Friday, 19 June 2026

மேற்காசியாவில் போர்ச்சூழல் விலகுமா?

 மேற்காசியாவில்  போர்ச்சூழல் விலகுமா?


யாப்பு=கலிவிருத்தம்(தேமா/புளிமா, கூவிளம்3)

எழுத்துக் கட்டுப்பாடு உண்டு. நேரசையில் பாடல்

தொடங்கினால் ஒற்று நீக்கிப் பதினொரு எழுத்துகள்

வரும். நிரையசையில் பாடல் தொடங்கினால் ஒற்று

நீக்கிப் பன்னிரண்டு எழுத்துகள் வரும்.


உலகச் சண்டியர், உண்மையே பேசிடார்,

கலகம் செய்வதில் கைகண்ட வித்தகர்,

தலைமைப் பண்பினில் சற்றுமே தேறிடார்,

அலகை ஒத்த அமெரிக்க மேலிடம்.  (அலகை=பேய்)


டிரம்பின் சீடராம் இஸ்ரவேல் மேலிடம்,

தரமில் செய்கையில் தன்னிகர் அற்றவர்,

மரணம் கண்டு மகிழ்பவர், நெஞ்சினில்

கருணை யில்லாக் கயமைகொள் தீயவர்.


நெதன்யா கென்பார், நெகிழ்ச்சியில் கல்நெஞ்சர்,

பதைக்கச் செய்வதில் பாதகர், மக்களை

வதைக்கும் வித்தையில் வல்லவர், ஞாலத்தைச்

சிதைக்கும் செய்கையில் தேர்ந்தவர், பாவியர்.


பாலஸ் தீனமும் பாலிக்கும் ஹம்மாஸாம்

காலன் போல்,போர்க் கணங்களும் நைந்திட

சீலம் நீங்கிய தீயர் இருவரும்(டிரம்ப், நெதன்யாகு)

ஞாலம் சோர்ந்திட நாசப்போர் செய்தனர்.


உதவ எண்ணிய ஒப்பில்நா டாம்ஈரான்

எதையும் கையாளும் ஏவு கணைகளால்

மதங்கொள் யானைபோல் வாட்டி வதைத்தது.

சிதறி யோடினர் தீயஇஸ் ரேலியர்.


ஈரான் நாட்டின் எதிரி இணக்கமில்

தேரா மூர்க்க அமெரிக்கா தாக்கிடச்

சீரார் தேசம் சிதறிச்சின் னாபின்னம்

போரால் ஆனதே, பொற்பெலாம் தேய்ந்ததே.


சால நெஞ்சைச் சவட்டுமிந் நேர்ச்சியால்

ஓலம் செய்கின்றார், ஒப்பாரி வைக்கின்றார்.

ஞால மக்கள் நலிவுற, ஈரான்தம்

கோல நீரிணை ஹோர்முஸைப் பூட்டினர்.


ஹோர்முஸ் பாதையை ஓர்ந்தே அடைத்ததால்

பார்க்குள் நாடுகள் பல்துயர் உற்றன.

யார்க்கும் பெட்ரோல், எரிபொருள் கிட்டிடாப்

போர்க்கு மூலமாம் பூசல் வெடித்தது.


மேலை ஆசியப் பூமியில் இஸ்ரவேல்

பாலஸ் தீனப் படைக்குழு ஹம்மாஸை

ஓலம் பொங்க உடற்றிடும் போர்களால் (உடற்றிடும்=சிதற அடித்தல்)

காலம் பூரா கவலை வருத்துமே.


அமெரிக் காஇஸ்ரேல் ஆங்கார நாடீரான் (நாடு+ஈரான்)

தமக்குள் மோதிடும் தன்மையால் பூமியில்

அமைதி கெட்டது, அன்றாடம் போர்க்குரல்.

நமையார் காப்பார்? நலஞ்செய்க ஆண்டவா!


பின்குறிப்பு:

அமெரிக்கா-ஈரான் இவ்விரு நாடுகளுக்கிடையே

ஹோர்முஸ் நீரிணை திறப்பது குறித்து ஒப்பந்

தம் கையொப்பம் இடப்படலாம் என்ற பேச்சு

அடிபடுகிறது. ஒப்பந்தம் நிறைவேறி மேற்காசியா

வில் அமைதி நிலவினால் அனைவரும் வரவேற்பர்.

