்ட காட்டுயானையைப்

போலக் கட்டுண்டேன். உறுப்பு இலக்கணப்படி(அங்க சாத்திரப்படி) பெண்

களுக்கு நெற்றியின் அகலமும் வளைவும் ஒளிவீசும் எட்டாம்நாள் பிறை

போல இருப்பது சாலச் சிறந்ததாம்.


இனி பாடலை நோக்குவோம்:(நேரிசை ஆசிரியப்பா)

"எலுவ! சிறாஅர் ஏமுறு  நண்ப!

புலவர் தோழ! கேளாய் அத்தை.

மாக்கடல் நடுவண் எண்ணாள் பக்கத்துப்

பசுவெண் திங்கள் தோன்றி யாங்குக்

கதுப்(பு)அயல் விளங்கும் சிறுநுதல்

புதுக்கோள் யானையின் பிணித்தற்றால் எம்மே!

அருஞ்சொற் பொருள்:

எலுவ=தோழ. ஏம், ஏமம்=பாதுகாப்பு, ஆதரவு.

அத்தை=பொருளற்ற ஒலிக்குறிப்பு-அசை.

எண்ணாள் பக்கம்=எட்டாம் நாள்(அட்டமி)

பக்கம்=பட்சம்.


பார்வை:

சங்க இலக்கியம்-குறுந்தொகை மூலமும் உரையும்

வர்த்தமானன் பதிப்பக வெளியீடு. உரை:முனைவர் 

தமிழண்ணல்.