Friday, 19 June 2026

மேற்காசியாவில் போர்ச்சூழல் விலகுமா?

 மேற்காசியாவில்  போர்ச்சூழல் விலகுமா?


யாப்பு=கலிவிருத்தம்(தேமா/புளிமா, கூவிளம்3)

எழுத்துக் கட்டுப்பாடு உண்டு. நேரசையில் பாடல்

தொடங்கினால் ஒற்று நீக்கிப் பதினொரு எழுத்துகள்

வரும். நிரையசையில் பாடல் தொடங்கினால் ஒற்று

நீக்கிப் பன்னிரண்டு எழுத்துகள் வரும்.


உலகச் சண்டியர், உண்மையே பேசிடார்,

கலகம் செய்வதில் கைகண்ட வித்தகர்,

தலைமைப் பண்பினில் சற்றுமே தேறிடார்,

அலகை ஒத்த அமெரிக்க மேலிடம்.  (அலகை=பேய்)


டிரம்பின் சீடராம் இஸ்ரவேல் மேலிடம்,

தரமில் செய்கையில் தன்னிகர் அற்றவர்,

மரணம் கண்டு மகிழ்பவர், நெஞ்சினில்

கருணை யில்லாக் கயமைகொள் தீயவர்.


நெதன்யா கென்பார், நெகிழ்ச்சியில் கல்நெஞ்சர்,

பதைக்கச் செய்வதில் பாதகர், மக்களை

வதைக்கும் வித்தையில் வல்லவர், ஞாலத்தைச்

சிதைக்கும் செய்கையில் தேர்ந்தவர், பாவியர்.


பாலஸ் தீனமும் பாலிக்கும் ஹம்மாஸாம்

காலன் போல்,போர்க் கணங்களும் நைந்திட

சீலம் நீங்கிய தீயர் இருவரும்(டிரம்ப், நெதன்யாகு)

ஞாலம் சோர்ந்திட நாசப்போர் செய்தனர்.


உதவ எண்ணிய ஒப்பில்நா டாம்ஈரான்

எதையும் கையாளும் ஏவு கணைகளால்

மதங்கொள் யானைபோல் வாட்டி வதைத்தது.

சிதறி யோடினர் தீயஇஸ் ரேலியர்.


ஈரான் நாட்டின் எதிரி இணக்கமில்

தேரா மூர்க்க அமெரிக்கா தாக்கிடச்

சீரார் தேசம் சிதறிச்சின் னாபின்னம்

போரால் ஆனதே, பொற்பெலாம் தேய்ந்ததே.


சால நெஞ்சைச் சவட்டுமிந் நேர்ச்சியால்

ஓலம் செய்கின்றார், ஒப்பாரி வைக்கின்றார்.

ஞால மக்கள் நலிவுற, ஈரான்தம்

கோல நீரிணை ஹோர்முஸைப் பூட்டினர்.


ஹோர்முஸ் பாதையை ஓர்ந்தே அடைத்ததால்

பார்க்குள் நாடுகள் பல்துயர் உற்றன.

யார்க்கும் பெட்ரோல், எரிபொருள் கிட்டிடாப்

போர்க்கு மூலமாம் பூசல் வெடித்தது.


மேலை ஆசியப் பூமியில் இஸ்ரவேல்

பாலஸ் தீனப் படைக்குழு ஹம்மாஸை

ஓலம் பொங்க உடற்றிடும் போர்களால் (உடற்றிடும்=சிதற அடித்தல்)

காலம் பூரா கவலை வருத்துமே.


அமெரிக் காஇஸ்ரேல் ஆங்கார நாடீரான் (நாடு+ஈரான்)

தமக்குள் மோதிடும் தன்மையால் பூமியில்

அமைதி கெட்டது, அன்றாடம் போர்க்குரல்.

நமையார் காப்பார்? நலஞ்செய்க ஆண்டவா!


பின்குறிப்பு:

அமெரிக்கா-ஈரான் இவ்விரு நாடுகளுக்கிடையே

ஹோர்முஸ் நீரிணை திறப்பது குறித்து ஒப்பந்

தம் கையொப்பம் இடப்படலாம் என்ற பேச்சு

அடிபடுகிறது. ஒப்பந்தம் நிறைவேறி மேற்காசியா

வில் அமைதி நிலவினால் அனைவரும் வரவேற்பர்.

No comments:

Post a Comment