அன்றொருநாள் அவனுடைய பேரைக் கேட்டேன்,
அடுத்தநாள் அவனிருக்கும் ஊரைக் கேட்டேன்.
இவ்வரிகள் 1962ஆம் ஆண்டில் வெளிவந்த 'குடும்பத் தலைவன்'
என்னும் திரைப்படத்தில் கவிஞர் கண்ணதாசனார் எழுதிப் பின்னணிப்
பாடகியார் P. சுசீலா பாடிய திரைப்படப் பாடலில் வருவன. அப்பொழுது
என் வயது பத்து. எனக்கு இந்தப்பாடல் விளங்கவில்லை. ஏன் கதையின்
நாயகி இந்த விவரங்களைக் கேட்கின்றார்? என்று குழம்பினேன். கால
ஓட்டத்தில் கல்லூரியில் படிக்கும் காலத்தில் தமிழ் இலக்கியம் படிக்கின்ற
பொழுது அகம், புறம் என்னும் இருபெரும் பிரிவுகள் உள்ளன என்றும்,
அதில் அகம் ஆண், பெண்உறவுகளை விவரிப்பதாகவும், புறம் அறம், வீரம்,
கொடை முதலியவற்றை விவரிப்பதாகவும் அறிந்தேன்.
தொல்காப்பியர் காலத்திலேயே அகப்பொருளைப் பற்றிய இலக்கணம்,
வழிமுறை முதலியன நடைமுறையில் வழக்கத்துக்கு வந்து விட்டன. பிற்பாடு
இறையனர் அகப்பொருள், நம்பி அகப்பொருள் முதலான நூல்கள் வெளிவந்து
அகப்பொருளை விரிவாக அலசி ஆராய்ந்து வழிமுறைகளைக் கூறுகின்றன.
அன்றுதொட்டு இன்றுவரை நம் மரபு வழிமுறைகளில் பெரிய மாறுதல் ஏதுமில்லை.
காதல் தொடங்கும் பொழுது ஆணும், பெண்ணும் சந்தித்துக் கொள்கின்றனர்.
இது காட்சியாகும். பெண் அழகால் ஆண் கவரப்பட்டால் இவள் "மானிடப் பெண்ணா?
இல்லை தேவருலகப் பெண்ணா? (இதே போல, பெண்ணும் ஆணைப்பற்றி எண்ணலாம்).
இது ஐயமாகும். பின்னால், பெண்ணின் கால் தரையில் பதிந்துள்ளமையாலும், கண்
இமைத்தலாலும், தலையில் சூட்டிய மலர் வாடுவதாலும், பூசிய சந்தனம் உலர்ந்து
போவதாலும்(தெய்வப் பெண்ணுக்கு இவையெல்லாம் நிகழா) ஐயம் நீங்கித் தெளிவு
பிறக்கிறது. அதன்விளைவாக ஒருவர்மேல் ஒருவருக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது.
இதனைத் தொடரந்து நயப்பு உருவாகிறது அதாவது ஆண் பெண்ணின் அழகைப் புகழத்
தொடங்குகிறான். இச் செயலை இலக்கியம் நயப்பு எனக் குறிப்பிடுகிறது.
மேற்கொண்டு காதல் எத்திசை நோக்கிச் செல்லும்? அவர்களுக்குள் ஏதாவது
உரையாடல் நிகழவேண்டும் அவ்வுரையாடல்தான் பதியும் பெயரும் வினவுதல்.
காதலன் காதலியிடம் கேட்கின்றான்:
"அறையார் கழல்மன்னர் ஆற்றுக் குடியமர் சாய்ந்தழியக்
கறையார் அயில்கொண்ட கோன்கொல்லிக் கார்ப்புனம் காக்கின்றவான்
பிறையார் சிறுநுதல் பெண்ணார் அமிழ்தன்ன பெய்வளையீர்!
மறையா துரைமின், எமக்குநும் பேரொடு வாழ்பதியே.
பொருள்:
பிறைபோன்ற நெற்றியையுடைய பெண்ணே, அமுதம் போன்ற, வளையணிந்த
காதலியே! மறைக்காமல் உம் பெயரையும் நீர் வாழ்கின்ற ஊரையும் உரைப்பீர்.
உரையாடலை நீட்டிப்பதற்காக வேறு பிறவற்றையும் வினவுதலும் உண்டு. யானை
யொன்றை வேட்டையாடத் துரத்திவந்தேன். அதனைக் கண்டீரோ? என வினவுதலும்
உண்டு.
"வருமால் புயல்வண்கை மான்தேர் வரோதயன் மண்ணளந்த
திருமால் அவன்வஞ்சி அன்னவம் சீறடிச் சேயிழையீர்!
கருமால் வரையன்ன தோற்றக் கருங்கைவெண் கோட்டசெங்கண்
பொருமால் களிறொன்று போந்ததுண் டோநும் புனத்தருகே?"
சிலசமயம், பாதை தெரியவில்லை. செல்லும் வழியைத் தெரிவிப்பீர்
என்று உரையாடல் தொடரும்.
முதற் சந்திப்பிலேயே ஆணைப் பொறுத்தவரையிற் பேசிவிடுவார்.
ஆனால் பெண்ணிடமிருந்து விடை கிடைக்குமா? எல்லாப் பெண்களும்
முதற் சந்திப்பிலேயே எல்லாவற்றையும் சொல்லிவிடுவதில்லை.
அப்பொழுது ஆண் "என் வினாவுக்கு விடையிறுத்தால் உம் வாய்ச்சுடர்மணி
சிந்திவிடுமோ? என்று ஆண் அங்கலாய்ப்பார்.
"தன்னும் புரையும் மழையுரும் ஏறுதன் தானைமுன்னால்
துன்னும் கொடிமிசை ஏந்திய கோன்கொல்லிச் சூழ்பொழில்வாய்
மின்னும் கதிரொளி வாள்முகத் தீர்!என் வினாவுரைத்தால்
மன்னும் சுடர்மணி போந்துரு மோநுங்கள் வாயகத்தே?"
இன்னும் எவ்வளவோ செய்திகள் உள்ளன. அகப்பொருள் அளப்பரிய
கடல்போன்றது. எல்லாவற்றையும் இச்சிறு கட்டுரையில் அடக்க இயலாது.
ஆதாரம்:
இறையனார் அகப்பொருள் நூல், பவானந்தர் கழக வெளியீடு.