Tuesday, 31 March 2026

பொன்னுச்சாமித் தேவரும் முத்துராமலிங்க சேதுபதியும்.

 பொன்னுச்சாமித் தேவரும் முத்துராமலிங்க சேதுபதியும்.


கடந்த பதினெட்டு மற்றும் பத்தொன்பதாவது நூற்றாண்டுகளில்

பாண்டியநாடு குழப்பமான நிலையிலிருந்தது. ஆங்கிலக் கும்பினி

யாருடன் கூடிய கருநாடக நவாபின் ஆட்சி இந்த நாடெல்லாம் அமைந்த

பொழுது  மதுரை நாயக்க இராச வமிசம் அடியோடு ஒழிந்தது. நாயக்கரைச்

சார்ந்திருந்த இராமநாதபுரச் சேதுபதிகள் நிலைமையும் தடுமாறியது.

1773 இல் ஆட்சியிலிருந்த முத்துராமலிங்க சேதுபதி என்பவர் இவர்களை

எதிர்த்துப் போர்புரிந்து தோல்வியடைந்து சிறைப்பட்டார். இவர்க்குப்பின்

இவர் சகோதரி மங்களேசுவரி நாச்சியாரும் சேதுபதிகள் இருவரும் பட்டம்

பெற்றனர். இறுதியில் ஆட்சிபுரிந்த இராமசாமி சேதுபதி ஆண் வாரிசின்றி

அகால மரணமடைந்ததை யடுத்து அவர் தேவியார் பர்வதவர்த்தினி நாச்சியார்

பட்டம் பெற்றார். இவருக்கு அமைச்சராயிருந்து உதவியவர் இவர் சகோதரர்

வீசுபுகழ் கொண்ட கோட்டைச்சாமித் தேவர்.


அரசி பர்வதவர்த்தினி நாச்சியாருக்கு வாரிசு இல்லாததால், தமது தங்கை முத்து

வீராயி நாச்சியாரின் குழந்தைகளைத் தத்தெடுத்துப் பட்டம் கட்ட முடிவெடுத்தார்.

கணவனையிழந்த அரசி தத்தெடுக்கப் பல எதிர்ப்புகள் கிளம்பின. அக்கால வழக்கப்படி

இலண்டனிலிருந்த பிரிவி கவுன்சில் வரை வழக்கு சென்றது. பலப்பல ஆண்டுகளாக

வழக்கு நடைபெற்றது. இறுதியில் கணவனையிழந்த அரசி தத்தெடுத்தது செல்லும்

என்ற தீர்ப்பு வந்தது. வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே அரசியின்

தங்கையார் முத்துவீராயி நாச்சியாரும் அவர் கணவர் சிவஞானத் தேவரும் புதுமடம்

என்ற பகுதியிலிருந்து தம் பொன்னுச்சாமி, துரைராசா என்னும் மக்களொடு இராமநாதபுர

அரண்மனைக்கு வந்து தங்கினர். பொன்னுச்சாமி மூத்தவர் என்ற போதிலும் அரசியார்

இளையவரான துரைராசாவையே மகுடம் சூட்டிச் சேதுபதி யாக்கினார். பட்டம் சூட்டியபின்

துரைராசா முத்தராமலிங்க சேதுபதியானார். பொன்னுச்சாமி சகல அதிகாரங்கள் கொண்ட

அமைச்சரானார். அப்பொழுது அவர் வயது இருபதாகும். தம் தாய்மாமன் கோட்டைச்சாமித்

தேவரிடம் அரசியலைப்பற்றியும் நிர்வாகத்தைப் பற்றியும் நன்கு கற்றறிந்திருந்தார். தந்தை

சிவஞானத்தேவர் தமிழ்ப்புலமை மிக்கவர். தம் இரு பிள்ளைகட்கும் சகல கலைகளையும்

கற்பித்திருந்தார். இருவரும் கவிதை புனைவதில் தேர்ச்சி பெற்றிருந்தனர். சேதுபதி நாட்டை

ஆள்வதில் பெரும்பொழுது செலவிட்டார். அவர் தமையனாரான பொன்னுச்சாமி தமிழ்ப்

புலவர்களோடு இலக்கிய விவாதம் நிகழ்த்தி மகிழ்வார். இராமநாதபுர அரண்மனையில்

கம்பராமாயண ஆராய்ச்சி நடைபெறும். பலதரப்பட்ட புலவர்களும் பங்குபெற்றுத் தத்தம்

கருத்துகளை வெளிப்படுத்துவர். புலவர் கூட்டம் இலக்கிய ஆராய்ச்சியிலும் விவாதங்களி

லும் ஈடுபட்டு அவையைச் சிறப்பாக நடத்தினர்.


ஒருநாள் கம்பராமாயணத்தில் சுந்தரகாண்டம்- ஊர்தேடு படலத்திலுள்ள இலங்கை

மாதேவியைப் பற்றிய பாடல் ஆராய்ச்சிக்கு வந்தது. பாடல் பின்வருமாறு:

"அஞ்சு வணத்தின் ஆடை உடுத்தாள். அரவெல்லாம்

அஞ்சு வணத்தின் வேகம் மிகுத்தாள், அருளில்லாள்.