Tuesday, 2 June 2026

குயிலோசையை வெறுக்கும் தலைவி.

 தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவிக்குக் குயிலோசை,

நிரம்பி ஓடும் ஆறு, கொடியதாய்த் தோன்றுகிறதாம்.


வினைவயிற் பிரிந்து சென்றான் தலைவன். கார்காலத்தில்

திரும்பி வருவதாக உறுதியளித்திருந்தான். ஆனால், தலைவிக்கோ

ஒவ்வொரு நாள் கழிவதும் ஒரு யுகம் கழிவது போலத் தோன்றுகிறது.

நெடுங்காலம் ஆறாத புண்ணின் நிணங் காயாத மார்பிலே வேலைக்

கொண்டு குத்தினாற்போலக் குயிலோசை துன்பம் தருகின்றது.

அதனைக் காட்டிலும் நீர் நிரம்பிப் பாய்கின்ற ஆறு கொடியதாய்த்

தோன்றுகிறது. போதாக் குறைக்குக் குருக்கத்தி மலருடனே விரவிய 

செண்பக மலரை விற்பதற்காகக் கடகப்பெட்டியுடன்(கடாப்பெட்டி) தெருவில்

கூவிவரும் உழவர்மகள் ஆற்றை விடவும் மிகக் கொடியவளாகத் தென்படு

கின்றாள்.


குயிலோசை, நிரம்பிய ஆற்றுநீரோட்டம், நறுமலர்- இவையெல்லாம்

தலைவிக்கு ஒருகாலத்தில் இன்பமளித்தவை. தற்பொழுது தலைவனைப்

பிரிந்திருக்கும் தலைவிக்குக் குயிலோசை குத்தல் ஏற்படுத்துகிறது. நிரம்பிய

ஆற்றுநீரோட்டம் கடந்த காலத்தில் தலைவனும் தானும் ஒருங்கே ஆற்றில்

நீராடியதை நினைவூட்டி மனத்தைக் காயப்படுத்துகிறது. இவைபோலவே,

நறுமலர்களை விற்றுவரும் மங்கை தலைவன் தனக்கு மலர்சூட்டித் தழுவிய

நிகழ்வை நினைவூட்டி வதைக்கின்றாள். ஏற்கெனவே, தான் நாள்முழுவதும்

தலைவனுடனான நிகழ்வுகளை அசைபோட்டுக்கொண்டு சரிவர உண்ணாமலும்,

உறங்காமலும் பித்துப் பிடித்த நிலையில் திரிவதாக நற்றாய்முதல் அனைவரும்

பழிக்கின்றனர். இந்நிலையில் குயிலோசை, நிரம்பிய ஆற்றுநீரோட்டம், நறுமலர்

விற்றுவரும் மங்கையின் கடகப்பெட்டி போன்றவை பிரிவுத் துயரை மேலும் அதிகப்

படுத்துகின்றன. தலைவன் திரும்பிவந்தாலொழிய இவ்விடர்கள் தீரமாட்டா.

பாடலை நோக்குவோம்:

நூல்: நற்றிணை. திணை: முல்லை. புலவர்:மாறன்வழுதி.

பாடல் எண:97. 


                     நேரிசை ஆசிரியப்பா.


"அழுந்துபடு விழுப்புண் வழும்புவாய் புலரா

எவ்வ நெஞ்சத்(து) எஃகுஎறிந் தாங்குப்

பிரிவில புலம்பி நுவலும் குயிலினும்

தேறுநீர் கெழீஇய யாறுநனி கொடிதே.

அதனினும் கொடியள் தானே மதனின்

துய்த்தலை இதழ பைங்குருக் கத்தியொடு

பித்திகை விரவுமலர் கொள்ளீ ரோவென

வண்டுசூழ் வட்டியள் திரிதரும்

தண்டலை உழவர் தனிமட மகளே."


அருஞ்சொற் பொருள்:

வழும்பு=நிணம். மதன்=அழகு. பித்திகை=சிறு சண்பகம்.

வட்டி=கடகப் பெட்டி(கடாப் பெட்டி).


நூல் ஆதாரம்: சங்க இலக்கியம்-நற்றிணை- வர்த்தமானன்

பதிப்பகம். உரையாசிரியர்-முனைவர் கதிர் மகாதேவன்.