நெடுந்தேர் கடந்த வழியை எம் கண்ணாரக் காண நடந்து சிதையாதே நீ.
ஐந்திணை ஐம்பது என்னும் நூலில்(பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில்
ஒன்று) நெய்தல் திணையில் காமம் மிக்க கழிபடர் துறையில் புலவர் மாறன்
பொறையனார் இயற்றிய ஒரு அகப் பொருட் பாடலில் கீழ்க்கண்ட சொல்
ஓவியம் காணப்படுகிறது:
ஒரு தலைவனும் தலைவியும் பிறர் அறியாவாறு காதல் நடவடிக்கையில்
ஈடுபட்டுள்ளனர். தலைவன் பொருள் தேடுவதற்காக அண்மையில்(ஓரிரு
நாட்களுக்கு முன்) தலைவியைப் பிரிந்து சென்று விட்டான். தலைவனைப்
பிரிந்த தலைவி மிகுந்த துயரடைந்தாள். தலைவன் சென்ற பாதையைப்
பார்த்துப் பார்த்துப் பெருமூச்செறிந்தாள். அப்பாதையில் தலைவனின் தேர்ச்
சக்கரம் பதிந்த அடையாளம் உள்ளது. அதனை அடிக்கடி உற்று நோக்கிப்
பிரிவுத் துயரைத் தணித்துக் கொண்டாள். அப்பொழுது அப்பாதையில் தேர்ச்
சக்கரம் பதிந்த தடயத்தை ஒட்டி ஒரு நண்டு ஊர்ந்து செல்கிறது. தலைவி அந்த
நண்டை விளித்துப் புலம்புகிறாள்:
காமம் மிக்க கழிபடர் கிளவி---காதல் மிகுதியால் தலைவனின் பிரிவு காரணமாக
மிக்க துயரடைந்து அதனைத் தாளமாட்டாமல் தன்னை மறந்து புலம்பும் கூற்று:
"வளைவான கால்களையுடைய நண்டே! எப்போதும் குறையாத பேரிரைச்சலையுடைய
துறைமுகத்துக்கு உரிமைகொண்ட தலைவனின் நெடிய தேரின் சக்கரங்கள் என்னைப்
பிரிந்து இப்பாதையில் கடந்த பொழுது பதிந்துள்ளன. அவ்வடையாளத்தைப் பார்த்து
நான் பிரிவுத் துயரைத் தணித்துக் கொள்கின்றேன். என் பிரிவுத் துயருக்கு வடிகாலாக
விளங்கும் இந்த அடையாளம் அழிந்துபோகும்படி அதன்மேல் ஊர்ந்து செல்லாதே.
என் கண்கள் அந்த அடையாளத்தை நன்றாகக் காணல் வேண்டும்" என்று கூறுகிறாள்.
பாடல் பின்வருமாறு:
"கொடுந்தாள் அலவ! குறையாம் இரப்பேம்.
ஒடுங்கா ஒலிகடற் சேர்ப்பன்---நெடுந்தேர்
கடந்த வழியையெம் கண்ணாரக் காண
நடந்து சிதையாதே நீ".
(அலவன்=நண்டு. சேர்ப்பன்= நெய்தல் நிலத் தலைவன்).
மேலும் ஒரு பிரிவுத் துயரப் படலை நோக்குவோம். இது "கைந்நிலை"என்னும் நூலில்
காணப்படுகிறது. இயற்றிய புலவர் புல்லங்காடனார் ஆவார். இங்கும் தலைவன்
பொருள் தேடிப் பிரிந்து சென்றுவிட்டான். அவனை எப்பொழுது காண்போம்? என்ற
ஏக்கத்தோடும் தவிப்போடும் தலைவி தோழியிடம் உரையாடுகின்றாள். அது பின்
வருமாறு:
"என் உயிர்த் தோழியே! என் தந்தையாரும், உடன் பிறந்தாரும் கடலில் வலையை
வீசிப் பிடித்துக்கொண்டுவந்த இறால் மீன்களைக் கவர வருகின்ற பறவைகளை
விரட்டி ஓட்டியபடி புன்னை மரங்கள் செறிந்து வளர்ந்த கானலில் இருந்தோம்.
அப்போது அங்கே வந்து எமக்குப் பொய்யாய நல்ல சொற்களைச் சொல்லிக் குலவி
மகிழ்ந்த நெய்தல்நிலத் தலைவனை இனிமேல் நான் காணும் வழி யாது? ஆராய்ந்து
கூறுக" என்று தலைவி உரைத்தாள். பாடல் பின்வருமாறு:
"என்னையர் தந்த இறவுணங்கல் யாம்கடிந்து
புன்னையங் கானல் இருந்தேமாப் பொய்த்தெம்மைச்
சொன்னலம் கூறி நலனுண்ட சேர்ப்பனை
என்னைகொல் யாம்காணும் ஆறு."
(என்னையர்=என் தந்தையார், உடன்பிறந்தார். இறவு=இறாமீன். உணங்கல்=வெயிலில்
உலர்த்தியது. கடிந்து= விரட்டி ஓட்டி. நலனுண்ட= நெருங்கிப் பழகிய. சேர்ப்பன்= நெய்தல்
நிலத் தலைவன். என்னைகொல் யாம் காணும் ஆறு= யாம் காண வழி யாது?).
ஆதாரம்:
பதினனெண்கீழ்க்கணக்கு நூல்கள்- வர்த்தமானன் பதிப்பக வெளியீடூ-உரையாசிரியர்
பேராசிரியர் அ. மாணிக்கனார்.
No comments:
Post a Comment