அஞ்சு வணத்தின் உத்தரி யத்தாள், அலையாரும்

அஞ்சு வணத்தின் முத்தொளிர் ஆரத் தணிகொண்டாள்".

அனுமன் சீதை இலங்கையில் இருக்குமிடத்தைக் கண்டு பிடிப்பதற்ககாகக் கடலைத் தாண்டி

இலங்கைக்கு வந்து சீதைப்பிராட்டியைத் தேடி யலையும் பொழுது இலங்கையைக் காவல்

புரியும் இலங்கைமாதேவியைச் சந்திக்கின்றான். அப்பொழது அவ்விருவருக்கும்

உரையாடல் நிகழ்கிறது. அதைச்சொல்லவந்த கம்பர் மடக்கு அணி பயின்றுவரும்

இப்பாடலை மொழிகின்றார்.

பொருள்:

1. அஞ்சு வணத்தின்(வண்ணத்தின்-நிறத்தின்) ஆடை உடுத்தியிருந்தாள்.

2.அரவெல்லாம்(பாம்புகளெல்லாம்) அஞ்சும் உவணத்தின் கழுகு போன்ற வேகம்

கொண்டிருந்தாள்.

3.அம் சுவர்ணத்தின் உத்தரியத்தாள்- அழகிய தங்க உத்தரியம் தரித்திருந்தாள்.

4.அலையாரும் அம் சு வள் நத்தின் முத்தொளிர் ஆரத்து அணிகொண்டாள்.

கடல் அலைகளில் தவழும் அழகிய முதுகு கொண்ட சங்குகள் ஈன்ற முத்து

ஒளிரும் ஆரம்(மாலை) அணிந்திருந்தாள்.


பொன்னுச்சாமித் தேவரிடம் 'புத்தக வாசிப்பிற்கு' ஒரு பணியிடம் உண்டு.

அப்பணி செய்பவர் பொன்னுச்சாமித் தேவர் விரும்பிய நேரத்தில்

விரும்பிய பாடலை இசையோடு பாடிக் காட்டுதல் வேண்டும். இரவு பத்துமணிவரை

பணிபுரிதல் வேண்டும். ஒருநாள் இராமலிங்கம் என்னும் அந்த நபர்

இரவு எட்டு மணிக்கே இல்லத்துக்கு ஏகிவிட்டார். உடனே, தேவர் ஆசுகவி

பாடிவிட்டார்.

"எட்டு மணியோ இலைநீ எனையதற்குள்

விட்டுப் பிரிந்த விதமென்னோ?--இட்டமனை

மாலா மயலா மடியா மமதையா

சீலா இராமலிங்கம் செப்பு".


இராமலிங்கக் குருக்கள் என்ற புலவர் தேவரின் எதிரணியில்

பணிபுரிந்துவந்தார். அவரைத் தம்மோடு வைத்துக்கொள்ள

விரும்பிய தேவர் கீழ்க்கண்ட கடிதத்தை அனுப்பினார்:

"அஞ்சிரட்டி செய்வருடம் ஆளடிமை யில்திரிந்தும்

கஞ்சியன்றிக் காணாயக் காவலனால். --மிஞ்சியது

பூணா? புதுமனையா? பூவா? சொல் புத்தியிலா

வீணா இராமலிங்க மே!"


பொன்னுச்சாமித் தேவர் இளம்வயதிலேயே அமைச்சராகப்

பதவியேற்றுக் கொண்டார். அவர் பணியிற் சேர்ந்த புதிதில்

இராமநாதபுரச் சீமையில் ஆங்காங்கே கலவரங்கள், குறும்புகள்

நிகழ்ந்தன. தம் மதிநுடபத்தாலும், துணிவாலும் எல்லாக் குறும்புகளையும்

அடக்கி ஒடுக்கி அமைதியை நிலைநாட்டினார். இதனை ஒரு புலவர் மெச்சிப்

பாடியுள்ளார்:

"மதிக்கணைநெ றித்தபுரு வச்சிலையின் மாட்டிக்

கதிக்குமடை யாரிலக்கங் காட்டித்--துதித்தெவரும்

அஞ்சப் புவிபுரக்கும் அண்ணல்பொன்னுச் சாமிமன்னன்

தஞ்சத்தை யாரடையா தார்".

பொருள்:

தம் கூரிய அறிவாகிய அம்பை நெறித்த புருவங்களான

வில்லிடையே மாட்டிப் பகைவராகிய இலக்கைக் குறிக்கொண்டு

யாவரும் புகழவும் அஞ்சவும் காக்கும் பொன்னுச்சாமித்

தேவரைப் புகலடையாதவர் யார்?.


இன்னும் இதுபோன்ற நிகழ்வுகளும் பாடல்களும் ஏராளமாக

உள்ளன. விரிவு அஞ்சி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.

ஆதாரம்:

'செந்தமிழ் வளர்த்த தேவர்கள்' நூலை இயற்றியவர் பெரும்

புலவர் ரா. ராகவ ஐயங்கார்.

No comments:

Post a Comment