செருப்புக்குத் தோல்வாங்கும் சென்னி அகளங்கன்
பொருப்புக்குத் தோலாப் புயம்.
சோழமன்னன் மீது ஒருதலைக் காதல்கொண்ட ஒரு மங்கை
காதல் மயக்கத்தில் புலம்பியது:
காதல் மயக்கத்தில் உழல்வோர் சிலசமயம் தமக்கு அருகிலுள்ள
தோழி அல்லது பாங்கியிடம் தமது அந்தரங்கமான எண்ணவோட்டத்தை
வெளிப்படுத்துவர். அருகில் மனிதர்கள் இல்லாவிட்டாலும் தம் கண்
பார்வையிலுள்ள கிளி, குயில், மயில் போன்ற உயிரினங்களை நோக்கிப்
பேசுவர். உயிரினங்கள் தம்மருகில் இல்லாவிடினும் அண்மையிலுள்ள
மரம், செடி, கொடி, விண்ணில் தென்படும் நிலவு போன்றவற்றை நோக்கிப்
புலம்பித் தமது மனத்திலுள்ள உணர்ச்சிகளை வெளியிடுவது வழக்கம்.
காதல் பற்றி எடுத்துரைக்கும் எல்லா இலக்கியங்களும் இயம்பும் செய்தி
இதுவே.
நாம் காணவிருக்கும் காட்சியிலும ஒரு தலைவி இது போலவே நடந்துகொள்
கின்றாள். அவள் சோழமன்னன் மீது ஒருதலையாக வளர்த்துக்கொண்ட காதலின்
உந்துதலால் வானில் தவழும் நிலவைப் பார்த்துப் புலம்புகின்றாள். "சிவபெருமான்
திருமுடிமேல் வீற்றிருக்கும் விளக்குப் போன்ற பிறை நிலவே! சோழ மன்னன்
போர்க்களம் சென்றால் தோல்வியே அடையமாட்டான். தனது வீரத்தையும்
பேராண்மையையும் வெளிப்படுத்தி வெற்றி பெறுவது திண்ணம். எக்காலத்திலும்
போர்க்களத்தில் புகுந்துவிட்டால் எதிரிகளின் யானைகளைக் கண்டு அஞ்சாமல்
துணிவோடு அவைகளை எதிர்த்துத் தன்வயப்படுத்தி விடுவான். தன் பார்வை
யாலும் அதட்டும் மொழிகளாலும் எப்படிப்பட்ட முரட்டு யானைகளையும் மயக்கித்
தன் கட்டுக்குள் கொண்டுவந்துவிடுவான். "செருப்புக்குத் தோல்வாங்கும்" சென்னி
அகளங்கன் என்று போற்றப்பட்டான். செரு என்னும் சொல் போர்க்களத்தைக் குறிக்கும்.
தோல் என்ற சொல் யானையைக் குறிக்கும். போர்க்களத்தில் புகுந்து யானைகளை
எதிர்த்து அடக்கிக் கட்டுக்குள் கொண்டுவரும் வீரன். அவன் தோள்வலிமை அத்தகையது.
"பொருப்புக்குத் தோலாப் புயம்" என்று அவன் தோள்வலிமை குறிப்பிடப்படும்.
பொருப்புக்கு அதாவது மலைக்கு நிகரானது அவன் தோள்வலிமை. அதாவது மலை
போன்ற திண்மையுடைய தோள்கள் எனப் புகழப்பட்டன.
இத்தகைய, போர்க்குளத்தில் புகுந்து யானைகளை எதிர்த்து அடக்கிக் கட்டுக்குள்
கொண்டுவருபவனும் மலைக்கு நிகரான வலிமையையும் திண்மையையும் உடைய
தோள்அழகுடையவனும் ஆகிய களங்கமற்ற சோழ மன்னனின் காதலை என்று
பெறுவேன்? என்று ஏக்கப் பெருமூச்சு விடுகின்றாள் தலைவி. இனி,
பாடலைப் பார்ப்போம்:
"என்று பெறுவேன்யான் ஈசன் திருமுடிமேல்
சென்றுவிளை யாடுகின்ற தீபமே---என்றும்
செருப்புக்குத் தோல்வாங்குஞ் சென்னி அகளங்கன்
பொருப்புக்குத் தோலாப் புயம்".
குறிப்பு:
"செருப்புக்குத் தோல் வாங்கும்" என்னும் சொற்றொடருக்குச் செருப்பு தைப்பதற்
காகத் தோல்வாங்கும் என்று பொருள் கொள்ளக் கூடாது. இச் சொற்றொடர்
இலக்கிய நயமிக்கது. செரு என்பது போர்க்களத்தையும் தோல் என்பது யானை
யையும் குறிக்கும் இலக்கிய வழக்குச் சொற்கள். பொருப்பு என்பது மலையைக்
குறிக்கும். மலைபோன்ற வலிமையும் திண்மையும் உடைய தோள் என்னும்
கருத்தில் " பொருப்புக்குத் தோலாப் புயம்" என்ற சொற்றொடர் பயன்படுத்ப்
பட்டுள்ளது.
இயற்றிய புலவர்: ஒட்டக்கூத்தர்.
காளமேகப் புலவர் பாடியது:
"உடுத்ததுவும் மேய்த்ததுவும் உம்பர்கோன் தன்னால்
எடுத்ததுவும் பள்ளிக்(கு) இயையப்---படுத்ததுவும்
அந்நாள் எறிந்ததுவும் அன்பின் இரந்ததுவும்
பொன்னா வரையிலைகாய் பூ".
உடுத்ததுவும் --- திருமால் அரையில் கட்டியதும் பொன்னாடையே(பீதாம்பரமே).
மேய்த்ததுவும்---ஆயனாக மேய்த்ததுவும் பசுமந்தையே.
உம்பர்கோன் தன்னால் எடுத்ததுவும்---தேவர்களின் தலைவன் இந்திரன் மழை
பெய்வித்ததன் காரணமாக மக்களைக் காக்கக் கண்ணன் எடுத்துக் குடையாகப்
பிடித்ததுவும் கோவர்த்தன கிரியே.
பள்ளிக்கு இயையப் படுத்துவும்---கண்ணன் தான் படுப்பதற்குப் பயன்படுத்தியதும்
ஆல் இலையே.
அந்நாள் எறிந்ததுவும்--- முன்னாளில் ஓர் அரக்கனைக் கொல்வதற்காகக் கண்ணன்
எடுத்து எறிந்ததுவும் விளங்காயே.
அன்பின் இரந்ததுவும்--- அன்பரின் பொருட்டுக் கண்ணன் மாவலி மன்னனிடம்
சென்று பிச்சை கேட்டதுவும் மூன்றடி மண்ணே.
பொன்னாவரையிலை காய் பூ என்ற ஈற்றடியில் வரிசையாக ஒவ்வொரு சொல்லையும்
விளக்கும் விடையுள்ளது.
பொன்=பீதாம்பரம். ஆ=பசு மந்தை. வரை= மலை(கோவர்த்தனகிரி). இலை= ஆல் இலை.
காய்=விளங்காய். பூ= மூன்றடிமண் கேட்டு இரண்டடியால் அளந்து முடித்தான் கண்ணன்.
இயற்றிய புலவர்: காளமேகப் புலவர்.
ஆதாரம்: தனிப்பாடல் திரட்டு, மூலமும் உரையும் (இரண்டு பாகங்கள்) கா. சு. பிள்ளை
என்ற M. L. பிள்ளை. சாரதா பதிப்பக வெளியீடு.